இரண்டு வயது முதல் மூன்று வயது வரை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இரண்டு வயது முதல் மூன்று வயது வரை

நாளொரு கதைகள் சொல்லி
பொழுதொரு பாடல் பாடி
நொடியொரு கோபம் கொள்ளும்
செல்லம் நீ!
கண்கள் உருட்டிக்
கைகள் மிரட்ட
இதழ்கள் தித்திக்கத் திட்டும்
செல்லம் நீ!

மொழியை கூழாங்கற்களாக்கி, கொஞ்சும் வடிவத்தில் மனசு முழுவதும் எச்சில் படிய நுழையும் மழலையருவியில் நனைவதற்காகவே அவர்களைப் பேச வைத்து காது கொடுக்கலாம். ‘பெண் குழந்தை சீக்கிரம் பேசிவிடும்... ஆண் குழந்தை மெதுவாகத்தான் பேசும்’ என்பது பொதுவான நம்பிக்கை. இரண்டு வயது வரை கூட குழந்தையால் பேச முடியவில்லை என்றால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

பேச்சுக் குறைபாட்டுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுத்திறன் வல்லுனர் பிரமிளா கூறுகிறார்..‘‘இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகளின் பேச்சுத்திறன் படிப்படியாக மேம்படும். அழுகை, குழந்தைகளின் முதல் மொழி. ங்காவில் தொடங்கி ‘ப்பா’, ‘ம்மா’, ‘த்தை’ என தத்தித் தத்தி ஒரு வயதில் ஒற்றை வார்த்தைகளுக்குத் தாவும். இரண்டு வயதில் அர்த்தம் உள்ள இரண்டு வார்த்தைகளை அமைத்து தனக்குப் பிடித்தது போலப் பேசும். குழந்தையின் பேச்சு என்பது காது கேட்கும் திறன், பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் ஆகிய மூன்றின் தொடர்ச்சியாகும். இவை மூன்றும்தான் குழந்தையின் பேச்சைத் தீர்மானிக்கின்றன.

பேச்சுத்திறனில் குறைபாடு இருந்தாலும் 4 வயதில்தான் பெற்றோர் மருத்துவரிடம் வருகின்றனர். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிவது அவசியம். குழந்தைக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருக்கும் போது அதனால் பேச முடியாது. பிறந்த குழந்தையின் செவித்திறனை பரிசோதிப்பதற்கான நவீன கருவிகள் வந்து விட்டன. குழந்தை பேச தாமதிக்கும்போது அதன் செவித்திறனை உடனடியாக சோதித்து பாதிக்கப்பட்டிருப்பின் ஹியரிங் எய்ட் பொருத்தி பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

இதன் மூலம் குழந்தை ஒலியைக் கேட்டுக் கேட்டு, மொழி பயன்பாட்டின் மூலம் பேச்சுத்திறனை வெளிக் கொண்டு வரும். குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு மேல் சுற்றி கேட்கும் சப்தங்களின் எதிர்வினையாக திரும்பிப் பார்த்தல், சத்தம் எழுப்புதல் போன்ற செயல்பாடுகள் இல்லாவிட்டால் உடனடியாகப் பரிசோதிக்கலாம். 2 வயது வரை கூட காத்திருக்கக் கூடாது. கர்ப்பமாக இருக்கும்போது தாய் கீழே விழுந்து அடிபடுதல், சத்துக்குறைபாடு, உடல்ரீதியான பிரச்னைகள், அதிகம் டிவி பார்ப்பதால் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்புக் குறைதல், பரம்பரைக் காரணங்கள், பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் குழந்தையின் பேச்சுத்திறன் பாதிக்கப்படலாம்.

பிறக்கும் போது ஃபிட்ஸ் வருதல், அதிகபட்ச காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடுகளாலும் பேச்சுப் பிரச்னை உண்டாகலாம். சில குழந்தைகளுக்கு திக்குவாய் பிரச்னையும் இருக்கும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது மட்டுமே தாயின் வேலை இல்லை. அவர்களது வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தில் மாற்றம் காணப்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் பேச்சுத்தடை உண்டாகலாம்.

