உங்கள் குழந்தையின் கோடை விடுமுறை உங்களு&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் குழந்தையின் கோடை விடுமுறை உங்களுக்கானதல்ல!


அந்த கவிதை நம்மில் பலருக்கு தெரியும். குழந்தைகளை பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அந்த கவிதையும் இலவச இணைப்பாக வரும். இப்போதெல்லாம் தனியார் பள்ளி மேடைகளிலும் அந்த கவிதை அதிகம் பாடப்படுவதுதான் நகைமுரண். ஆம். கலீல் ஜிப்ரான் எழுதிய ‘உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல... அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன், மகள்கள்...’ என்று துவங்கும் கவிதை அது. இங்கு அந்த கவிதை தெரிந்த பல பெற்றோர்களுக்கு அதன் பொருள் தெரிந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால், நிச்சயம் குழந்தைகளை இந்த அளவிற்கு பாடாய்படுத்த மாட்டார்கள்.


குழந்தைகள் மீது நீங்கள் முதலீடு செய்கிறீர்களா...?:


ஆம். பாடாய்தான் படுத்துகிறோம். இதில் மறைத்து பேச எதுவும் இல்லை. அண்மையில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அது பள்ளிகள் குறித்தும், அதன் கட்டணக் கொள்ளை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பள்ளி கட்டணத்தை, குழந்தைகள் மீது செலுத்தப்படும் முதலீடு என்றார். எவ்வளவு வக்கிரமான சொற்கள் இவை. குழந்தைகளை நம் தலைமுறை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டும் சொற்கள் அல்லவா இவை. குழந்தைகளுக்கு, நல்ல கல்வி அளிக்கவேண்டியது நம் கடமைதான். இதில் மாற்று கருத்து என்று ஒன்று இருக்க முடியாதுதான். ஆனால், அதே நேரம் நம் குழந்தைகளை பந்தய குதிரைகளாக பார்க்க முடியாது அல்லவா... குதிரைகள் மீது பணம் செலுத்தி, விளையாடுவதையே நம்மில் பலர் எதிர்க்கிறோம் எனும் போது, குழந்தைகளை எப்படி அப்படி பார்க்க முடியும்...?


அதுவும் பள்ளி கோடை விடுமுறை நாட்களில், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு, அவர்களை நாம் படுத்தும்பாடு இருக்கிறதே... நிச்சயம் நம்மால், அவர்கள் படும் வலி உணர்வை வார்த்தைகளில் வடிக்க முடியாது. காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை என அட்டவணைப் போட்டு , நாம் அவர்களை கஷ்டப்படுத்துகிறோம். காலை நீச்சல், அடுத்து கணிணி பயிற்சி, அபாகஸ், கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன், பிறகு இந்தி வகுப்பு என்று பட்டியல் நீள்கிறது. புத்துணர்ச்சிக்காக விளையாடப்பட வேண்டிய விளையாட்டுகளும், இந்த அட்டவணைக்குள் வருவதால், குழந்தைகளுக்கு, விளையாட்டின் மீதே ஒரு வெறுப்பு வந்துள்ளதை நாம் உணர்கிறோமா...?

சிறப்பு பயிற்சி வகுப்புகளும், முதியோர் இல்லமும் :நாம் செலுத்தும் இந்த வன்முறைகளால், குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது மட்டுமல்ல, பெற்றோர்கள் மீதே வெறுப்பு உண்டாகி உள்ளது. அவர்கள் தங்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அவர்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும், இதே தமிழகத்தில்தான், முதியோர் இல்லங்களும் பெருகி வருகின்றன. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று உங்களுக்கு புரிகிறதா...?

