ஆளி விதை

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,720
Likes
2,576
Location
Bangalore
#1
ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .
நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.
அவர்கள் பாஷையில் அதை ‘லினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது.
இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. லத்தீனில் அரசர் சார்லே மாக்னே என்பவர் 8ம் நூற்றாண்டில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து தனது அரசவையில் இருப்பவர்களுக்கு தினமும் கொடுத்தார். பிறகு தனது நாட்டில் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சட்டத்தையே கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைப் பற்றி இப்போது பலநாடுகளில் பலவிதமாக ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள். பல விஞ்ஞானி கள் இதைப் பலருக்கும் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து‘, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி‘, பெங்காலியில் டிஷி (ஜிவீsலீவீ) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில் ‘லின் சீட்ஸ்’ என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.
100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்
புரதச்சத்து - 20.3 கிராம்
கொழுப்பு - 37.1 கிராம்
நார்ச்சத்து - 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி - 530 கி.கலோரிகள்
கால்சியம் - 170 மி.கிராம்
பாஸ்பரஸ் - 370 மி.கிராம்
இரும்புச்சத்து - 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன.
இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு:
*இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.
*பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.
*இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.
*இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
*தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.
*இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.
இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.
*ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.
*இதைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் பழங்களில் இருந்து செய்யும் ‘ஸ்மூத்தி’, மில்க் ஷேக், தயிர், லஸ்ஸி, கஞ்சி போன்றவற்றில் சேர்க்கலாம்.
*கேக், பிஸ்கெட், பிரெட், பன் போன்றவற்றிலும் சேர்க்க இயலும்.
*இதில் துவையல், பொடி வகைகள், கலவை சாதங்கள் செய்தால் ருசியாக இருக்கும்.
*வெல்லம் சேர்த்து செய்யும் சில இனிப்பு களோடு சேர்த்தும் செய்யலாம். உலர்பழ லட்டு, எள் பர்பி, எள் உருண்டை போன்றவற்றுடன் சேர்க்கலாம்.
*சாண்ட்விச், தோசையின் மேல் பூசும் மசாலாவின் மீது, ஸ்டஃப்டு சப்பாத்தி என்று பலவற்றிலும் சேர்க்க இயலும்.
*உலர்பழ வகைகளில் பேரீச்சம்பழம், திராட்சை, அக்ரோட், அத்தி, பாதாம் போன்றவற்றுடன் சேர்த்து வெல்லமே சேர்க்காமல் பர்பி, லட்டு செய்யலாம்.நான் செய்து ருசித்த, பின்வரும் உணவுகளை செய்து பாருங்கள்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,720
Likes
2,576
Location
Bangalore
#2
1. ஆளி விதை சாதம்
1 ஆழாக்கு சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும். 4 சிவப்பு மிளகாய், 1லு டேபிள் ஸ்பூன் உளுந்து, 1லு டேபிள் ஸ்பூன் ஆளி விதை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடி செய்யவும். சாதத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இந்தப் பொடியைத் தூவி தகுந்த உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். மிக ருசியாக இருக்கும்.
2. எள், ஆளி விதை லட்டு
1/4 ஆழாக்கு எள்ளை நிறம் மாறும் வரை தனியே வறுக்கவும். 1/4 ஆழாக்கு ஆளி விதையை பொரிந்து, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு விட்டு இயக்கவும். பொடியானதும் சம அளவு துருவிய வெல்லம், ஏலத்தூள் சிறிதளவு சேர்த்து ஒரு தடவை மிக்ஸியை இயக்கி சேர்ந்து கொண்டதும் தட்டில் கொட்டவும். சிறிய உருண்டைகளாகச் செய்யவும். தினமும் 2 உருண்டை எல்லோரும் சாப்பிட இயலும்.
3. ஆளி விதை துவையல்
ஆளி விதை 2 டேபிள்ஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்ளவும். சம அளவு கொள்ளைத் தனியே வறுக்கவும். 5 சிவப்பு மிளகாயை ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆற விட்டு இதோடு சிறிது ஊற வைத்த புளி, 3 பல் பூண்டு, தகுந்த உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கலாம். சாதத்துடனும் பரிமாறலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் கொடுக்கலாம்.
இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும்.
அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.
ஒரு முக்கியக் குறிப்பு
கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
(சத்துகள் பெறுவோம்!)
நன்றி - குங்குமம்
 

spv

Friends's of Penmai
Joined
Mar 29, 2015
Messages
122
Likes
225
Location
chennai
#4
are linseed, flax seed and [h=2]ஆளி விதை same . please clear my doudt[/h]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.