ஆயிரம் வாசல்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1

சாலை செல்வம், கல்வி செயல்பாட்டாளர் - The Hindu


சாலை செல்வம், கல்வி செயல்பாட்டாளர் - The Hindu


ணியடித்தால் அறைக்குள் அடைக்கப்படுவது-சோறு, சீருடை, வரிசையில் நடந்து செல்வது, சுதந்திரம் பறிப்பு, தனித்தன்மைக்கு மதிப்பில்லாதது, சுருக்கமாக அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதல் - சிறைக்கும் வழக்கமான பள்ளிகளுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமைகளாக இந்த அம்சங்களை உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த அம்சங்கள் உலகின் வருங்காலக் குடிமக்களைச் சிறப்பாக உருவாக்கும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால், மனிதர்கள் வேறு வகையிலும் சிறப்பாகக் கற்க முடியும் என்பதைப் பல கற்றல் முன்முயற்சிகள் மாற்றிக் காட்டியிருக்கின்றன.
பொதுவாகக் கல்வி பற்றிப் பேசுவதோ கருத்து தெரிவிப்பதோ அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெற்றோராக, ஆசிரியராக, அரசியல்வாதியாக, அரசு அதிகாரியாகப் பல நிலைகளிலிருந்து நாம் பேசினாலும், கல்வி குறித்த விவாதங்களை இயலாமைகளோடு முடிப்பது பழகிப்போய்விட்டது. ஆனால், எல்லோரும் அப்படி ஓய்ந்துபோய்விடுவதில்லை. கல்வி மீது நம்பிக்கை வைத்து அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் நம்மமிடையே இருக்கிறார்கள்.
இன்றைய பள்ளிக் கல்வி பெரும்பாலும் அரசு முன்வைக்கும் பாடத்திட்ட வரையறைக்கு உட்பட்டுதான் இயங்கிவருகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் என ஏதோ ஒன்றின் வழியாகவே கற்பிக்கப்படுகிறது. இத்தகைய வரையறைகளுக்குள் செயல்படும் கல்வியாளர்கள் சிலரும் தங்களுடைய ஈடுபாட்டின் மூலம் கல்வியை நவீனப்படுத்த முயல்கிறார்கள். கல்வியின் நோக்கத்தை அடைய வெவ்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்கான கல்வி மையங்களில் சில நவீன புரிதலுடன் இயங்கிவருகின்றன.
ஆனாலும் முறைப்படுத்தப்பட்ட கற்றலுக்கு மாறாக இயல்பான கற்றல் (Natural Learning) செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கையோடு செயல்படும் பள்ளிகளும் நம்மிடையே வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
எது கல்வி?

முதல் விஷயம் இயல்பான கல்வி என்பது மதிப்பெண் சார்ந்தது அல்ல, பாடப் புத்தகத்தை மட்டும் மையப்படுத்திக் கற்றுக்கொடுப்பது அல்ல, லாப நோக்கத்தோடு இயங்குவதும் அல்ல. உலகம் முழுக்க கல்வி முக்கியமானதாகக் கருதப்படுவதோடு, அதை மாற்றவும் சீர்திருத்தவும் கல்வியாளர்கள் முயன்றுள்ளனர். பல கல்வியாளர்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் நினைவுகூரும்போது கல்வியைப் பற்றிய நமது மதிப்பீடுகள் இன்னும் வலுவானதாக மாறுகின்றன.
தாகூர் குறிப்பிடுவதுபோல பண்பாடு, கலைகளை இணைத்துப் பயணிப்பது, காந்தி முன்வைத்த செயல்வழிக் கற்றல் முறை, மாண்டிசோரி குறிப்பிடும் சுதந்திரமான கற்றல் முறை, சமூக முன்னேற்றத்தைப் பெறுவதற்கு ஜான் ஹோல்ட் முன்மொழிந்த சுதந்திர கல்வி இயக்கம், ஜனநாயகத்துக்கு அடிப்படையாகக் கல்வி இருக்க வேண்டும் என்பதற்காக வகுப்பறையைக் கூட்டுச் செயல்பாடாக மாற்றியமைத்த ஜான் டூயியின் கல்வித் திட்டம், தனது பள்ளியின் மூலம் சாவித்திரிபாய் பூலே முயன்ற சமூக மாற்றம், ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்ற அம்பேத்கரின் குரல், கல்வி மீதான நம்பிக்கை என்பது பகுத்தறிவையும் சுயமரியாதையும் பெறுவதற்கான பாதை என்ற பெரியாரின் சிந்தனை போன்றவற்றை மேற்குறிப்பிட்ட வகையில் நினைவுகூரலாம்.
கல்வியாளர்களின் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் இப்படி ஒரு வரியில் சுருக்கிப் பார்ப்பது முறையாகாது. ஆனாலும், குழந்தைகள், கற்றல், சமூக மாற்றம், ஜனநாயகம், சூழலியலை மதிப்பது, மனித நேயம் ஆகியவற்றை நமக்கு இருக்கும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டு கற்றல், கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடுவதுதான் முழுமையான கல்வி என்று புரிந்துகொள்ள முயலலாம்.
எப்படி இருக்க வேண்டும்?

இயல்பான கற்றல் என்ற நீண்ட, நெடிய பயணத்தில் கவனம் பெற வேண்டிய புள்ளிகள்:
கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன.
மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதையும், கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதையும் இப்பள்ளிகள் ஊக்குவிக்கின்றன.
கற்றல் என்பது வெற்றி - தோல்வி என்ற பொது விதிக்கு உட்பட்டதல்ல. ஒரு விஷயத்தைப் புரிந்து, அறிந்து, வாழ்க்கையில் பயன்படுத்துவது எனத் தொடர் செயல்பாடுகளை உடையது.
கற்றல் என்பது, அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஆளுமை வளர்ச்சிக்குமான ஒன்று. பள்ளி அமைந்திருக்கும் பகுதியின் தேவைகள், பண்பாட்டு மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பாடத்திட்டம் வடிமைக்கப்படுகிறது.
பொறுப்பை அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்.
பாலியல் வேறுபாடு, சாதியப் பாகுபாடுகளைக் கடந்து செயல்படுதல்.
அதிகாரப் படிநிலை முற்றிலுமாக நீக்கப்பட்ட சூழலைச் சாத்தியமாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபடுதல்.
குறைவான மாணவ-மாணவி எண்ணிக்கையைக் கொண்டிருப்பது, அதிகமான மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்- மாணவ விகிதத்தை திட்டமிட்டுச் செயல்படுத்துவது.
குழந்தைக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து மதிப்பிடுதலும், ஆசிரியருக்கு அவரது திறனை மதிப்பாய்வு செய்ய உதவுதலும் இங்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது.
மாணவர்களின் திறன்களை வலுப்பெறச்செய்ய பள்ளியின் நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சாத்தியப்படுத்தப்படும்.
இயல்பான கல்வியைப் பின்பற்றும் பள்ளிகளையும் அவற்றைக் கடைப்பிடிக்கும் கல்வியாளர்களையும் கவனப்படுத்த முயல்வதே இத்தொடரின் திட்டம்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#2
குழந்தைதான் ஆசிரியர்!


ஓவியம்: வே.ராமமூர்த்தி
வி
வசாயியின் குழந்தை, கைவினைக் கலைஞரின் குழந்தை, வெளிநாட்டவரின் குழந்தை, பெரிய அதிகாரியின் குழந்தை, பணமே கட்ட முடியாத தொழிலாளியின் குழந்தை, கற்பதற்குக் கஷ்டப்படும் குழந்தை இப்படி எல்லாக் குழந்தைகளும் இணைந்து கற்கும் இடமாக மருதம் பள்ளி உள்ளது. வேறுபட்ட சமூகப் பின்னணியில் இருந்துவரும் குழந்தைகளை ஒன்றிணைக்கும் இடமாக இது திகழ்கிறது. தமிழ்க் குழந்தையிடமிருந்து வெளிநாட்டுக் குழந்தை தமிழ் மொழியைக் கற்கிறது.

தமிழ்க் குழந்தை ஆங்கிலம் கற்கிறது. பந்து வேகமாக எறியும் குழந்தையிடமிருந்து, எறியவே பயப்படும் குழந்தை கற்றுக்கொள்கிறது. ஒருவரை மற்றொருவர் மதிப்பதற்கு அவர்களுடைய பின்புலம் பொருட்டல்ல என்பதை இங்கே செயல்முறைப்படுத்தி வருகிறார்கள்.

மருதம் ஃபார்ம் பள்ளி

“நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் பாடத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி ஒரு மாணவருக்கு எழுந்தாலே, அங்கே கல்விக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி உள்ளது என்று அர்த்தம். தாங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு பாடத்திலும் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய முயல்கிறது ‘மருதம் ஃபார்ம் பள்ளி’.
எப்படிக் கற்கலாம்?

காடுகளைப் பாதுகாப்பது, சூழலியல் கல்வி, இயற்கை வேளாண்மை ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு திருவண்ணாமலையில் ‘தி ஃபாரெஸ்ட் வே’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பு 2009-ல் ‘திருவண்ணாமலை கற்றல் மையம்’ என்ற பெயரில் 20 மாணவர்களுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. 2011-ல் ‘மருதம் ஃபார்ம் பள்ளி’ என்று பெயரில் அந்தப் பள்ளி 8 ஏக்கர் நிலப்பரப்பில் எளிமையான, அழகானதொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. கல்வி, இயற்கை ஆர்வலர்களின் பங்களிப்பால் இப்பள்ளியின் வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காற்றினிலே வரும் கீதம்...

