இனிது இனிது வாழ்தல் இனிது!

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#1
மாறிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் பெண்கள், ஆண்களைத் திருமணம் செய்கிறார்கள்.மாற மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் ஆண்கள், பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்.திருமணத்தில் இருவருமே ஏமாந்துதான் போகிறார்கள்! - ஐன்ஸ்டீன்


ஆணும் பெண்ணும் ஒன்றில்லை. எந்தக் காலத்திலும் அவர்கள் ஒன்றாக முடியாது. ஆண் ஆண்தான். பெண் பெண்தான். ஆண், பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ ஒருபோதும் உணரவோ, நடந்து கொள்ளவோ முடியாது. இதுதான் உண்மை... இதுதான் அறிவியல்!‘என்னதான் சொல்ல வர்றீங்க... நீங்க ஆண்கள் பக்கமா? பெண்கள் பக்கமா?’ என உங்களுக்குக் கோபம் வருவதை என்னால் உணர முடிகிறது. ப்ளீஸ் வெயிட்... நாம் இங்கே பேசப் போகிற விஷயங்களே வேறு...ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் அமைப்பே வேறு வேறு மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இடப்பக்க மூளையும் வலப்பக்க மூளையும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனித்தனியே இயங்கும். ஆனால், பெண்ணின் இட, வலப்பக்க மூளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

பெண் உடலில் இயல்பாகவே சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், இந்த இட, வலப்பக்க மூளைகளின் இணைப்புக்குப் பெரிதும் உதவக்கூடியதாக இருக்கிறது. இடப்பக்க மூளையானது லாஜிக்கலாகவும், வலப்பக்க மூளையானது உணர்வுப்பூர்வமாகவும் சிந்திக்கக் கூடியது. பெண்ணின் மூளையைவிட, ஆணின் மூளை 100 கிராம் அளவிலும் அதிகம். ஆனால், அளவுக்கும் அறிவுத் திறனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! ஆண்கள் எல்லாவற்றையும் கால்குலேட்டிவாகவே பார்ப்பதற்கும் தீர்வு சொல்வதற்கும், பெண்கள் எல்லாவற்றையும் உணர்ச்சிவயப்பட்டு அணுகுவதற்கும் இத்தகைய அவர்களின் மூளை அமைப்பே காரணம்.

பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க முடியும். அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பார்கள். காலிங் பெல் அடிப்பது கேட்டு ஓடுவார்கள். போன் அலறுவது அவர்களுக்குக் கேட்கும். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுப் பதறிப் போவார்கள். போன் பேசிக்கொண்டே சமைப்பதும், டி.வி. பார்த்துக்கொண்டே இன்னொரு வேலையைப் பார்ப்பதும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு அப்படியில்லை... எந்த வீட்டிலாவது ஆண் பேப்பர் படிக்கிற போதோ, டி.வி.யில் செய்தியோ, ஸ்போர்ட்ஸோ பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, மனைவி பேசுவது காதில் விழுந்திருக்கிறதா சொல்லுங்கள். பக்கத்தில் படுக்க வைக்கப்பட்ட குழந்தையின் சிணுங்கல் கூட அவர்களுக்குக் காதில் விழாது. பத்து விசில் அடித்த பிறகும் குக்கர் சத்தம் கேட்காது.

அது அவர்களது சுபாவமல்ல. அவர்களது மூளையின் அமைப்பு அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. ‘ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு... நிம்மதியா கொஞ்ச நேரம் பேப்பர் படிக்க முடியுதா? டி.வி. பார்க்க முடியுதா... எப்பப் பார்த்தாலும் ஒரே சத்தம்... அமைதியாவே இருக்காதா வீடு?’ என ஆண்கள் ஆத்திரப்படுவதும், ‘பேப்பர்லயோ, டி.வி.லயோ மூழ்கிட்டா உலகமே மறந்துடுமா? கரடியா கத்தறேன்... ஏதாவது காதுல விழுதா? குழந்தை அழற சத்தம் கூடக் கேட்காம அப்படியென்ன டி.வி வேண்டிக் கிடக்கு?’ எனப் பெண்கள் புலம்பவும் காரணம் அதே மூளைதான். வார்ட்ரோபில் கண்ணுக்கு எதிரிலேயே நீல கலர் சட்டை இருக்கும். அது தெரியாமல், ‘என்னோட ப்ளூ ஷர்ட்டை எங்கே வச்சுத் தொலைச்சே...’ என மனைவியிடம் அவசரப்பட்டுக் கத்துவார்கள்.

