ஆண்களுக்கு பெண் குரல் ஏன்?- Why do some men have ladies' voice?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்?

வாய்ஸ் கொடுங்க பாஸ்!
அறிமுகமில்லாத நபருடன் போனில் பேசும் போது, அவர் ‘ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானிப்போம். போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானுபாகுவான ஆணாக வந்து நின்றால் எப்படி இருக்கும்?
இயற்கையாக பெண்களுக்கு இனிமையான கீச்சு குரலும் ஆண்களுக்கு சற்று கடினமான குரலும் இருக்கும். சில ஆண்களின் குரல் பெண்களைப் போன்றே கீச்சென்று ஒலிக்கும். இது அடுத்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், சம்பந்தப்பட்டவருக்கு ஆழ்ந்த மன வலியையும் உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். இதே போன்று சில பெண்களும் ஆண் குரலில் பேசுவதுண்டு. இது போன்ற குரல் மாற்றம் ஏற்படுவது ஏன்? இதை மாற்ற முடியுமா? காது, மூக்கு, தொண்டை நிபுணர் குமரேசனிடம் பேசினோம்...

‘‘14 வயது வரை எல்லா ஆண்களுக்கும் பெண் குரல்தான் இருக்கும். 14 வயதில் குரல்வளையானது விரிவடைந்துவிடும். இதைத்தான் குரல் உடைவது (மகரக்கட்டு) என்கிறார்கள். ஆண்களுக்கு ‘கீச்சு’ குரலானது மாறி, கொஞ்சம் கடினமான குரல் வரும். இதன் விளைவாகவே அவர்களுக்கு கழுத்தில் உள்ள தைராய்டு கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படையாகவே தெரியும். இதை ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ என்று சொல்வோம்.

15 வயதுக்கு மேலும் குரல்வளையானது விரிவடையவில்லை என்றால், அவர்களுக்கு பெண் குரலே தொடரும். குரல்வளையை இழுத்து விட்டு சரிசெய்ய பல நவீன சிகிச்சைகள் உள்ளன. எண்டோஸ்கோப் துணையுடன் எளிமையாக சிகிச்சை செய்து, இந்த பிரச்னையை சரிசெய்து விடலாம். பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படாது. குரல் பயிற்சி கொடுத்தாலே சரியாகிவிடும்.

ஆண்களை நாக்கை வெளியே நீட்டி கத்தச் சொல்லுவோம். அப்போது உள்ளிருக்கும் உண்மையான ஆண் குரலானது வெளிப்பட்டுவிட்டால், அவருக்கு குரல் பயிற்சி மட்டுமே கொடுத்து ஆண் குரலை கொண்டுவந்து விடலாம். பெண் குரல் உடைய பெரும்பாலான ஆண்கள் தங்களது இயற்கையான குரலை மாற்ற முடியாது என நினைத்து சிகிச்சைக்கு வருவதில்லை. இது தவறான மனப்பான்மை. குரலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம்.

பெண்களுக்கும் ஆண் குரல் வரலாம். சில பெண்களுக்கு குரல்வளையானது இயற்கையாவே அகன்று காணப்படும். இதனால் குரல் கட்டையாக, கரகரப்புடன் இருக்கும். ஆண்களுக்கான ஆண்ட்ரோஜென் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரந்தால் குரல் கடினமாவது, உடலில் ரோமங்கள் அதிகம் முளைப்பது போன்றவை ஏற்படும். குரல் மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை கொடுக்க வேண்டும்.

சில பெண்களுக்கு இயற்கையாகவே நல்ல குரல் அமைந்தும், அதைத் தவறாக பயன்படுத்தி, கடினமாக்கிக் கொள்வதும் உண்டு. அதிகமாக சத்தம் போட்டு, பேசுவதாலும் காலப்போக்கில் ஆண் குரலாக மாறிவிடுவதும் உண்டு. பாடகிகள் சரியான முறையில் குரல்வளையை பயன்படுத்தாமல் உச்சஸ்தாயியில் பாடினால், இனிமையான குரல் காணாமல் போகும் அபாயமும் உண்டு. அறுவை சிகிச்சை செய்து குரலை மாற்றி அமைத்தாலும், உண்மையான குரல் வரும் என்று சொல்ல முடியாது. அதன் பின்னரும் குரலுக்கான சிறப்புப் பயிற்சிகளை கொடுத்து தான், பழைய குரலை கொண்டுவர முடியும்.

அதிகமாக குரல்வளையைப் பயன்படுத்தி சத்தமாக பேசுவது, சரியான முறையில் குரலை பயன்படுத்தாமல் இருப்பது, தவறான முறையில் குரல்வளைக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய 3 விஷயங்கள் குரலை பாதிக்கும். குரல்வளையை அதிகமாக பயன்படுத்திப் பேசும் போது குரல் நாண்களில் மொட்டுகள் உருவாகும்.

முதலில் மெது மொட் டுகளாக இருக்கும். சரியாக கவனிக்காமல் விட்டால் கடின மொட்டுகளாக மாறிவிடும். இதனால் குரல் கடினமாக மாறிவிடும். மெது மொட்டுகளை குரல் பயிற்சிகளின் மூலம் சரி செய்துவிடலாம். மொட்டுகள் கடினமாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்...’’ என குரலின் மாறுபாடுகளை பற்றி பேசும் டாக்டர் குமரேசன், அதைச் சரியாக பயன்படுத்தும் முறைகள் குறித்தும் சொல்கிறார்.

‘‘குரலை சரியான முறையில் பயன்படுத்த அரசியல் வாதிகள், பேச்சாளர்கள், பாடகிகள், மிமிக்ரி செய்பவர்கள் போன்றவர்கள் பலவிதமான குரல் பயிற்சிக்காகவும் குரலை மேம்படுத்திக் கொள்ளவும் சிகிச்சைக்கு வருகிறார்கள். அடிவயிற்றில் இருந்து காற்றை எடுத்து பேச வேண்டும். இவ்வாறு செய்தால் குரல்வளை பாதிப்படையாது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு இறுதிவரை சிம்மக்குரல் மாறாமல் இருந்ததற்கு நாபிக்கமலத்தில் இருந்து காற்றை எழுப்பி சிறப்பாக பேசத் தெரிந்ததே காரணம்.

குரலை பாதுகாக்க மூச்சுப் பயிற்சியும் அவசியம். அடிவயிற்றில் இருந்து காற்றை எழுப்பும் போது குரல்நாண்கள் எளிதாக ஒட்டிக் கொண்டு சரியான முறையில் குரலை எழுப்பும். குரல்வளையை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பேச முடியும். குரல்வளையை அதிகம் பயன்படுத்தாமல் மெது அண்ணத்தைப் (ஷிஷீயீt றிணீறீணீtமீ) பயன்படுத்தி பேச பழக வேண்டும். ‘ஹா’ என்று உரத்துச் சொல்லி பழகவேண்டும். கசடதபற வரிசையை உச்சரிப்பதும் குரலுக்கான சிறந்த பயிற்சி.

உதடுகளை குவித்து ‘ஓம்’ சொல்லிப் பழக வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தும் சத்தமாகவும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குரல் பயிற்சிகள் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை என்றால், இறுதியாக அறுவை சிகிச்சையை தேர்வு செய்யவேண்டும்...’’நடிகர் சிவாஜி கணேசனுக்கு இறுதிவரை சிம்மக்குரல் மாறாமல் இருந்ததற்கு நாபிக்கமலத்தில் இருந்து காற்றை எழுப்பி சிறப்பாக பேசத் தெரிந்ததேகாரணம்!
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.