இரு திசைப் பறவைகள் - Iru Dhisai Paravaigal By Meghna Sid

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,500
Likes
11,537
Location
salem
கிளியைக் கண்டதும், சுடர் ஜாய்சின் தோள் ஏறிக் கொள்ள, ப்ரித்வீ அவனை சற்றே சங்கடத்துடன் ஏறிட்டாள்.

சுடருடன் சற்று நேரம் விளையாடியவன், கிளியை அங்கேயே விட்டு செல்ல, ப்ரித்வீ சங்கடத்துடன், “ரெண்டு நாள்ல கொண்டு வந்து கொடுத்துடுறேன் ஜாய்ஸ்’’ என சொல்ல, அவளைப் பார்த்து நன்றாக முறுவளித்தவன்,

“ஏஞ்சலீனா(கிளியின் பெயர்) இங்க இருந்தா என்ன என் வீட்ல இருந்தா என்ன..? ரெண்டும் ஒன்னு தான். சுடர் ரொம்ப ஆசைப்படுறா. அது இங்கயே இருக்கட்டும்.’’ என சொல்லிவிட, ப்ரித்வீ அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள், அவன் பேசுவது மெய்தானா என்பதைப் போல.

ஆம் ஜாய்ஸ் அந்த கிளி குஞ்சாய் இருக்கும் போதே வாங்கி வந்து கிட்டத்தட்ட மூன்று வருடம் கடுமையான பயிற்சி கொடுத்த பிறகே அது பேசத் துவங்கியது.

வீட்டில் மனைவி மக்களிடம் கொஞ்சுகிறானோ இல்லையோ, தினசரி இரவும் பகலும் அதனிடம் செல்ல சண்டை வளர்த்துக் கொண்டிருப்பான். ஆலிஸ் கூட ஏஞ்சலீனாவை அவனின் இரண்டாம் மனைவி என அடிக்கடி நக்கலடிப்பாள்.

ஜாய்ஸ் என்றால் தமிழுக்கு எப்பொழுதும் ஒரு நெகிழ்வு உண்டு. அவள் கேட்டது அத்தனையும் முகம் சுளிக்காமல் நிறைவேற்றும் மாமன் என்ற பாசமுண்டு.

சுடர் முதல் துண்டை ஜாய்சிற்கு கொடுத்ததும், ஆலிஸ், “அம்மாவுக்கு பூனை குட்டி, மகளுக்கு பேசுற கிளி, ஆனாலும் மொதோ கேக்கு துண்டை ஆட்டையப் போட நீங்க தீயா தான் வேலை செய்றீங்க போங்க.’’ என கிண்டல் செய்ய, கலகலத்த சிரிப்பொலியுடன் சூழல் இலகுவிற்கு மீண்டது.

இரண்டாம் துண்டை எடுத்தவள், இளாவை நோக்கி நடந்தாள். சுடரை கண்டிக்கும் ஒரே ஆள் இளா மட்டும் தான். இந்த உலகில் எதுவும் எளிதாய் கிடைத்துவிடுவதில்லை என அடிக்கடி அவளுக்கு செயல்முறை வகுப்பெடுக்கும் ஆசிரியன்.

குழந்தைப் பருவத்தில் அவன் முகம் கண்டாலே ஓடி ஒளிந்தவள், மூன்று மாதங்களுக்கு முன்னால் அவளுக்கு டைப்பாயிடு ஜுரம் கண்ட போது, விடிய விடிய அவளை மார்தாங்கி, உணவூட்டி, அவளின் வாந்தியை சுத்தம் செய்து, செவிலி ஊசி கொடுக்க வரும்போதெல்லாம் உடல் அணைத்து அவள் பயம் போக்கி என மற்றொரு தாயாய் அவன் மடி தாங்கி விதம், கண்டிப்பை மீறி அவனுள் இருக்கும் தனக்கான கனிவை அந்தக் குழந்தைக்கு புரியவைத்திருந்தது.

அன்றிலிருந்து இளா அதட்டும் போது கூட தமிழ் பெரிதாய் பயம் கொள்ளவதில்லை. ஆனால் முடிந்த அளவு அவன் சொல் கேட்டு நடப்பாள் தாயைப் போலவே.

