உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders)


டாக்டர் சித்ரா அரவிந்த்

குழந்தைகள் மற்றும் டீனேஜரை தாக்கும் மற்றுமொரு முக்கிய மனநலப் பிரச்னைதான் இந்த உண்ணுதல் கோளாறு. தினசரி வாழ்க்கைக்கு தேவையான சக்தியைக் கொடுக்கும் அடிப்படையான உணவை உட்கொள்வதிலேயே பிரச்னை ஏற்படுவதால், இது இவர்கள் உடல் / மன ஆரோக்கியத்தை பெரும் அளவு பாதிக்கிறது. இதில் பல வகைகள் உள்ளன.

1. பிக்கா (Pica)
2. அசை போடும் கோளாறு (Rumination Disorder)
3. உணவு உட்கொள்வதைத் தவிர்க்கும் / குறைக்கும் குறைபாடு (Avoidant/Restrictive Food Intake Disorder-ARFID)
4. பசியற்ற உளநோய் (Anorexia Nervosa)
5. பெரும்பசி உளநோய் (Bulimia Nervosa)
6. மிதமிஞ்சி உண்ணும் கோளாறு (Binge Eating Disorder)
இப்போது சிறு குழந்தைகளை பாதிக்கும் முதல் மூன்று வகைக் கோளாறுகளை பார்ப்போம்.

1. பிக்கா (Pica)

உணவு அல்லாத பிற பொருட்களை தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு மாத காலமாக சாப்பிட்டு வந்தால், அது ‘பிக்கா’வாக இருக்கலாம். 2 வயதுக்கு உட்பட்ட குழந்தை, அடிக்கடி பல்வேறுப் பொருட்களை வாயில் வைப்பது சகஜம். அதையே குழந்தை வளர்ந்த பின்பும் செய்தால் அது இயல்பற்றதாகிறது. ‘பிக்கா’வினால் ஏற்படும் இவ்வகை வினோத உணவுப் பழக்கத்துக்கும், ஒருவரின் குடும்ப கலாசாரம் மற்றும் சமூக பழக்கவழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பாதிக்கப்பட்டவரின் வயதிற்கேற்ப அவர்கள் உண்ணும் விஷயங்கள் வேறு
படும். சிறு குழந்தைகள் தாள், களிமண், அழுக்கு, முடி, கயிறு, துணி போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். பெரிய குழந்தைகள் விலங்கினத்தின் கழிவு, மண், பூச்சி, இலை போன்றவற்றை உண்ணுவார்கள். டீனேஜ் வயதினர் களிமண் / மண்ணில் உள்ளவற்றை எல்லாம் சாப்பிடுவார்கள்.

இவர்கள் சாப்பிடும் பொருட்கள் விஷத்தன்மையற்றதாக இருப்பினும், அவர்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இவ்வகை பொருட்கள் அவர்கள் வயிற்றைக் கெடுப்பதுடன், நோய் தொற்றையும் ஏற்படுத்தக் கூடும். சில நேரங்களில், குடலில் அடைப்பு ஏற்பட்டு, மரணம் நேரும் அபாயமும் உண்டு. பிக்கா மட்டுமே தாக்கப்பட்டவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், பொதுவாக பிக்கா, வேறு பல மனநலக் கோளாறுகளுடன் (ஆட்டிஸம், அறிவுத்திறன் குறைபாடுகள்) சேர்ந்தே காணப்படும். ஆட்டிஸ வகைக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கோ, கர்ப்பத்தின் போதோ பிக்கா காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.

ஏனெனில், இவ்வகை உண்ணும் பழக்கம், அவர்களின் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.குழந்தைகள், வேண்டுமென்றே இதில் ஈடுபட மாட்டார்கள். காரணி மற்றும் சிகிச்சைதாதுச் சத்துக் குறைபாடுகள் (இரும்பு (Iron) மற்றும் துத்தநாகம் (Zinc), வளர்ச்சி குறைபாடுகள் (Developmental delays), குடும்பத்தினர் யாருக்கேனும் பிக்கா இருப்பது போன்ற பல்வேறு காரணங்களினால், பிக்கா கோளாறு உருவாகும் வாய்ப்பு உண்டு. போதிய தூண்டுதல் இல்லாமை (Lack of stimulation), பெற்றோரின் போதிய கவனமின்மை போன்ற உளவியல் சார் காரணங்களும் இருக்கலாம்.