“கருத்தாக்கங்களாக மட்டுமே பாடங்களைப் போதிக்கும் முறையைக் கடந்து கதை சொல்லுதல், உரையாடல் போன்ற சுவாரசியமான வழிமுறைகளைக் கையாண்டுவருகிறோம். அத்துடன் ஆர்வமுள்ள விஷயங்களில் குழந்தைகள் சுதந்திரமாகவும் ஆழமாகவும் கற்க ஏற்பாடு செய்கிறோம். உதாரணத்துக்கு, பறவையைப் பார்க்கவும் அறியவும் ஆசைப்படும் குழந்தைக்கு அதில் முழுமையாக ஈடுபடும் வழிவகைகளைச் செய்து தருகிறோம்.
அதேபோல, சிற்பம் வடிக்க விரும்பும் குழந்தையின் ஆர்வத்தைக் கண்டுபிடிப்பதையும் ஊக்குவிப்பதையும் கடமையாகக் கருதுகிறோம். இன்னும் சொல்வதென்றால் குழந்தை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க முயல்கிறோம்” என்கிறார் இப்பள்ளியின் ஆசிரியை பூர்ணிமா.

நிலக்கடலையைப் பற்றி நிலத்திலேயே படிப்போம்!

கற்கும் ஆசிரியர்

‘மருதம்’ பள்ளியின் மாணவர்கள் பாடங்களுடன் கைவினை, உழவு, விளையாட்டு என எப்போதுமே துறுதுறுப்பாகப் பயின்றுகொண்டே இருக்கிறார்கள். முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இங்கு ஆசான்கள் அல்ல.

பூர்ணிமா
பனை ஓலையைக் கொண்டு குருவி செய்யவும் கூடை பின்னவும், களி மண்ணைக்கொண்டு பானை வனையவும் கைத்தொழில் வல்லமை நிறைந்த எளிய மக்களே ஆசிரியர்களாகிக் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் அவர்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள் ஒரு குழுவாக இணைந்து கற்பித்தலில் இங்கு ஈடுபடுகிறார்கள்.
மாணவர்களுடைய பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வதையும் அவற்றுக்கு மதிப்பளிப்பதையும் தங்களுடைய கடமைகளில் ஒன்றாக இப்பள்ளி ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதனால் மாணவர்கள் குறித்து தொடர்ந்து உரையாடுகிறார்கள்.
தான் கற்றதைக் கற்பிப்பவராக அல்லாமல் மாணவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்பவராக இங்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு தளங்களில் கற்றலுக்கான சாத்தியங்களைத் தேடிப் பயணிக்கவும் தூண்டப்படுகிறார்கள்.
“நாங்கள் முன்வைக்கும் கல்வி மதிப்பெண்ணை மையப்படுத்தியது அல்ல. அதனால், கல்வியைக் குழந்தையின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த முடிகிறது. பள்ளி பற்றிய எல்லா முடிவுகளும் ஆசிரியர் குழுவில் விவாதிக்கப்படும். ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் கற்றுக்கொடுக்கச் சுதந்திரம் உண்டு. அதேபோல, தங்களுக்கான கற்றல் சூழலைக் குழந்தைகளே இங்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்க மரத்தடி உகந்தது என்றால் அங்கே செல்லலாம், இன்னொரு பாடத்துக்கு ஏரிக்கரைக்கு ஆசிரியருடன் செல்லவும் வழி உண்டு” என்கிறார் இப்பள்ளி ஆசிரியரும் நிர்வாகப் பொறுப்பாளருமான அருண்.

மருதம் வகுப்பறை
மேடு, பள்ளம் எதற்கு?

“அனைவரையும் சமமாக நடத்துவது என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதல்ல. ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு மாதிரியான கற்றலில் ஈடுபடுகிறது. அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுவதே கல்வி சமத்துவம்.

அருண்
விவசாயி வீட்டிலிருந்து வரும் ஒரு குழந்தைக்கு விதைகளின் பெயரும் விதைக்கும் முறைகளும் பயிர் பாதுகாப்பும் தெரியும்.
அக்குழந்தை அதை மற்ற குழந்தைகளுக்குச் சுலபமாகப் புரியவைக்க முடியும். இங்கே குழந்தைகள் குழுவாகக் கற்றலில் ஈடுபடுகின்றனர். தேவைப்படும்போது தனிப்பட்ட கவனம் செலுத்தி ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையிலும் செயல்படுகிறோம்” என்கிறார் அருண்.
எளிமையையும் இயற்கை எழிலையும் ஆராதிக்கும் அதே நேரம் மாணவர்-ஆசிரியர் உறவில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவர முயலும் இப்பள்ளி ஒரு புதிய தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர், கல்வி செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#3
: பாடல் வழி வரும் பாடங்கள்


நதிகளே நம் ஜீவனம்
நதிகளே உயிர்க் காரணம்
மலையில் பிறந்து கொடியில் தவழ்ந்து
ஓடிவரும் ஜீவாம்ருதம்

நதியில் நனைந்து மலையில் புரண்டு, மலைவாழ் மக்களின் நாட்டுப்புற இசை மணம் கமழ காதுகளை வந்தடைகிறது அந்தப் பாடல். இது செவிக்கு இசை என்றால் கண்களுக்கு விருந்தளிக்கின்றன காகித ஓவியம், துணியில் வரையப்பட்ட ஓவியம், இலைகளில் தீட்டப்பட்ட ஓவியம் ஆகியவற்றாலான வகுப்பறைச் சுவர்கள், பள்ளி வளாகச் சுவர்கள். இன்னும் திரும்பிய திசை எல்லாம் நீரோவியம், இயற்கை வண்ணம், பென்சில் ஓவியம், கோட்டோவியம் என நுண்கலைக் கல்லூரியை நினைவூட்டுகிறது அந்தப் பள்ளி.
சாப்பிட மட்டும் பள்ளிக்கு வந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடும் அங்கன்வாடி குழந்தைகளைப் பள்ளியிலேயே தங்கவைக்க வேண்டும். குழந்தைகள் அப்படித் தங்க வைக்கப்பட்டால் அவர்களுடைய அம்மாக்களால் வேலைக்கும் செல்ல முடியும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இதை நடைமுறைப் படுத்த என்ன செய்வதென்று கோயம்புத்தூர் ஆனைக்கட்டி மலைவாழ் பகுதியில் அங்கன்வாடி பள்ளிகளை நடத்திவந்த அர்ஷா வித்யா குருகுல அமைப்பில் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில், சென்னையில் மழலையர் பள்ளி நடத்திவந்த பிரேமாவிடம் தங்கள் அங்கன்வாடி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க அந்த அமைப்பு கோரியது.
சென்னையில் இருந்து மாதம் இரு முறை ஆனைக்கட்டிக்குச் சென்று பயிற்சியளிக்கத் தொடங்கினார் பிரேமா. ஏற்கெனவே பள்ளி நடத்திய அனுபவமும் ஆங்கில மொழிப்பாடமும் இசையும் கற்பிக்கும் திறனும் அவருக்கு இருந்தது. ஆனாலும் மலைவாழ் மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கும் முயற்சியில் தானும் நிறையக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் பிரேமா. அந்த அனுபவம்தான் பின்னாளில் ‘வித்யாவனம்’ பள்ளியைத் தொடங்க அவரை உந்தித்தள்ளியது.

பிரேமா
பழங்குடிகளுக்குச் சர்வதேசக் கல்வி

ஆனைக்கட்டியிலேயே அந்தப் பள்ளியைத் தொடங்கினார் பிரேமா. ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை இலவசமாகக் கல்வி அளிக்கும் ஆங்கிலப் பள்ளி அது. பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் மத்திய அரசு அங்கீகாரத்துக்கு முயற்சிக்கப்பட்டது.
அதுவும் கிடைக்காமல் போகவே, ஐ.ஜி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் அக்குழந்தைகள் பயின்று வருகிறார்கள். சர்வதேசப் பாடத்திட்ட முறையான ஐ.ஜி.எஸ்.சிக்கு தனி பாடப் புத்தகம் கிடையாது. பாடத்திட்டம் மட்டுமே அடிப்படை. அதனால் பதில்களை மனப்பாடம் செய்து எழுத முடியாது. பாடப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கில மொழி அறிவும் அவசியம்.
“இப்படிப்பட்ட தேர்வுக்கு மலைவாழ் குழந்தைகளைத் தயார் செய்வது சாத்தியமா என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். ஈடுபாடும் உழைப்பும் இருக்கும்போது சாத்தியம் என்பதுதான் என் பதில். அந்த முறையை நாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்காவிட்டாலும் அதற்கேற்ப எங்கள் முறையை மாற்றியமைத்துச் செயல்படுகிறோம். மலைவாழ் மக்களின் மொழி, பண்பாட்டை முன்னிறுத்தியே இப்பள்ளியை நடத்திவருகிறோம்” என்கிறார் பிரேமா.
ஒவ்வொரு வகுப்பறையும் ஆய்வுக் கூடமாகவும் கலைக் கூடமாகவும் காட்சியளிப்பதை இந்தப் பள்ளியில் காணமுடிகிறது. இங்குப் பணியாற்றும் ஆசிரியர்களில் 40 சதவீதத்தினர் மண்ணின் மைந்தர்கள். அதேபோல இப்பள்ளியில் படித்துவரும் 300 மாணவர்களில் 60 சதவீதத்தினர் பழங்குடிக் குழந்தைகள்.
“சர்வதேச அளவிலான ஐ.ஜி.எஸ்.இ. கிரேடிங் முறையில் எங்கள் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். காரணம், கற்றலுக்கான நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தும்போது கற்றல் தானாக நடைபெறுவதுதான்” என்கிறார் பள்ளி நிர்வாகி ஸ்ரீகாந்த்.
கலைகளின் சங்கமம்

துளிர் பருவத்தின் எல்லா வளர்ச்சித் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் மாண்டிசோரி வகுப்பறை ஆரம்பக் கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இடைநிலை வகுப்புகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள், தலைப்புப் பிரிவுகளின் கீழ் கற்பிக்கப்படுவதில்லை. பாடத்தின் கருப்பொருளை மையமாக வைத்து தலைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. உதாரணமாக ஆறு, பறவைகள், மண், தென்னை, தவளை, இயற்கைப் பேரிடர், கலை, காலம், நெல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்தையும் இணைத்துக் கற்பிக்கும் முறை கையாளப்படுகிறது.

