இதயம் காக்க - Ways To Save Your Heart

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
இதயம் காக்க...


உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இதய நோய்கள் உருவெடுத்துள்ளன. ‘இதய ரத்தக் குழாய் நோய்கள்’ என்று சொல்லும்போது, அதில் மாரடைப்பு மற்றும் பக்கவாதமும் அடங்கும். இவற்றால் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்நாள் முடிந்துபோகிறது.


இதய ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய பெரும்பாலான உயிரிழப்புக்களை நம்மால் தவிர்க்க முடியும். தனிநபராக, குடும்பமாக, சமுதாயமாக ஒன்றிணைந்து செயல்படும்போது, இதய நோய்களால் ஏற்படக்கூடிய மிகப் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். இதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், துடிப்பான வாழ்க்கைமுறை மற்றும் மது, புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதுதான்.

பொதுவாக, இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஹார்மோன் பாதுகாப்பு இருப்பதால் பெண்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு குறைவு என்று இருந்த நிலை இன்று மாறிவிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளும்கூட இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர்.


இளம் வயதினர் மத்தியில், மாரடைப்பு காரணமாக மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுவது இல்லை. இருப்பினும், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது, தவறான நேரத்தில் தவறான உணவுகளை எடுத்துக்கொள்வது, மன அழுத்தம் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள்.


மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க...

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், புகையிலைப் பழக்கம் ஆகியவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. எனவே, மருத்துவ ஆலோசனை பெற்று இவற்றைக் கட்டுப்படுத்தினால், புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால், மாரடைப்பைத் தவிர்க்கலாம்.


வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, இதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. தொப்பையைக் கரைக்கும் பயிற்சிகள் செய்து, ஃபிட்டான வயிற்றுப்பகுதியை வைத்துக்கொள்வது அவசியம்.


பி.எம்.ஐ 25-க்கு மேல் இருந்து, அதனுடன் ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.


5 முதல் 10 சதவிகிதம் எடைக் குறைப்புகூட, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்கும். இது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.


உடற்பயிற்சி என்றால் ஜிம் வொர்க்அவுட் மட்டும் இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் உடலுக்கு நல்ல உடற்பயிற்சி்களே.


ஏரோபிக், நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல் போன்றவையும் இதயத்தைப் பலப்படுத்தும் பயிற்சிகள்தான்.


ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.இல்லாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.


பெரியவர்கள் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் 120/80 மில்லிமீட்டர் ஆஃப் மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.


குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் கொழுப்பு அளவைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பாதிப்பு இருந்தால், அந்தக் குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


பரிசோதனையில் மொத்தக் கொழுப்பு 200-க்கு கீழாகவும், கெட்ட கொழுப்பு 100-க்கு கீழாகவும், நல்ல கொழுப்பு 40-க்கு மேலாகவும் இருக்க வேண்டும்.


நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகத்தைத் தாமதப்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான மண்டலக் குறைபாட்டையும் தீர்க்கும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள் வெளியே தெரியாது. திடீரென்று உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்


உணவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டிரான்ஸ்ஃபேட் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.


பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுகள், சில மீன் வகைகள் இதயத்தைப் பாதுகாக்கும்.


ரெட் மீட், பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.


ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


சிகரெட் புகைத்தல் அல்லது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரித்துவிடும். புகையிலையில் உள்ள ரசாயனங்கள் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், ரத்தக் குழாய்கள் குறுகலாகி, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.


புகைக்கும்போது உடலில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகரிக்கிறது. இது, உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கச் செய்ய, இதயத்தை அதிகம் துடிக்கத் தூண்டுகிறது.


ஆண்டுதோறும், குழந்தைகள் உட்பட ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட, இரண்டாம் நிலை சிகரெட் புகை சுவாசிப்பவர்கள் உயிரிழக்கின்றனர். கிட்டத்தட்ட உலகின் பாதிக் குழந்தைகள் சிகரெட் புகை உள்ளிட்டவற்றால் மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர். இது, அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு இதய நோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சிகரெட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பது நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.


நம்மைவிட நம் இதயத்துக்கு 15 வயது அதிகம்!


உணவுப் பழக்கம், துடிப்பான வாழ்க்கைமுறை, சிகரெட், மதுப் பழக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இதயம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலத்தின் வயதை மருத்துவர்கள் கணிக்கின்றனர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியர்களின் இதயத்துக்கு சராசரியாக 10 முதல் 15 வயது அதிகமாக இருக்கிறதாம். நமக்கு 20 வயது இருக்கலாம் அல்லது 30-ன் தொடக்கத்தில் இருக்கலாம். ஆனால், இதயத்துக்கு மட்டும் 35 அல்லது 45 வயதாகிறது. இதனால்தான் இளம் வயது இதய நோயாளிகளின் எண்ணிக்கையும் மாரடைப்பு மரணங்களும் அதிகரித்துள்ளன.
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.