ஆரோக்கியம் காக்கும் பொங்கல் பொக்கிஷங்க&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆரோக்கியம் காக்கும் பொங்கல் பொக்கிஷங்கள்


டாக்டர் வி. விக்ரம்குமார்
தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றான பொங்கல் அறுவடைத் திருவிழாவோடு இணைந்திருக்கும் கரும்பு, மஞ்சள், இஞ்சி, சிறுபீளை, ஆவாரை, பிரண்டை, வேப்பிலை, மாவிலை, அரிசி, பாசிப் பருப்பு, ஏலம், உலர்ந்த திராட்சை உள்ளிட்ட அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் பெரும் பங்காற்றுகின்றன. பொங்கல் பண்டிகை உணவு, நம் உடல்நலனை எப்படிப் பாதுகாக்கிறது?

தித்திக்கும் கரும்பு
இனிப்பின் மறு பெயர் கரும்பு (கன்னல்). மாவீரன் அலெக்சாண்டரை சொக்க வைத்த, கொலம்பஸை கரீபியன் தீவுகளுக்குள் ஈர்த்த, பல போர்களுக்குக் காரணமாக இருந்த, வணிக அடிமைகளை உருவாக்கியவை கரும்பும் கரும்பின் துணைப் பொருட்களும்தான். பற்களுக்குத் திண்மை அளிக்கும் பொருட்களில் ஆலங் குச்சி, வேலங் குச்சியோடு கரும்புக்கும் தனியிடம் உண்டு. கரும்பைக் கடித்து மென்று சாப்பிடுவதால், பற்கள் சுத்தமாவதுடன், செரிமானத் திறனும் அதிகரிக்கும். கரும்பைக் கடித்துச் சாற்றை விழுங்குவதென்பது, பற்களுக்குக் கிடைக்கும் பிரத்யேகப் பயிற்சி.

கரும்புச் சாறு
அதிக கலோரிகள் கொண்டதும், விஷத்தன்மை கொண்டதுமான செயற்கைக் குளிர்பானங்களுக்குப் பதிலாக, கருப்பஞ்சாறு அற்புதமான தேர்வு. கரும்பில் நிறைந்துள்ள கால்சியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள், உடனடியாக ஆற்றலைக் கொடுக்கக் கூடியவை. உடலிலிருந்து அழலைச் (சூடு) போக்கி, உடலுக்கு உறுதியைத் தருகிறது கரும்பு. “மேகம் பித்தம் சாந்தமுறும்” என்ற சித்தர் பாடல், வெள்ளைப்படுதல், பித்த நோய்களுக்குக் கரும்பின் சாறு முக்கிய சிகிச்சை என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்குக் கீழாநெல்லி, கரிசாலையோடு சேர்த்துக் கரும்புச் சாறும் சிறந்த மருந்து.

வெல்லம்
பொங்கலின் இனிமைக்குக் காரணமான வெல்லம், தமிழர்களின் மிகப் பழமையான சுவையூட்டி, நலமூட்டி. திருமணச் சடங்குகளில் இடம்பெறுவதுடன், கலாச்சாரச் சின்னமாகவும் இருக்கும் வெல்லத்தை அளவோடு எடுத்துக்கொண்டால், வயிற்றுப் புண்ணை ஆற்றும் என்கிறது அகத்தியர் குணவாகடம்.

உணவு அருந்தியவுடன், சிறிது வெல்லம் சாப்பிட அறிவுறுத்திய பாட்டன் பாட்டிகளின் அக்கறையில் விஞ்ஞானம் இருக்கிறது. செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, செரிமானத்தைத் துரிதப்படுத்தும் தன்மை வெல்லத்துக்கு உண்டு. ரசாயனக் கலப்படம் இல்லா வெல்லம், பசியின்மையைப் போக்கும்.

கனிமச்சத்து, புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த வெல்லத்தால் சுவையூட்டப்பட்ட பொங்கல், பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால், மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.

ரசாயனங்களால் பட்டை தீட்டப்பட்டு, ஊட்டச்சத்தில்லாத வெள்ளை சர்க்கரையையும் சர்க்கரை நிரம்பிய குளிர்பானங்களையும் தள்ளி வைத்து விட்டு வெல்லத்தை வரவேற்பது நல்லது.