மருத்துவர் ஆய்வின் போது, குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களை சோதிப்பதுடன், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்தும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னரே ‘பிக்கா’ இருக்கிறதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்குறைபாடு, நோய்த்தொற்று / மரணம் போன்ற விளைவுகளை பிக்கா ஏற்படுத்தும் என்பதால், இதற்கு உடனடி சிகிச்சை அவசியம். சிகிச்சையின் முதல் படியாக, குழந்தைக்கு சீரான, ருசியான ஆரோக்கிய உணவுகள் உணவியல் நிபுணரால் பரிந்துரைக்கப்படும். வீட்டையும் / அதைச் சுற்றியும், குழந்தை எடுத்து உண்ணக்கூடிய அபாயமான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியது முக்கியம். குழந்தைகள் இவ்வகை பொருட்களை உண்பதற்கு, அதனின் ருசி / அமைப்பைத் தவிர, அதில் கிடைக்கும் ஒருவகை தூண்டுதலும் காரணமாக இருக்கலாம்.

இவ்வகை தூண்டுதல்களுக்கு திருப்தியளிக்கும் விஷயங்களில் குழந்தைகளை, பெற்றோர் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். எ.டு. பிடித்த விளையாட்டு / பாதுகாப்பான உணவை ரசித்து சுவைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தலாம்.

உளவியல் சிகிச்சையான ‘செயல்பாடு சிகிச்சை முறை’ (Behavior Therapy) மூலமும் பிக்காவை சமாளிக்க முடியும். இச்சிகிச்சையில், குழந்தையின் நல்ல செயல்பாடுகள் (பாதுகாப்பான உணவை உண்பது) ஊக்குவிக்கப்பட்டு, கெட்ட செயல்பாடுகள் (உணவில்லாத பொருட்களைத் திண்பது) தண்டிக்கப்படும். உணவு மற்றும் உணவில்லாத பிற பொருளுக்கு வித்தியாசங்களும் பயிற்று விக்கப்படும். உளவியல் நிபுணர் பயிற்று விக்கும் ‘செயல்பாடு சிகிச்சை முறை’ பயிற்சிகளை தொடர்ந்து சரியாக அவர்கள் குடும்பத்தினர், பள்ளி மற்றும் வீட்டிலும் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டில், நல்ல முன்னேற்றம் காண முடியும்.

2. அசை போடும் கோளாறு (Rumination Disorder)

இந்த வகை உண்ணுதல் கோளாறி னால் பாதிக்கப்படுவது பொதுவாக குழந்தைப் பருவத்தினர்தான். இதில், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ/சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலோ, தன்னிச்சையாக உணவு செரிக்காமல் திரும்ப வெளியே (வாய்க்குள்) வந்து விடும். அப்படி வரும் உணவை பாதிக்கப்பட்டவர் மறுபடியும் விழுங்குவது / மென்று உண்ணுதல் அல்லது துப்புவதும் உண்டு. ஒருவேளை இரைப்பைக் கோளாறினால் இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அது அசைபோடும் கோளாறாக இருக்காது. இது பிறவகை உண்ணுதல் கோளாறுகளினால் (Anorexia, Bulimia and Binge eating disorder) ஏற்படும் அறிகுறியாகவும் இருக்காது.

இது பொதுவாக அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளிடத்தில் பரவலாக காணப்படும். உடனடி சிகிச்சை மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவு, குறைந்தபட்சம் ஒரு நொடியிலிருந்து, ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வந்து விடுவதால், பாதிக்கப்படும் நோயாளிகள், மற்றவா்களுக்கு அசிங்கப்பட்டு வாயைப் பொத்தி கொள்வதும், அதனாலேயே, உணவு உட்கொள்வதை மிகவும் குறைத்துக் கொள்வதும் வாடிக்கை. இப்படிச் செய்வதால், எடை குறைவதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும். வயிற்றுக் கோளாறினால் வரும் வாந்திக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இக்கோளாறில் வரும் வாந்தியில், குமட்டலோ, நெஞ்ெசரிச்சலோ, அருவெறுப்போ, கெட்ட வாசமோ, வயிற்றுவலியோ இருக்காது.

