உங்கள் குழந்தை பாதுகாப்பாக பள்ளிக்கூடம&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் குழந்தை பாதுகாப்பாக பள்ளிக்கூடம் செல்கிறதா?


இந்த உலகத்திலேயே பாதுகாப்பில்லாத ஜீவன் ஒன்று இருக்குமென்றால் அது குழந்தைகள்தான். பெற்றோருக்குள் ஈகோவா? உறவினர்களுக்குள் பிரச்னையா? அண்டை வீட்டாரோடு வரப்புத் தகராறா? நாடுகளுக்குள் போரா?, இயற்கை பேரிடரா..? எல்லாவற்றிலும் பலியாவதென்னவோ குழந்தைகள்தான். எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. குழந்தைகளின் உரிமைகள், எண்ணங்கள், ஆசைகள், கவலைகள், கனவுகள் பற்றி யாருமே கவலைப்படுவதுமில்லை.

ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாவதற்குள் ஏராளமான வன்முறைகளை எதிர்கொள்கிறது. அதில் கல்விக்கால வன்முறைகளே அதிகம். தரமான கல்வி என்ற பெயரில் குழந்தையின் இயல்பையும், தன்மைகளையும் குலைத்து, அதிகாலை எழுப்பி ஷூ, சாக்ஸ்க்குள் திணித்து, ஏதோவொரு வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள். வாகனத்தில் பயணிப்பது தொடங்கி, வகுப்பறைக்குள் வதங்கி, மீண்டும் வீடு திரும்புவது வரை குழந்தைகள் ஏராளமான வன்முறைகளை அனுபவிக்கிறார்கள். அந்த வலிகளை சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன குழந்தைகள். இந்த துயரத்தை எத்தனை பெற்றோர் அறிந்திருக்கிறார்கள்..?

“குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், சிரமமின்றி கற்கவும் உலகெங்கும் ‘அருகாமைப் பள்ளி’ மூலமாகவே தொடக்கக்கல்வி கற்பிக்கப்படுகிறது. ‘எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் படிப்புக்காக நெடுந்தூரம் பயணிக்கக்கூடாது. நடக்கும் தூரத்தில் இருக்கும் பள்ளிகளிலேயே கற்பிக்க வேண்டும்’ என்பதுதான் உலகளாவிய நடைமுறை. ஆனால், 20 கி.மீ. தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குக் கூட குற்ற உணர்வே இல்லாமல் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். இது குழந்தைத் தன்மையையே பெரிதும் பாதிக்கும்...” என்கிறார்கள் கல்வியாளர்கள்.

‘‘நமக்குக் கிடைக்காத வாய்ப்பு நம் பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணம் பெற்றோருக்கு. அதனால் பெரிய அளவில் விளம்பரம் செய்யும் ‘பெரிய’ பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். குழந்தைகள் சீருடை அணிந்து, டை கட்டி, ஷூ போட்டுவிட்டால் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது. உடல் அளவிலும், மனத்தளவிலும் குழந்தைகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவில் பிறந்த மூன்றில் ஒரு குழந்தை சீண்டல்களை எதிர்கொண்டுதான் வளர்கிறது.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் காலை எட்டரை மணிக்கெல்லாம் தொடங்கி விடுகின்றன. எழரை மணிக்கெல்லாம் வாகனங்கள் வந்துவிடும். 6 மணிக்கு முன் எழுந்தால்தான் பிள்ளைகள் இந்தப் பள்ளிகளுக்குச் செல்ல முடியும். போக்குவரத்து நெரிசல், பதற்றம் என காலை வேளையே குழந்தைகளுக்கு அவஸ்தையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எழும்பும்போதே டென்ஷன் தான். காலையில் தொடங்கும் டென்ஷன் இரவு வரை நீள்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ குழந்தையையும் டென்ஷனாகவே வைத்திருக்கிறோம். பெரும்பாலான குழந்தைகள், காலைக்கடன்களைக் கூட சரிவர முடிப்பதில்லை. சரியாக காலை உணவும் சாப்பிடுவதில்லை. இதுபல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் ஒரு பக்கம்... உடல் கோளாறுகள் ஒரு பக்கம்... பச்சைக் குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்துகிறோம்..!