மூன்றாம் துண்டு அர்ஜூனை நோக்கி நீட்டப்பட, “மை டியர் ஏஞ்சல்.. மாமாவுக்கு கேக்லாம் வேண்டாம். டென் கிசஸ் மட்டும் கொடுங்க போதும்.’’ என குனிந்துக் கன்னத்தைக் காட்டினான்.

“அப்போ டென் ஜெம்ஸ் தருவீங்களா அங்கிள்..?’’ என்றபடி தமிழ் முத்தமிட்டு விட்டு, அவன் சட்டைப் பையிலிருந்த, பத்து சிறிய ஜெம்ஸ் மிட்டாய்களை பெற்று செல்ல, அடுத்த நொடி, தாங்களும் மிட்டாயைப் பெற வாண்டுகள் பட்டாளம் அவனை சூழ்ந்தது.

யார் எந்த இடத்தில் முத்தம் இடுகிறார்கள் எனப் புரியாதவாறு, அர்ஜூன் முத்த தாக்குதலில் சிக்க, நந்தினி தான் அவனை வந்து காப்பாற்றும் படி ஆயிற்று.

“குட்டீஸ்.. எல்லாரும் இங்க ஓடி வாங்க. மியூசிக்கில் சேர் காம்படீசன் ஸ்டார்ட் ஆகப் போகுது. கமான் குவிக்.’’ என குரல் கொடுக்க மொத்த வாண்டுகளும் குரல் வந்த திசையை நோக்கி ஓடின.

தப்பிப் பிழைத்த அர்ஜூன், நன்றியோடு நந்துவைப் பார்க்க, அவளோ, ‘எதையாச்சும் லூசுத் தனமா செஞ்சி மாட்டிகிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு.’ என்று அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்து சென்றாள்.

அடுத்தடுத்து தமிழ் தன் உடன் பிறந்தோர் முதல், தாத்தா, பாட்டி, மற்ற குழந்தைகள் என அனைவருக்கும் இனிப்பை ஊட்டி முடித்த பின் இறுதியாய் ஒரே இனிப்பு துண்டை பெற்றோர்கள் இருவருக்கும் ஒருங்கே ஊட்டி முடித்தாள்.

“ஹே.’’ என்ற கரகோசத்துடன் ஈஸ்வர், ப்ரித்வீயின் பிணைப்பு வெளிப்பட, ப்ரித்வீயின் முகம் சற்றே செம்மை பூசிக் கொண்டது.

இனிப்பு ஊட்டும் படலம் முடிந்த பின், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் துவங்கியது. வென்றவர், தோற்றவர் என அனைவருக்கும் ஒன்றே போல பரிசுகளை வழங்கியது அங்கிருந்த சிறுவர்களை குதூகலப்படுத்தியது.

சிறுதானியத்தில் செய்திருந்த உணவு வகைகள் இரவு உணவாய் பரிமாறப்பட, பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதாய் நிறைவுற்றது. இல்லம் திரும்பியவர்களுக்கு தாம்பூலமாய் மஞ்சள் பையில் விதைப்பந்துகளோடு கடலை மிட்டாய்களும் அன்பளிப்பாய் வழங்கப்பட்டது.

நட்பு பட்டாளம் வீடு திரும்பிய பின் ஆண்களுக்கான பிரத்யேக விழா அர்ஜூனின் மொட்டை மடியில் ஏற்பாடாகியிருந்தது.