3 மாதம் முதல் 12 மாதக் குழந்தைகளிடையே காணப்படும் அறிகுறிகள்,
பல நேரம் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குப் பிறகு தானாகவே மறைந்து விடுவதும் உண்டு. பெரிய குழந்தைகளுக்கு பல மாதங்களுக்கு இத்தொந்தரவுகள் தொடர்ந்து இருப்பதும் உண்டு. இது பெரியவர்களிடையேயும் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் உரைக்கின்றன. பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடத்தில் அதிகம் காணப்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு போலவே இதன் அறிகுறிகள் இருப்பதால் பெரும்பாலான வேளைகளில், சரியாக கண்டுபிடிக்கப்படாமல் போகிறது. இதனால், நோயாளிகள் பல வகை கடுமையான மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தவறான சிகிச்சையால் துன்பத்துக்கு ஆளாகும் சூழலும் ஏற்படுவதுண்டு. மருத்துவர்களுக்கு இந்நோயைக் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்குக்
காரணம்.

காரணி மற்றும் சிகிச்சை

1. கடுமையான மன உளைச்சல் / உடல் நோய் இவ்வித செயல்பாட்டை ஏற்படுத்தலாம்.
2. குழந்தை புறக்கணிக்கப்படுவதாலும், ஆரோக்கியமற்ற தாய்-சேய் உறவினாலும், குழந்தைக்கு இவ்வித பழக்கம் ஆறுதல் அளிக்கலாம். போதிய தூண்டுதல் இல்லாததாலும் ஏற்படலாம்.
3. மற்றவரின் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும், குழந்தைக்கு இப்பழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது (ஆனால், வேண்டுமென்றே, தன்னறிவுடன் இதனை குழந்தைகள் செய்வதில்லை).

ஊட்டச் சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வளர்ச்சியின்மை, எடை குறைவு, வயிற்றுக் கோளாறு, உடல் நீர் வறட்சி போன்ற பல்வேறு ஆபத்துகள் இக்கோளாறினால் ஏற்படும் சிக்கல் இருப்பதால், உடனடி சிகிச்சை அவசியம். ‘பிக்கா’ கோளாறைப் போலவே, இதற்கும் நடத்தை மாற்று சிகிச்சை முறையே பின்பற்றப்படுகிறது.

இதன் மூலம் இயல்பாக உண்ணவும், வாந்தி எடுக்கும் பழக்கம் மறையவும் பயிற்சியளிக்கப்படுகிறது. நடத்தை-மாற்று முறைகளை, பள்ளி, வீடு என எல்லா சூழலிலும் தொடர்ந்து பயன்படுத்தும்படியும் ஆலோசனை தரப்படுகிறது. குழந்தைக்கு உணவு ஊட்டப்படும் ஒரு விஷயம், பயமுறுத்தும்படியாக இல்லாமல், அமைதியாகவும், மகிழ்ச்சியளிக்கிற ஒன்றாக அமைவது மிகவும் முக்கியம். இக்கோளாறை சரி செய்ய, எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. குழந்தையின் தாய்க்கு, முக்கியமாக குழந்தையின் பழக்கத்தை மாற்ற, ஆலோசனைகள் வழங்கப்படும்.

