இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்

ன்ஜினீயரிங் படித்ததுமே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது கார்த்திக்கு. கை நிறைய சம்பளம். ஆறு ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்தாகிவிட்டது.

27 வயதில், ஒரு பெரிய எம்.என்.சி-யில் சீனியர் மேனேஜர் வேலை... புராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறிமாறிப் பயணம். வீட்டில் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். லைஃபில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்த நேரம்... ஒரு நாள் அலுவலகத்துக்குச் சென்ற கார்த்தி, திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். கார்த்தியைப் பரிசோதித்த டாக்டர், அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருப்பதாகவும் இதயம் பலவீனமாக இருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட கார்த்தி அதிர்ச்சியடைந்தார். ‘வேலை வேலைன்னு இருந்தேன்... இந்த வயசுல என்ன வந்திடும்னு அசால்ட்டா இருந்துட்டேன். கொஞ்சம் ஹெல்த் மேலயும் கவனமாக இருந்திருக்கலாமே’ என்று தற்போது வருந்திக்கொண்டிருக்கிறார். இது ஏதோ ஒருவருக்கு நேர்ந்த பிரச்னை இல்லை. கார்த்தியைப் போல பலர் இப்படித்தான் இருக்கின்றனர். இதற்கு, அவர்கள் உடல்நலம் பற்றி சிறிதும் கவலை இன்றி வாழ்ந்த வாழ்க்கைதான் காரணம். இதனால், 60-70 வயதுகளில் வரக்கூடிய நோய்கள், 30 வயதிலேயே வந்து, பல உயிர்களைப் பலி வாங்குகின்றன.

‘வரும் முன் காப்போம்’ என்பார்கள். ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புஉணர்வு இளம் வயதினர் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. டீன் ஏஜ், முதியவர்கள் பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசும் நாம், பொருளாதாரத்தில் தங்களை வலுப்படுத்தும் வளமான காலமான 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களை பற்றிப் பெரிதும் கவலைப்படுவது இல்லை. இந்தக் காலத்தில் நாம் செய்யும் தவறுகள்தான், முதுமையில் நம்மை வாட்டுகின்றன. இளமையில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

1. தவறான நேர மேலாண்மை

பள்ளி, கல்லூரிப் படிப்பு வரை பெற்றோர் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள். காலையில் எழுவதில் தொடங்கி, இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவது வரை பெற்றோர் கண்காணிப்பு இருக்கும். படித்து முடித்து, வேலை தேடும், வேலைக்குச் செல்லும் பருவத்தில், இவர்களுக்குச் சிறிது சுதந்திரம் கிடைக்கிறது. ஏன் தூங்கவில்லை என்றால், ஆபீஸ் வேலை என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக்கொள்கின்றனர். இதனால், காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை அனைத்திலும் மெத்தனம் மேலோங்குகிறது. நேரத்தை எப்படிச் செலவழிப்பது எனத் தெரியாமல் வீணடிக்கின்றனர். அதுவும் நவீன எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் வருகையால், நேர மேலாண்மை முற்றிலும் குறைந்துவிட்டது. நேரமின்மையால் சரியான நேரத்துக்குச் சாப்பிட முடிவது இல்லை; உடற்பயிற்சி செய்ய முடிவது இல்லை; நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட முடிவது இல்லை. நேர மேலாண்மைப் பிரச்னை மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் அடிப்படையாக மாறிவிடுகிறது.

2. உணவில் அக்கறையின்மை!

வீட்டில் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு, கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள். ஒவ்வொரு வேளையும் சாப்பாடு தயாராக இருக்கும். இதனால், காலை உணவைத் தவிர்ப்பது இளம் வயதில் மிகமிகக் குறைவு. வேலைக்குச் செல்லும் காலத்தில், காலை உணவைத் தவிர்ப்பது வாடிக்கையாகிவிடுகிறது. அதுவும், வேலை நிமித்தம் வெளியூரில் வசிக்க நேர்ந்தால், நல்ல சாப்பாட்டுக்குக் கஷ்டம்தான். ஹோட்டல், துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்துக்கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளைத் தவிர்ப்பது... என உணவுமுறை முற்றிலும் மாறிவிடுகிறது. பரோட்டா உள்ளிட்ட மைதா உணவுகள் உடல்பருமனுக்குக் காரணமாகிவிடுகிறது.

3. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாதல்

தொழில்நுட்பங்களைத் தெரிந்துவைத்திருப்பதும் அப்டேட்டாக இருப்பதும் நல்ல விஷயம். ஆனால், அதற்காக டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிப்போவது நல்லது அல்ல. எதையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே மிகவும் அதிகம். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்தப் புள்ளியில் நிறுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரிவது இல்லை. `மனதையும் உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும் டிஜிட்டல் சாதனங்களும்தான்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

4. வேலைப்பளு

பணியிடத்தில் அதிகப்படியான வேலை, புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற சூழலும், சிலருக்கு அவர்களின் சக்திக்கு மீறிய டார்கெட்டுகளும் தரப்படுவதால் வேலைப்பளுவால் தடுமாறுகிறார்கள். இதனால், ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க, சிகரெட், மது, வார இறுதிக் கொண்டாட்டம் என்று வாழ்க்கை முறையை மாற்றுகின்றனர்.