ஸ்ரீகாந்த்
தமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களும் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற புத்தகங்களும் பள்ளி நூலகத்தில் உள்ளன. தினந்தோறும் நூலகத்துக்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தையும் இங்குள்ள மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
வழக்கமாகப் பள்ளியில் இசை ஆசிரியரைப் பொறுத்து இசை வகுப்பு இருக்கும், இல்லாமலும் போகும். வித்யாவனத்தில் இசை வகுப்பு பல்வேறு இசைக் கருவிகளை உள்ளடக்கிய இசை ஆய்வகமாகவே காட்சியளிக்கிறது. காரணம் இங்குள்ள இசைக்கூடத்தை இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வடிவமைத்திருப்பதுதான். அவருடைய அம்மாதான் பள்ளி நிறுவனரான பிரேமா.
“ஏறக்குறைய எல்லாப் பாடங்களிலுமே பாடல் இணைந்து இருக்கும். பெரும்பாலான பாடல்கள் எங்கள் மலை மக்களின் பாரம்பரிய இசையை மையமாகக் கொண்டு அமையும். மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து எழுதிப் பாடிய பாடல்கள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘கீரைப்பாடல்’” என்று பாடிக்காட்டுகிறார் பள்ளியின் இசை ஆசிரியை சித்ரா. அதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. மொத்தத்தில் பயிற்சி, அனுபவம், ஈடுபாடு, கலை ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது ‘வித்யா வனம்’.
கட்டுரையாளர், கல்வி செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
வித்யா வனம் பள்ளியைத் தொடர்புகொள்ள: www.vidyavanam.org
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#4
உயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள்


ஓவியம்: கோ.ராமமூர்த்தி
“கு
ழந்தைகளின் புரிதல் அழகானது, அற்புதமானதும்கூட. அவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்கள் பேசுவதில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பாடப் புத்தகம் சொல்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருமுறை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் பேசியபோது, ‘மண்ணில் ஏன் விதை முளைக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘மண்ணுக்கு உயிர் இருக்கிறது’ என்றனர். மகத்தான தத்துவார்த்தச் சிந்தனைபோல என் மனதில் அவர்களுடைய புரிதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர்தான் ‘புவிதம் பள்ளி’யின் கற்பித்தல் முறையை வடிவமைக்கத் தொடங்கினேன்” என்கிறார் அப்பள்ளியின் நிறுவனர் மீனாட்சி.

இந்தப் பள்ளிக்கான விதையை, வானம் பார்த்த பூமியைப் பசுமைக் காடாக மாற்றியபடி சேர்த்தே அவர் ஊன்றினார். எட்டாண்டு உழைப்புக்குப் பிறகு 2000-ம் ஆண்டில் ‘புவிதம்’ பள்ளியைத் தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளிக்கு அருகில் நாகர்கூடலில் உள்ளது ‘புவிதம்’. இப்பள்ளியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கிராமக் குழந்தைகள் படித்திருக்கிறார்கள்.

மீனாட்சி
இங்கே கற்ற கல்வியின் வழியாக பொறியாளர், மரபு மருத்துவர், ஆசிரியர், கைத்தொழில் கலைஞர் என அரசு, தனியார் துறைகளில் பணியும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் உத்வேகத்துடன் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
“கிராமக் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அதற்கான கல்வி இவர்களுக்குத் தேவை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவர்கள். ஆனால், அவர்கள் செய்துவந்தது பாசனம் சார்ந்த வேளாண்மை அல்ல. வறண்ட பூமியில் வாழும் இவர்களுக்கு தண்ணீர் சேகரிப்பு, தண்ணீர்ப் பாதுகாப்பு, வறண்ட நிலத் தாவரங்களைப் பயிரிடும் முறை, மரத்தை நட்டுப் பாதுகாத்து வளர்க்கும் திட்டம் ஆகியவற்றைக் கற்பிப்பதே அவசியம் என்று தோன்றியது. இந்தப் பின்னணியுடன் பல நாடுகளின் புத்தகங்களை வாங்கிப் பல மாற்றுக் கல்வி முயற்சிகளை அறிந்த பிறகே எங்கள் கல்வித்திட்டத்தைத் திட்டமிட்டோம்” என்கிறார் மீனாட்சி.
புதுமை பாடத்திட்டம்

அவர் வாங்கிப் படித்த வெளிநாட்டுப் புத்தகங்களுக்கும் நமது பாடப் புத்தகங்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதைவிடவும் நம் பாடத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலேயே பெரும் இடைவெளி நிலவுவதைக் கண்கூடாகப் புரிந்துகொண்டார். இந்தப் பின்னணியில் புவிதம் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள்:
கலை வடிவங்கள்: கதைகள், பாடல்கள், நாடகங்கள் வழியாகக் கற்றல்.
மாற்று அறிவியல்: ‘கழிவுப்பொருட்களில் இருந்து அறிவியல்’ என்ற அரவிந்த் குப்தாவின் முறையைப் பயன்படுத்துவது.
சமூகத்தை உள்ளடக்கிய முறை: வீட்டிலிருந்து விதையைக் கொண்டுவந்து பள்ளியில் விதைத்து, முளைக்கவைத்து வீட்டுக்குச் செடியைக் கொண்டு சென்று வளர்ப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது.
பயணம்: வெறும் சுற்றுலா பயணமாக அல்லாமல், ஒரு புதிய இடத்தில் சில வாரங்கள் தங்கி அங்கு வாழக் கற்றுக்கொள்வது.
தனித்தன்மையை வளர்த்தெடுப்பது: விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும், பாசாங்கின்றித் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவும் அனுமதித்தல்.
இயல்பான முகிழ்வு

“மண்டையை உடைத்துப் பாடத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியாமல் போன காலத்தைக் கடந்துவிட்டோம். திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு திறந்த மனதோடு மாணவர்களுடன் உரையாடி, சேர்ந்து செயலில் ஈடுபட்டு, சேர்ந்து கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இயங்கும் நிலைக்கு மாறியுள்ளோம்” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் மாதவன்.

மாதவன்
தங்களுடைய பள்ளியின் முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி ஒன்றையும் அவர் விவரித்தார்:
“குழந்தைகள் வீட்டிலிருந்து விதை எடுத்துக்கொண்டுவந்து பயிரிடும் முயற்சி அது. ஆசிரியரும் மாணவர்களும் முதலில் நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் செப்பனிட்டோம். ஒவ்வொருவரும் கடுகு, மொச்சை என்று விதவிதமான விதைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை மூன்று குழுக்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம்.
தண்ணீர் ஊற்றிய பிறகு அது பின்னாடியே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்தனர். உற்று உற்றுப் பார்த்தனர். முளை விடும்போது சிலவற்றில் இரண்டு இலைகள் தெரிகின்றன, சிலவற்றில் ஒன்று மட்டும் தெரிகிறதே என்ற கேள்வியோடு வந்தனர். அப்போது எங்களுக்கு இடையில் மலர்ந்த உரையாடலில் தாவரவியல் இயல்பாக முகிழ்ந்தது” என்கிறார் மாதவன்.
புத்தகத்தைத் தாண்டி யோசிக்க நாம் மறந்துவிட்டோம். ஆனால், துளிர் பருவத்தினர் யோசிக்க முடிவது மட்டுமில்லாமல் ஒவ்வொன்றையும் வாழ்க்கையோடு இணைத்தும் புரிந்துகொள்கின்றனர்.
பொறுப்பு கூடிவரும்

