இன்றைய அவசர, அவசியத் தேவை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இன்றைய அவசர, அவசியத் தேவை


டாக்டர் ஆ. காட்சன்
எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப் பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர். ‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.

பெற்றோர் கவனத்துக்கு…
# வளர்இளம் பருவத்தில் எல்லாருக்கும் ஏற்படும் சாதாரண மனரீதியான மாற்றங்களைக் குறித்து பயப்பட வேண்டாம். இவற்றை ஆலோசனைகள் மூலம் பெரும்பாலும் சரிசெய்துவிடலாம்.

# குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்படும் விதமே, வளர்இளம் பருவத்தின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். பெற்றோர் கற்றுக்கொடுக்கும் காரியங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்தான் குழந்தைகள்.

# அசாதாரண மாற்றங்கள் தெரியும்பட்சத்தில் மனநல மருத்துவரை அணுகத் தயங்காதீர்கள். உடல் நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது போன்றதுதான், மனநல மருத்துவரை நாடுவதும். அறிவியல்பூர்வமாக செய்யப்படும் சிகிச்சைகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.

# சரியான நேரத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல்தான் நிறைய வளர்இளம் பருவத்தினர் பாதை மாறுகின்றனர். தற்போது முதுகலை மனநல மருத்துவம் (MD) படித்து முடித்த பின், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மனநலத்துக்கு மட்டுமே தனி பட்டமேற்படிப்பு (DM) பிரிவுகள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு வளர்இளம் பருவத்தினரின் மனநலம் முக்கியமான ஒன்றாகத் தற்போது கருதப்படுகிறது.

# மனநோய்கள் ஏற்படும்பட்சத்தில் மனம் உடைந்துவிடத் தேவையில்லை. தற்போது வேகமாக வளர்ந்துவரும் மனநல மருத்துவத் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் மனநல சிகிச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் அளவில் உள்ளன.

# இந்தக் குழப்பத்தில் ‘பிராய்லர் பள்ளி’களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கு மயங்கிக் குழந்தைகளை பலிகடாக்களாக்கி விடாதீர்கள். நூற்றுக்கு முப்பது பேர் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த தாகப் பல பள்ளிகள் விளம்பரம் செய்வது ஊரறிந்த செய்தி. ஆனால், அந்தப் பள்ளிகள் நடத்தப்படும் முறை காரணமாக, அதே அளவு மாணவர்கள் மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது மனநல மருத்துவர்கள் மட்டுமே அறிந்த செய்தி.

ஆசிரியர்களின் கவனத்துக்கு…
# வளர்இளம் பருவத்தில் மாணவர்கள் பெரும்பாலான நேரம் பள்ளியில் செலவிடுவதால் வளர்இளம் பருவத்தினரின் நலனில் ஆசிரியர்களே முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

# முழுமையான கட்டுப்பாட்டை விரும்பாத இந்த வயதில் “ஆடுற மாட்டை ஆடிக் கறப்பது” போன்ற வித்தைகளைத் தெரிந்து வைத்திருந்தால், மாணவர்களைச் சிறப்பாகக் கண்காணிக்க முடியும்.

# போதைப்பொருள் மற்றும் மொபைல் போன், இன்டர்நெட் பயன்பாடுகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அடிக்கடி ஏற்படுத்துவது, இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று.

# பள்ளியில் அசாதாரண மாற்றங்கள் தெரியும்பட்சத்தில் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்துவது மட்டுமல்லாமல், மனநல மருத்துவரை ஆலோசிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் தயங்க வேண்டாம்.

வளர்இளம் பருவத்தினரின் கவனத்துக்கு…
# எதற்குமே `ரிஸ்க்’ எடுத்து இறங்கிப் பார்க்கத் தோன்றும் இந்த வயதில், போதை மற்றும் செக்ஸ் குறித்த விஷயங்களில் `ரிஸ்க்’ எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் சீரமைக்க முடியாத பல மோசமான பின்விளைவுகளை இவை ஏற்படுத்திவிடும்.

# முடிந்தவரை பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களால் தீர்க்க முடியாத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்கள் சார்ந்து மனநல மருத்துவரின் உதவியை நாடுவதன் அவசியத்தை பெற்றோரிடம் எடுத்துச்சொல்லுங்கள்.

# மனநல ஆலோசனைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், “என்னை இங்கு அழைத்து வந்துவிட்டீர்களே, நான் என்ன பைத்தியமா?” என்று பெற்றோருடன் வாக்குவாதம் செய்துகொண்டே கிளினிக் உள்ளே நுழைவதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். மனநல மருத்துவரைப் பார்க்க, மனநோய் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. மனநல ஆலோசனை உங்கள் வாழ்க்கைக்கு அல்லது பிரச்சினைகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கக்கூடும்.

# வளர்இளம் பருவத்தில் பெரிய சாதனைகளாகத் தோன்றும் போதை, காதல், ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேளாமை போன்றவை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போதுதான், “இத்தனை கோமாளித்தனமாகவா நாம் நடந்துகொண்டோம்?” என்று புரியவரும். காலம் கடந்து சிந்தித்துப் பார்க்கும்படி இருந்தாலும், உங்கள் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வது கடினம்.

# மொபைல் போன், பைக் போன்ற விஷயங்களை பெற்றோரின் முடிவுக்கு விட்டுவிடுங்கள். அவர்களை மிரட்டிப் பெற்றுக்கொள்வதால் அவை கையில் கிடைப்பது மட்டும்தான் லாபமே தவிர, வாழ்க்கை மற்றும் படிப்பில் பல நஷ்டங்கள் ஏற்படலாம்.

மனநல மருத்துவத்தை ‘பைத்தியம்’என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட வேண்டாம். அதற்கு மேற்பட்ட ஏராளமான, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் அடங்கிய துறைதான் மனநல மருத்துவம். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதுபோல நல்ல உடல்நலம் மட்டுமல்லாமல், மனநலமும் இருந்தால் மட்டுமே இளைய சமுதாயம் சாதிக்க முடியும். நல்ல வகையில் மனநலனைப் பெற்று பலரும் இன்று சாதித்து வருகிறார்கள், நாளையும் சாதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வளர்இளம் பருவத்தில் பெரிய சாதனைகளாகத் தோன்றும் போதை, காதல், ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேளாமை போன்றவை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போதுதான், “இத்தனை கோமாளித்தனமாகவா நாம் நடந்துகொண்டோம்?” என்று புரியவரும்.


-டாக்டர் ஆ. காட்சன்


கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.