ஆண்களே... பெண்களைப் புரிந்துகொள்ளுங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
‘‘ஆண்களே... பெண்களைப் புரிந்துகொள்ளுங்கள்!’’


டாக்டர் அபிலாஷா


''நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். என் மனைவியைப் புரிஞ்சுக்கவே முடியல. ஒரு ஆணால, ஒரு பெண்ணை முழுமையா புரிஞ்சுக்கவே முடியாதா?''
இதுதான் வாசகரின் கேள்வி! பெரும்பான்மை ஆண் சமூகத்தின் கேள்வியாகவும் இதை எடுத்துக் கொண்டு, இங்கே பதில் தர முயல்கிறேன்!

முன்குறிப்பு: ஒவ்வொரு பெண்ணும் இந்தக் கட்டுரையை தன் உலகின் ஆண்களிடமும், ஒவ்வொரு ஆணும் இதை மற்ற ஆண்களிடமும் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம்!


ஒரு பெண், ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்... அன்பும், பாதுகாப்பும். இதன் அளவு, ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். பெண்கள் உணர்வுபூர்வமாக மட்டுமே ஆண்களிடம் இதை எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதிகமான ஆண்கள், ஒரு பாடிகார்டாகவே தங்களைப் பெண்களுக்குக் கொடுக்கிறார்கள். பெண்கள் எதிர்பார்ப்பது, திருடர்களிடம் இருந்தும், சண்டைக்காரர்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாக்கும் ஆணின் வலிமையை அல்ல. ஒரு பூவின் இதழ்கூட காயப்படுத்திவிடுமோ என்று பதறி, தங்கள் அன்பை அரணாக்கும் ஆண்களையே!

பெண்களுக்கானவை, கட்டளை வாக்கியங்கள் மட்டுமே என்பது இன்றும் பல குடும்பங்களின், குடும்பத் தலைவர்களின் நம்பிக்கை. அது பெண்களை உங்களுக்கு அடிபணிய வைக்கலாம். ஆனால், அப்படி அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும்போது, அவர்களின் அன்பைப் பெற இயலாது. எனவே, உத்தரவுகளைத் தவிருங்கள். 'இதை அப்படிச் செய்தா நல்லாயிருக்கும்’, 'இதை தவிர்க்கலாமே’ என்று பேசிப் பழகுங்கள்.

பெண்களை பட்டுப் புடவை, நகை என்று பெரிய பரிசுகளின் மூலம் ஆச்சர்யப்படுத்தி விடலாம் என்பது, மெய்யல்ல. அந்தப் பரிசுகளில் அவர்கள் மகிழ்வார்கள்தான். ஆனால், அதைவிட, உங்களுக்குப் பிடித்த சப்பாத்தி, தக்காளி தொக்கு செய்து கொடுத்த நாளில் அதைக் குறிப்பிட்டு நீங்கள் அவர்களிடம் சொல்லும் 'ஐ லவ் யூ’, அவர்கள் மனதில் பீறிடச் செய்யும் மகிழ்ச்சியை, ஐந்து லட்ச ரூபாய் வைர நெக்லஸாலும் தர முடியாது. எனவே, உங்களின் அன்பே இந்த உலகத்தில் அவர்கள் கொண்டாடும் விலைமதிப்பற்ற பரிசு என்பதை உணருங்கள்!

'பெண்கள் ரொம்ப வீக்கானவங்க...’ என்கிற எண்ணம், முட்டாள்தனம். உண்மையில், ஆண்களைவிட பெண்களே வலிமையான வர்கள். இதை வரலாறு படித்தவர்கள் நன்றாகவே அறிவார்கள். ஆதிகாலத்தில் வேட்டைக்குச் சென்றதும், போருக்குச் சென்றதும் பெண்கள்தான். 'குடும்பம்’ என்ற அமைப்பு தொடங்கிய காலமாற்றத்தில், பெண் வீட்டுக்குள் வைக்கப்பட்டாள். கூடவே, அவளின் வலிமையையும் மறக்கடிக்கப்பட்டாள்.

கோயில் யானைகள் பார்த்திருப்போம். ஒற்றைக் காலில் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலிக்கு கட்டுப்பட்டு நிற்கும். காடுகளில், ராட்சத மரங்களை வேரோடு சாய்க்கும் யானைக்கு, அந்த இரும்புச் சங்கிலியை அறுத்துச் செல்வது இயலாதா என்ன? ஆனால், குட்டியாக இருக்கும் போதிலிருந்தே, 'சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது... உன்னால் மீற முடியாது’ என்று அதன் உடலைவிட, மனதுக்குச் சொல்லி வளர்க்கப்படும் உளவியலே அதற்குக் காரணம். யானை வளர்ந்த பின்னும், இந்தச் சங்கிலியை நம்மால் அறுக்க முடியாது என்று நம்பிக்கையிலேயே இருந்துவிடுகிறது.