எது கடினமான விஷயம் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி மாணவர்களுடன் உட்கார்ந்து உரையாடும்போது எளிமையாகப் புரிதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் தனக்குக் கிடைத்த அனுபவப் பாடம் என்கிறார் மீனாட்சி. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுடன் அவர் தொடர்ந்து செய்துவரும் முயற்சிகளை விவரித்தார்.
“ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இடையில் ‘ஆண் பலசாலியா பெண் பலசாலியா’ என்ற போட்டி உரையாடல் அடிக்கடி நடப்பதைக் கவனித்தபோது, ஒரு திட்டம் போட்டோம். அந்த வகுப்பு மாணவ, மாணவிகளைப் பிரித்து இரு தரப்பினருக்கும் விதை கொடுத்து மூன்று மாத காலம் இருவரும் வேலை செய்யுங்கள், முடிவு என்னவென்று பார்ப்போம் என்றோம்.
அந்த முறை மாணவிகள் விதைத்தவைதான் சிறப்பாக வளர்ந்திருந்தன. மீண்டும் அவர்களுடன் உட்கார்ந்து போட்டி போடுவதா புரிந்துகொண்டு இணைந்து செயல்படுவதா என்ற உரையாடலையும் செயல்பாட்டையும் முன்வைத்தோம். இதற்கான பலன் வேறொரு சூழலில் எங்களுக்குக் கிடைத்தது.
அதே மாணவர்களை ஒரு பெரிய பள்ளிக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றோம். அங்கே ஆண், பெண் குழந்தைகள் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். எங்கள் குழந்தைகள் இயல்பாகச் சேர்ந்து அமர்ந்துகொண்டார்கள். இதைப் பார்த்து அப்பள்ளி ஆசிரியர்கள், ‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டனர். நாம் தடையாக இல்லாதபோது மாணவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்துகொள்வார்கள் என்று பதிலளித்தேன்” என்கிறார் மீனாட்சி.
இந்த பூமியின் மீதும், எதிர்கால மனிதத்தின் மீதும், எல்லா உயிர்கள் மீதும் அக்கறைகொண்டவர்கள் என்ன செய்வார்களோ, அதை முழு நேரமும் செய்துவரும் பள்ளிகளில் ஒன்று ‘புவிதம்’.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#5
வெறும் பள்ளி அல்ல சமூகம்!


ஓவியம்: கோ.ராமமூர்த்தி
“எ
ட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் கடமை, தேர்தல் ஆணையத்தின் பணிகள் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் பகுதியை கையாளும்போது நீதிமன்றங்களின் கடமைக்கு முக்கியத்துவம் தருவதைவிட தேர்தல் ஆணையத்தின் பணிக்கு முக்கியத்துவம் தரலாம் என முடிவு எடுத்தோம். அதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்தல் ஆணைய உறுப்பினராக மாற்றினோம்.

பள்ளியைச் சமூகமாக மாற்றி தேர்தல் நடத்தினோம். குப்பை இல்லா பள்ளி வளாகத்தை இதை முன்னிட்டு உருவாக்கத் திட்டமிட்டோம்” என்கிறார் ‘ஐக்கியம்’ பள்ளியின் தலைமையாசிரியர் சங்கர் வெங்கடேசன்.
அதன்பின் வகுப்புத் தலைவர், பள்ளித் தலைவர் ஆகிய தேவைகளை முன்வைத்து தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று தேர்தல் பற்றி எடுத்துரைத்தனர். அவ்வகுப்புகளில் தலைமையின் பொறுப்பு அவசியம் பற்றி பேசினர். ரகசிய வாக்கெடுப்பு முறை பற்றி விளக்கினர்.
வாக்குச்சாவடி, வாக்குச்சீட்டுத் தயாரிப்பு, சின்னங்கள் தேர்வு, பிரச்சாரம் என ஒவ்வொன்றாக நடந்தது. தேர்தல் முறையாகவும் சிறப்பாகவும் நடந்தது. தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மற்ற வகுப்பு மாணவர்கள் தங்கள் கடமையை அழகாக நிறைவேற்றத் தொடங்கினர். இதன் விளைவாக, ‘ஐக்கியம்’பள்ளியின் வளாகம் பிளாஸ்டிக் இல்லா சமூகமாக தற்போது மாறியிருக்கிறது.
திட்டக் குழு

குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளுக்காகவும் குழந்தைகள் காப்பகமாகவும் புதுசேரிக்கு அருகில் உள்ள அரோவில்லில் இயங்கிவந்தது ‘ஐக்கியம்’. 2008-ல் இது ஐக்கியம் சி. பி.எஸ்.சி. பள்ளியாக முறைப்படுத்தப்பட்டது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை உள்ளது. “எல்.கே.ஜி.யில் மட்டும் 20 மாணவர்களைத் தேர்வுசெய்வோம். குழந்தையின் தேவையைப் பொரறுத்துத் தேர்வு செய்வோம். சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ள குழந்தைக்கு முன்னுரிமை அளிப்போம்.
இதே கிராமத்தில் வசிப்பவர்கள், அவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு தேர்வு செய்கிறோம். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் 20 குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறோம்” என்று விளக்குகிறார் ஐக்கியம் சங்கர் வெங்கடேசன்.
இப்பள்ளியின் பாடத்திட்டத்துக்குத் தேவையான புதிய கற்பித்தல் முறைகள், வல்லுநர்கள், ஆராய்ச்சி முறைகள், கற்றல் கருவிகள் போன்றவற்றை தீர்மானிக்க இப்பள்ளிக்கென்று பிரத்தியேகமான கல்வி உதவிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.


சங்கர் வெங்கடேசன்
எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஒரு பிரிவு. ஒன்று முதல் நான்காம் வகுப்புவரை ஒரு பிரிவு. ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை மற்றொரு பிரிவு என மூன்று பிரிவுகள். மூன்று பிரிவு ஆசிரியர்களும் ஆரோவில் ஆசிரியர் மையத்தின் துணையுடன் தங்கள் பாடங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஆண்டுத் திட்டத்தின்போது ஒவ்வொரு வகுப்பின் முழுப் பாடத்தையும் பாடத்திட்ட வரையறையோடு இணைத்து வாசிக்கிறார்கள். முடிந்த ஆண்டில் அப்பாடத்தில் நடந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல ஏழாம் வகுப்பு பாடத்தைத் திட்டமிட ஆறாம் வகுப்பில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் இணைத்துக்கொள்கிறார்கள். அப்படிச் செய்யும்போது மாணவர்களுக்கு அது பயன்படும்வகையில் அமைகிறது.
வன்முறை அற்ற சமூகப் பாடம்

இப்பள்ளியில் பின்பற்றப்படும் புதிய கற்பித்தல் முறை இவை:
கடந்த காலத்தில் பாட்டும் கதையும் நாடகமுமாக இருந்தது மொழிவகுப்பு. தற்பொழுது தமிழுக்கு வழக்கு மொழியும் ஆங்கிலத்துக்குப் பயன்பாட்டு மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது.
கற்றல்குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைளுக்கு கூடுதல் கவனம் செலுத்த தீபம் சிறப்புப் பள்ளியின் உதவி பெறப்படுகிறது. இதன் மூலமாக பேச்சுப் பயிற்சி, தசைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன . கற்றல் குறைபாடுள்ளவர்களுகென்று தனி ஆய்வகம் உள்ளது.
வன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான பாடத்திட்டம் இன்று அவசியமாக உள்ளது. ரீட்டா ஏர்பன் என்ற வல்லுநரும் கலையாசிரியர் மெடில்டாவும் இணைந்து அதைச் செயல்படுத்தி வருகின்றனர். ரீட்டா குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துநராகச் செயல்படுகிறார்.
‘சுதர்மா கமிட்டி’ என்ற ஒரு குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் சிறு சிறு பிரச்சினைகளைக் கடக்க உதவுகின்றனர். ஒரு வேளை ஒரு மாணவர் வீட்டுப் பாடம் முடிக்கவில்லையென்றால், அவர்களிடம் அனுப்பப்படுவர். அங்கு உட்கார்ந்து முடித்துவிட்டு வகுப்புக்குத் திரும்புவர்.
‘வாளியை நிரப்புவது எப்படி?- என்ற கதைப் புத்தக வரிசை நன்னடத்தைக்கான பாடமாகப் பின்பற்றப்படுகிறது.
இப்படி, பிரச்சினைகளை மாணவ நிலையிலிருந்து பார்க்க முயல்கிறது இப்பள்ளி. பாடத்திட்டத்தைக் கடந்தும் மாணவர்களுடன் செயல்பட எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பே ‘ஐக்கியம்’ பள்ளி.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#6
உழைப்புக்கும் தமிழுக்கும் முதலிடம்!


ஓவியம்: கோ.ராமமூர்த்தி
கொ
ல்லன்பட்டறை, செருப்பு தைக்குமிடம், நெசவு செய்யுமிடம்… இந்த இடங்களை மையமாகக் கொண்டு ஒரு பள்ளி செயல்பட முடியுமா? முடியும். இந்த இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் தொழிற்கருவிகள் குறித்த பாடத்தை சிறப்பாகக் கற்றுத்தர முடியும்.

