உங்கள் உணவும் குடிநீரும் பாதுகாப்புதான&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் உணவும் குடிநீரும் பாதுகாப்புதானா?


ஃபுட் பாய்சன் பயங்கரம்
அலை அலையாகத் திரண்டு வந்துவிட்டுப் போயிருக்கிறது வெள்ளம். ஆனால், குடிக்க சுகாதாரமான குடிநீர் இல்லை. உண்ணும் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிடைப்பதைச் சாப்பிட வேண்டிய சூழல். இதுவே, `ஃபுட் பாய்சன்’ எனப்படும் உணவு வழியே பரவும் நோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது.

சமீபத்தில், ஒரு அம்மா தாங்க முடியாத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். என்ன பிரச்னை என்று பார்த்தால், அவர் சாப்பிட்ட உணவு கெட்டுப்போயிருந்தது.

அவர் உட்கொண்ட உணவில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. `வீணாக்க வேண்டாமே’ என்று நினைத்து அவர் உட்கொண்ட உணவு, அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, மருத்துவமனை வரை கொண்டு சென்றுவிட்டது. மழைக்காலங்களில் அதிகமாக ஏற்படும் நோய் இது. அலட்சியப்படுத்தினால், உயிர் பறிக்கும் நோயாகவும் மாறலாம். கவனக்குறைவு, சுத்தமின்மை, அலட்சியம், போதிய விழிப்புஉணர்வு இன்மை போன்றவைதான் ஃபுட் பாய்சன் ஏற்பட முக்கியக் காரணம்.

உணவு நஞ்சாதல் (ஃபுட் பாய்சன்)
உணவை நீண்ட நேரம் வெளியே வைக்கக் கூடாது. அப்படிவைத்தால், பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் காரணமாக உணவு கெட்டுப்போய்விடும். இ்ப்படி கெட்டுப்போன உணவுகளை உட்கொள்ளும்போது, உடலுக்குள் செல்லும் கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்காகப் பாதிப்பு வெளிப்படும். இதைத்தான் `ஃபுட் பாய்சன்’ அல்லது `உணவு நஞ்சாதல்’ என்கிறோம். மழைக்காலத்தில் மட்டும் அல்ல, கோடையிலும் ஃபுட் பாய்சன் உண்டாக வாய்ப்பு அதிகம்.


எந்த வகையில் ஃபுட் பாய்சன் வரலாம்?

பாக்டீரியா, ஒட்டுண்ணி, வைரஸ் மூன்றும்தான் உணவு நஞ்சாக முக்கியக் காரணிகள். நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளை எடுத்தாலும், அதில் மிகமிகக் குறைந்த அளவாவது நுண்ணுயிரிகள் இருக்கும். சமைக்கும்போது, அதிகப்படியான வெப்பம் காரணமாக இந்தக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இப்படி அழிக்கப்பட்ட கிருமிகளுடன்தான் நம் தட்டில் உணவு பரிமாறப்படுகிறது.

ஒருவேளை, உணவுப்பொருளைச் சமைப்பவர், பரிமாறுபவர் கைகளை நன்கு சுத்தம் செய்யவில்லை எனில், கிருமித்தொற்று ஏற்படும். பொதுவாக, சமைக்காத உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போதுதான் ஃபுட் பாய்சன் அதிக அளவில் நடக்கிறது. தவிர, உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வைத்து உட்கொள்ளும்போது, அதில் கிருமிகள் பெருக்கம் அடைந்தும் ஃபுட் பாய்சன் நிகழ்கிறது.

அறிகுறிகள் என்னென்ன?
சிறிய அளவில் ஏற்படும் ஃபுட் பாய்சன் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் ஃபுட் பாய்சனாக இருந்தால், வயிற்றுவலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இதன் காரணமாக உடலில் தீவிர நீர் இழப்பு (Dehydration), போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

`சாதாரண வயிற்றுப்போக்குதானே!’ என்று அலட்சியப்படுத்தினால், அடுத்தகட்டமாக வாந்தி, மலத்துடன் ரத்தம் கலந்து வருதல், காய்ச்சல், அதீத வயிற்றுப்போக்கு, பார்வைத் திறன் மங்குதல், வயிற்று எரிச்சல், வயிற்றுப் பொருமல், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, வலிப்பு ஏற்படலாம். நிலைமை மோசமானால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மேலே சொன்ன அறிகுறிகள் எல்லாம் ஏற்படும் என்று இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறிகுறிகள் ஏற்படலாம்.