சில குழந்தைகள் பள்ளி வாகனத்தில் போகின்றன. பெரும்பாலான குழந்தைகள் அரசு பஸ்சில் செல்கிறார்கள். ஆட்டோ, சைக்கிளில் செல்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் மீன்பாடி வண்டிகளில் கூட குழந்தைகளை ஏற்றிச் செல்கிறார்கள். எல்லாவற்றிலுமே பிரச்னை இருக்கிறது. அரசுப் பேருந்துகள் பள்ளி மாணவர்களை மதிப்பதேயில்லை. மோசமாக நடத்துகிறார்கள். மாணவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஓட்டுனரும், நடத்துனரும் அவர்கள் சொந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் போல முகம் சுழிக்கிறார்கள்.

ஆட்டோக்களில் பிள்ளைகள் பிதுங்கி வழிகிறார்கள். சைக்கிளில் செல்லும் மாணவர்களுக்கு நம் சாலையில் இடமே இல்லை. ஒரு கணக்கெடுப்புப்படி, தமிழகத்தில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். விபத்துகள் நடக்கும்போது பதறுவதும் பிறகு மறந்துவிடுவதும் அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது...” என்கிறார் குழந்தைகள் உரிமை ஆர்வலர் தேவநேயன்.

“பஸ்சில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பல சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். பஸ் நிறுத்தங்களில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாவதும் நடக்கிறது. பஸ்சில் இட நெருக்கடி காரணமாக படியில் தொங்க நேர்கிறது. அது விபத்தில் முடிகிறது. பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் நடக்கிறது. தனியார் பள்ளிகள் இப்போது புதிய யுத்தி ஒன்றைக் கடைப்பிடிக்கின்றன. போக்குவரத்துப் பணியை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிடுகிறார்கள். விபத்துகள் நடக்கும்போதோ பிரச்னைகள் வரும்போதோ, “எங்களுக்கு எதுவுமே தெரியாது, ஒப்பந்தக்காரர் தான் பொறுப்பு” என்று கைநீட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள். இது ஒருவிதமான ஏமாற்று வேலை.

மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக்கானது. அதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகள் அருகாமைப் பள்ளியில் படிப்பதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித் தருவது ஒன்றுதான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு. பெற்றோரின் மனநிலையும் மாறவேண்டும். அரசுப்பள்ளிகளை நம்பவேண்டும். அரசுப்பள்ளிகளில் தரம் குறைவு என்று கருதினால் அதை மேம்படுத்துவதில் பெற்றோரும் பங்களிப்பு செய்ய வேண்டும்...’’ என்கிறார் குழந்தைகள் உரிமை ஆர்வலர் பாலமுருகன்.

காலை நேர அவசரத்தில் 95% குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் தகுந்த உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சியே பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்க வேண்டும். வழக்கமாகத் தரும் இட்லி ேதாசையில் கீரை வகைகளை மிக்ஸ் செய்து கொடுக்கலாம். முளை கட்டிய தானியங்களை அரைத்து இட்லி மாவுடன் மிக்ஸ் செய்யலாம்.

பிரட் சாண்ட்விச், வேகவைத்த கேரட்டுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து ஜூசாக கொடுக்கலாம். குறைவாக சாப்பிட்டாலும் போதிய சத்துக்கள் கலந்திருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்க்கும் குழந்தைகள் பாக்கெட் ஃபுட், எண்ணெயில் பொரித்த ஸ்னாக்ஸ் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாவதுடன் உடல் பருமன் பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக, குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் மற்றவர்களை விட பெற்றோருக்கே பொறுப்பு அதிகம். கல்வி முக்கியம். அதைவிடவும் முக்கியம், குழந்தைகள்!