எல்லாம் புரிகிறது. ஆனால் என்ன செய்வது, காலம் வெகு வேகமாக ஓடுகிறது. அதன் வேகத்திற்கு ஓடவில்லை என்றால், நம் குழந்தைகள் பின் தங்கி விடமாட்டார்களா...? எல்லாம் தெரிந்தே, சில சிரமத்தை கொடுக்க வேண்டி உள்ளது. நாங்கள் அவர்களுக்கு வில்லனாக தெரிந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு அவர்கள் நலன்தான் முக்கியம் - இது பல பெற்றோர்களின் எண்ணம். ஆனால், பெற்றோர்களின் இந்த பயம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த இந்த கவலைதான், இங்கு பணம் பண்ண காத்திருக்கும் பள்ளிகள், கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கான முதலீடு. இந்த பயத்தை பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி பணம் ஈட்டுகிறது.

ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பணம் பண்ணும் கல்வி நிறுவனங்களால், ஒரு வேளை உங்கள் குழந்தைகளுக்கு சந்தைக்கு தேவையான கல்வியை புகட்டிவிட முடியும். ஆனால், அவர்களால் என்றுமே குழந்தைகளின் நம்பிக்கையை, இயல்பான ஆளுமையை வளர்க்க முடியாது.

கொஞ்சம் தெளிவாக சொல்லட்டுமா...? இப்போது மென்பொறியாளருக்கு அதிக தேவை இருக்கிறது. அதற்காக உங்கள் குழந்தைகளை, நீங்கள் இப்போதே தயார் செய்கிறீர்கள். உங்கள் குழந்தையும் வளர்ந்து நல்ல வேலைக்கு செல்கிறது. மாதம் லட்சங்களில் சம்பளம். சொகுசான வாழ்க்கை. பணம் ஆளுமையை தருகிறது. எல்லாம் சரியாக போகின்ற ஒரு நன் நாளில், திடீரென்று மென்பொருள் சந்தை சரிகிறது. வேலை போகிறது. வேலையை நம்பி வாங்கிய கடன் கழுத்தை அழுத்துகிறது. பணத்தால் வளர்ந்த ஆளுமை பண்பு சிதைகிறது. ஒரு நாள் ஆசை ஆசையாக வளர்த்த பிள்ளை தற்கொலை செய்து கொள்கிறார். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா...? இது எதுவும் மிகை இல்லை. 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இதுதான் நடந்தது. மீண்டும், எப்போதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

சரி தீர்வுதான் என்ன...? குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டாம். அவர்கள் இஷ்டத்திற்கு வளரட்டும் என்கிறீர்களா...? இல்லை. நிச்சயம் இல்லை. நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. நல்ல கல்வி கொடுக்க வேண்டியது நம் கடமை. ஆனால், அதற்காக எதையும் அளவிற்கு மீறி திணிக்க வேண்டாம். ஜிப்ரானின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்,

“அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -

உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு”


கோடை காலத்தை, வசந்த காலமாக்குவோம்:'இது கவிதைகளுக்கு ஒத்து வரும். வாழ்க்கைக்கு ஒத்து வருமா...? அதுவும் அந்த கவிதை எழுதப்பட்ட காலம் வேறு. இப்போதுள்ள காலம் வேறு' என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி. நடைமுறைக்கு உகந்த ஒரு தீர்வை நாம் தேடுவோம். குறைந்த பட்சம், இந்த் கோடை விடுமுறை காலத்தையாவது, அவர்களுக்கான வசந்த காலம் ஆக்குவோம். இந்த இரண்டு மாதம், அவர்களுக்கு எதையும் திணிக்காமல், அவர்களுக்கு இயல்பாக என்ன பிடிக்கிறதோ, அதை செய்ய, அதை வளர்த்துக் கொள்ள உதவி செய்வோம். சுற்றுலா அழைத்து செல்வோம். புது புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்போம். ஆனால், இது எதையும் திணிக்காமல் செய்வோம். ஒரு வேளை உங்கள் குழந்தைகளுக்குள் பிக்காசோவோ, இல்லை ஜிப்ரானோ கூட ஒளிந்து இருக்கலாம்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.