இதயத்தைப் பாதிக்கும் பித்தப்பை கற்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இதயத்தைப் பாதிக்கும் பித்தப்பை கற்கள்

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன்... என இதய நோய்களுக்கான காரணிகளாகப் பலப்பல ஏற்கெனவே வரிசைகட்டி நின்றுகொண்டிருக்க, இப்போது புதிதாக இன்னொன்றையும் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறது ஓர் ஆய்வு. அது, பித்தப்பை கல்!

சரி... பித்தப்பை கல் எப்படி உருவாகிறது? கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர், பித்தப்பையில் சேகரிக்கப்படும். பிறகு, சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக செரிமான மண்டலத்தை அடையும். இந்தப் பித்தநீர்தான் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. அப்படிப் பித்தநீர் செரிமான மண்டலத்தை அடையும்போது சிலவேளைகளில் கற்கள் உருவாகலாம். அதாவது, தேவைக்கு அதிகமான கொழுப்பு செரிமானம் ஆகாமல், சிறுசிறு கற்களாக மாறும். இந்தக் கல் ஆரம்பத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், உடலில் பாதிப்புகள் ஏற்படும். வேறு ஏதாவது காரணத்துக்காகப் பரிசோதனை செய்யும்போதுதான் பலருக்குப் பித்தப்பை கற்கள் இருப்பதே தெரியவருகிறது.

அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டயாபடீஸ் அண்ட் டைஜெஸ்டிவ் அண்ட் கிட்னி டிசீஸஸ் (U.S.National Institute of Diabetes and Digestive and Kidney Diseases - NIDDK) நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தை மிக அதிகமாக எதிர்கொள்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வின் தலைவர் டாக்டர் லு குய் (Dr. Lu Qi) நியூ ஆர்லியன்ஸில் இருக்கும் டுலேன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

30 வயதுக்குட்பட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 6 சதவிகித பெண்களும் 3 சதவிகித ஆண்களும் அதுவரை தங்களுக்கு பித்தப்பை கல் இருக்கிறதா என்கிற பரிசோதனையையே செய்துகொள்ளாதவர்கள். பித்தப்பை கற்கள் இருந்த பெண்களில் 33 சதவிகிதம் பேருக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பித்தப்பை கற்கள் இருக்கிற ஆண்களில் 11 சதவிகிதம் பேர் இதய நோய் வருவதற்கான அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். கூடவே, இளைய தலைமுறையினரில் பித்தப்பை கற்கள் இருப்பவர்களில் 23 சதவிகிதம் பேருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வு, இதய நோய்க்கும் பித்தப்பை கற்களுக்கும் உள்ள தொடர்பை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கவில்லை என்றாலும், பித்தப்பை கற்களால் இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, நம் செரிமான மண்டலத்தில், சாதாரணமாக கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் வசிக்கின்றன. அவற்றால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், வயிற்றில் வசிக்கும் இந்த நுண்ணுயிரிகளின் சமத்தன்மையை பித்தப்பை கற்கள் தகர்த்துவிடும்; அதன் காரணமாக, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறது இந்த ஆய்வு. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் இதயம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டுமா? அதற்கு, குடல் மற்றும் இரைப்பையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் அதிகம் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல்பருமன் ஆகாமல் இருத்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல்... இவை இதய நலத்துக்கு உதவும்; பித்தைப்பை கற்கள் தோன்றாமலும் தடுக்கும்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.