உணவும் வாழ்நாளும் - Food and life span

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]உணவும் வாழ்நாளும்[/h]உண்பதற்காக உயிர் வாழ்கிறீர்களா? உயிர் வாழ்வதற்காக உண்ணுகிறீர்களா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? உயிர் வாழ்வதற்காகவே உண்ணுகிறேன் என்பது உங்களது பதிலாக இருந்தால் சரி. இல்லையென்றால் உங்கள் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நடுவயதில் இருக்கும் பலர் தாங்கள் இருபது வயதில் உண்ட உணவின் அளவை ஒத்தோ அல்லது அதற்கு அதிகமாகவோ உண்ணுகின்ற பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதில் இன்னுமொரு வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் தங்கள் தேவைக்கதிகமாக உண்ணுகிறோம் என்பதுவும் அவர்களுக்கு தெரிவதில்லை. வகை வகையான தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், இனிப்பு உணவுகள், வறுவல்கள், பொரித்தவைகள் என்று எத்தனை எத்தனை உணவுப் பொருள்கள், சிற்றுண்டிகள், விரைவு உணவு என்ற பெயரில் இன்று சந்தைப்படுத்தப்படுகின்றன.

எந்த நிகழ்ச்சியானாலும், விழாவானாலும், விளையாட்டானாலும் எந்த நேரமும் மக்கள், இளையோர், முதியோர் வேறுபாடின்றி எதையாவது தின்று கொண்டும் குடித்துக் கொண்டும் இருக்கக் காண்கிறோம். ஆண், பெண் அனைவரும் வயது வரம்பின்றி அதிகம் உண்பவர்களாகவும், பெருந்தீனிக்கரசர்களாகவும் மாறி வரும் ஒரு அபாயகரமாக நிலையை இன்று காண்கிறோம்.


Over eating எனப்படும் அதிக உணவினால் பல நோய்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதிக எடை, உடற்பருமன், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், நீரிழிவு, மூட்டுப்பிடிப்பு போன்ற பல நோய்கள் தோன்றக் கூடும். உணவின்மையால் ஏற்படுகின்ற நோய்களை விட உணவு மிகுதியினால் ஏற்படும் நோய்கள் அபாயமானவை என்று அறிவியலார் எச்சரிக்கிறார்கள்.

வயது ஏறுகின்ற போது உடல் குறைவான கலோரிகளே செலவிடுவதும், வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) (திசுக்கள் அழிக்கப்பட்டும் புதிதாக உண்டாக்கப்பட்டும் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகின்ற வேதியியல் முறை) குறைவதும் இயல்பாக நிகழ்கின்ற ஒன்று. அதற்கொப்ப நமக்கு வயது உயர உயர நம்முடைய கலோரித் தேவைகள் குறைகின்றன. 25 வயது தொடங்கியே இது நிகழ ஆரம்பிக்கிறது. 20 ஆண்டுகள் தொடங்கி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நம்முடைய தினசரி உணவில் 100 கலோரிகள் குறைய வேண்டும்.

அவ்வாறு நாம் செய்வோமானால் நம் உடல் எடையை நம்மால் ஒரே சீராக வைத்திருக்க முடியும். குறைந்து வரும் வளர்சிதை விகிதமும், குறைவான தசைக்கட்டும் குறைவான உடலுழைப்பும் தேவைக்கு அதிகமான உணவும் சேர்ந்து உடலில் கொழுப்புக் கோளங்களை உருவாக்குகின்றன. உடலெங்கும் பரவி இருக்கும் இந்தத் தசைக் கோளங்களுக்கு உணவு தருவதற்காக நம் உள்ளுறுப்புக்கள் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.


உடல் எடை மிகுந்தவர்களது வாழ்நாளில் ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் அவர்களது அதிக எடை காரணமாகக் குறைந்து போகிறது என்று அண்மையில் ஜெர்மன் நாட்டில் நடத்தப் பெற்ற ஆய்வு ஒன்று கூறுகிறது. அதிக உடல் எடை என்பது இன்றைய நாகரிக வாழ்வு நமக்களித்துள்ள பரிசு. சிறிதளவு உடல் பருமன் கூடுதலாக இருந்தாலும் அதனால் சில அபாயங்கள் நேரக்கூடுமென்று ஆயுட்காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு கிலோ அதிகப்படி (Excess) எடைக்கும் 2 சதவிகித அளவு வாழ்நாள் குறைகிறது என்பது இவர்களது கணக்கு.