அர்ஜூன் கையிலிருந்த சிக்கன் காபாப்பை ஒரு கடி கடித்துக் கொண்டே, “ஜாய்ஸ் ப்ரோ.. நீங்க எங்க சங்கத்து மெம்பர்ஷிப்லையே இல்லையே. திடீர்ன்னு என்ன இந்தப் பக்கம் விசிட்..? ஆலிஸ் சிஸ்டர் புதுசா ஏதாச்சும் டென்சன் கொடுத்துட்டாங்களா ..? ஒன்னும் பிரச்சனையில்ல. மன்த்லி மெம்பர்ஷிப் வெறும் ரெண்டாயிரம் ரூபா தான் நீங்க எப்ப வேணா ஜாயின் பண்ணலாம்.’’ என அவனை வரவேற்க துவங்கினான்.
அவனை அதிரடியாய் முறைத்த ஜாய்சோ, “நான் ஒன்னும் நீங்க அடிக்குற சரக்குல பங்கு கேட்டு இங்க வரல. இங்க இருக்க சிக்கன் பிரியாணி எக் நூடில்ஸ்.. அப்புறம் இந்த கபாப் இதுலலாம் பங்கு கொடுங்க போதும். இந்த பக்கி ப்ரித்வீ வேற நாப்பது வயசுக்கு மேல சிறுதானிய உணவு தான் உடம்புக்கு நல்லதுன்னு என் வீட்ல திரிய கொழுத்தி போட்டுட்டு போயிட்டா. என் பொண்டாட்டி வெந்த சோத்தைக் கூட கண்ல காட்ட மாட்ற. எனக்கு இப்போ தான் முப்பத்தெட்டு வயசே நடக்குது. இவ படுத்துற பாட்ல வீடே ஏதோ சுகர் பேசன்ட் ஹோட்டல் மாதிரி இருக்கு.

சரி இன்னைக்கு தமிழு பர்த்டேவாச்சே. இவங்க வீட்ல நல்லா நாட்டுக்கோழி பிரியாணியும், மட்டன் சுக்காவும் போடுவாய்ங்கண்ணு பார்த்தா.. இடுப்பு எலும்பு முறிய வேலை வாங்கிட்டு எம் பொண்டாட்டி போடுற அதே கம்பு தோசை சோள உப்புமா.... என்னால முடிலடா சாமி.

நீங்க சரக்கு அடிக்கும் போது எப்படியும் சைட்டிஷ் வாங்குவீங்கன்னு தெரியும். அதான் அப்படியே உங்க கூட ஜாயின்ட் ஆயிட்டேன்.யாரோ என்னத்தையோ குடிச்சி தொலைங்க. நான் இப்போ உக்காந்து இந்த சிக்கன் பிரியாணியையும், காபாப்பையும் ஒரு கை பாக்குறேன்.’’ என்றுவிட்டு உணவில் தன் கவனத்தை செலுத்த துவங்கினான்.

ஈஸ்வருக்கும், இளாவிற்கும் அவன் தங்களோடு வந்திருப்பதின் உண்மைக் காரணம் தெரியுமாகையால் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் உற்சாக பானம் எடுக்கும் நாட்கள் வெகு வெகு அரிது. அப்படி ஏதனும் திட்டமிருந்தால் முதலில் அது அவரவர் மனையாள்களின் ஒப்புதல் பெற்ற பிறகே, அமலாக்கத்திற்கு வரும்.

இம்முறை அர்ஜூனின் வீடு கொண்டாட்ட இடமாய் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், ஈஸ்வரும், இளாவும் பத்திரமாய் வீடு திரும்பவே ஜாய்ஸ் அவர்களுடன் இணைந்திருந்தான்.

மது அருந்திய பிறகு இருவரும் வாகனங்கள் தொடுவது அவரவர் மனைவியமார்களின் மூலம் மிக வன்மையாய் தடை செய்யப்பட்டு இருந்தது.

வழக்கமாய் மகிழுந்து, அல்லது அழைப்பு வண்டியை ஏற்பாடு செய்தே இல்லம் திரும்புவர். ஆனாலும் அதுவரை மூன்று மனைவியரும் தவித்துப் போவதென்னவோ உண்மை.

இதை ஒரு முறை ப்ரித்வீ ஆலிசிடம் புலம்பிவிட, அவளோ அதிரடியாய் தன் கணவனை அவர்களுக்கு பாதுகாப்பு தலைவனாய் நியமித்து சக தோழிகளுக்கு நிம்மதியை கொடுத்துவிட்டாள்.

அவர்கள் கச்சேரி அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே ஈஸ்வருக்கு வீடியோ கால் வந்தது. ஈஸ்வர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சற்று தள்ளி சென்று அலைபேசியை உயிர்பித்தான்.

