இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி'30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது.உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை.ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் என்று எச்சரிக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சிவகடாட்சம், டாக்டர் ரவிக்குமார், பொது மற்றும் சர்க்கரைநோய் டாக்டர் கருணாநிதி தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்!இதயத்தின் செயல்பாடு

மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன. இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம்.

கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைப் பயன்படுத்திவிட்டு, கார்பன்டைஆக்ஸைடை வெளியிடுகிறது. இந்த அசுத்தமான ரத்தம் மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து இதயம் துடிப்பதன் மூலம் நுரையீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இப்படித் தொடர்ச்சியாக இதயத்தின் வழியே ரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.

இதய வால்வுகள்

இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன. இவைதான், தேவையான நேரத்தில் ரத்தத்தை சரியான பாதையில் இதயத்துக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இதயம் சரியாகச் செயல்பட, பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியான முறையில் உருவாகியிருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் சரியான நேரத்தில் வால்வுகள் திறந்து ரத்தத்தை வெளியேற்ற முடியும். வால்வுகள் மூடிய பிறகு கசிவு இல்லாமலும் இருக்கும்.
இதயத் துடிப்பு:


தாயின் கருவறையில் ஆறாவது வாரத்தில் தொடங்குகிறது குழந்தையின் இதயத் துடிப்பு. சராசரியாக இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கிறது. வயது, பாலினத்துக்கு ஏற்ப இதயத் துடிப்பின் அளவில் மாற்றம் ஏற்படும். இதயம் சுருங்கி விரிவது ஒரு தொடர் செயல்முறை. இதயம் சுருங்கும்போது இதயத்தின் வென்ட்ரிக்கிள் சுருங்குகிறது. இதனால் ரத்தமானது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது. இதயம் விரிவடையும் போது இதய அறைகள் மீண்டும் ரத்தத்தால் நிரம்புகின்றன.இயற்கையான மின்னோட்டப் பாதை

இதயம் தானாகத் துடிப்பது இல்லை. அது இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் 'சைனஸ் நோட்'. இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும், அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதை சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதய நோய்கள்

பொதுவாக இதய நோய்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. பிறவியிலேயே ஏற்படுவது (congenital),
2. பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired)
பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே, குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுகிறது.


இதய நோய்களை ரத்தக் குழாய் நோய்கள், இதய ரிதம் பிரச்னைகள் (அரித்மியா) மற்றும் பிறவிக் குறைபாடு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக, இதய ரத்தக் குழாய் (கார்டியோவாஸ்குலர்) பிரச்னையால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, இதய நோய்கள் என்று அழைக்கிறோம்.

ரத்தக் குழாய் குறுகி அல்லது அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதம் ஏற்படுவதையே கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்கிறார்கள். தவிர, இதயத் தசைகள் அல்லது வால்வு பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றாலும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான இதய நோய்களை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
இதய நோய்க்கான காரணங்கள்


பிறவிக் குறைபாடு

உயர் ரத்த அழுத்தம்

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு

சர்க்கரை நோய்

புகைபிடிக்கும் பழக்கம்

மது அருந்துதல்

போதைப் பழக்கம்

மன அழுத்தம்

உடல் பருமன்

சுய மருத்துவம்

நோய்த் தொற்றுகள்


இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பு


வயது: வயது அதிகரிக்கும்போது இதயத் தசைகள் தளர்ச்சி அல்லது தடிமனாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தக் குழாய்களில் அடைப்பு
ஏற்பட்டு, குறுகுவதற்குமான வாய்ப்பும் அதிகரிக்கிறது.


பாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

மரபியல்: ரத்த உறவில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால், அவர்களின் சந்ததியினருக்கு ரத்தக் குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

புகைப் பழக்கம்: சிகரெட் புகைக்கும்போது அதில் உள்ள நிக்கோடின் ரத்தத்தில் கலக்கிறது. நிக்கோடின் ரத்தக் குழாய்களை சுருக்கும் தன்மை கொண்டது. மேலும், கார்பன் மோனாக்சைட் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரைப் பாதித்து இதய நோய்களை ஏற்படுத்தும். சிகரெட் புகைக்காதவர்களை விட, சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம்.