தீவிர நீர் இழப்புப் பிரச்னை வந்து, சிகிச்சை எடுக்காமல் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவதன் மூலம், இதயம் பாதிக்கப்படலாம். சோடியம் உடலில் அதிகமாகலாம். மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, மரணம்கூட சம்பவிக்கலாம்.
வாந்தி பிரச்னையில் வரும் நோயாளிகளை, மருத்துவமனையில் அட்மிட் செய்து, அதிகக் கவனம் கொடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. ஓரல் மருந்துகளைச் சாப்பிடுவதும் நல்ல தீர்வுதான்.


உடனடி முதலுதவி என்னென்ன?

*24-48 மணி நேரத்துக்குள் மருத்துவர் ஆலோசனை பெற்று, சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

*குடிக்க முடிந்த நோயாளிகளுக்கு, இளநீர், நீர் ஆகாரங்களைக் கொடுத்து, உடலைத் தேற்றுவது நல்லது.

*நீர் ஆகாரங்கள் அதிகமாக உட்கொள்ளலாம் இதனால், உடலில் நீர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

*எலெக்ட்ரோலைட் சத்துக்கள் கொண்ட, இளநீர் பருகுவது நல்லது. பழச்சாறுகளையும் அருந்தினால் ஃபுட் பாய்சன் பிரச்னை படிப்படியாகக் குறையும்.

*உடலில் எதிர்வினைகள் செயல்படுகிறது என்று தெரிந்தும், கட்டுப்பாடு இல்லாமல் உணவு சாப்பிடுவது, தீவிரப் பிரச்னைக்கு அழைத்துச் செல்லலாம்.

*குடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டும்.

*கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அவர்களுக்கு அவ்வப்போது நீராகாரம் புகட்ட வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் குழந்தையாக இருந்தால், குழந்தைக்குத் தாராளமாகத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

என்னென்ன சிகிச்சைகள்?

நோயாளியின் அறிகுறிகளைப் பார்த்தே சிகிச்சை எடுக்க முடியும். சிலருக்குக் காய்ச்சல் மட்டும் வரலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி எனப் பிரச்னைகள் மாறுபடுவதால் அந்தந்த நோயாளிக்கு ஏற்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். வாந்தி, நீர் வறட்சி பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கு, அவசியம் உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படும். இவர்கள் வீட்டிலேயே வைத்தியம் செய்துகொள்ளாமல், மருத்துவரை அணுகுவது முக்கியம். டிரிப்ஸ், ஆன்டிபயாடிக், ஓரல் மருந்துகள் போன்ற சிகிச்சைகள் ஃபுட்பாய்சனைச் சரிசெய்யும்.

ஃபுட் பாய்சன் வராமல் எப்படித் தடுக்கலாம்?
*உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதில் அதிகக் கவனத்துடன் இருந்தாலே, ஃபுட் பாய்சன் பிரச்னையை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

*கைகளை லிக்யூட் ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தமாகக் கழுவலாம். உணவுப் பாத்திரங்கள், சமையல் அறை, கழிவறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.

*காய்ச்சாத பாலை அருந்தவோ, சமையலில் சேர்க்கவோ கூடாது.

*காய்கனிகள், கீரைகள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகளை நன்றாகக் கழுவிய பின் பயன்படுத்த வேண்டும்.

*மழைக்காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம். முடியாதவர்கள், வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரித்து, அளவாகச் சாப்பிடலாம்.

*மழைக்காலங்களில் சமைக்காத உணவுகளான சாலட், ஹாஃப் பாயில், சட்னி, துவையல், தயிர், மில்க் ஷேக் போன்றவற்றைச் சாப்பிடாமல் தவிர்க்கலாம்.

*ஈரமான சூழ்நிலையில், பாக்டீரியா வேகமாக வளரும். எனவே, எப்போதும் சமையல் அறையை உலர்வாகவைத்திருக்க வேண்டும்.

*பாக்டீரியா கிருமிகள் பெருக்கத்துக்கு தட்பவெப்பநிலை முக்கியக் காரணம். ஐந்து முதல் 60 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் பாக்டீரியா வேகமாகப் பெருக்கம் அடையும். எனவே, உணவுப்பொருளை 60 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வெப்பப்படுத்திப் பயன்படுத்தலாம்.

