இலந்தை

#1


நன்றி குங்குமம் டாக்டர்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

நம் பால்ய காலத்தை இனிமையாக்கிய எண்ணற்ற விஷயங்களில் இலந்தையும் ஒன்று.சுவையான பழம், எளிதாகக் கிடைக்கக்கூடியது, விலை குறைந்தது என்று அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உற்சாகத்தை வழங்கக்கூடிய குணம் இலந்தைக்கு உண்டு என்பது அவற்றில் சிறப்பான ஓர் அம்சம்.

சுட்டெரிக்கும் இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழம் இலந்தை என்று சொன்னால் அது மிகையில்லை.அதனால், இந்த இதழில் இலந்தையின் மகத்துவங்கள் பற்றிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.இலந்தைப் பழத்தைப் போலவே இலந்தை மரம், பட்டை, வேர் என அதன் சகல பகுதிகளுமே பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதால் அவற்றையும் சேர்த்தே பார்ப்போம்.

இலந்தையின் தாவரவியல் பெயர் Ziziphus jujuba என்பதாகும். இந்தியாவை தாயகமாகக் கொண்டது என்பதால் ஆங்கிலத்தில் Indian jujube என்கிறார்கள். வடமொழியில் 'பாதர்', 'கோலா' என்று அழைக்கப்படுவதுண்டு. மர வகையைச் சார்ந்த தாவரமான இலந்தை சாதாரணமாக எந்த நிலத்திலும், வறண்ட சூழலிலும் வளரக் கூடியது. முட்கள் நிறைந்த இலந்தை மரம் 15 அடி உயரத்துக்கு மேலும் வளரும்.

நரி இலந்தை, கொடி இலந்தை, சிற்றிலந்தை, நில இலந்தை, காட்டு இலந்தை, ஆற்றிலந்தை, சுரை இலந்தை, காய் இலந்தை, பாதிரி இலந்தை, பேரிலந்தை, புளி இலந்தை, சீமை இலந்தை, வரி இலந்தை என இலந்தையில் பல்வேறு வகைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வோர் இலந்தையும் தனித்தன்மை மிக்க சுவை கொண்டது. உதாரணத்துக்கு, நாட்டு இலந்தையின் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்ததாக இருக்கும். காட்டு இலந்தையின் பழமோ புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியன கலந்ததாக இருக்கும்.
இலந்தையின் மருத்துவ குணங்கள்

இலந்தைப் பழம் குளிர்ச்சி தரும் தன்மை உடையது என்று முன்னுரையிலேயே பார்த்தோம்.அதேபோல், வயிற்றுக் கோளாறுகளைப் போக்கவும், ரத்தத்துக்கு உறையும் தன்மையை வழங்கவும், வலி நீக்கியாகவும் விளங்கும் திறன் கொண்டது இலந்தை. நன்கு பழுத்த இலந்தை மலச்சிக்கலைப் போக்கக் கூடியதாகவும் விளங்குகிறது.

மேலும் நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித் தள்ளக் கூடியதாகவும், சத்தான உணவாக உரம் தருவதாகவும், இருமலுக்கு மருந்தாகவும், ஒவ்வாமைக்கு எதிரானதாகவும், ஈரலுக்கு பலம் தரவல்லதாகவும் அமைகிறது.இலந்தைப் பழத்தின் விதைகள் வயிற்றுப் போக்கைத் தணிக்கக் கூடியது, வறட்டு இருமலைப் போக்கக் கூடியது, சரும நோய்களைத் துரத்தக் கூடியது, லேசான மயக்கமூட்டியாக செயல்படுவது, வாந்தியைத் தடுக்கக் கூடியது, தூக்கமின்மையைப் போக்கக் கூடியது.