மேற்கண்ட இடங்கள் எதுவும் நமக்கும் அந்நியமில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய இடங்கள்தான் அவை. அங்கு ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ உட்கார்ந்து அந்தத் தொழிலில் செலுத்தப்படும் உழைப்பை கவனிப்பது, தொழில் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்பது, பள்ளி திரும்பிய பிறகு அதை குறித்து உரையாடுவது, தாங்கள் பார்த்தது பற்றிப் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது, அவற்றை வரைவது, எழுதுவது என ஒரு சங்கிலித் தொடராகக் கற்றல் தொடர்கிறது. இந்தச் செயல்பாடுகள் எதிலும் மாணவர்கள் சோர்ந்து போவதில்லை, மாறாக உற்சாகம் பெறுகிறார்கள்.
தொழிற்பட்டறைகளுக்கும் விளைநிலங்களுக்கும் குழந்தைகளுடன் இப்பள்ளியின் ஆசிரியர்கள் செல்வது வாடிக்கை. கொல்லன்பட்டறைக்குப் போன மூன்றாம் வகுப்புக் குழந்தை, பஞ்சர் ஒட்டும் கடையில் தான் பார்த்ததை பற்றியும் வகுப்பில் விவரித்துக்கூறும் திறனைப் பெற்றுவிடுகிறாள். இதன்மூலம் குழந்தைகள் தொழிலை மதிக்கக் கற்றுக்கொள்கின்றனர் என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி.

சாந்தி
இவ்வாறு சமூகத்தில் புழங்குகிற பாடல், ஆடல், உணவு, தொழில், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக்கொண்டு கல்வியை எடுத்துச்செல்கிறது சங்கரன்கோவிலில் செயல்பட்டுவரும் தாய்த் தமிழ்ப் பள்ளி. பதினெட்டு ஆண்டுகளாக இப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 1993-ல் தனியார் பள்ளிகள் வழி ஆங்கில வழிக்கல்வி பெரிய அளவில் பரவலானபோது, எதிர்வினையாகத் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்நேரத்தில் தமிழகத்தில் மாற்றுக் கல்வியை முன்னிறுத்தி ஏறக்குறைய முன்னூறு பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில் உள்ள இப்பள்ளி.
வில்லுப்பாட்டாக மாறும் பாடம்

எல்லாப் பாடங்களுமே கதை, பாடல், நாடகம், செய்து பார்த்தல், சென்று பார்த்தல் என்ற ஏதாவது ஒரு நேரடி அணுகுமுறையில் இருக்கும்படி திட்டமிடப்படுகிறது. “தமிழ்ப் பாடத்தை வில்லுப் பாட்டாக மாற்றும் மாணவ அனுபவமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெறும் அனுபவத்திலிருந்தே பாடத்தை அறியவைக்கும் உத்தியும் எங்கள் கற்பித்தலில் இயல்பாக மேற்கொள்ளப்படுகின்றன. எங்களுடைய பாடங்களுக்கு பழமொழி, புதிர்கள் போன்ற செயல்பாடுகளும் முக்கியமாக உள்ளன” என்கிறார் சாந்தி.
நட்ட நாடு காட்டுக்குள்ள
நாலு பசுமாடு நிக்கு அது என்ன?
பணம்பெத்த கருவாடு
பனைக்குள்ள இருக்கு
சாவட்டக் கருவாடு
மேவட்டம் போடுது
தைப் பனி தரைய துளைக்கும்
மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.

இது போன்ற சொலவடைகள், விடுகதைகளை பெரியவர்களிடமிருந்து மாணவர்கள் திரட்டுகிறார்கள்.
உவப்போடு உதவும் பெற்றோர்

மொழியை பயிற்றுவிக்க இவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எளிதானவை. சங்கரன்கோவிலில் புழங்கும் வாய்மொழிக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், விடுகதைகள் போன்றவற்றைப் பள்ளிக்குக் கொண்டுவருகிறார்கள். இவற்றை ஒரு குழந்தை தெரிந்துகொண்டு சொல்லும்போது, அக்குழந்தையை பாராட்டப்படுகிறது. பாடங்களுக்குத் தகவல் திரட்ட பெற்றோர்களும் ஆர்வத்தோடு உதவுகிறார்கள். தன் குழந்தைக்கு உதவ முடிவதால் படிக்காத பெற்றோர்களால்கூட, அதனால் கிடைக்கும் பலனை உணர முடிகிறது.
“நாம் தானியங்களின் சத்துகளைப் பற்றிப் படிக்கப் போகிறோம். யார் யார் என்ன எடுத்துவரப்போகிறீர்கள்? உங்கள் வீட்டில் இருக்கும் தானியங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். ஆளுக்கொரு தானியம் எடுத்துவாருங்கள் … “இப்படிச் சொல்லும்போது, வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் அது பற்றி விளக்கிய பிறகே குழந்தைகள் வாங்கிவருகின்றனர். வகுப்பறையில் முறைப்படுத்தப்பட்ட உரையாடல் வீட்டிலும் தொடரும்போது, அது பயனுடையதாவதைப் பார்க்கிறோம்.
எங்கள் குழந்தைகளின் ஆளுமையில் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வையம்பட்டி முத்துசாமி, கரிசல் குயில் கிருஷ்ணசாமி போன்றவர்கள் எங்கள் பள்ளியில் நேரடியாகப் பயிற்சியளிப்பது இன்னொரு பலம். பாடப்புத்தகத்தில் வரும் அழ. வள்ளியப்பாவின் பாடல்களுக்கும், நாங்களே சேர்த்துக்கொண்ட பட்டுக்கோட்டையார் பாடல்களும், தாய்த் தமிழ்ப் பள்ளிகளால் முன்னெடுக்கப்பட்ட பாடல்களும் எங்கள் குழந்தைகளால் பாடப்படுகின்றன” என்கிறார் சங்கர்ராம்.
கத்தரிக்காய்க்கு கொடபுடிக்கக்
கத்துக் கொடுத்தது யாரு? - அந்த
அந்த கடலக் கொட்டைக்கு
முத்து சிப்பிபோல
மூடி வச்சது யாரு?
பூசனி தலையில் பூவை அழகா
முடிஞ்சி வச்சது யாரு- அட
வாசனை இல்லாக் காகிதப்பூவுக்கு
வர்ணம் அடிச்சது யாரு
யாரு யாரு யாரு காரணம்
தெரிஞ்சா கூறு கூறு கூறு

- இது போன்ற பாடல்கள் குழந்தைகளின் தேடல் சார்ந்ததாகவும் பகுத்தறிவை வளர்த்தெடுப்பததாகவும் அமைகிறது.
ஒத்தக்காலத் தூக்கி நொண்டியடி
ஒவ்வொரு புள்ளையா தொட்டுப்புடி

- இப்படி ஒவ்வொரு பாடலையும் குழந்தைகள் தாங்களே பாடும்போது அழகாக, ரசனையாக இருப்பது என்பது ஒருபுறம் இருக்க குழந்தைகளின் ஆளுமையில் அவை ஏற்படுத்தும் தாக்கம் அளவிடற்கரியது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்துப் பணியாற்றி ஆண்டு இறுதியில் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அதைக் காட்சிப்படுத்துவது இப்பள்ளியின் வழக்கம். இந்த ஆண்டு நாட்டுப்புற நடனம், கடந்த ஆண்டு கதை, அதற்குமுன் கைவினை என கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சங்கர் ராம்
‘எங்கள் பள்ளியில்தான் எங்கள் பிள்ளைகள் படித்தனர்’

“குழந்தைகள் விரும்பி வரும் இடமாக பள்ளி இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய பள்ளியின் நோக்கம். மாணவர்களை தண்டித்தல், அவமானப்படுத்துதல் இருக்கக் கூடாது. வீட்டுப் பாடம், மதிப்பெண், போட்டியிடுதல், ஒப்பிட்டுப்பார்த்தல் போன்றவை ஒருபோதும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் மேல் ஒருவர் பேசும் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தொடங்கப்பட்டது எங்கள் பள்ளி.
சமூக ஈடுபாடு, செயல்பாடாக மாற்றப்பட வேண்டும் என்ற உந்துதலில் நானும் என் மனைவி முத்துலட்சுமியும் இணைந்து இப்பள்ளியைத் தொடங்கினோம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்வழிப் பாடப்புத்தகத்தைப் பின்பற்றுகிறோம். அரசு எங்கள் பள்ளிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்திலிருந்து பாதியை வாங்குகிறோம். ஐந்தாம் வகுப்புவரை பயிற்றுவிக்கிறோம். எங்கள் குழந்தைகளும் இந்தப் பள்ளியில்தான் படித்தனர்” என்கிறார் சங்கர்ராம். இப்பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளுக்குச் செல்லும்போது கற்றலில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களிடம் மேலோங்கும் உற்சாகம், தாய்மொழியைப் போன்றே தாய்த்தமிழ்ப் பள்ளியும் நமக்கானது என்பதை உணர்த்துகிறது.
கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
தாய்த் தமிழ்ப் பள்ளி தொடர்புக்கு: 94435 55918
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#7
பாசி கோத்துப் பயிலலாம்!


ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ரம்ப வகுப்பில் ‘நான், என் குடும்பம்’என்பதில் தொடங்குகிறது கல்வி. அடுத்து சொந்த ஊர், ஊரிலுள்ள விஷயங்கள், யார் எந்த மொழியில் பேசுகிறார்கள், யார் யார் எந்த உருவ அமைப்பில் இருக்கின்றனர் என்ற அடையாளத்தை அறிதல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பின் நீலகிரி மாவட்டத்தைப் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்துத் தமிழகம். பிறகு ஒட்டுமொத்த நாடு குறித்த அறிவு ஊட்டப்படுகிறது.....இப்படியாக செயல்பட்டுவருகிறது நீலகிரி மலையில் உள்ள கூடலூரைச் சேர்ந்த வித்யோதயா பள்ளி.

