உங்கள் குழந்தையின் உயரமும், எடையும் சரிய

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் குழந்தையின் உயரமும், எடையும் சரியாகத்தான் இருக்கிறதா?


[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]

''என்னோட பையனுக்கு ஐ.பி.எஸ். ஆகணும்கறது கனவு. வயசு, எடை எல்லாமே சரியா இருந்துச்சு. ஆனா, போலீஸ் வேலைக்கு 165 செ.மீ. உயரம் வேணும். அவனோட உயரம் 160 செ.மீ. இந்த ஒரு காரணத்தினாலேயே அவனால போலீஸ் ஆக முடியலை. உயரம் மட்டும் சரியா இருந்திருந்தா என் மகனும் இந்நேரம் காக்கி சட்டை போட்டிருப்பான். எல்லா விஷயங்கள்லேயும் கவனமா இருந்து பார்த்துக்கிட்ட நான் அவனோட உயரத்துல மட்டும் அக்கறை எடுத்துக்காமப் போயிட்டேன்'' - பக்கத்து வீட்டு அம்மாவிடம் லட்சுமி அம்மாள் பகிர்ந்துகொண்ட வருத்தம் இது.

பக்கத்து வீட்டுப் பெண்ணோ, ''சின்ன வயசுல என்னோட பையன் பப்ளிமாஸ் மாதிரி அழகா இருப்பான். கொழு கொழுனு குழந்தை அழகா இருக்கானேனு அப்படியே விட்டுட்டேன். இப்போ 10 வயசுக்கும் மேல ஆகுது. இன்னும் உடல் பருமனோடதான் இருக்கானே தவிரக் கொஞ்சமும் இளைக்கவே இல்லை. அதனால, குள்ளமா வேற தெரியறான்'' என தன் மனக்குறையைக் கொட்டினார்.
குழந்தைகளின் உயரம் - எடைகுறித்தான கவலைகள் இன்றைய தாய்மார்களில் பலருக்கும் உண்டு.

வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருந்தால்தான் அது ஆரோக்கியமான குழந்தை. உங்கள் குழந்தையின் உயரமும் எடையும் சரியான விகிதத்தில்தான் இருக்கின்றனவா என்பதை எப்படி அறிந்துகொள்வது? குழந்தைகளின் வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்துப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்.

''ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்கள் கொடுக்கும் அக்கறை என்பது அந்தக் குழந்தை கருவாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் ஒருவேளை உணவை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். அதாவது மூன்று வேளையை நான்கு வேளையாக்கிக்கொள்ள வேண்டும்.


உணவில் காய்கறிகள், பழங்கள், முட்டை, இறைச்சி, தினை - கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும்போது 48 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை உயரம் இருக்கும். குழந்தை பிறந்து இரண்டு வயது வரையிலான வளர்ச்சி அதன் மூளையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஊட்டச்சத்து முக்கியமானது.

ஐந்து வயதுக்குள் சரியான வளர்ச்சி ஏற்படாமல் போனால், அதற்குப் பிறகு அந்தக் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைக் கூட்டுவது மிகவும் கடினம். அதேபோல், ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு சரிவிகித உணவு மட்டுமே போதுமானது அல்ல. நல்ல சூழலிலும் மனநிலையிலும் வளர்வதும் முக்கியமானது. இதற்கு விளையாட்டு முக்கியமானது. சமச்சீரான சத்துணவைக் கொடுத்துவந்தும் ஒரு குழந்தை சரியான வளர்ச்சியை எட்டவில்லை என்றால், அதற்கு மரபியல் காரணங்கள் இருக்கலாம்.

பாசத்தோடு சந்தோஷமான சூழலில், வளரும்போது வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் தூண்டப்பட்டு குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். உடல் எடையை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம், குறைத்துக் கொள்ளலாம்.ஆனால், உயரத்தை அதுபோல கூட்டவோ, குறைக்கவோ முடியாது. அதேபோல், உயரம் என்பது பெரும்பாலும் மரபியல் சார்ந்தே அமைகிறது. ஆனால், உயரத்தை அதிகரிக்கும் வகையிலான உடற்பயிற்சிகள் ஓரளவுக்கு உதவக் கூடும். பொதுவாக, பெண்களுக்கு 18 வயது வரையிலும் ஆண்களுக்கு 21 வயது வரையிலும் வளர்ச்சி இருக்கும்'' என்றார் குணசிங்.