பள்ளி வாகனத்தில் இதெல்லாம் இருக்கிறதா?

* பள்ளி வாகனமா, தனியார் வாகனமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தனியார் வாகனம் என்றால், குழந்தைக்கு பள்ளி பொறுப்பேற்காது. எச்சரிக்கையாக இருங்கள்.

* பள்ளி வாகனங்களில் மஞ்சள் வண்ணம் பூசப்பட வேண்டும். பள்ளியின் பெயர், முகவரி, பள்ளி போக்குவரத்து பொறுப்பாளர் மொபைல் எண், ஆர்.டி.ஓ அலுவலக தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனத்தில் முன்பக்கத்தில் மட்டுமே வழி இருக்க வேண்டும். தானாக பூட்டிக் கொள்ளும் வகையிலும், எளிதாக திறக்கும் வகையிலும் கதவுகள் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு இருக்கைக்கு அடியிலும், மாணவர்களின் புத்தகப்பை வைப்பதற்கான தனிஇடம் இருக்க வேண்டும்.

* ஜன்னல்களில் தடுப்பு அவசியம். அவசரகால வழி அமைக்கப்படுவதும் கட்டாயம்.
* வாகனங்களில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும்.

* ஓட்டுநர்கள் 5 ஆண்டு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். பணியின்போது, காக்கி நிற யூனிபார்ம் அணிய வேண்டும். அவர்மீது எந்தப் புகாரும் இருக்கக்கூடாது.

* வாகனத்தில் நடத்துநருக்கான உரிமம் பெற்ற, 21 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். அவர் அனைத்து நிறுத்தங்களிலும் முதல் ஆளாக இறங்கி, மாணவ-மாணவிகள் இறங்குவதற்கு உதவி செய்ய வேண்டும். மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளி என்றால், உதவியாளர் பெண்ணாக இருக்கவேண்டும்.

* இதையெல்லாம் உறுதி செய்யும் உரிமை பெற்றோருக்கு உண்டு. விதிமுறை மீறல் இருந்தால் கல்வி அலுவலர்களிடமோ, காவல்நிலையத்திலோ புகார் செய்யலாம்.

அபாய ஆட்டோக்கள்

ஆட்டோக்களில் அதிகபட்சம் 6 குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் அதை மதிப்பதில்லை. புளிமூட்டை போல திணித்து 15 குழந்தைகள் வரை அள்ளிச் செல்கிறார்கள். இவ்வளவு குழந்தைகளை ஏற்றியிருப்பதால், ஆட்டோவை நிதானமாக ஓட்டுவதுமில்லை. இதை போக்குவரத்துக் காவலர்களும், பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும் இதுபற்றி கவலைப்படுவதில்லை.

தனிப்பேருந்து வேண்டும்!

அரசுப் பேருந்து டிரைவர், கண்டக்டர்களுக்கு மாணவர்கள் என்றாலே கசப்புதான். பஸ்சை தள்ளி நிறுத்தி ஓடிவரச் செய்து ரசிப்பது, திட்டுவது, பிடித்துத் தள்ளுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே பிதுங்கி வழியும் கூட்டத்தோடு வரும் பேருந்துகளில் அடித்துப் பிடித்து ஏறும் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி செல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, கண்ணகி நகரில் இருந்து வந்த மாணவர்கள் சிலர் படியில் இருந்து விழுந்து இறந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு தாம்பரத்தில் பஸ் படிக்கட்டு பெயர்ந்து விழுந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தார்கள். காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு தனி பேருந்துகள் இயக்குவது ஒன்றே இப்பிரச்னைகளுக்குத் தீர்வு.

"அரசுப் பேருந்துகள் பள்ளி மாணவர்களை மதிப்பதேயில்லை. மோசமாக நடத்துகிறார்கள். மாணவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஓட்டுநரும், நடத்துநரும் அவர்கள் சொந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் போல முகம் சுளிக்கிறார்கள்."
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.