பூர்வகுடிகளான பெட்ட குறும்பர், முள்ளுக் குறும்பர், பனியர், இருளர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடி மக்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதிவாசி முன்னேற்றச் சங்கம் 1986 முதல் 1988 வரை நடத்திய இயக்கத்தின் மூலம் தங்களுக்கான நிலத்தை போராடிப் பெற்றனர். தங்களுடைய நிலத்துக்கு உரிமை கோரவும் அது குறித்து அரசாங்கத்தை அணுகவும் அவர்களுக்குக் கல்வி தேவைப்பட்டது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 1996-ல் தொடங்கப்பட்டதுதான் வித்யோதயா பள்ளி. இப்பள்ளியை நிறுவியது மட்டுமல்லாமல் கல்வி தொடர்பான வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள் ரமா, ராமதாஸ் தம்பதி.
அனைத்துப் பழங்குடியினக் குழந்தைகளுக்கும் கட்டாய - தரமான பள்ளிப் படிப்பு வழங்குதல், மாணவர்கள் விருப்பத்தோடு பயிலும் சூழலை ஏற்படுத்துதல், கல்விக்கான சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலை உறுதி செய்தல் போன்ற தொலைநோக்குப் பார்வையோடு ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி செயல்பட்டுவருகிறது.
அன்றாட வாழ்க்கையே பாடம்

“ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளியை ஆங்கில வழிப் பள்ளியாகத்தான் தொடங்கினோம். காரணம், பழங்குடியின குழந்தைகளுக்குத் தனி மொழியுள்ளது. அதனால் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே அயல்மொழிதான். அதேநேரத்தில் தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் பேசும் மொழியாக இருப்பதால், தமிழ் மூலம் கற்பது பயனளிக்கும். தற்போது இரு மொழிவழிப் பள்ளியாகச் செயல்படுத்திவருகிறோம்.
சமச்சீர்க் கல்விப் புத்தகங்களுடன் மாணவர்களின் கற்றல் - கற்பித்தலுக்காக நாங்களே வடிவமைத்த புத்தகங்களையும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றையும் புரிந்து, தெரிந்து செயல்படுதலை அடிப்படையாகக்கொண்டது எங்கள் பள்ளி” என்கிறார் ரமா.
சமச்சீர்ப் பாடத்தைப் பின்பற்றும் அதேவேளையில் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானவற்றையும் இணைத்து பிரத்யேகப் பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதேபோல கணிதத்தைப் பொறுத்தவரை முதல் வகுப்பில் 10 எண்கள்வரை மட்டுமே இங்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒப்பிடுதல், வித்தியாசப்படுத்துதல், கூட்டல், கழித்தல் போன்ற பாடங்களும் போதிக்கப்படுகின்றன. அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றனர்.
“எங்கள் பள்ளியில் படிக்கும் பழங்குடி குழந்தைகளின் கலைகள், பண்பாட்டை மையமாக வைத்து கல்வியை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்துகிறோம். வாழ்க்கையின் வழியாகக் கல்வியைப் புகட்டும்போது கற்பித்தலும் கற்றலும் எளிதாகிறது. தினமும் மாலை ஒரு மணி நேரம் கைவினைச் செயல்பாடுகளுக்காகவும் ஒரு மணி நேரம் விளையாட்டுக்காகவும் ஒதுக்குகிறோம். முதல் வகுப்பு மாணவர்கள் பாசி கோக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடும்போது ஏற்படும் மாற்றத்தை அவர்களே உணரும்படி செய்கிறோம்.
ஒரு வண்ணப் பாசியுடன் மற்றொரு வண்ணப் பாசியை கோத்துக்கட்டும்போது அவற்றுக்கு இடையிலான வண்ணம், அளவு வித்தியாசங்களை விளக்குவோம். ஆழமாகக் கற்றல், நேர்த்தியாகச் செயல்வழியில் கற்றல், அழகியலோடு செயல்படக் கற்றல், அனுபவித்துச் செயல்படுதல் என்கிற தாகூரின் கல்விச் சிந்தனையை இதன் மூலம் முதன்மைப்படுத்துகிறோம்” என்கிறார் ரமா.
மாணவ-மாணவி புரிதல்

பனியர் பழங்குடியினரின் பேச்சுமொழியைத் தமிழ் வரிவடிவத்தின் மூலம் பதிவு செய்து புத்தகம் ஒன்றை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முயற்சி அந்த மொழியை அழியாமல் ஆவணப்படுத்தியதோடு, அடுத்த தலைமுறையினர் அதை எடுத்துச் செல்லவும் உதவியாக உள்ளது. கலைகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள்.
“ஃபிரிஸ்பி (தட்டு எறிதல்) விளையாட்டை ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஊக்குவிக்கிறோம். மாணவ மாணவிகள் இணைந்து விளையாடுவதையும், விளையாட்டைத் தொடர்ந்து உரையாடுவதையும் முக்கியமானவையாகக் கருதுகிறோம். இந்த விளையாட்டை முன்னிட்டு இவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறார்கள்” என்கிறார் ஆசிரியை ஜானகி.
பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்க்கை அவர்களின் மூதாதையரைப்போல இல்லை. அதேநேரத்தில் பொதுச் சமூகத்தினுடையதைப் போலும் இல்லை. நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே போவதால் காடுகளுக்கும் இந்த மக்களுக்கும் இடையிலான உறவிலும் பெரும் இடைவெளி ஏற்பட்டுவருகிறது. கல்வி மூலம் இவற்றைச் சீர்படுத்த இப்பள்ளி முயற்சிக்கிறது.
இடைநின்ற மாணவர்கள் ‘ஆதிவாசி முன்னேற்ற சங்க’த்தின் மூலமாகக் கல்வியைத் தொடர ரமா, ராமதாஸ் உதவுகிறார்கள். அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் உதவியுடன் இடைநின்ற மாணவர்கள் நூறு பேர் உறைவிடப் பள்ளியில் தங்கிக் கல்வியைத் தொடர்கின்றனர். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதும் இந்த மையம்தான். இவர்களுடைய தொடர் முயற்சியால் இந்தப் பகுதியிலுள்ள 70 சதவீதக் குழந்தைகள் 10-ம் வகுப்புவரை படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#8
திருவிழாக் கோலம் கண்ட பள்ளி!


ஓவியம்: கோ.ராமமூர்த்தி

து சனிக்கிழமை காலை. பள்ளி வளாகத்தின் பரந்துவிரிந்த திடலில் அத்தனை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருக்கிறார்கள். அந்த வாரம் நடத்தப்பட்ட பாடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கூட்டம் இது. இனிமையான பாடல்களைப் பாடுவதன் மூலமாகவும், நளினமான நடன அசைவுகளின் வழியாகவும், அழகிய ஓவியங்களின் ஊடாகவும் தாங்கள் கற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள் அந்த மாணவர்கள்.

தமிழ்ப் பாடத்தின் வாழ்த்துப் பாடலுக்கு மூவர் நடனம், இருவர் பாடல், ஒருவர் தாளம், அரங்க ஏற்பாடுகளுக்கு ஒருவர் என ‘படிப்புக் கச்சேரி’ ஒன்று அசத்தலாக அரங்கேறுகிறது…இப்படியாகச் செயல்படுகிறது கடலூர் மாவட்டம் சின்னக்காட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளைத் தாமரைப் பள்ளி.
ஏட்டுக் கல்வி போதும்

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமப் பள்ளியில் அன்னையிடம் நேரடியாகக் கல்வி பயின்றவர்கள் அஜித் சர்க்காரும் செல்வி சர்க்காரும். அரவிந்தரின் கல்விச் சிந்தனையின் ஊடாகத் தாங்கள் கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு வெள்ளைத் தாமரைப் பள்ளியைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.
“தனிமனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மையப்படுத்தியதாகச் செயல்படுவதுதான் கல்வி என்று வலியுறுத்தியவர் அரவிந்தர். Physical, vital, mental, spiritual ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் கல்வியை அவர் முன்வைத்தார். நாங்கள் படித்த ஆசிரமப் பள்ளியிலும் நீச்சல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், நாடகம் போன்றவற்றுக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஏட்டுக் கல்வி என்பதற்கே அங்கு இடம் இல்லை. வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் கிடையாது. ஒரே வகுப்பறையோ, கட்டுப்பாடுகளோ, மதிப்பெண் முறையோ அங்குக் கிடையாது. ஆனால், அங்கு படித்த அனைவரும் திறனும் திறமையும் பெற்றவர்களாக வளர்ந்தோம். அந்தப் பள்ளியின் மாணவர் என்கிற சான்றிதழோடு உலகில் எந்தப் பகுதியில் உள்ள கல்லூரியிலும் மேற்படிப்புக்கான அனுமதியைப் பெற முடிந்தது. பட்டப் படிப்பை முடித்தும் ஆசிரமப் பள்ளியிலேயே ஆசிரியராக நாங்கள் இருவருமே வேலைபார்த்தோம்” என்கிறார்கள் அஜித் சர்க்கார், செல்வி சர்க்கார்.