அப்படித்தான் பெண்களும், 'இது உன்னால முடியாது’, 'அதெல்லாம் உனக்குத் தெரியாது’ என்ற ஆண் சமூகத்தின் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சங்கிலி அறுத்த யானைகளின் துவம்சங்களையும் நாம் கண்டிருக்கிறோம்தானே! அப்படித்தான் அப்பா, கணவரின் இழப்பால் குடும்பத்தைத் தாங்க வேண்டிய சூழல், தங்களை உதாசீனப் படுத்தியவர்களின் முன் எழுந்து நிற்க உந்தும் வைராக்கியம் போன்றவற்றால் அடிமைத்தன சங்கிலியில் இருந்து விடுபடும் பெண்கள், பெரிய வெற்றிகளையும், ஆச்சர்யங்களையும் நிகழ்த்துகிறார்கள். அந்த திறனும், உழைப்பும் உங்கள் வீட்டுப் பெண்களுக்குள்ளும் இருக்கிறது.

அதை அவர்கள் உணரவிடாதபடி வைத்திருக்கிறது, கட்டுப்பாடுகள் கண்ணிகளாகப் பின்னப்பட்ட உங்கள் சங்கிலி. எனவே, இனியும் நினைக்காதீர்கள்... 'பெண்கள் வீக்கானவங்க’ என்று!

மிக முக்கியமான விஷயம், எந்தப் பெண்ணையும் அழகை வைத்து எடை போடாதீர்கள். உலக அழகி என்று பட்டம் சூட்டப்பட்டவர்கூட, தன் அழகை மட்டுமே தன் ஆண் ஆராதிப்பதை விரும்பமாட்டாள். அவளுக்கும் ஆணின் ஈர்ப்பைவிட, அவன் அன்பை பெறுவதே பிரதானம். பேரழகியைவிட, நம் பக்கத்து வீட்டு அக்காவுக்கு அன்பான குடும்பம் அமைந்திருக்கும். காரணம், குடும்பம் என்ற அமைப்புக்குத் தேவை அழகல்ல, குணம். ஆரம்பகட்ட கவர்தலுக்கான ஒரு காரணி மட்டுமே, அழகு. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

ஆனால், இந்த உண்மையைப் பெண்கள் உணர்ந்த அளவுக்கு ஆண்கள் உணரவில்லை.

'அழகான பெண்’ தேடாதீர்கள். அதேபோல, பெண்களைப் போகப்பொருளாகப் பார்ப்பது, பெண் இனத்துக்கே செய்யும் துரோகம். உங்கள் அம்மாவாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக உங்கள் உலகத்தைச் சூழ்ந்திருக்கும் பெண்களைப் போலத்தான், பேருந்து நெரிசலில் பலரும் உரசத் துடிக்கும் பெண்களும்.

இன்றைய படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி... அதிகமான ஆண்கள் பெண்களை சர்ப்ரைஸ் கொடுத்து, இம்ப்ரஸ் செய்துவிடலாம், பின் அவர்களை நம் வழிக்கு வரவைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இது தவறான கணிப்பு. அதிலும் இன்றைய பெண்களிடம் இந்த கணக்குகள் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது.

'இன்றைய ஸ்பெஷல்’ அன்பைவிட, என்றைக்கும் அன்பான ஆண்கள்தான் பெண்களின் தேடல்.

பெண்களைப் புரிந்துகொள்ள, பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதே முதல் படி!

ரிலாக்ஸ்...


[HR][/HR]
மனைவியைப் புரிந்துகொள்ள சில டிப்ஸ்!

அழகு, பணம், படிப்பு என எந்தக் காரணியிலும் அவர்களை பிறரோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களுக்கு, ஒப்பிட்டுப் பேசுவதுதான் முக்கியக் காரணம்.

அன்பு, பாதுகாப்பு... இதைத் தொடர்ந்து கொடுங்கள். அவர்களின் சுதந்திரமும் சேதப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருபோதும் மனைவியின் பெர்சனல் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களிடம் உதவி கேட்டால் மட்டும் செய்யுங்கள். 'எனக்குத் தெரியாமல் அவளுக்கு என்ன பெர்சனல்..?’ என்று கேட்பதே, தவறான கேள்வி. பிறந்த வீடு, அலுவலக விஷயங்கள், தோழிகள் வட்டம் என்று அவருக்கு நீங்கள் தவிர்த்த பெர்சனல் வட்டமும் உண்டு என்பதை அங்கீகரியுங்கள்.

சாப்பாடு முதல் படுக்கையறை வரை... எல்லாவற்றிலும் சம உரிமை கொடுங்கள்.
மனைவியின் அழுகை, வலி, சிரிப்புக்கு மதிப்பு கொடுங்கள். 'எதுக்கோ அழறா...’, 'இதுக்கெல்லாம் சிரிப்பா..!’ என உதாசீனப்படுத்தாதீர்கள்.
[HR][/HR]


 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.