உணவே மருந்து - Food as Medicine

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உணவே மருந்துநொறுங்க தின்றால் நூறு வயது... என்று பழமொழி உருவாக்கிய நம் முன்னோர்களின் வழித் தோன்றலகளாகிய நாம் இன்று நாற்பதை தொடும் போதே “சுகரு ஏறிப்போச்சு... ரெண்டு சப்பாத்திக்கு மேல சாப்பிட கூடாதாம்...” என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்....

“உப்பில்லா பண்டம் குப்பையிலே..”என்று சொன்னவர்களின் வாரிசுகள் “பிரஷரு ஏறிப்போச்சு... உப்பு அதிகம் சேர்க்க கூடாது” என்று சொல்வதை வாடிக்கையாக்கி விட்டோம்... இதற்கெல்லாம் காரணம் என்ன... என்பதை நாம் தேடியலைய வேண்டிய அவசியமே இல்லை... நாம் எதை எல்லாம் மறந்துவிட்டோம்.. எதை எல்லாம் தொலைத்துவிட்டோம் என்று தேடினாலே போதுமானது..

கேழ்வரகையும், கம்பையும், தினையையும், குதிரைவாலியையும் உண்டு, வயல் வெளிகளில் நாள் முழுதும் உழைத்து ஆரோக்கியமாய் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.. இன்று வயல்வெளிகளும் குறைத்து விட்டது... கேழ்வரகு-சாமை-திணை-கம்பு-குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும் அரிதாகி விட்டது...

சேற்றில் கால்வைத்தவன் வாழ்க்கை முன்னேறாமல் போனதன் எதிர் விளைவு , அந்த உழைப்பாளிகளின் வாரிசுகள் அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் வித்தை கற்க ஆர்வமாகி விட்டார்கள்.. எல்லோருமே வெளிநாட்டு வேலைக்கோ - பெரிய நிறுவன வேலைக்கோ போகத்தொடங்கி விட்டார்கள்..

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் விவசாய வேலைகளை விட, ஒயிட் காலர் வேலை மிக மிக லாபகரமானதாகவே இருக்கிறது... ஆனால்.. இந்த லாபத்திற்காக நாம் கொடுத்த விலையின் மதிப்போ.... அதில் கிடைத்த லாபத்தை விட கோடி மடங்கு உயர்வானது.... ஆம்.. அதற்காக நாம் கொடுத்த விலை... நம் ஆரோக்கியமும், உழைப்பும், நிம்மதியும், ஆயுளும்...

சிறுதானியங்களால் செய்யப்பட கூழ், கஞ்சி போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய சத்து நிறைந்த உணவுகள் , அவர்களுக்கு உழைக்க தேவையான சக்தியை கொடுத்தது... அந்த உணவுகளில் கிடைத்த சக்தி.. அவர்களின் உழைப்பால் கரைக்கப்பட்டது....சக்தி கிடைத்தாலும், சக்தி செலவழித்தாலும் ஒரு சீரான சுழற்சி முறையில் நடைபெற்றதால் நோய்கள் விலகி நின்றே வேடிக்கை பார்த்தது...

ஆனால் இப்போதைய தலைமுறையோ... சக்தி கூடிய (கலோரீஸ்) பீஸா-பார்க்கர், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உடம்பில் கூடுதல் சக்தியை ஏற்றிக்கொண்டு, அதனை எரித்து கரைக்கும் உழைப்பு இல்லாமல் காலை முதல் மாலை வரை அலுவலகத்தின் நாற்காலியிலும், பிறகு வாகனங்களிலும், வீட்டிற்கு வந்து இணையத்தின் முன்போ- தொலைகாட்சியின் முன்போ அமர்ந்தும் பொழுதை கழித்து விடுவதால்...

உடம்பில் ஏற்றப்பட்ட சக்தி செலவழிக்க வழியே இல்லாமல் உடம்பிலேயே சேமிப்பில் வைக்கப்படுகிறது... சேமிக்கப்படும் அதிக தேவையில்லாத சக்தியே கொழுப்பு... இந்த கொழுப்பு உடம்பில் சேர சேர அவைகள் இரத்தக்குழாய்களை அடைக்கின்றன... அப்புறம் நெஞ்சு வலி, மூச்சு திணறல், இதய இரத்த நாளங்களில் அடைப்பு, ஆஞ்சியோகிராம் - பைபாஸ் சர்ஜரி என்று ஐம்பது வயதை அடையும் முன்பாகவே முத்திரை குத்தப்பட்ட நோயாளிகளை வளம் வர தொடங்கி விடுகிறோம்...

உணவே மருந்து- என்று உலகிற்கே சொல்லிக்கொடுத்த சித்தர்கள் நம் முன்னோர்கள்.. நாமோ... உணவே மாத்திரைகள்- மருந்துகளே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.. எத்தனையோ நூற்றாண்டு-ஆயிரம் ஆண்டுகளாய் தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் தான் இத்தனை மாற்றங்களை அடைந்திருக்கிறது...

இது ஒரு குறுகியகால மாற்றம் என்பதால் இதை நிவர்த்தி செய்யவும் குறுகிய காலம் போதும் என்பதே எமது நம்பிக்கை... ஒரு குடும்பத்தின் உணவு முறை என்பது பெரியவர்கள் முடிவு செய்வது... எது ஆரோக்கியம்.. எது விஷம் என்ற விழிபுணர்ச்சியை குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் பெற்று விட்டால்... இனி வரும் தலைமுறையையாவது ஒரு ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்கலாம்....


உணவை மருந்தாக்குவது எவ்வாறு???
உடலின் மொழி அறிந்து வியாதிகளை எப்படி முறியடிக்கலாம்???
உடலை சீராக்கும் மூலிகைகளின் நிலை என்ன இப்போது???
இதை பற்றி இனி வரும் கட்டுரைகளில் அலசுவோம்.

-ஈஸ்வரி
அக்குபஞ்சர் மற்றும் உணவு மருத்துவம்
92/10, நூறடி சாலை,
வடபழனி, சென்னை.
9940175326
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.