அதே போல மீதூண் உண்பதனால் செரிமான உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. வயிற்றப் பொருமல், ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அளவில் மிகுந்து உண்கின்ற போது உடற்பருமன் எளிதாக அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவும் மூட்டுவலியும் எங்கே எங்கே என்று தேடி வரத் தொடங்குகின்றன.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

அளவறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல் அளவின்றி உண்பவனிடத்தில் நோய் நிலைத்து நிற்கும் என்பது இதன் பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால் உயிரை வாழ்விப்பதும் அளவில் மிகுந்தால் நோய்தந்து ஊறு செய்வதும் உணவே. "மெல்லிது கலந்து அளவுப் பருகி" என்ற சங்க காலப்பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உடல்வாகு, உடல் எடை, செய்யும் தொழில் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து தங்களுக்குத் தேவையான தினசரி கலோரி அளவை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் தள்ளுவன தள்ளி, தவிர்க்க வேண்டியன தவிர்த்து உண்ணுதல் வேண்டும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் வாழ்நாளை உயர்த்துவதன் நிமித்தம் உணவு மறுத்தலைக் கைக் கொண்டிருந்தனர் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றனர்.

"உங்களது இளமை நிலைக்க வேண்டுமானால் சிறுக உண்ணுங்கள். சிறுகக் குடியுங்கள்" என்று 400 ஆண்டுகளுக்கு முன் கூறினார் கர்னரோ என்ற ஆங்கில மேதை. அது இன்றைக்கும் உண்மையாக இருக்கிறது. மட்டுக்கு மீறி உண்பது மனிதரைக் காலத்திற்கும் முன்னரே மூப்படையச் செய்வதுடன் விரைந்து மாளவும் செய்கிறது என்பது தான் அண்மைய அறிவியல் ஆய்வுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்வது.

"இப்போது உண்பதில் பாதியளவே உண்டு வந்திருப்போமானால், நாம் இப்போது இருப்பதை விட இளமையாக இருந்திருப்போம்" என்று கூறுகிறார் அமெரிக்க முதியவர்கள் சங்கத் தலைவர் பென்னி ஜெரால்டு.

நீண்ட நெடுங்காலம் நோயின்றி வாழ விரும்புகின்றவர்கள் எல்லோரும் கீழ்க்கண்ட ஐந்து கட்டுப்பாடுகளையும் மனதிலிறுத்தி இயற்கையோடிசைந்து வாழ்ந்தால் இனிதான நெடிய வாழ்வு வாழ வகையுண்டு.

பசியாத போது உண்ணாதீர்கள்

மனிதனைத் தவிர வேறு எந்தவொரு விலங்கும் பசிக்காத போது உண்பதில்லை. விலங்குகள் பெரும்பாலும் நோயின்றி வாழ இதுவே அடிப்படைக் காரணம். "மருந்தென வேண்டவா யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்று வள்ளுவன் கூறியதை நினைவில் கொள்வோம்.

தேவைக்கதிகமாக தீனி வேண்டாம்

அளவிற்கதிகமாக உண்ணுதல் என்பது மனிதர்களிடையே ஒரு நோயாகவே வளர்ந்துள்ளது. அதிக உணவே பல நோய்களுக்குக் காரணமாவதால் அளவறிந்து உண்க.

நோய்க்கு உணவிடாதீர்

நோயுற்றிருக்கும் போது பெரும்பாலும் பசி உணர்வு தோன்றுவதில்லை. வயிற்றில் செரிமான நீர் சுரக்காததே இதற்குக் காரணம். இது போன்ற வேளைகளில் உணவு உட்கொள்வதைத் தவிருங்கள்.

கிழமையில் ஒரு நாள் பழ உணவு

வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மட்டுமே உண்பது என்பதைப் பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள். இதனால் உப்பு, புளி, காரம் போன்றவற்றை நீக்கி உடல் தூய்மை பெறலாம்.

கிழமையில் ஒரு நாள் ஒரு பொழுது உண்க

வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒரு பொழுது மட்டும் உண்டு பழகுங்கள். காலையிலும் பகலிலும் உணவு கொள்ளாது மாலையில் ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுங்கள். சிறந்த உடல் நலமும் மனநலமும் வாய்க்கப் பெறுவீர்கள்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.