அவனின் மூன்று குழந்தைகளும், மனையாளோடு படுக்கையில் அமர்ந்திருந்தனர். ப்ரித்வீயின் கண்களின் ஓரம் இருந்த சிவப்பைக் கொண்டே அவளின் கோபத்தின் ஆழம் உணர்ந்தவன் தப்பிக்கும் விதமாய் குழந்தைகளிடம் உரையாட துவங்கினான்.

சில பல நிமிடங்கள் அவர்களுடன் பேசியவன், ப்ரித்வீ அவர்கள் நெற்றியில் குட் நைட் சொல்லி முத்தம் பதிக்கவும், தானும் அவர்களுக்கு தொடு திரையில். “இது மாயூமாவுக்கு இது பிரணவ் குட்டிக்கு இது தங்கப் பொண்ணு தமிழுக்கு.” என ஒவ்வொருவரின் பெயர் சொல்லி முத்தம் கொடுத்தான்.

மூவருக்கும் போர்வையை போர்த்திய பின் மனைவி அறையை விட்டு வெளியே வர, “இது பரிகுட்டிக்கு’’ என அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை தர அவனை முறைத்துப் பார்த்தவள், ‘வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு’ என்று முணுமுணுத்துவிட்டு அலைபேசியை துண்டித்தாள்.

அவன் மீண்டும் ஜோதியில் ஐக்கியமான நேரம் இளாவின் அலைபேசி ஒலித்தது. ஈஸ்வர் இளாவை, “உனக்குமா..?’’ எனபதைப் போல பார்க்க, ‘அதே.. அதே..’ என்ற பாவத்தை முகத்தில் காட்டியவன் விலகி சென்றான்.

இரண்டாவது கூலிங் பியரை கையில் வைத்திருந்த அர்ஜூன், “ஏன் பாஸ் நீங்க எல்லாம் உங்க பொண்டாட்டிங்ககிட்ட பர்மிசன் வாங்கிட்டு தானே வந்து இருக்கீங்க. அப்புறம் எதுக்கு சும்மா போனை போட்டு நொய் நொய்ன்னு உங்களை டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க. சி பாஸ்.. இந்த விசயத்துல என்னோட பொண்டாட்டி நந்துமா எவ்வளவோ பரவாயில்ல. இப்போ நான் கேட்டாக் கூட சூடா ஆம்லேட் போட்டு தருவா..’’ என சொல்லி முடிக்கவும், அசுர வேகத்தில் ஒரு கரண்டி பறந்து வந்து விழவும் சரியாக இருந்தது

‘ஆத்தி.. இவளும் கொலை வெறியில தான் இருக்கா போல. எதுக்கும் கச்சேரியை சீக்கிரம் முடிப்போம்.’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், இளா அலைபேசி முடித்து திரும்பி வரவும், மிச்சம் மீதியிருத்த மதுபான பாட்டிலை இருவர் கையிலும் கொடுத்துவிட்டு,

“இத போற வழியில குடிச்சிட்டே போய் வீடு சேருங்க. ஜாய்ஸ் ப்ரோ.. நீங்க உங்க பிரண்டையும் எங்க அண்ணனையும் தள்ளிட்டு போலாம். நான் இப்படியே இறங்கி வீட்டுக்கு போறேன். இன்னும் கொஞ்ச நேரம் இங்க உக்காந்து இருந்தாலும் எம் பொண்டாட்டி அடுத்து அணு குண்டை கூட தூக்கிப் போட்ருவா..!’’ என புலம்பியபடியே கீழே இறங்கி செல்ல, எப்படி இருந்த அர்ஜூனின் நிலை இப்படி ஆகிவிட்டதே என எண்ணிய மூவரும் ஒரே நேரத்தில் வாய்விட்டு சிரித்தனர்.

ஜாய்ஸ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ஹா ஹா.. என்னங்க இது. ப்ளே பாயா சுத்திட்டு இருந்த உங்க தம்பியை இப்படி புலம்ப விட்ருச்சி இந்த பொண்ணு. ஆனா பார்க்க இதுவும் நல்லதான் இருக்கு.’’ என நக்கலடிக்க,

ஈஸ்வரோ முகத்தை வெகு சீரியசாய் வைத்துக் கொண்டு, ‘பொண்டாட்டிங்கனாளே அப்படித் தானே. ஏன் ஜாய்ஸ் நான் கூட நேரா இப்ப உங்க வீட்டுக்கு வந்து உங்க வைப்கிட்ட நீங்க ரெண்டு ப்ளேட் சிக்கன் பிரியாணியை கேப்பே விடாம அடிச்சதை சொன்னா.. அவங்க என்ன ரியாக்சன் கொடுப்பாங்க..?’’ என கேட்க, இளாவோ, “அந்த சிக்கன் கபாப்பை விட்டுடீங்களே மச்சான்?’’ என எடுத்துக் கொடுத்தான்.