அஜித் சர்க்கார்
கனவை மெய்படுத்தியவர்கள்

1968வரை ஆசிரமப் பள்ளியில் உடற்கல்வி, விளையாட்டுப் பயிற்றுனராகப் பணிபுரிந்திருக்கிறார் அஜித். அங்கு நடனம் கற்பித்திருக்கிறார் செல்வி. 68-க்குப் பிறகு பிரான்சில் சில காலம் இருவரும் பணிபுரிந்தார்கள். அங்கு இந்தியக் கலைகளுக்கான கலாச்சார மையத்தை நிறுவினார்கள். எளிய மக்களுக்கு இலவசமான தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற கனவை மெய்படுத்த 2006-ல் வெள்ளைத் தாமரைப் பள்ளியை நிறுவினார்கள்.
“பாடத்திட்டத்தைத் தாண்டி பரதநாட்டியம், அயல் நாட்டு நடன வகைகள், யோகா, கராத்தே, விளையாட்டு, இசை, ஓவியம், தோட்டக்கலை போன்றவற்றைத் தனிப் பாடங்களாக எங்களுடைய பள்ளியில் கற்பிக்கிறோம். அலாதி பிரியத்துடன் இவற்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். நடனம், ஓவியம் உள்ளிட்டவை பற்றி அறிவார்தமான உரையாடலிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருகிறோம். ஆசிரியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பிரான்ஸிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மூலமாகவும் செயல்படுத்திவருகிறோம்” என்கிறார் செல்வி சர்க்கார்.
தேவையான தகுதி

இந்தப் பள்ளியில் அனுமதி பெற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அந்தப் பள்ளி அமைந்திருக்கும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழந்தையாக இருக்க வேண்டும். இன்னொன்று, ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளாக இருக்க வேண்டும். இங்கு படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் விளிம்புநிலையைச் சேர்ந்த குழந்தைகளே.
“வகுப்புக்கு 20 மாணவர்கள். 20 மாணவர்களைச் சேர்க்க 70 விண்ணப்பங்கள்வரை பெறுகிறோம். அவர்களில் இருந்து மிகவும் புறக்கணிக்கப்பட்ட சூழலில் இருக்கும் குழந்தைகளை தான் வளர்த்தெடுக்கிறோம். மாநில அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவருகிறோம். பாடங்கள் இருமொழியில் கற்றுத் தரப்பட்டாலும் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. கூடுதலாகப் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிப் பாடங்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். புதுமையான கற்பிக்கும் முறைகள், இனிமையான கற்றல் சூழல், ஈடுபாட்டுடைய ஆசிரியர்கள் ஆகியவற்றை உறுதி செய்துள்ளோம்” என்கிறார் அஜித்.
கொண்டாட்டமாகப் படிப்போம்!

தங்களுடைய பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சிகள், வருடாந்தர விழாக்கள் குறிப்பிடத்தகுந்தவை என்கிறார்கள் அஜித்தும் செல்வியும். “சென்ற ஆண்டு வன விலங்குகள் பற்றிய விழா ஒன்றைத் திட்டமிட்டோம். கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என நான்கு பிரிவுகளாக இந்தியாவின் வனங்களைப் பிரித்தோம். ஒவ்வொன்றைப் பற்றியும் புத்தகங்கள், வீடியோ காட்சிகளின் துணைகொண்டு காடுகளின் சிறப்பம்சங்களைத் தொகுத்தோம்.

செல்வி சர்க்கார்
பின்பு மாணவர்கள் காடுகளைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பட்டியலிட்டோம். திசைவாரியாக இருக்கும் காடுகள் எவை, அங்குள்ள விலங்குகள் யாவை, அந்தக் காடுகளின் பிரத்தியேகமான தாவரங்கள் எவை, புலிகள், யானைகள் ஊருக்குள் புகுவது ஏன்?... இப்படி ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து என்ன செய்யலாம் எனச் சேர்ந்து கலந்துரையாடினார்கள் மாணவர்கள்.
ஒவ்வொரு குழுவிலும் ஆரம்பப் பள்ளித் துளிர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்வரை இந்த விழாவில் பங்கேற்றனர். பழைய காகிதங்கள், காய்ந்த மரக் குச்சிகளைக் கொண்டு மரங்களையும் யானைகளையும் பாம்புகளையும் வடிவமைத்து வண்ணம் தீட்டினார்கள். இந்த விழாவுக்குத் தயாராக, கல்வி ஆண்டில் தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினோம்” என்கிறார்கள்.
கடந்த ஆண்டின் தலைப்பு புவியியல் என்றால் இந்த ஆண்டு வரலாறு. ‘நமது நாடு’ என்ற தலைப்பில் இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள். தங்களுடைய கிராமத்தில் இருந்து கடலூர்கூடச் செல்லமுடியாத குழந்தைகளும் ஒட்டுமொத்தத் தேசத்தையும் உணரவைக்கும் முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கிறார்கள். ஒற்றுமையில் வேற்றுமை, அனைவருக்கும் வாய்ப்பளித்தல், உலகம் தோன்றிய விதம்…போன்றவற்றைக் கூட்டு முயற்சியின் மூலம் எடுத்துச்செல்கிறார்கள். ஒரு வாரம் நடக்கும் இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், அக்கம்பக்கத்துப் பள்ளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளப் பள்ளியின் ஆண்டுவிழா அந்தப் பகுதியின் திருவிழாவாகக் களைகட்டுகிறது!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#9
பங்கேற்பாளர்களாக மாறும் மாணவர்கள்!


பள்ளி வளாகத்தில் இருந்து மரக்கன்றுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று தங்களுடைய வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடத்திலும் நடுகிறார்கள் அந்த மாணவர்கள். நட்ட மரத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்கள். தாங்கள் வளர்த்த மரங்களை ஒளிப்படம் எடுத்து அதைப் பற்றி எழுதுகிறார்கள். இந்தத் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுடைய மரங்களின் எண்ணிக்கை, வளர்ச்சி, அவை பராமரிக்கப்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது அந்தப் பள்ளி. இவ்வாறு க்ரியா பள்ளியின் 450 முதல் 500 மாணவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தலா 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்திருக்கின்றன.
எங்கெங்கு காணினும் பசுமை!

திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் செயல்பட்டுவருகிறது ‘க்ரியா சில்ரன்ஸ் அகாடமி’. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மையமாக இப்பள்ளி செயல்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதால் ‘க்ரியா’ (Crea+tive) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பசுமையாகக் காட்சியளிக்கும் பள்ளி வளாகம். அதிலும் ஒரு பகுதி மரங்கள் அடர்ந்த காட்டைப் போன்று இருக்கிறது.
விரும்பும்போது தங்கள் வீட்டில் இருந்து சேகரித்துவரும் விதைகளை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நடலாம். இந்த முயற்சியால் பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்ட செடிகள் பள்ளி மைதானம் முழுக்க மரங்களாக நிமிர்ந்தெழுந்து நிற்கின்றன. அடுத்ததாகப் பள்ளி வளாகத்துக்கு வெளியே மாணவர்களின் வீட்டுச் சுற்றுப்புறத்திலும் மரக்கன்றுகளை நடுவதாகத் தங்களுடைய திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
“மரங்களின் மகிமையை மாணவர்கள் கண்கூடாக உணர புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரேணுகா ஃபார்முக்கு அவர்களை அழைத்துச்சென்றோம். அங்கு, 50 ஏக்கரில் வளர்த்திருக்கும் 2,000 மரங்களைக் கொண்ட பண்ணையைப் பார்வையிட்டார்கள். இதுபோல அரசு வாழை ஆராய்ச்சி மையத்துக்கும் அழைத்துச் சென்றோம். அங்கு அவர்கள் மரங்களின் தன்மை, பலன்கள் போன்றவற்றைப் பார்த்ததோடு, அது பற்றி நிறைய கேள்வி கேட்டு உரையாடவும் செய்தார்கள்” என்கிறார் பள்ளியின் தாளாளர் கிறிஸ்டி சுபத்ரா.
மர நண்பர்கள்

பள்ளியில் அரச மரம் ஒன்று இந்த ஆண்டு பட்டுப்போகும் நிலையில் இருந்ததைக் கண்டு, மரத்தை மீட்கும் வேலையில் இறங்கினார்கள் மாணவர்கள். கூடி நின்று கவனிப்பது, நீரூற்றுவது, மரத்துடன் பேசுவது, வீட்டிலிருந்து சாணி கொண்டுவந்து பதியம்போடுவது போன்ற செயல்பாடுகளால் அந்த மரம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.
“இந்த நிகழ்வு மாணவர்களுக்கு அளித்த உத்வேகத்தால், ‘மர நண்பர்கள்’ என்ற புதிய மாணவர் குழுவை உருவாக்கினோம் . ‘மர நண்பர்’களின் செயல்பாடுகள் பறவைகளை அவதானித்தல், வானியல் சார்ந்த செயல்பாடுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணித்தல் என்பதாக விரிவடைந்துவருகிறது” என்கிறார்.
‘மறு பயன்பாடு, குறைந்த பயன்பாடு, மறுசுழற்சி’ என்ற சுற்றுச்சூழல் கோட்பாட்டை மையமாகக்கொண்டு, கைவினை வகுப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன. தென்னை நார்க் கழிவு, வாழை நார், கல், மண், பயன்படுத்திய காகிதங்கள் ஆகியவற்றைச் சேகரித்துக் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கைவினைப்பொருட்கள் பாடப் பகுதிகளுக்குத் தொடர்புடையதாகவும் பின் அவை காட்சிப்படுத்தக்கூடியவையாகவும் மாற்றப்படுகின்றன.
மாணவர்களின் உடல் மேம்பாட்டுக்காகப் பாடல், யோகா, விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றின் மூலமாக மாணவர்களுக்கிடையே வன்முறைப் போக்கு குறைந்திருப்பதாகச் சொல்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி.

