இணைய அடிமைத்தனம்: மீண்டு வர என்ன வழி?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இணைய அடிமைத்தனம்: மீண்டு வர என்ன வழி?

டாக்டர் ஆ.காட்சன்
வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் என்று அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டுவிட்டது. ஒரு பொருள் மீது நம் மக்கள் கொள்ளும் மோகம் தொடர்பான வேகத்துக்கான ஒரே ஒரு சான்று இது. எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சௌகரியங்களைத் தந்தாலும், வழக்கம்போல அவற்றில் உள்ள பிரச்சினைகளை நம் அதிகார வர்க்கம் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை.

உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநலப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநலப் பாதிப்பு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் சீனாவும் தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியைப் பின்பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

வெளிவர வழி உண்டா?
நம் நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றுக்கு அடிமையாகும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவலை தரும் விஷயம். இணைய அடிமைத்தனத்தால் படிப்பு, மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதே என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்க்கிறோம். ஒருவேளை நம்முடைய ரத்தஉறவுகளும் இப்படி அடிமையாகிவிட்டால் என்ன செய்வது?

இணைய அடிமைத்தனத்துக்கு என்றே மனநலச் சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், மீண்டும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதையே முக்கிய நோக்கமாகக்கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இணையதளம், வலைதளம், மொபைல்ஃபோன் பயன்பாட்டை அப்படி முற்றிலும் தடை செய்ய முடியாது. எனவே, இவற்றை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வழிசெய்வதே சிறந்தது.

இணைய டைரி
இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது, கட்டுக்கடங்காமல் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க டைரி முறை பயன்படும். இந்த டைரியில் ஒருவர் இணையத்தை ஒவ்வொருமுறை பயன்படுத்தும்போதும் எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறார், எத்தகைய வலைதளங்களைப் பார்க்கிறார், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் உள்ள மனநிலை, ஒவ்வொரு முறை பயன்படுத்துவதால் தடைபடும் அன்றாட மற்றும் முக்கிய வேலைகள், ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தொடர்ந்து செய்துவந்தால் அவர் எவ்வளவு நேரம் விரயம் செய்கிறார், எந்த மனநிலை அதிகம் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது, எத்தனை வேலைகளை அது பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்.கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர். தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பயன்தரும் ஆரம்பம்

டாக்டர் ஆ. காட்சன்
இணைய அடிமைத்தன பிரச்சினையில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது செயலியில் அதிக நேரத்தை விரயம் செய்தால், அதை ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் ஃபோனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (bookmarks and history) நீக்கிவிடலாம். மொத்தத்தில் கணினியை ரீஸ்டார்ட் செய்வதுபோலச் சமூக வலைதளங்களை பார்க்கும் நேரத்தைத் தலைகீழாக மாற்றுவது, பழக்கத் தோஷத்தில் நேரம் விரயமாவதைத் தடுக்க உதவும். உதாரணமாக, இரவில் நேரம்போவது தெரியாமல் பயன்படுத்துபவர்கள் பகலில் அவசியத் தேவைகளுக்குச் சிறிது நேரத்தைத் திருப்பலாம்.

மருந்து தேவைப்படலாம்

தற்போது மனநோய் வெளிப்பாடுகளும்கூட இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் முறையில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும்போது, இணைய அடிமைத்தனத்துக்கும் உட்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயால் (Mania) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்ஃபோன் கொடுக்காவிட்டால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளத்துக்கும் அடிமையாகவும் வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர்இளம் பருவத்தினர் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது இணைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ஐந்தில் வளையாதது
l சிறு குழந்தைகளை அமைதிப்படுத்தவும் தொந்தரவு இல்லாமல் இருக்கச் செய்யவும் மொபைல் ஃபோன்களை கொடுத்துப் பழக்குவதுதான் இணைய அடிமைத்தனப் பிரச்சினையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்பு அதிகம்.

l இணைய விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால், அவற்றை மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

l இணையம், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பில் குறைந்த நேரம் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

l பள்ளி, கல்லூரிகளில் கணினி குறித்த பாடங்களோடு அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் இணைய அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

l வீட்டில் இருக்கும்போது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறை செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனும், கல்லூரிகளில் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

l தேவைப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் இணையத் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்துப் பார்க்கும் எண்ணச் சுழற்சி குறையும்.


கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godson psychiatrist@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.