''குழந்தை ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவு முறைகளைக் கையாளலாம்'' என்று விளக்கம் அளித்தார் சித்த மருத்துவர் கோ. சிவராமன்.
''பிறந்த குழந்தை 3 கிலோ எடை இருக்க வேண்டும். பிறந்து 5 மாதங்கள் கழித்து அதன் எடை இரட்டிப்பாக வேண்டும். ஒரு வருடத்தில் மூன்று மடங்காகக் கூடி இருக்கும். இதைச் சராசரியான வளர்ச்சி என்று சொல்லலாம்.
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிக முக்கியமானது. பிறந்த
குழந்தைக்கு ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து மூன்றில் இருந்து ஐந்து வேளையாவது ஆகாரம் (சத்தான உணவு) கொடுக்க வேண்டும். 150 மி.லி. அளவில் இருந்து 250 மி.லி. அளவு உணவைக் கொடுக்க வேண்டும்.

ஒரு வயது வரை உணவை மசித்தும் ஒரு வயதுக்கு மேல், கையால் பிசைந்தும் கொடுக்கலாம். காய்கறி வகைகள், கிழங்கு வகைகள், கீரை வகைகள், சிறிதளவு எண்ணெய் உணவு வகைகள் சேர்க்கலாம். குழந்தை ஓடியாடி விளையாடும் வயதுக்கு வந்த பின் சரிவிகித சமச்சீர் உணவைக் கட்டாயமாக்கிவிட வேண்டும். அடிப்படை வளர்ச்சி சரிவிகித உணவில்தான் இருக்கிறது. தினமும் உணவில் கார்போஹைட்ரேட் - 65%, புரதம் - 25 முதல் 30%, நார்ச்சத்து 2 முதல் 3% மற்றும் இதர சத்துக்களான கனிமம், வைட்டமின்கள், தாது உப்புக்களும் சேர்த்துக்கொள்வது சரிவிகித வளர்ச்சியைத் தரும்.

வளர்ச்சியைத் தூண்டுவதில் புரதத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், புரதச்சத்து வேண்டும் என்று பாலை மட்டுமே லிட்டர் கணக்கில் குடிப்பதும் நல்லதல்ல. அரிசி, கோதுமை உணவுடன் பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை என்று சிறுதானியங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும் என்று கவலை இருந்தால், சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.

சாமை, தினை, வரகு, கேழ்வரகு போன்ற தானியங்களில் அபரிமிதமான புரதம், நார்ச்சத்து இருக்கின்றன. உடலில் தேவை இல்லாத கொழுப்பு சேராமல் உடலை வலுவாக்க இவை உதவும். எட்டு மாதத்தில் இருந்து தானியங்களை முளை கட்டி வறுத்துப் பொடித்துக் கஞ்சியாக்கிக் கொடுக்கலாம். கஞ்சியாக மட்டுமல்லாமல், சோறாக வடித்தோ, இட்லி, தோசையாக்கியோ கொடுக்கலாம். அசைவ உணவே போதும் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால், இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் என ஒட்டுமொத்த சிறு கனிமங்களும் காய்கனிகளில்தான் இருக்கின்றன. இவைதான் வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகின்றன. நிறையக் காய்கறிகளைக் கொடுப்பதோடு, தினமும் ஏதேனும் ஒரு பழத்தைக் கட்டாயமாகக் கொடுப்பது நல்லது.

உணவைக் கொடுப்பதோடு மட்டும் இல்லை; அது சரியாக எரிக்கப்பட்டு சத்தாக மாற்றப்படுவதிலும் பெற்றோருக்குப் பங்கு உண்டு. இந்த விஷயத்தில் விளையாட்டு உங்களுக்குக் கை கொடுக்கும். குழந்தை களுக்கு ஓடியாடி விளையாடக்கூடிய பயிற்சி ரொம்பவே முக்கியம். ஆசனப் பயிற்சிகள் செய்யவும் ஊக்கப்படுத்தலாம். அதேபோல், வளரும் குழந்தை களின் மீது தினமும் ஒரு மணி நேரமேனும் சூரிய ஒளி படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். காலை சூரியக் கதிர்களிலிருந்து வரும் வைட்டமின் டி3 சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உத்தரவாதம் தரும். வளர்ச்சியைத் தூண்டும். எல்லாவற்றையும்விட அவசியம் குழந்தையோடு தினமும் அரை மணி நேரமாவது தனிமையில் உரையாடுங்கள். சந்தோஷம்தான் வளர்ச்சிக்கான அடித்தளம்!''

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.