கிறிஸ்டி சுபத்ரா
இதை முன்னிட்டும் சமூக நிகழ்வுகளுடன் மாணவர்களை தொடர்புபடுத்தவும் ஒவ்வொரு வாரமும் ‘வாரம் ஒரு செயல்பாடு’ என்ற திட்டத்தை இப்பள்ளி அமல்படுத்தி இருக்கிறது. விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் முதல் நீட் தேர்வுப் பிரச்சினைகள்வரை சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், பார்வையாளர் நிலையிலிருந்து மாறிப் பங்களிப்பைச் செலுத்தவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
ஆங்கில வழி மெட்ரிக் பள்ளியான இதில் சமச்சிர் கல்வித் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேநேரத்தில் தமிழ் மொழிப் பாடத்துக்கு கூடுதுல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் உள்ளிட்டத் துறைகளை ‘ஸ்டீம்’ (STEAM) என்ற திட்டத்தின் கீழ் செயல்வழிக் கல்வியாக கற்பிக்கிறார்கள். “ஒரு பாடத்தை எடுத்து செயல்வழியில் அதன் பகுதிகளைப் பிரித்து ஆராய்ந்துப் படிப்போம். உதாரணத்துக்கு, உயிரணு பற்றிய பாடத்தை படிக்கும்போது ஆய்வுக்கூடத்தில் உயிரணுவின் வளர்ச்சி, அதன் அழிவை பார்த்தறிவது, வீடியோ பார்ப்பது, காயம்பட்டால் என்ன ஆகிறது என்பதை உற்று நோக்க சொல்வது, உயிரணு தொடர்பான புதியக் கண்டுபிடிப்புகளுக்கு முன் அவற்றை எப்படி புரிந்து செயல்பட்டோம் என பின்னோக்கி நகர்வது போன்ற முறைகளை கையாள்கிறோம்.
இயற்கை வளம், வறட்சி உள்ளிட்ட பாடங்களை வெறும் அறிவியல் பாடமாகப் புகட்டாமல் இலக்கியம், சூழலியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்பிக்கிறோம். மழை பொழிவு, மழையின்மைக்கான காரணங்களை சமூக அறிவியல் ஆசிரியர் கையாள்வது, மழைக் கதைகள், மழைப் பாடல்கள் மழையில் நனைந்த அனுபவத்தை எழுதுவதை மொழி ஆசிரியர்கள் கையாள்வது என பாடத்தைப் பிரித்துக்கொள்வோம். இப்பாட்த்திட்டத்தின் மூலமாக ஆசிரியர் ஒன்றுகூடுதலும் உரையாடுவதும் செயல்பாடுகளை செய்யவேண்டிய நேரங்களைத் திட்டமிடுவதும் நடக்கும். தேவைப்படும் இடங்களில் ஓவிய, கை வினையாசிரியர்களின் உதவியைப் பெறுவோம்” என்கிறார் தலைமை ஆசிரியர்.
பாடப் புத்தகக் கல்வியோடு பசுமைச் செயல்பாடுகள், சமூக மாற்றத்துக்கான உரையாடல்கள், குழு விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலமாகப் பொறுப்பான நாளைய சமூகத்தை வளர்த்தெடுக்க முயல்கிறது இந்தப் பள்ளி.
பள்ளி பற்றி அறிய: http://www.creaschool.in/,
தொடர்புக்கு: 8072836736, 9442560489


கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#10
பள்ளிக்கு வந்த சந்தை


‘ச
ந்தை என்றால் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலைப் பாடப் புத்தகத்தில் படித்தால் புரியுமா அல்லது நேரடியாகச் சந்தைக்குப் போனால் தெரியுமா? நேரடி அனுபவத்துக்கு ஈடுஇணை ஏது! அதனால்தான் தங்களுடைய மாணவர்களைக் கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றுவருகிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியைகள். பின்பு பள்ளிக்குத் திரும்பியதும் மாதிரிச் சந்தை ஒன்றைப் பள்ளியில் நடத்தி ‘சந்தை என்றால் என்ன?’ என்ற கேள்விக்குரிய பதிலை அனுபவப் பாடமாகக் கற்றுக்கொள்கிறார்கள் அங்கிருக்கும் மாணவர்கள்.

பாடத்துக்குள் ஓர் பயணம்

சாப்பாட்டு வேளை முடிந்ததும் அந்தப் பள்ளியின் வளாகத்திலேயே குழந்தைகள் மணலில் வீடுகட்டி விளையாடுகிறார்கள். அவர்களுடைய விளையாட்டுக்கு இடையில் வித விதமான வீடுகளின் வடிவங்கள், சமவெளிகளில் இருக்கும் வீடுகளுக்கும் மலைப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்குமான வேறுபாடு, அப்பகுதியின் கலாச்சாரம் போன்றவை விளக்கப்படுகின்றன. இதன் மூலமாக மாணவர்களைச் சுலபமாகப் பாடத்துக்குள் பயணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
“வகுப்பு இல்லாத நேரத்தில் மாணவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்போம். அதன் வழியாகக் கண்டறிந்தவற்றைப் பள்ளிச் செயல்பாடுகளுக்குள் இணைப்போம். இப்படியாகக் குழந்தைகளுடைய ஆர்வத்துக்கு ஏற்ப கல்வியை எடுத்துச்செல்கிறோம்” என்கிறார் ‘உதவிப் பள்ளி’யின் தலைமையாசிரியை தவச்செல்வி. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளிக் கல்வியைத் திட்டமிட்டு வழங்கிவருகிறது இந்தப் பள்ளி. கதைகேட்டல், பாட்டுப் பாடுதல், வீட்டு நிகழ்வுகளை எடுத்துக்கூறுதல், படங்களைப் பார்த்து விளக்குதல் ஆகியவற்றின் மூலம் இங்குப் பயிற்றுவித்தல் நிகழ்கிறது.
எழுபதுகளின் தொடக்கத்தில் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில் பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடியில் ஆரோஷிகா என்கிற தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதில் வேலை பார்த்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை உள்ளிட்ட தேவைக்காகத் தொடங்கப்பட்டதுதான் ‘உதவி’அமைப்பு. பின் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கத் திட்டமிட்டது. இதனால், 1998-ல் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளியாக இது மாற்றப்பட்டது. 1999-ல் ஆரோஷிகா தொழிற்சாலை சில காரணங்களால் மூடப்பட்டாலும் பள்ளி மூடப்படவில்லை.

தவச்செல்வி
பூசணிக்காய்த் திட்டம்

“மனப்பாடம் செய்தல், கடுமையான பரீட்சை முறை என்கிற வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டம்தான் எங்களுடைய பள்ளியிலும் இருந்துவந்தது. பிறகு ஆரோவில்லில் உள்ள 15 தன்னார்வலர்களின் முயற்சியால் அந்த முறை மாற்றி அமைக்கப்பட்டது. அதிலும் பள்ளியின் நிறுவனர் நடா, மேகி, அனுபென் ஆகியோர் கல்வியில் புதுப்புது முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்கள்” என்கிறார் பள்ளி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த சஞ்சீவ்.
இத்தகைய முயற்சிகளால், இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒவ்வொரு பாடப் பகுதியும் சுவாரசியமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் கூட்டாக இணைந்து செயல்படவும், தனித்தனியாகக் கற்கும் வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ‘பூசணிக்காய்த் திட்டம்’ சுவையானது. பள்ளி வளாகத்தில் பெரிய தோட்டம் ஒன்று இருக்கிறது.
அதில் இன்று பூசணிக்காய்கள் பிரமாதமாக விளைந்திருக்கின்றன. இதற்குப் பூசணி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, கொடி வளர்த்தது எல்லாம் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்கள்தானாம். இங்கு விளைந்த பூசணிக்காய்களைப் பள்ளியின் சமையலறையிலேயே சமைத்துச் சாப்பிட்டு, பூசணிக்காய்ப் பாடல் பாடிய அனுபவம்...எனப் பசுமையான நினைவுகள் இந்தத் தோட்டத்துக்குப் பின்னால் இருப்பதாக விவரிக்கிறார்கள் இப்போது மேல்வகுப்புக்குச் சென்றுவிட்ட அந்த மாணவர்கள்.
“சவாலாக நாங்கள் கருதுவது இன்றைய சமச்சீர் பாடத்துடன் அன்னை, அரவிந்தரின் கல்விச் சிந்தனைகளை எடுத்துச் செல்வதைத்தான். அதற்கு மாணவர்களை மட்டுமே தயார்படுத்தினால் போதாது. ஆசிரியர்களும் தங்களைப் புது மனிதர்களாக அனுதினமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வகுப்பறைக்குள் நுழையும்போது செருப்பை வரிசையாக வைத்துவிட்டு உள்ளே செல்வது, சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்துவது, விளையாடும்போது வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் சிறப்பாக விளையாடுவது, வகுப்பறையையும் வெளிப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது இப்படி மாணவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆசிரியராகிய நாங்களும் கடைபிடிப்போம்” என்கிறார் தவச்செல்வி.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.