உடலை இரும்பாக்கும் கரும்பு!

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,797
Likes
1,205
Location
Switzerland
#1
பொங்கல் பண்டிகை என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது கரும்பல்லவா. பொங்கல் பண்டிகையும் கரும்பும் பிரிக்க முடியாதவை. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தை மாதம் பிறந்துவிட்டாலே காத்தாடியும் கரும்புமாகத்தான் குழந்தைகள் திரிவார்கள். இன்றைக்கு அது தலைகீழாக மாறி, கையில் பதப்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனிகளுடன் தொலைக்காட்சி முன்பு சரணாகதி அடைந்துவிட்டனர்.

முன்பெல்லாம் பொங்கலன்று மட்டுமாவது கரும்பு சாப்பிடும் வழக்கம் இருந்துவந்தது. தற்போது சம்பிரதாயத்துக்கு இரண்டு கரும்புத் துண்டுகளை வைத்து வணங்க மட்டுமே செய்கின்றனர். கரும்புச் சாறு உடல்நிலை சரியில்லாதவர் சாப்பிட வேண்டியது என்கிற நிலையே தற்போது நிலவிவருகிறது.

பல்லுக்கு உறுதி

செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான தேர்வாக இருக்கும். செங்கரும்பு, சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது என்பதால் பொங்கல் நேரத்தில் உட்கொள்ளலாம்.

கரும்பில் வைட்டமின் சத்தும் கனிமச் சத்தும் பெருமளவில் இல்லை என்றாலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கரும்பில் அதிக அளவில் உள்ளன. ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்டு சத்துமே அவை. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில், கரும்பு போன்ற ‘ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்’ நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தவறக்கூடாது.

ஆலும் வேலும் மட்டுமல்ல… கரும்பும் பல்லுக்கு உறுதிதான். அதனால் கரும்பை, சிறுவர்கள் மென்றே சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதிபெறும். பல்லால் கடித்து மென்று சாப்பிட முடியாதவர்கள் சாறாக அருந்தலாம்.

சர்க்கரைக்குச் சத்தான கரும்பு

வெண்கரும்பு இனிப்பாக இருந்தாலும், இதிலிருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை, உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்போது செயல் புரியும் நொதிகள் காரணமாக, ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை அளவாக அருந்தலாம். நல்ல பலனைத் தரும்.

இதிலிருக்கும் ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்ட் சத்தும் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. உடல் செல்களுக்குத் தீமையை ஏற்படுத்தும், புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ராடிக்கல்ஸ்’ உருவாக்கத்தை இது பெரிதும் தடுக்கிறது.

கொழுப்பைக் குறைக்கும் கரும்பு

மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. ‘கரும்பு கசத்தால் வாய்க்குற்றம்’ எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள். பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

மேலும், கரும்பில் உள்ள ‘பாலிகோ சனால்’ எனும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட்டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.

சித்த மருத்துவத்தின்படி, உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலைப்படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் குணம் உடையது கரும்பு.

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் எனப் பொருள்படும். அதன் பொருளுக்கேற்றாற் போலவே உடல்நலத்திலும் இன்பத்தை விளைவிக்கும் பண்புகளை உடைய கரும்பைத் தின்னக் கூலி வேண்டுமா? கரும்பு சாப்பிடுவோம். கரும்புச் சாறு அருந்துவோம். வாழ்க்கை தித்திக்கட்டும்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.