ஆஸ்துமா கட்டுப்படும் அதிசயம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆஸ்துமா கட்டுப்படும் அதிசயம்


‘தியோபிலின் மாத்திரையைத் தெரியுமா?’ எனக் கேட்டால் பொதுமக்களில் பெரும்பாலோர் ‘‘தெரியாது’’ என்றுதான் பதில் சொல்வார்கள். இதையே ‘டெரிபிலின் மாத்திரையைத் தெரியுமா’ எனக் கேட்டால், ‘‘தெரியுமே... இது ஆஸ்துமாவுக்குத் தரப்படும் மருந்து’ என்று பல பேர் சொல்வார்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தியோபிலின் (Theophylline) என்பது ஆஸ்துமா மருந்தின் வேதியியல் பெயர். டெரிபிலின் (Deriphyllin ) என்பது அந்த மருந்தின் வியாபாரப் பெயர். தியோபிலின் மற்றும் ஈட்டோபிலின் மருந்துகள் கலந்த கலவை இது.

கடந்த 35 வருடங்களாக உலக அளவில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணம் தருகிற மருந்தாக டெரிபிலின் மக்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது. இது மாத்திரை, ஊசி, திரவ மருந்து என மூன்று விதங்களில் கிடைக்கிறது. பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரைக்கும் மூச்சுத்திணறல் வந்துவிட்டால் டெரிபிலினைத்தான் தேட வேண்டும்.

டெரிபிலின் ஆஸ்துமாவை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, ஆஸ்துமாவைக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

மூச்சு விட சிரமப்படும் நிலைமையைப் பொதுவாக ஆஸ்துமா என்கிறோம். இதில் இரண்டு வகை உண்டு. நுரையீரல் ஆஸ்துமா, இதய ஆஸ்துமா. இதில் நுரையீரல் ஆஸ்துமாதான் அநேகம் பேருக்கு வருகிறது.

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் இந்த வகை ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். குறிப்பாக, உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது.

பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை. நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும்.

அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.

டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனசைட்டிஸ், பிரைமரி காம்ப்ளக்ஸ், குடல்புழுத் தொல்லை போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது. பிறக்கும்போதே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ள குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வருவது வழக்கம்.இவை தவிர, மனம் சார்ந்த பிரச்னைகளால்கூட ஆஸ்துமா வரலாம்.

கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனகுழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம்.

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச்சிறுகுழல்களில் (Bronchioles) மென்தசைகள் சுருங்கிவிடுகின்றன. அத்தோடு மூச்சுக்குழலில் சவ்வு வீங்கிக்கொள்ள, மூச்சுப் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து திரவம் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. மிகக் குறுகிய மூச்சுக்குழல் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்கிறது.

இதற்குரிய சிகிச்சையாக டெரிபிலின் மருந்தைத் தேவைக்கு ஏற்ப தசை ஊசியாகவோ, சிரை ஊசியாகவோ, மாத்திரை அல்லது திரவ மருந்தாகவோ நோயாளிக்குத் தருகிறார்கள். இந்த மருந்திற்கு மூச்சுக்குழல் மென்தசைகளை விரித்துவிடக்கூடிய தன்மை உண்டு.

மேலும் இது மூளையில் உள்ள மூச்சு மையத்தைத் தூண்டி நெஞ்சில் உள்ள சுவாசத் தசைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கிறது. இதன் பலனாக பயனாளிக்கு மூச்சு விடுவதில் உண்டாகும் சிரமம் குறைகிறது. ஒவ்வாமையை உண்டு பண்ணும் ‘ஹிஸ்டமின்’ போன்ற காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப் பல செயல்பாடுகளால் ஆஸ்துமா கட்டுப்படுகிறது.

பொதுவாக மூச்சுத் திணறல் ஏற்படும்போது இதயமும் தன் இயல்பான பணிகளைச் செய்ய சிரமப்படும். அப்போது தியோபிலின் மருந்தானது இதயத் தசைகளுக்கு ரத்தம் செலுத்தும் ரத்தக் குழாய்களையும் விரியச் செய்து, இதயம் இயல்பாகத் துடிப்பதற்கும் துணை செய்கிறதுஇப்படிப்பட்ட மகத்துவங்கள் மிகுந்த தியோபிலினைக் கண்டுபிடித்தது ஒரு ஜெர்மானிய உயிர் வேதியியலாளர், ஆல்பிரெட்ச் கோசல். இவர் மனித செல்லில் உள்ள நியூக்ளிக் அமிலத்தின் வேதிக்கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக 1910ல் நோபல் பரிசைப் பெற்ற விஞ்ஞானி.

இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பே இவர் தியோபிலினைக் கண்டுபிடித்துவிட்டார். 1888ல் தேயிலை இலைகளைச் (Thea sinensis) சாறு பிழிந்து அதில் உள்ள மூலக்கூற்றைப் பிரித்தெடுத்து ‘தியோபிலின்’ எனப் பெயரிட்டார். இதற்குரிய வேதிக்கட்டமைப்பையும் வெளிப்படுத்தினார். இது சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்து என்றுதான் சொன்னார். இது ஆஸ்துமாவுக்கும் பயன்படும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

இவருக்குப் பிறகு வந்த எமில் பிசர் மற்றும் லோரன்ச் ஆச் எனும் இருவர் 1895ல் செயற்கை முறையில் இதே வேதிக்கட்டமைப்பில் இந்த மருந்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர். 1922ம் ஆண்டில் இதன் உண்மையான மருத்துவ குணங்கள் தெளிவாகத் தெரிந்தன. அதற்குப் பிறகுதான் இது ஒரு ஆஸ்துமா மருந்து என அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் எல்லா வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கும், நாட்பட்ட மூச்சுத்தடை நோய் (COPD) உள்ளவர்களுக்கும் தியோபிலின் கைகொடுக்கும் மருந்து. நோயாளியின் தேவைக்கேற்ப தினமும் மூன்று வேளைக்கு இதை எடுத்துக்கொள்ளும்போது மூச்சுத் திணறல் விடைபெற்றுக்கொள்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.