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாயில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடை செய்்கிறது.

மோசமான உணவுப் பழக்கம்: சாப்பிடும் உணவில் அதிக அளவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை இருந்தால், அது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம்: கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களைத் தடிமனாக்கி கடினமானதாக்கி விடும். இதனால் ரத்தக் குழாய் சுருங்கும்போது ரத்த ஓட்டம் தடைபடும். தவிர சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்புக் குறைவு, சுகாதாரமற்ற சூழல் கூட இதய நோய்க்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைகள்

இதயச் செயல் இழப்பு: உடலுக்குத் தேவையான அளவு ரத்தத்தை, இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலை ஏற்படுவதையே இதயச் செயல் இழப்பு என்கிறோம். இதயக் குறைபாடு, இதய ரத்தக் குழாய் நோய்கள், வால்வு பிரச்னை, இதய நோய்த் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படலாம்.

மாரடைப்பு: ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைபடுவதால், இது ஏற்படுகிறது. ரத்தம் தடைபடுவதால், இதயத் தசைகள் செயலிழக்கின்றன.

பக்கவாதம்: இதுவும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வருவதுதான். மூளைக்குப் போதுமான அளவு ரத்தம் செல்லாதபோது, உடலின் இயக்கம் முடக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லாத ஒரு சில நிமிடங்களில் இருந்தே மூளை செல்கள் மரணிக்க ஆரம்பித்துவிடுகின்றன.
அனியூரிசம் (Aneurysm):

உடலில் உள்ள ரத்தக் குழாயில் எங்கேனும் அடைப்பு ஏற்பட்டு ரத்தக் குழாய் வெடிப்பதன் மூலம் இது ஏற்படுகிறது. உடலினுள் ஏற்படும் ரத்தக் கசிவும் உயிரைப் பறிக்கக் கூடியதுதான்.

திடீர் மாரடைப்பு (Sudden Cardiac Arrest):
எதிர்பாராத விதத்தில் சீரற்ற இதயத்துடிப்பால் இதயத்தின் செயல்பாடும் சுவாசமும் தடைபடுவதையே திடீர் மாரடைப்பு என்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும். இல்லையென்றால், உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
இதய நோயைக் கண்டறியும் பரிசோதனைகள்
ஈ.சி.ஜி பரிசோதனை


எளிய ஈ.சி.ஜி பரிசோதனை மூலம் வலியின்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதன் மூலம் மாரடைப்புக்கான அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளலாம்.


எக்கோ (எக்கோ கார்டியோகிராபி)ஒலி அலையைச் செலுத்தி இதயத்தைப் படம் எடுத்து இதயத்தின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது. எலக்ட்ரோகார்டியோகிராம் மூலம் இதயத்தின் வால்வுகள், இதயத் தசையின் தடிமன் போன்றவற்றைப் பார்க்கலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
சி.டி. ஸ்கேன்

சி.டி.ஸ்கேன் மூலம் இதய ரத்தக் குழாயின் முழுப் பரிமாணத்தையும் படம் பிடித்துப்பார்க்கலாம். இதயத் தசைகளுக்கு செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது, எத்தனை ஆண்டுகளாக இது படிந்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலத்தில் ஒருவருக்கு கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாக சொல்லளாம்.


எம்.ஆர்.ஐ


காந்த அலைவீச்சு மூலம் இதயம் தெளிவாகப் படம் பிடிக்கப்படுகிறது.இதன் மூலம் இதயப் பாதிப்புகளை மிகத் துல்லியமாகக் கண்டறியமுடியும். இதில் கதிர்வீச்சு பயன்படுத்தப்படுவது இல்லை என்பதால், இது ஆபத்து இல்லாத பரிசோதனை. இதன் மூலம் இதய ரத்தக் குழாய் நோய்கள், மாரடைப்பால் இதயத் தசையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதய செயல் இழப்பு, இதய வால்வு பிரச்னைகள், பிறவியில் ஏற்பட்ட இதயக் குறைபாடுகள், இதயத்தில் ஏற்பட்ட கட்டிகள் என அனைத்தையும் துல்லியமாகக் கண்டறிய முடியும்.