இலந்தையின் மரப்பட்டை பேதியை நிறுத்தக் கூடியது. இலந்தையின் வேர்ப்பட்டைச் சாறு வயிற்றுப் போக்கை தடுக்கக் கூடியது, மேற்பூச்சாக மூட்டு வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் கரைக்கவும், வலியைக் குறைக்கவும் பயன்படுகிறது. இலந்தையின் இலை மற்றும் துளிர்களை பசையாக்கி கட்டிகள், கொப்புளங்கள், வேர் ஊன்றிய கட்டிகளுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் விரைவில் குணமாகும்.

இலந்தைப் பழத்தில் உள்ள சத்துகள்

100 கிராம் இலந்தைப் பழத்தில் கீழ்க்காணும் சத்துகள் உள்ளன.எரிசக்தி - 5.92 கலோரி, மாவுச்சத்து - 17 கிராம், சர்க்கரைச்சத்து - 10.5 கிராம், நார்ச்சத்து - 0.60 கிராம், கொழுப்புச்சத்து - 0.07 கிராம், புரதச்சத்து - 0.8 கிராம் ஆகியவற்றுடன் வைட்டமின் சத்துகளான B 1, B 3, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நீர்ச்சத்து ஆகியவையும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், உப்புச்சத்து ஆகியனவும் கணிசமான அளவு அடங்கியுள்ளன.
வெளிநாடுகளில் இலந்தையின் பயன்பாடு

சீன மருத்துவத்தில் இலந்தையை மனம் சார்ந்த பல பிரச்னைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.மனப்பதற்றத்தைத் தணிக்கவும், எதிர்காலம் பற்றிய தேவையற்ற பயத்தைப் போக்கவும், தூக்கமின்மையைத் தணிக்கவும் சீனாவில் இலந்தை பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் நாடித் துடிப்பைச் சீராக்கவும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கவும், வலிநிவாரணியாகவும் இலந்தையைப் பயன்படுத்துகிறார்கள். வியட்நாம் மக்கள் இலந்தையை நீர்மைப்படுத்தி சத்தூட்டமுள்ள பழச்சாறாக பயன்படுத்துகின்றனர்.

கொரிய நாட்டினர் காய்ந்த இலந்தைப் பழங்களை உணவுப் பொருட்களோடும், தேநீரோடும் சேர்த்து உபயோகிக்கின்றனர்.இத்துடன் அடிபட்ட காயங்களுக்கும், சரும நோய்களைப் போக்கவும் மேற்பூச்சாகப் பயன்படுத்துகின்றனர்.இத்துடன் உடலின் உள்ளழற்சியைப் போக்கவும், உள்ளுறுப்புகளின் வீக்கத்தைத் தணிக்கவும் இருமல் டானிக்குகளில் ஓர் அங்கமாகவும், தொண்டைக் கட்டை நீக்கும் மிட்டாய்களில் மருத்துவப் பொருளாகவும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர, உலகின் பல நாடுகளிலும் இலந்தையை வயிற்றுக் கோளாறுகளைப் போக்கவும், அஜீரணப் பிரச்னைக்கும், சிறு குடலில் தங்கி வயிற்றுப் போக்கை உண்டாக்கும் நுண்கிருமிகளை ஒழித்து வயிற்றுப் போக்கை சரி செய்யவும், சிரோசிஸ் என்கிற கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும், மண்ணீரலின் செயல்பாடுகளைச் சீர் செய்யவும் பயன்
படுத்துகின்றனர்.

இலந்தையில் உள்ளடங்கி இருக்கும் உயிர்ச்சத்தான Botulinus என்னும் அமிலச்சத்து புற்றுநோய், லுகேமியா எனப்படும் ரத்தப்புற்று, ஹெச்.ஐ.வி.எனப்படும் பால்வினை நோய் ஆகியவற்றையும் தணிக்க வல்லது என நவீன மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இலந்தைப் பழத்தை அடிக்கடி உணவாக சேர்த்துக் கொள்வதால் K 562 எனப்படும் ரத்தப்புற்று நோய் செல்கள் குறைகிறது என்பதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இலந்தையின் இன்னும் சில சிறப்புகள்

ஆப்பிளை போன்ற நறுமணமும், மிகக் குறைந்த கலோரி சக்தியையும் உடைய இலந்தையை அடிக்கடி
சாப்பிடுவதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.மிக அதிக அளவிலான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் அடங்கியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் அடிக்கடி நம்மைத் தாக்காத வண்ணமும் தற்காத்துக் கொள்ள இயலும்.