மனைவி வார்ட்ரோபை திறந்தால் முதலில் அந்த சட்டைதான் கண்ணில்படும். ‘கண் எதிர்லயே இருக்கு... இதுகூட தெரியலை. கவனமெல்லாம் வீட்ல இருந்தாத்தானே...’ என மறைமுகமாக கணவரை பதிலுக்குக் குத்திக் காட்டுவார் மனைவி. அது உங்கள் கணவரின் தவறில்லை பெண்களே... அதன் பின்னணியிலும் ஒரு அறிவியல் உண்டு! எக்ஸ் குரோமோசோமில்தான் நிறங்களைப் பிரித்தறிய உதவும் கோன்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம்தான். அதனால் கலர் விஷயத்தில் அவர்கள் கொஞ்சம் வீக்தான். அதுவே பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள். அதனால்தான் பச்சை கலரிலேயே பத்து வித புடவைகளையும் சிவப்பில் ஏழெட்டு சல்வாரையும் உங்களால் வித்தியாசம் பார்த்து வாங்க முடிகிறது. இந்த அடிப்படை புரியாததால்தான் கணவன்-மனைவிக்குள் சண்டைகள் வெடிக்கின்றன.

எல்லாப் பெண்களுக்கும், தன் கணவனை தன்னைப் போலவே அஷ்டாவதானியாக மாற்றிவிட ஆசை. அறிவுரை சொல்வது, ஆலோசனை சொல்வது என கணவரைத் திருத்தி, தன்னைப் போலவே மாற்றும் முயற்சியில் அவர்கள் இறங்க, ஆண்களுக்கோ அது அவமானச் செயலாக தெரியும். தன்னைப் பற்றிய விமர்சனங்களாக எடுத்துக்கொண்டு, தன் ஈகோவை சீண்டிப் பார்க்கிற வேலையாக நினைத்துக் கொண்டு மனைவியிடம் சண்டையைத் தொடர்வார்கள். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் உருவாகும் விவாதமானது, ஒரு கட்டத்தில் ஊதிப் பெரிதாக்கப்பட்டு, இவன் அல்லது இவள் தன் வாழ்க்கைக்கு சரிவரப் போவதில்லை என்கிற முடிவு வரை யோசிக்க வைத்து, விவாகரத்துக்கான பாதையை நோக்கி அழைத்துச் சென்று விடும்.

ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் எப்படி வேறு வேறாக இருக்கிறதோ... எப்படி இருவருக்கும் அது இன்பத்தைத் தரக்கூடியதாக, திருமணத்தில் இணைந்து, சந்ததியைப் பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கிறதோ... அப்படித்தான் இருவரின் மன மாற்றமும். ஆண்கள் பெரிதாக உணர்வு களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக மனைவியிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதுவே பெண்களுக்கு காலை முதல் இரவு வரை நடந்த எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொண்டால்தான் திருப்தியே. தன்னைப் போலவே தன் கணவரும் இல்லை என்பதில்தான் ஆரம்பமாகும் பிரச்னையே... ‘நான் எவ்வளவு வெளிப்படையா இருக்கேன். உன்னால ஏன் முடியலை.

அப்போ நீ என்கிட்டருந்து எதையோ மறைக்கிறே... இல்லைன்னா ஏதோ தப்பு பண்றேன்னுதானே அர்த்தம். இல்லைன்னா என்கிட்ட உனக்கு அன்பே இல்லைன்னு அர்த்தம்...’ என கன்னாபின்னாவென தனக்குத் தானே காரணங்களைக் கற்பித்துக் கொண்டு, கணவரிடம் மல்லுக்கட்டுவது பெண்களின் வழக்கம். மீண்டும் சொல்கிறேன்... உங்கள் கணவர் வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்வதில்லை. உங்கள் மீது அன்பில்லாமல், காதல் இல்லாமல் அப்படியெல்லாம் செய்வதில்லை. அவர்களது மூளை மற்றும் குரோமோசோம்களின் அமைப்பு அவர்களை அப்படித்தான் இருக்கச் செய்யும்.

யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கணவரைத் திருத்த நினைக்காதீர்கள். மாறாக இருவரும் ஒருவரிடம் உள்ள வேறுபாடுகளை ரசிக்கவும், புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். அந்த வேற்றுமைகளைக் கொண்டாடப் பழகுங்கள். இருவரும் ஒரே மாதிரி சிந்தனைகளுடன் இருந்தால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளும் செல்லச் சண்டைகளும் கோபங்களும் இருந்தால்தான் காதல் நெருக்கமாகும்... வாழ்க்கை ரசிக்கும்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.