ஜாய்ஸ்சோ மனதிற்குள் ‘அடப்பாவிகளா நான் உங்களுக்கு பாடிகார்ட் வேலைப் பார்க்க வந்தா நீங்க என்னை பாடி ஆக்குற வேலை பாத்துருவீங்க போல இருக்கே.’ என அலறிக் கொண்டான்.

ஆனாலும் வெளியே முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு, ‘சரி சரி போலாம்.. லேட் ஆச்சு.’’ என்று முன்னால் நடக்க, ஈஸ்வரும், இளாவும் தமக்குள் விசமப் புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
 

meghna sid

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2014
Messages
3,500
Likes
11,537
Location
salem
முதலில் இளாவை அவனின் வீட்டில் இறக்கிவிட்ட ஜாய்ஸ், “போனதும் கால்ல விழுந்துடு. அடி விழாம இருக்கும்’’ என இலவச அறிவுரை வழங்க, இளாவோ, “மச்சான் நீங்க ஜாய்ஸ் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது எடுத்த விடீயோவை எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. நான் முக்கியமான ஒருத்தருக்கு பார்வேட் பண்ண வேண்டி இருக்கு.’’ எனவும்,

“மச்சி! நீ ஆல்வேஸ் ஸ்டாண்டர்டா... நீயே போய் சரக்கு அடிச்சி இருகேன்னு சொன்ன கூட கீர்த்தி நம்பாது பாரேன். ப்ரித்வீ ரெண்டு டைம் போன் போட்ருச்சி. நான் கிளம்புறேன்.’’ என்றுவிட்டு அவன் வாகனத்தை கிளப்ப, ‘அந்த பயம் இருக்கட்டும்’ என இளா அவனைப் பார்த்து கெத்தாக நின்றான்.

ஈஸ்வரின் இல்லம் வந்துவிட, அவன் இறங்கியதும், ஜாய்ஸ் வண்டியை திருப்ப முயல, அவன் கைகளைப்பற்றிய ஈஸ்வர், “வெரி வெரி தாங்க்ஸ் ஜாய்ஸ்... நீங்க எல்லாரும் தமிழ்கிட்ட கொஞ்சம் கூட வித்யாசம் காட்டாம பழகுறதைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையா, சந்தோசமா இருக்கு. தாங்க்ஸ் ய லாட். ‘’ என உணர்வுப் பூர்வமாய் நன்றி நவில, ஜாய்ஸ் மெலிதாய் புன்னகைத்தான்.

“நீங்களும் பிரித்வீயும் தான் சார் எப்பவும் கிரேட். நீங்க செஞ்ச அதே விசயத்தை என்னாலையோ இளாவாலையோ.. இல்ல அர்ஜூனாலையோ கண்டிப்பா முழு மனசோட செய்ய முடியாது. நீங்க ரெண்டு பேரும் எங்க பிரண்ட்ஸா கிடைச்சதுக்கு நாங்க தான் சார் பெருமையும், சந்தோசமும் படனும். இனிமே எப்பவும் நமக்குள்ள தாங்க்ஸ்லாம் வரக் கூடாது சார். ப்ரித்வீ வீட்ல டென்சனா இருப்பா. நீங்க கிளம்புங்க சார்.’’ என வண்டியைக் கிளப்ப ஈஸ்வர் புழுதியை கிளப்பி செல்லும் வாகனத்தின் முதுகையே சற்று நேரம் வாஞ்சையோடு நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் தன் வீட்டிற்கு செல்லும் படிகளில் ஏறத் துவங்கிய நொடி, தமிழ் அவர்கள் வாழ்வில் இணைந்த விதம் அவன் மனத் திரையில் ஓடத் துவங்கியது.
ப்ரித்வீ மிகவும் உடைந்து போய், “உங்களையே மாதிரியே எனக்கு குழந்தை வேணும் ஈஸ்வர்!’’ எனக் கேட்ட நாளொன்றில், “கண்டிப்பா இன்னொரு குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடும் பரிமா!’’ என அவளுக்கு ஆறுதல் சொல்லியிருந்தான்.