குழந்தைகளின் பேச்சுத் திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு. குழந்தையின் வயதுக்கு ஏற்ப காது கேட்கும் திறன், பேச்சுத் திறன், மொழித்திறன் ஆகிய மூன்றையும் தகுந்த நிபுணரிடம் மதிப்பீடு செய்து குறைபாட்டை தீர்மானிக்க வேண்டும். ஈ.என்.டி மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு, பேச்சுப்பயிற்சி நிபுணரை அணுக வேண்டும். அவர், பிரச்னையின் தன்மைக்கு ஏற்றபடி பயிற்சி வழங்குவார்.

மூளைக்காய்ச்சல், கடினமான பிரசவம் போன்ற காரணங்களாலும் காது கேளாமை ஏற்படலாம். இதனால் பேச்சுத் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர் சளியின் காரணமாக காதில் சீழ் ஏற்பட்டு, நோய் தொற்றினால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. காதில் ஏற்படும் நோய் தொற்றை கவனிக்காமல் விட்டால், அது மூளைக்கும் பரவும். அதனால், காதில் சீழ் வடிந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லாமல், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் இது போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். சிறு வயதில் நாம் வாங்கிக் கொடுக்கும் விலை உயர்ந்த பொருட்களையும், அறிவார்ந்த விஷயங்களையும் விட குழந்தைகளுக்குத் தேவை பெற்றோரின் அரவணைப்பும் அருகாமையும்தான். பெற்றோர் வேலைக்குப் போகும் சூழல் இருந்தாலும், ஒரு மணி நேரமாவது குழந்தையுடன் செலவிட வேண்டும். அவர்களுடன் பேசுவதும், அவர்களை பேச விட்டுக் கேட்பதுமாக அந்த நேரத்தை முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே செலவிட வேண்டும். கணினியில் வேலை பார்ப்பது, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போன்றவற்றை அப்போது தவிர்க்க வேண்டும்.

2 வயதில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது படிப்பில் சிக்கல் உண்டாகிறது. இரண்டரை வயதில் ‘ப்ரீ ஸ்கூல்’ செல்லும் குழந்தை, அங்கு சொல்லப்படும் பாடல், ரைம்ஸ் போன்றவற்றை சொல்லத் தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும். மற்ற குழந்தைகளுடன் பேசுவதிலும் குழந்தைக்குச் சிக்கல் ஏற்படும். பள்ளியிலும் குழந்தையின் செயல்பாடுகள் குறித்துத் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலமும் பேசுவதில் இருக்கும் சிக்கலைக் கண்டறிய முடியும்.

பேச்சுக் குறைபாட்டின் காரணமாக குழந்தைகள் பல்வேறு மனச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். நார்மலான ஐக்யூ இருக்கும். ஆனால், பேச்சுப் பிரச்னையினால் மற்ற குழந்தைகளுடன் சகஜமாக விளையாட முடியாமல் தவிப்பார்கள். இதனால் மனச்சோர்வு உண்டாகும். படிப்பு பாதிக்கப்படும். அன்றாட விஷயங்களில் அடம் அதிகரிக்கும். குழந்தைகளின் சுயமதிப்பீடு பாதிக்கப்படும். அவர்களது தன்னம்பிக்கையைத் தகர்க்கும் இப்பிரச்னைகளை உடனடியாக கவனம் எடுத்து சரிசெய்தாக வேண்டும்.

பேச்சுக் குறைபாடு 2 வயதில் கண்டறியப்பட்டால், உடனே மொழிப் பயிற்சி அளித்து பிறகு பேச்சுப் பயிற்சி கொடுக்க முடியும். விரைவில் குறைபாட்டை சரி செய்யவும் முடியும். ஆனால், பலர் அறியாமை யால் 5 வயதில்தான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு வருகிறார்கள். அப்போது குழந்தையின் பேச்சு வளர்ச்சி ஒரு வயது அளவுக்குத்தான் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர அதிக காலம் தேவை.

பேச்சுத்திறன் என்பது மூளையுடன் தொடர்புடையது. மூளை வளர்ச்சிக் குறைபாட்டின் காரணமாகவும் கூட பேச்சு தாமதப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையின் பிரச்னையை மிகச் சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்...’’

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.