இத்தகைய கணவர்களை எதிர்த்துப் பேச தயக்கம&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தயக்கம் வேண்டாம்!


`இணையாக அன்பு செலுத்துவது எப்போது சாத்தியப்படுவதில்லையோ, அதிக அன்பை செலுத்துகிற அடையாளம் எனக்கே சொந்தமாகட்டும்’ என்கிறது ஒரு அயல்நாட்டு பொன்மொழி. இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மனைவிகள் இந்த விதிப்படி வாழ்பவர்களே... அன்பு ெசலுத்துவதில் தவறில்லை. அந்த அன்பு அவர்களை அடிமை களாக்கிவிடவோ, அடையாளமற்றவர்களாக மாற்றிவிடவோ கூடாது. மனைவிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது பற்றியும் அதை அவளது விருப்பப்படி வாழ்கிற உரிமை அவளுக்கு உள்ளதைப் பற்றியும் அவளிடம் போற்றிப் பாராட்ட வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன.

* கணவரின் நடவடிக்கையோ, அணுகுமுறையோ மனைவிக்குப் பிடிக்காத பட்சத்தில், அதை அந்த நிமிடமே அவருக்கு உணர்த்த வேண்டும். `நீ எனக்கு சமமானவள் அல்ல...’ என்கிற மாதிரியான பேச்சையோ, கிண்டல், கேலிகளையோ அனுமதிக்கவே கூடாது. அதனால் அந்த விஷயத்தில் பயம் வேண்டாம். சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் மனதில் நினைக்கிற எந்த விஷயத்தையும் கணவரிடம் பேசப் பயப்பட வேண்டாம்.

* பெரும்பாலான ஆண்களின் மனோபாவம் எப்படி இருக்கிறது தெரியுமா? காதலியையோ, மனைவியையோ, மனைவியாகப் போகிற பெண்ணையோ கிண்டல், ேகலி செய்வதும், விமர்சனம் செய்வதும் தமது உரிமை என்றே நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை
ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

* பெண்ணைவிட தான் எப்போதும் எல்லா விஷயங்களிலும் உயர்ந்தவன் என்கிற எண்ணமும் பல ஆண்களுக்கு உண்டு. அதை அவர்கள் வெளிப்படுத்துகிற விதமும் வித்தியாசமாக இருக்கும். உதாரணத்துக்கு, `உனக்கு இதெல்லாம் தெரியாது... புரியாது... நான் சொல்லித் தரேன்...’ என்கிற மாதிரி ஆரம்பிப்பார்கள். அதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.



* இன்னொரு பெண்ணை காதலிப்பது பற்றியும் கல்யாணம் செய்வது பற்றியும் தனது கருத்துகளை நகைச்சுவை என்கிற பெயரில் நைச்சியமாக வெளிப்படுத்துவார்கள் பல ஆண்கள். ‘அது நகைச்சுவையான விஷயமல்ல’ என்பதை அடுத்த நொடியே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். `இந்த மாதிரியான பேச்சுகள் எனக்குப் பிடிக்காது’ என்பதையும் தெளிவாக அவருக்குச் சொல்லிவிட வேண்டும். சண்டை போடுகிற தொனியில் அல்லாமல் அமைதியாகவே புரிய வைக்கலாம்.

* தொடர்ந்து உங்கள் காதலரோ, கணவரோ உங்களை அவமானப்படுத்திப் பேசுவதில் சுகம் காண்கிறாரா? நீங்கள் எது செய்தாலும் உங்களை விமர்சனம் செய்கிறாரா? `உன் விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்வதே இல்லை’ என ஒரு முறை முகத்தில் அடித்தாற்போல சொல்லிப் பாருங்கள். அது அவரை அப்படியே அதிர்ச்சியடையச் செய்துவிடும். அடுத்த முறை அப்படிப் பேசும் முன் யோசிக்க வைக்கும்.

* உதாரணத்துக்கு `உனக்கு அறிவே இல்லை... நீ எதுக்குமே லாயக்கில்லை...’ என்றெல்லாம் சொல்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல ஸ்பரிசத்தையும் கெட்ட ஸ்பரிசத்தையும் அடையாளம் காணக் கற்றுக் கொடுப்போம் இல்லையா? கெட்ட ஸ்பரிசத்துக்கு உடனே `நோ’ சொல்லக் கற்றுக் கொடுப்பது போலத்தான் இதுவும். கணவரின் அநாகரிக விமர்சனங்களுக்கும் `நோ’ சொல்லிப் பழகுங்கள்.

* `நகைச்சுவையாகத்தானே சொன்னேன்... அதைக் கூட உன்னால சகிச்சுக்க முடியலையா’ எனக் கேட்கலாம் கணவர்கள். ஒருவருக்கு
நகைச்சுவையாகத் தெரிகிற விஷயம் இன்னொருவரை எப்படிக் காயப்படுத்தும் என்பதை அவருக்கு சொல்லுங்கள். தனிப்பட்ட முறையில் அது உங்களை எந்த அளவு காயப்படுத்தியது என்றும் வெளிப்படுத்துங்கள். இனிமேலும் அது தொடர வேண்டாம் என்பதை வலியுறுத்துங்கள்.