ஆனாலும் சில பல மருத்துவர்களிடம் சோதனைக்கு சென்று வந்த பிறகு, அத்தனை பேரும் ஒன்றே போல இனி ஒரு குழந்தையை ப்ரித்வீயின் கருவறை சுமக்க முடியாது என்றே சொல்லியிருந்தனர்.

அதில் அவளுக்கு ஏக வருத்தம். அடிக்கடி கணவனை இரவில் கொஞ்சும் போதெல்லாம், “கருப்பி எனக்கு உன்னை மாதிரி கருப்பா ஒரு பிள்ளை... உன்னை மாதிரி என் கால் பின்னாடி சுத்தி வர பிள்ளை வேணும் கருப்பி..’’ என்று உளறி தன் ஏக்கம் தணித்துக் கொள்வாள்.

ஈஸ்வருக்கு அவளின் அந்த வார்த்தைகள் பெரும் வலியை தரும். அவள் இயல்பாய் இருந்த நாளொன்றில், “அடிக்கடி என்னை மாதிரி குழந்தை வேணும்னு நாம தனியா இருக்கும் போதெல்லாம் சொல்றியே. நான்னா எது ப்ரித்வீ. என்னோட உடம்பா..? இல்ல உணர்வா..? உடம்பை நகல் எடுக்கத் தான் என்னோட ஜீன் வேணும் பரிமா. உணர்வைக் கடத்த..?’’

ஈஸ்வர் என்னவோ சாதரணமாக கேட்டுவிட்டு சென்றுவிட்டான். ஆனால் அது அவளுள் பெரும் உணர்வலை ஒன்றை எழுப்பிவிட்டது. அதன் முடிவாய், ப்ரித்வீ அநாதை இல்லத்தில் இருந்த ஒரு மாதமே நிரம்பிய பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவெடுத்தாள்.

அவளின் இந்த முடிவிற்கு முதலில் மலர் எதிர்ப்புக் கொடியை காட்டிய போதும், ப்ரித்வீ உறுதியாய் நின்றதால் வேறு வழியின்றி அவரும் அவளின் முடிவிற்கு சம்மதிக்க வேண்டி வந்தது.

மாயாவிற்கும், பிரணவிற்கும் தங்கள் குட்டி தங்கையாய் வீட்டிற்குள் ஒரு மழலை செல்வம் அடியெடுத்து வைத்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டனர்.

முதலில் அரை மனதோடு சம்மதித்த மலர் கூட வளர வளர குழந்தையின் குறும்பில் தன்னை இழந்து அவளுடன் அன்பில் ஒன்றிவிட்டார்.

ஈஸ்வரைப் போன்ற சாயலில் குழந்தை வேண்டும் என்று ப்ரித்வீ தமிழை தேர்ந்தெடுத்து இருந்தாள். ஆனால் வார்ப்பில் அவள் ப்ரித்வீயின் குணாதிசயம் நிறைந்த குழந்தையாய் வளர்ந்து நின்றாள்.

குழந்தையை தத்தெடுத்து வந்த அன்றைய இரவில் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்ட ஈஸ்வர், “உன்ன நினச்சி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பரிமா!’’ என்று அவள் நெற்றியில் முத்தமிட,

“எனக்கும் தான்.. எப்பவும் உங்களை நினச்சாலே பெருமையா இருக்கும்.’’ என்றவள் அவன் இதழ்களில் மென்மையாய் முத்தமிட, அதற்கு மேல் அங்கே மௌனமே மொழியானது.

பழைய நினைவுகளோடு படியேறிய ஈஸ்வர் தங்கள் வீடு வந்ததும், வீட்டின் அழைப்பு மணியை பயன்படுத்தாமல், ப்ரித்வீயின் அலைபேசிக்கு அழைத்தான்.
அவன் அழைத்த மறுநொடி, ப்ரித்வீ கதவைத் திறந்தாள். ஈஸ்வர் வீட்டிற்குள் நுழையும் போதே, “பசங்க தூங்கியாச்சா..?’’ என்று வினவியபடியே வந்தான்.