5. உறவுச் சிக்கல்கள்...

ஆண், பெண் இரு தரப்பினரும் இளம் வயதில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை, அவர்களுக்கு இடையே ஆன உறவுச் சிக்கல்கள்தான். 30 வயதுக்குள் திருமணம் முடிந்து, விவாகரத்துக் கோருவோர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. வெளி மனிதத் தொடர்பே இல்லாமல், எந்த நேரமும் படிப்பு, படிப்பு முடிந்த பின் வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்தவர்களுக்கு, சக வாழ்க்கைத் துணையை எப்படிக் கையாள்வது எனத் தெரிவது இல்லை. கணவன் - மனைவி உறவில் பிரச்னை ஏற்படும்போது, பலர் உச்சக்கட்ட மனஅழுத்தத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். குடும்பப் பிரச்னைகளால் அலுவலகத்தில் சரியாகப் பணிபுரிய முடியாமல் அங்கும் பிரச்னை ஏற்பட்டு, மனஅழுத்தம் இரட்டிப்பாகிறது.

6. பாலியல் கவனச்சிதறல்

டீன் ஏஜில், இனப்பெருக்க மண்டல வளர்ச்சி இருந்தாலும் படிப்பு, கட்டுப்பாடு என இருந்தவர்கள், கொஞ்சம் சுதந்திரம் கிடைத்ததும் தடம் மாறிவிடுகின்றனர். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம், பாலியல் குறித்த எண்ணற்ற தவறான தகவல்கள் அவர்களை நிரப்புகின்றன.

7. உடற்பயிற்சியின்மை

இன்றைக்குப் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு. இதன் காரணமாக இளம் வயதிலேயே உடல்பருமன் ஏற்படுகிறது. படிக்கும் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. படிக்கும் காலத்திலாவது நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று இருந்தவர்கள், வேலைக்குச் சென்ற பிறகு அதையும் குறைத்துக்கொள்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும்போது, உடல் உழைப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாததால், உடலில் கொழுப்புப் படிய ஆரம்பிக்கும். இடுப்பு, வயிறுப் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும்போது, அது இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

8. தொலைந்துபோன தூக்கம்!

ஐ.டி, பி.பி.ஓ துறையில் பெரும்பாலானவர்கள் இரவு நேரப் பணியில்தான் உள்ளனர். இவர்களாவது வேலைக்காக இரவில் கண் விழிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுப்பது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள். நீண்ட நேரம் லேப்டாப்பே கதி என இருப்பது, டேப், மொபைலில் பிஸியாக இருப்பது என்று இரவுத் தூக்கம் தடைபடுகிறது. இரவுத் தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இரவுத் தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவது இல்லை. இதனால், உடற்பயிற்சி, காலை உணவுக்குப் போதிய நேரம் ஒதுக்க முடிவது இல்லை. இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிவது இல்லை.

நீண்ட நேரம் ஒளிர்திரையைப் பார்க்கும்போது, கண் பாதிக்கப்படுகிறது. சரியான தூக்கமின்மை காரணமாக ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. அதுவே, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடுகிறது.


[HR][/HR]தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன?
உடல்பருமன்
வைட்டமின் டி குறைபாடு
சர்க்கரை நோய்
உயர் ரத்த அழுத்தம்
தைராய்டு கோளாறுகள்
ஹார்மோன்கள் சமச்சீரின்மை
புற்றுநோய்
செரிமானக் கோளாறுகள்
மனஅழுத்தம்
இதய நோய்கள்
நரம்பு மண்டலப் பாதிப்புகள்
முதுகுவலி, மூட்டுவலி
சருமக் கோளாறுகள்
பாலியல் பிரச்னைகள்
சுவாசப் பிரச்னைகள்
சீரற்ற மாதவிலக்கு
அதிக ரத்தப்போக்கு
ஹார்மோன் மாறுபாடு காரணமாக சருமப் பிரச்னை
குழந்தையின்மை

[HR][/HR]தீர்வு என்ன?

தனிமனித ஒழுக்கம், தனிமனித சுகாதாரம், மனநலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ ஆரம்பித்தாலே, பாதிப் பிரச்னைகள் சரியாகிவிடும்.

தினசரி எட்டு மணி நேரம் தூக்கம் என்பதைப் பழக்கமாக்க வேண்டும்.

இதற்கு, குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் செல்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

காலையில், சீக்கிரம் எழுந்திருப்பதன் மூலம், உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைக்கிறது.

உடற்பயிற்சிக்குப் பிறகு, காலை உணவை உட்கொண்டு, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்ல முடியும்.

துடிப்பான வாழ்க்கைமுறை மூலமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

உணவில், சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதற்காக, பீட்சா உள்ளிட்ட விரும்பிய உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை. அளவைக் குறைத்துக்கொண்டாலே போதும். இந்த ஜங்க் ஃபுட்களை எடுக்கும்போது, இன்னும் அதிக உடற்பயிற்சி செய்து கலோரியைச் செலவழிப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
தினசரி, உடற்பயிற்சியுடன் யோகா, நடைப்பயிற்சி செய்யலாம்.

உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது உட்பட நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் 60-லும் ஆரோக்கியம் உண்டு.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.