இலந்தையில் பொதிந்துள்ள சத்துகள் உடலுக்கு புத்துயிர் தரக்கூடிய சக்தி யைப் பெற்றுள்ளன. இவை தன்னிச்சையாக செயல்பட்டு உடலில் பல்வேறு பாகங்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட்டு பெரும் பாதுகாப்பினைத் தருகிறது.குறிப்பாக, ஈரல் கோளாறுகள் வராமலும் உடலின் எந்த உறுப்பையும் புற்றுநோய் தாக்காமலும் கேடயம் போல நின்று பாதுகாக்கிறது.

இலந்தையில் உள்ள உயிர்ச்சத்துகள் மனிதரின் வயது முதிர்வைத் தள்ளிப் போட உதவுகிறது. இது சருமத்தின் மேல் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து சருமத்துக்கு அழகையும் மென்மையையும் அளிக்கிறது.அதனாலேயே இலந்தையிலிருந்து பெறப்படும் சத்துவம் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
இலந்தை மருந்தாகும் விதம்

இலந்தையின் மரப்பட்டை அல்லது வேரைப் பொடித்து சலித்து ஆறாத புண்கள், புரையோடி பல கண்கள் வைத்துத் துன்பம் தரும் சிலந்திப் புண்கள் ஆகியவற்றின் மேல் தூவிவர விரைவில் குணமாகும்.இலந்தையின் இலையை மைய அரைத்து நீர்ச்சுருக்கு ஏற்பட்டபோது அடி வயிற்றில் பற்றாகப் போட்டு வைக்க உடனடியாக துன்பம் தொலைந்து சிறுநீர் தாராளமாகப் பிரியும்.இலந்தையின் விதையைப் பொடித்துத் தீநீராக்கிக் குடிப்பதால் தொண்டைப் புகைச்சல், இருமல் ஆகியன விரைவில் குணமாகும்.

இலந்தையின் இலையைப் பிடி அளவு எடுத்து பாலில் இட்டு கொதிக்க வைத்துத் தேநீர் போல குடிப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும்.இலந்தை மரத்தின் கட்டையை அடுப்பிலிட்டு எரித்தால், மறுபக்கத்தில் கட்டையிலிருந்து எண்ணெய் வடியும்.

அதை எடுத்து வெண்புள்ளிகளின் மேல் தடவி வருவதால் சருமத்தின் நிறம் மாறும்.இலந்தையின் கொட்டையை நீக்கி சதைப் பகுதியை எடுத்து அதனோடு சுவைக்கேற்ப மிளகாய் வற்றலும் உப்பும் சேர்த்து அரைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு கடுக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்துவர உடலில் ஏற்பட்ட அழலைத் தணிப்பதோடு அஜீரணத்தையும் போக்கும்.இலந்தை மரப்பட்டை மற்றும் இலையைச் சேர்த்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து உடலுக்குக் குளிப்பதால் உடல்வலி தணியும்.
 

Attachments

gkarti

Super Moderator
Staff member
#2
School kku Munna Shops la irukkum Kaa.. Enakku Ennnavo Intha Pazham Pidikathu..:rolleyes: En thambi And Cousins Packet la irukathai vangi vangi Sapduvanga :)

Benefits Parthaa Aww.. :) TFS!
 
#3
School kku Munna Shops la irukkum Kaa.. Enakku Ennnavo Intha Pazham Pidikathu..:rolleyes: En thambi And Cousins Packet la irukathai vangi vangi Sapduvanga :)

Benefits Parthaa Aww.. :) TFS!
Enakum pidikathu Karthi ;) ana en hubby ku pidikkum, ippa kuda super market la vikkura ilanthai vadai pkt vangi sappiduvanga :)
 

Important Announcements!