* நேரடியாக ஒருவரை அடிப்பதும், திட்டுவதும் ஒரு வகை என்றால் கிண்டல், கேலி மூலமாக அதைச் செய்வது இன்னொரு வகை. Passive aggression எனப்படுகிற இது, நேரடியான தாக்குதலை விடவும் மோசமானது. கணவரின் இந்தப் போக்கை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பிறகு அதை முறைப்படுத்துவது சிரமமாகி விடும்.

* ஆண்கள் தாம் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்திலேயே வளர்க்கப்படுகிறார்கள். பெண்களைப் பற்றிய குறைந்த மதிப்பீடு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களவரின் பேச்சில், அணுகுமுறையில் அது தெரிந்தால் அனுமதிக்காதீர்கள்.

* மனைவியின் வார்த்தைகளை காதிலேயே போட்டுக் கொள்ளாதது, அவளது அபிப்ராயங்களுக்கு மதிப்பு கொடுக்காதது அல்லது அதை சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்துவது போன்ற கணவரின் செயல்களை சாதாரணம் என்றோ, அவரது கேரக்டரே அப்படித்தான் என்றோ அலட்சியமாக விடாதீர்கள்.

* பெண்கள் என்பவர்கள் குழந்தைகளைப் போல பாதுகாப்பாகவும் பொத்தியும் வைக்கப்பட வேண்டியவர்கள் என்றே ஆண்கள் நினைக்கிறார்கள். தமக்கு இணையாக அவர்களுக்கு சம உரிமைகள் கொடுத்து சக்திவாய்ந்தவர்களாக நடத்தப்பட வேண்டியவர்கள் என நினைப்பதில்லை. பல சினிமாக்களும் கதாநாயகிகளை அப்படியே சித்தரிக்கின்றன. இதை மாற்றி, உங்கள் கருத்துகளை, எண்ணங்களை, உணர்வுகளை மதிக்க உங்கள் வீட்டு ஆண்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

* இருவரும் பேசும் போது, மனைவியைப் பேச விடாமல் குறுக்கிட்டு பேச்சை திசை திருப்பும் ஆண்களும் இருக்கிறார்கள். `எனக்கு விவாதிக்கப் பிடிக்கும். ஆனால், இடையில் குறுக்கிடாமல் என்னை முழுமையாக பேச அனுமதியுங்கள்...’ என தெளிவாகச்
சொல்லுங்கள்.

* காரணங்கள் அற்ற குற்றச்சாட்டுகளையும் அனுமதிக்காதீர்கள். `உன்னோட கடைக்குப் போய் காத்திருந்தா எனக்கு தாடியே முளைச்சிடும்...’ என்கிற மாதிரியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள். `நீ சரியில்லை... எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படறே... சின்ன விஷயத்தைப் பெரிசாக்கறே...’ என்பது போன்ற பேச்சுக்களை ஏற்றுப் பழகினால், ஒரு கட்டத்தில் உங்களுக்குள்ளேயே நீங்கள் இப்படித்தான் போல என்கிற எண்ணம் வந்துவிடும். அது உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

மனைவிகள் தவிர்க்க வேண்டியவை...

* கணவரின் கோபம் அல்லது வன்முறை நடத்தையின் போது கண்ணீர் விடுவதைத் தவிருங்கள்.

* உங்களை உறுத்துகிற, உங்களுக்கு உடன்பாடில்லாத கணவரின் எந்த நடவடிக்கைகளையும் வளர விடாதீர்கள். உடனுக்குடன் அதை நிறுத்தப் பாருங்கள்.

* கணவர் செய்த தவறுக்கு அவரே மனம் வருந்தி, மன்னிப்பு கேட்பார் என ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். ஆண்கள் பெரும்பாலும் அப்படி நடந்து கொள்வதில்லை.

* உங்கள் மீது தவறே இருக்காது. ஆனாலும், செய்யாத தவறுக்கு உங்கள் மீது நீங்களாகவே பழிசுமத்திக் கொண்டு, கணவரிடம் மன்னிப்பு கேட்காதீர்கள். பிரச்னை சரியானால் போதும்... சமாதானம் வேண்டும் என்கிற எண்ணத்தில் பல பெண்களும் இந்தத் தவறைச் செய்கிறார்கள்.

* சத்தமாகப் பேசுவது, திட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். நீங்கள் அப்படிப் பேசிப் பழகும் போது உங்கள் மீது ஹிஸ்டீரியா (கோப வெறி) பட்டம் கட்டும் வாய்ப்புகள் அதிகம்.

* சரியான காரணங்களுக்காக, சரியான அளவில் கோபப்படத் தயங்காதீர்கள். சில நேரங்களில் உங்கள் கோபமே உங்களுக்கு உதவும். நீங்கள் ஒதுக்கப்பட்டதாகவோ, தனிமைப்படுத்தப்பட்டதாகவோ உணராமல் இருக்கச் செய்யும்.

* வார்த்தைகள் மூலம், உணர்வுகளின் மூலம், உடல் ரீதியாக... இப்படி எந்த வகையிலும் உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்துவதை அனுமதிக்காதீர்கள். ஆபாச வார்த்தைகள் பேசுவது, கோபச் சொற்களை உபயோகிப்பது, கையில் கிடைக்கும் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற எல்லாம் இதில் அடக்கம்.

(வாழ்வோம்!)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
Re: இத்தகைய கணவர்களை எதிர்த்துப் பேச தயக்க&#29

Thanks for the suggestions.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.