*குளிர்சாதனப்பெட்டியில் நீண்ட நாட்களுக்கு வைத்திருந்த உணவுகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

*சுகாதாரமற்ற இடங்களில் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

*பலரும், தண்ணீரைக் கொதிக்கவைத்து, வடிகட்டாமல் அப்படியே பருகுவர். இது தவறான பழக்கம். காய்ச்சி வடிகட்டிய குடிநீர் பெஸ்ட்.

*ரெடி டு ஈட் (Ready to eat) போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

*அதிகமாகப் பயணம் செய்பவர்கள், தங்களுக்குத் தேவையானவற்றை உடன் வைத்துக்கொள்ளலாம்.

*கிராஸ் குக்கிங் என்ற வெவ்வேறு எதிர்வினைகளைக்கொண்ட உணவுகளைச் சேர்த்துச் சமைப்பது, சாப்பிடுவது போன்ற முயற்சிகளையும் இந்த நாட்களில் தவிர்க்கலாம்.

*சாப்பிடுவதற்கு முன் கை கழுவுவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல மழை நாட்களில் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகம் கழுவுவதைக் கட்டாயமாக்கிக்கொள்வது நல்லது.

*இளஞ்சூடான நீரில் குளிப்பது, கால்கள் கழுவிய பின் வீட்டினுள் நுழைவது போன்றவை ஃபுட்பாய்சனை மட்டும் அல்லாமல் மற்ற நோய்கள் வருவதையும் தடுக்கும்.

உணவை நஞ்சாக்கும் கிருமிகள்
*250-க்கும் மேல் கிருமித் தொற்றுக்கள் இருக்கின்றன. இடம், உணவு, பொருள், சுகாதாரம் பொறுத்து, கிருமித் தாக்குதல்கள் வேறுபடலாம்.
*நோரோ வைரஸ் (Norovirus) - மழைக்காலக் கிருமி, வாந்தியை உருவாக்கும் கிருமி. சுகாதாரமற்ற நீர், கடல் உணவுகள், வேகவைக்காத காய்கறிகள் போன்றவற்றில் காணப்படலாம்.

*சால்மொனெல்லா (Salmonella) - பாக்டீரியா கிருமி. கோடை மற்றும் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவக்கூடியது. வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். செல்லப் பிராணிகளின் மலக்கழிவு, சுகாதாரமற்ற நீர், இறைச்சி, கோழித் தீவனம், பால், முட்டை போன்ற உணவுகளில் அதிகமாகக் காணப்படும்.

*ஈ கோலி (E.coli (Escherichia coli)) - விலங்குகள் மற்றும் மனிதனின் செரிமானப் பாதையில் வாழக் கூடியது. பால், கீரைகள், சுகாதாரமற்ற நீர், மலக்கழிவு, கடைகளில் விற்கும் தோசை மாவு போன்றவற்றில் காணப்படலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம்.

*காம்பிலொபேக்டர் (Campylobacter) புழு போன்ற வடிவம்கொண்ட கிருமி, குடலில் தொற்றை ஏற்படுத்திவிடும். பால், கோழி இறைச்சியில் அதிகமாகக் காணப்படும்.

*லிஸ்டீரியா (Listeria), மண், தண்ணீரில் வாழும் கிருமி. தானியங்கள், கடல் உணவுகள், பால் பொருட்கள், நீர் ஆகியவற்றில் காணப்படும், உணவின் மூலமாக உடலில் சென்று, காய்ச்சல் வாந்தி போன்றவை வரலாம்.

*என்டிரொடாக்ஸின் (enterotoxin), குடலைப் பாதிக்கும் ஒட்டுயிரி. காளான், கிழங்கு வகைகள், காய்கறி, கனிகளில் அதிகமாகக் காணப்படும்.

எதனால் ஃபுட் பாய்சன்?
கோழித் தீவனம், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, கடல் உணவுகள், பால், நீரால் தயாரிக்கப்பட்ட பானங்கள், சீஸ், கழுவாத காய்கனிகள், பூஞ்சை பிடித்த மசாலா, பருப்பு மற்றும் தானியங்கள், சுத்தமில்லாத உணவகங்களில் சாப்பிடுவது, சுகாதாரமற்ற குடிநீரைக் குடிப்பது போன்றவற்றால் ஃபுட்பாய்சன் வரலாம்.

உணவு, நீர் இதனை ஆதாரமாக வைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் அதிகக் கவனம் தேவை. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகள் முதல்கட்ட அறிகுறிகளாக தென்படுமாயின் உடனடி சிகிச்சை எடுப்பது அவசியம்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.