குழந்தைகளின் அரவமற்று வீடு நிசப்தமாய் இருக்கவும், அவர்கள் உறங்கியிருப்பார்கள் என்று எண்ணிய ஈஸ்வர், ப்ரித்வீ கதவடைத்து திரும்பவும், அவளை அணைத்தபடி அப்படியே வரவேற்பறையின் வெற்று தரையில் சரிந்தான்.

“என்ன பண்றீங்க... விடுங்க என்னை.. இன்னைக்கு உங்களுக்கு ஒன்னும் கிடையாது.’’ அவனிடமிருந்து விடுபட முயன்றபடியே ப்ரித்வீ திமிறிக் கொண்டிருக்க, அவளையும் அறியாமலேயே ப்ரித்வீ அவனைப் புரட்டித் தள்ளியிருந்தாள்.

அத்துணை நேரம் ஆட்டம் போட்டு விட்டு, அப்பொழுது தான் லேசாய் உறங்க யத்தனித்ததுக் கொண்டிருந்த குழந்தைகள், ஈஸ்வரின் குரல் வெளியே கேட்கவும் சடுதியில் விழித்துக் கொண்டனர்.

மூவரும் அறையை விட்டு வெளியே வர, முதலில் குழந்தைகளை கண்ட ஈஸ்வர், உடனடியாய் தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டு, “ஹாய் குட்டீஸ்! யாரும் இன்னும் தூங்கலையா..? நானும் அம்மாவும் சும்மா டபல் யூ டபல்யூ எப் விளையாடிட்டு இருக்கோம்.’’ என்று சூழலை சமாளிக்க, ஏறக் குறைய ஈஸ்வரின் மீது அமர்ந்திருந்த பிரித்வீயும்,

“எஸ்.. எஸ்.. டபல் யூ.. டபல் யூ எப் தான்.. நான் தான் இப்போ ஸ்டேர்ன் வார்னோ..’’ என்றபடி ஈஸ்வரின் நெஞ்சில் பொய்யாய் ஒரு குத்தை விட,

மாயூவோ உடனே, “டாடி.. உங்களை காப்பாத்த நான் வறேன்..நான் தான் ஹல்க்’’ என்றபடி ப்ரித்வீயின் மீது சரிந்தாள்.

பிரணவோ, “மம்மி.. உங்களை சேவ் பண்ண நான் வறேன் நான் தான் அண்டர்டேகர்..’’ என்றபடி மாயாவின் மீது போய் விழுந்தான்.

இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த, தமிழும், “நானும்.. நானும்.. நான் தமிழு.. மம்மி.. தாதி காப்பாத்த..’’ என்றபடி பிரணவின் மீது சரிந்தாள்.

அனைவரையும் சுமந்த படி ஈஸ்வர் கீழே அழுந்திக் கிடந்தான். ஏனோ அந்த சுமை வாழ் நாள் முழுமைக்குமான சுக சுமையாய் அவனுக்கு இருந்தது.

சற்று நேரத்தில் யார் யாரை குத்துகிறோம் எனப் புரியாமல் அவர்கள் உருண்டு பிரண்டு சண்டை போட்டு முடித்தபோது படுக்கை அறையில் இருந்த மொத்த தலையணைகளும் வரவேற்ப்பறையை தஞ்சம் அடைந்திருந்தது.

மூச்சு வாங்க ஈஸ்வர் இருகைகளையும் விரித்து கீழே படுக்க, அவன் கைத் தலையணியில் மொத்தக் குடும்பமும் தலை சாய்த்தது.

அவர்கள் இல்லம் முழுக்க அன்பின் புன்னகை நிறைந்திருக்க, வெவ்வேறு திசைகளில் பயணித்த இருதிசைப் பறவைகள், இன்று ஒரே அன்பின் கூட்டில் இளைப்பாறிக் கொண்டிருந்தன வாழ்வின் வெளியில்.

இருதிசை பயணம் நிறைவுற்றது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.