சிகிச்சை முறைகள்

இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு, தன்மையைப் பொறுத்து சிகிச்சை
முறைகளும் மாறுபடும்


ஆரம்பநிலைப் பாதிப்பு என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உங்கள் இதயம் கெட்டியாகிவிடும். சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தாண்டி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து எந்த மாதிரியான அறுவைசிகிச்சை என்பதை டாக்டர் பரிந்துரைப்பார்.

இதயநோய் வராமல் தவிர்க்க எளிய வழிகள்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பின்
பற்றுவதன் மூலம் இதய நோயில் இருந்து மீளலாம். அல்லது இதய நோய் வராமலேயே கூட நம்மால் தவிர்க்க முடியும்.
இதற்கு செய்ய வேண்டியவை இவைதான்...

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
ரத்த அழுத்தத்தை கண்காணியுங்கள்:

இதயநோய் ஏற்படுவதற்கு, உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தமானது 141/91 என்ற அளவைத் தாண்டினால், அது உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். அதுவே, 89/59 என்ற அளவுக்கு கீழ் இருந்தால், அது குறைந்த ரத்த அழுத்தம் என்று தெரிந்து கொள்ளலாம். ரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் சரியான அளவு.

வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தமானது, பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அவற்றை எடுத்துக்கொள்வதால் கால் வலி, தூக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கை முறைகளை சரிசெய்து கொள்வதன் மூலம் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.


ப்ளீஸ்... ஸ்டாப் சிகரெட்

புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இதயம், ரத்தக் குழாய்கள், நுரையீரல், கண், வாய், இனப்பெருக்க மண்டலம், எலும்பு, செரிமான மண்டலம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது.

சிகரெட்டைப் புகைக்கும்போது தார், கார்பன் மோனாக்ஸைட் உள்பட ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உடலுக்குள் செல்கின்றன.

புகைபிடிக்கும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்தச் செல்கள் ஆக்சிஜனை ஈர்க்கும் அளவு குறைகிறது. ரத்தக் குழாயின் சுவரைத் தாக்குகிறது.

உடலின் கடைமட்டம் வரையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்வதைத் தடுக்கிறது.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவைக் குறைத்துவிடுகிறது.

புகைக்கும்போது ரத்தக்குழாய்கள் மற்றும் இதயத்தின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இது ஆர்த்ரோஸ்லேரோசிஸ் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதாவது, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால், ஆக்சிஜன் நிறைந்த ரத்தம், செல்களுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. அடைப்பு அதிகரிக்கும்போது மாரடைப்பு ஏற்படலாம்.

ஒன்றோ, இரண்டோ அல்லது ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் புகைப்பவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இதயம் மற்றும் காலில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புகைபிடிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, புகைப்பவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பவர்களுக்குக்கூட இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, புகைபிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதும், மற்றவர்கள் புகைப் பிடிப்பவர்கள் அருகில் இருப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.

புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ஒர் ஆண்டுக்குள், இதய நோய்க்கான வாய்ப்பு ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு பெருமளவு குறைந்துவிடுகிறது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
சர்க்கரைநோயைத் தவிர்ப்போம்

டாக்டர் கருணாநிதி, சர்க்கரை நோய் மருத்துவர்

சாதாரண மக்களைக் காட்டிலும், சர்க்கரைகள் நோயாளிகளுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.

சர்க்கரை நோய் உடலின் வளர்ச்சிதை மாற்றப்பணியைப் பாதிக்கிறது. இதனால், ரத்தக்குழாய்களில் கொழுப்பு அதிக அளவில் படிகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த அடைப்பு பெரிதாகி, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடுகிறது. சர்க்கரை நோய் இதயத்தில் உள்ள ரத்தக்குழாயை மட்டுமல்ல, உடல் முழுவதும் குறிப்பாக, சிறிய ரத்த நாளங்கள் உள்ள இதயம், கைவிரல், பாதம், கால் விரல்களில் உள்ள ரத்தக் குழாய்களையும் பாதிக்கிறது.

மாரடைப்பைப் பொறுத்தவரை, பெண்களைக்காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதுவே, பெண்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆண், பெண் இருவருக்கும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் சம அளவில் இருக்கின்றன.

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு அடைப்பு, வலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம்.


சாதாரண மக்களுக்கு இதயநோய் வரும்போது, அதில் இருந்து அவர்கள் மீண்டு வரும் காலத்தைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகள் மீண்டு வருவதற்கான காலம் அதிகம்.

சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருங்கள். ரத்தத்தில் இயல்புநிலை சர்க்கரை அளவு என்பது 70100. சாப்பிட்ட பின் இது 140க்கும் கீழ் இருக்க வேண்டும்.
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்

மாரடைப்புக்கான வாய்ப்புகள் உள்ளவர்கள், வருடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும். மற்றவர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சி

பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்பார்கள். 24 மணி
நேரத்தில்


சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம், தூங்க ஏழு மணி நேரம். மீதம் 16 மணி நேரம் உள்ளது. இதில், ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், கணவனுடன் இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் செல்கின்றனர். அவர்கள், இரண்டு பஸ் நிறுத்தத்துக்கு முன்பு இறங்கி வீட்டுக்கு நடந்தே வந்தால்கூடப் போதும், ஆரோக்கியமாக இருக்கலாம். தினசரி ஒரே மாதிரியான பயிற்சியைச் செய்வதைக்காட்டிலும், வித்தியாசமாக ஏதாவது பயிற்சிகளைச் செய்ய முயற்சியுங்கள்.

வீட்டு வேலை செய்யுங்கள்

ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்வதுதான் பயிற்சி என்று இல்லை. வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, மாடிப்படி ஏறி இறங்குவதும்கூட உடலுக்கானப் பயிற்சிகள்தான்.

போதுமான தூக்கம்

பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, வெளியாகும் ஹார்மோன் இதயத்தைப் பாதிக்கிறது.

ஆரோக்கியமான உணவு பழக்கம்:

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது அல்ல... என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

வயிறு முட்டச் சாப்பிடும்போது, உடலில் கலோரியின் அளவு அதிகரிக்கும். இந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டுவிடும். எனவே, உணவில் கவனம் தேவை.

கலோரி குறைந்த அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன.

அதிக கலோரி, சோடியம் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் உடல் அளவை மட்டும் அல்ல, இதயமும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
க்ரீன் டீ பருகுங்கள்:

இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் இருப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் ஒரு கப் அளவுக்கு க்ரீன் டீ பருகுவது போதுமானது. க்ரீன் டீயை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். சுவைக்காக சர்க்கரை, தேன் என எதையும் சேர்க்க வேண்டாம்.


உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து அளவைக் கவனியுங்கள்

இன்று எந்த ஓர் உணவுப் பொருளை வாங்கினாலும், அவற்றோடு ஊட்டச்சத்துப் பட்டியலும் இணைப்பாகவே வருகிறது. பெரும்பாலும் யாரும் அதைப் பார்ப்பது இல்லை. இனியாவது அந்தப் பட்டியலில் கலோரி மற்றும் கொழுப்பு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள்.

சாச்சுரேட்டட் கொழுப்பு எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு 7 சதவிகிதத்துக்கும் மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு கிராமுக்கு மேல் 'டிரான்ஸ் ஃபேட்’ இருக்கக் கூடாது. இந்த சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புதான் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து, அதன் மூலம் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இந்தப் பொருட்களைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெயைக் குறைப்போம்


உணவு சமைக்க நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முடிந்தவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 மி.லி போதுமானது. ஒரு மாதத்துக்கு அரை லிட்டருக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது!

உணவில் நார்ச்சத்து அவசியம்

ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 35 கிராம் அளவுக்கு நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவது மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. கெட்டக் கொழுப்பைக் குறைக்கும் தன்மை ஓட்ஸுக்கு உள்ளது. இதில் அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. இதைக் காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கும் தன்மை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கு உள்ளது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட், பாதாம் போன்றவற்றில் இந்த 'ஒமேகா 3’ நிறைவாக உள்ளது. ஒருநாளைக்கு ஒன்று, இரண்டுக்கு மேல் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அசைவ உணவுப் பிரியர்கள் மீன், தோல் நீக்கப்பட்ட கோழி இவை இரண்டை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாடு, ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பு, இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. ஆனால், மீன் அதிலும் குறிப்பாக எண்ணெய்ச் சத்துள்ள மீன் வகைகளை எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள 'ஒமேகா 3’ கொழுப்பு அமிலமானது, இதயம் சீராகத் துடிக்க உதவுகிறது. எண்ணெய் சேர்க்காமல், வேகவைத்த மீனைச் சாப்பிட வேண்டும்.