கல் கரைக்கும் சிறுபீளை
சமீபகாலமாகச் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. வாசல் தோரணங்களிலும், பொங்கல் பானைகளிலும் இடம்பெறும் சிறுபீளை, மிகச் சிறந்த கற்கரைச்சி மற்றும் சிறுநீர்ப்பெருக்கி. சிறுபீளை சமூலத்துடன் நெருஞ்சில், மாவிலங்கை வேர் ஆகியவற்றைச் சேர்த்துக் குடிநீராகக் குடித்துவந்தால், கல்லடைப்பு நீங்கும். கிருமிநாசினி தன்மை கொண்ட சிறுபீளை, சிறுநீர்ப் பாதை தொற்றுகளை வெளியேற்றும் என்கின்றன ஆய்வறிக்கைகள். சிறுபீளையால் பாண்டு (ரத்தக் குறைவு), மூத்திரக்கிரிச்சரம் (சிறுநீர் எரிச்சல்), நீரடைப்பும் கல்லடைப்பும் நீங்கும் என்கிறது அகத்தியரின் ஓலை.

வேப்பிலை, மாவிலை
அம்மை நோய் வந்த வீட்டு முன் வேப்பிலைக் கொத்தைக் கட்டுவதிலிருந்து, பொங்கல் பண்டிகையின்போது வேப்பிலை, மாவிலை கட்டுவதில் ஒளிர்கிறது நம் முன்னோர்களின் நுண்ணறிவியல். வேம்பு, மாவிலைகளுக்குக் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. வேப்பிலை, மாவிலைகளைக் கொண்டு மஞ்சள் கலந்த கிருமிநாசினி நீரைத் தெளிப்பதால் கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள் அழியும் என்கிறது இன்றைய அறிவியல்.

மஞ்சளும் இஞ்சியும்
நெடுங்காலமாக நம் சமையல் அறைகளில் உறவாடி, பல பெரிய நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துவருகிறது மஞ்சள். இதிலுள்ள ‘Curcumin’ எனும் வேதிப்பொருள் எதிர் ஆக்ஸிகரணப் பொருளாகச் செயல்பட்டுப் புற்றுநோய்கள், வாதநோய்கள் போன்றவற்றைத் தடுக்கிறது. பல்வேறு கிருமிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் மஞ்சள், அக்மார்க் கிருமிநாசினி.

மஞ்சளைப் போலவே நோய்களைக் களைவதில் சமபலம் கொண்டது இஞ்சி. காயகற்ப மருந்தான இஞ்சியை அடிக்கடி உபயோகித்துவர வயிறு, குடல் சார்ந்த நோய்கள், சளி, இருமல் போன்ற கபநோய்கள் மறையும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மை கொண்டது இஞ்சி. ஈரலைப் பாதுகாக்கும் மூலிகைகளில் முக்கியமானவை இஞ்சியும் மஞ்சளும்.

ஆவாரை - பிரண்டை
காப்பு கட்டுவதில் இடம்பெறும் ஆவாரம் பூ, தோல் நோய்களில் தொடங்கிச் சர்க்கரை நோய்வரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சில கிராமங்களில் மாடுகளை அலங்கரிக்கப் பயன்படும் பிரண்டையில் உள்ள சுண்ணாம்புச் சத்து, எலும்பைப் பலப்படுத்துகிறது. பசியை அதிகரிக்கும் தன்மை, பிரண்டை துவையலுக்கு உண்டு. கற்றாழை நாரால் செய்யப்படும் குஞ்சங்களை மாடுகளுக்குக் கட்டி அழகு பார்க்கும் பழக்கம், சில கிராமங்களில் நடைமுறை யில் உள்ளது. குளிர்ச்சித் தன்மை கொண்ட கற்றாழை, கருப்பை நோய் களைக் களையும் பெரிய ஜாம்பவான்.

சமச்சீர் உணவு
சமச்சீர் சத்து கொண்ட இட்லி - சட்னி கூட்டாளிகளைப்போல, பொங்கலும் சம அளவில் சத்துப் பொருட்களை உள்ளடக்கியது. பொங்கலில் உள்ள அரிசி, மாவுச் சத்தையும், குளிர்ச்சி தன்மையுடைய பாசிப்பருப்பு புரதச் சத்தையும், மணக்கும் நெய் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தையும், முந்திரி கனிமச் சத்தையும் தரவல்லவை. அதில் சேரும் உலர்ந்த திராட்சை, ரத்த அணுக்களை அதிகரித்து, மலத்தை இளக்குகிறது. சாப்பிட்ட உணவை விரைவாகச் சீரணிக்கச் செய்யும் ஏலம், கமகமக்கும் வாசனையைத் தந்து வாயுக்களை அகற்றுகிறது.

தை பிறந்தால் வழி பிறப்பதோடு, பொங்கல் திருநாளோடு உறவாடும் மூலிகைகள் காரணமாக உடல்நலமும், மனநலமும் கண்டிப்பாகப் பிறக்கும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு:
drvikramkumar86@gmail.com
 
Last edited:

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
Re: ஆரோக்கியம் காக்கும் பொங்கல் பொக்கிஷங்&#296

Superb sharing thanks lakshmi sis...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.