ஆரஞ்சுப் பழச்சாறுடன் தொடங்குங்கள்

ஆரஞ்சு சாற்றில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது மாரடைப்புடன் தொடர்புடைய ஹோமோசிஸ்டீன் என்ற அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. திராட்சையில் அதிக அளவில் ஃபிளவனாய்ட்ஸ், ஆன்டிஆக்சிடன்ட் உள்ளன. இது ரத்தக்குழாயில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன. எனவே, காலையில் சர்க்கரைச் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட, ஆரஞ்சு அல்லது ஏதேனும் ஒரு பழச்சாற்றைக் குடித்து அன்றைய தினத்தைத் தொடங்குங்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
காய்கறிகளில் கொழுப்பு மற்றும் கலோரி மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து மிகவும் அதிகமாகவும் உள்ளன. மேலும், இவற்றில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.

எனவே, உணவில் 50 சதவிகிதம் அளவுக்கு பச்சைக் காய்கறிக்கு இடம் அளியுங்கள். முட்டைகோஸ், ப்ருகோலி போன்ற காய்கறிகள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் இதயத்தை வலுவாக்கும் ஊட்டச் சத்துக்களின் சுரங்கங்கள்.

உணவில் பூண்டு

தினசரி உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டில், ரத்தக்குழாயைத் தாக்குபவற்றை எதிர்த்துச் செயலாற்றும் 15 வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. பூண்டு ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் எடை ஆரோக்கியமானதுதான் என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம்.

பி.எம்.ஐ. அளவு 16.9க்குக் கீழ் இருந்தால், குறிப்பிட்ட எடைக்கும் குறைவு என்று அர்த்தம். இதனாலும் சில பிரச்னைகள் வரலாம்.

17 முதல் 24.99 வரை இருந்தால், அது இயல்பு நிலை.

26 முதல் 29.9 வரை இருந்தால், உடல் பருமனுக்கு முந்தைய நிலை.

30க்கு மேல் இருந்தால் உடல் பருமன். எனவே, உங்கள் பி.எம்.ஐ. 25 முதல் 29.9 வரைக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு இடுப்பின் சுற்றளவு 40 இன்ச்களாக இருக்க வேண்டும். இதுவே பெண்களுக்கு 35 இன்ச்கள் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் கொழுப்பின் அளவு அதிகரிப்பாகத்தான் இருக்கும். இப்படி அதிகரிக்கும் கொழுப்பு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைக்கு வழிவகுத்து மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரித்துவிடுகிறது.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.


டாக்டர்களின் பரிந்துரையைத் தவிர்க்காதீர்கள்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு டாக்டர்கள் அளிக்கும் மாத்திரை, மருந்துகளை எந்தக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். மேலும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். பயம் காரணமாக, எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாதீர்கள்.

விழிப்புஉணர்வு அவசியம்

இதயநோயாளிகளின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வந்தன. இன்று 25 வயதினருக்குக்கூட வருகின்றன. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை முக்கியக் காரணம்.

அமெரிக்காவில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலக உணவுக் கூடங்களில் ஜங்க் ஃபுட் விற்பது இல்லை என்று முடிவெடுத்ததன் மூலமும், இதயநோயை வெகுவாகக் குறைத்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இதய நோயாளிகளின் எண்ணிக்கையை, பெருமளவு குறைக்க முடியும்.
இதய நோய் வருவதற்கு புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் பற்றியே குறைக்கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் வாழும் சுற்றுச்சூழலை யாரும் பொருட்படுத்துவது இல்லை. நாம் வாழும் இடம், பணிபுரியும் சூழல் என ஒவ்வொன்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. குழந்தைகளும் பெரியவர்களும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுகின்றனர். போதுமான பசுமையான இடங்கள் இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவு, உணவகம், அலுவலகம், பூங்கா, வாகனங்கள் போன்ற இடங்களில் மற்றவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசித்தல் என இரண்டாம் நிலை சிகரெட் புகை சுவாசித்தல் போன்றவையும் இதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

நன்றி டாக்டர் விகடன்
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.