3. உணவைத் தவிர்க்கும்/குறைக்கும் குறைபாடு (Avoidant/Restrictive Food Intake Disorder-ARFID)

குழந்தைகள் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் உணவை தவிர்த்து வந்தால், குழந்தைக்கும் உடல் / மனரீதியாக பல சிக்கல்கள் நேரக் கூடும். குறிப்பிடத்தக்க எடை குறைபாடு, எதிர்பார்த்த வளர்ச்சி யின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ட்யூப் மூலம் உணவை கட்டாயமாக உள்ளே செலுத்த வேண்டிய நிலை மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பு இருந்தால், அது ‘உணவைத் தவிர்க்கும் / குறைக்கும் குறைபாடாக’ இருக்கலாம். சில நேரங்களில், மருத்துவப் பிரச்னையால், உணவை குறைக்க நேரிட்டாலும், எதிர்பார்த்ததைவிட வெகுநாள் தொடர்ந்து உணவைத் தவிர்த்து, அதனால், வேறு வழியின்றி உணவை ட்யூபில் செலுத்தும் அளவுக்குப் போனால், அது ARFID ஆக இருக்கலாம். உடலுக்கு தேவைப்படும் போஷாக்கு மற்றும் சக்திக்கு ஈடுகொடுக்கும் உணவுகளைக் கூட மறுப்பதுதான் இதனின் முக்கியத் தன்மை.

இவ்வகை கோளாறு, உணவு தட்டுப்பாடு, கலாசார மத பழக்கங்கள், உடல்ரீதியான கோளாறு, மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) அல்லது பசியற்ற உளநோய்(Anorexia), பெரும்பசி உளநோய் (Bulimia) போன்ற காரணங்களால் ஏற்படாது. பாதிக்கப்பட்டவர் தன் எடை அதிகம் என பயப்படும் காரணத்தினால் உணவைத் தவிர்க்க மாட்டார்கள். குழந்தையிலேயே ஆரம்பித்துவிடும், இக்கோளாறு, ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தெரியும். ஏனெனில், குழந்தைப் பருவத்தில் பொதுவாக, சில வகை உணவுகளை (நிறம், வாசனை…) குழந்தைகள் தவிர்ப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், குழந்தையின் பசி, உணவு உட்கொள்ளும் அளவு, வளர்ச்சி எல்லாம் சரியாகவே இருக்கும். ARFID பாதித்த குழந்தைகளுக்கு, உயிரைப் பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடும் குடும்பத்துடன் ஒன்றிப் பழக முடியாத தன்மையும் ஏற்படும். இவர்கள் பொது இடங்களுக்கு மற்றவருடன் செல்வதையும் பழகுவதையும் கூட இதனால் தவிர்ப்பதுண்டு.

பசியைப் பாதிக்கும் வேறு உடல் நலக் குறைவு, மனநலக் கோளாறுகள் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியப் பிறகுதான், ARFID இருக்கலாம் என மருத்துவரால் நிர்ணயிக்கப்படும். பொதுவாக, குழந்தைப் பருவ முடிவில் தானாகவே இக்கோளாறு மறைந்து விடும். சில நேரங்களில் பெரியவர் ஆன பிறகும் நிலைத்து விடுவதும் உண்டு. ARFID பாதிக்கப்பட்டவர் களுக்கு புதுவகை உணவு குறித்த பதற்றத்தைக் குறைப்பதற்கும், உணவுகளைத் தவிர்க்காமல் உட்கொள்வதற்கும் நடத்தை சிகிச்சை (Behavior therapy), அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive-behavior therapy) முறைகள் நல்ல பலனளிக்கும். டீனேஜரை பரவலாக பாதிக்கும் பிறவகை உண்ணுதல் கோளாறு குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்!

"ஆட்டிஸ வகைக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கோ, கர்ப்பத்தின் போதோ, பிக்கா காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. ஏனெனில், இவ்வகை உண்ணும் பழக்கம், அவர்களின் உயிருக்கே உலை வைக்கக் கூடும்."

"இக்குழந்தைகளுக்கு, உயிரை பாதிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குடும்பத்துடன் ஒன்றிப் பழக முடியாத தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்."

ரேகாவுக்கு ஏன் மண் பிடிக்கிறது?

ரேகா என்னும் 8 வயது சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். 4 நாட்களாக அவளுக்கு கடும் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு பிரச்னை. அவள் வயிற்றுப் பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில், மண் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு தெளிவாக தெரிந்தது. அவள் தாயாரை விசாரித்த போது, சிறு குழந்தையிலிருந்தே அவள் அடிக்கடி மண் திண்பது தெரிய வந்தது. ரேகாவிற்கு இரும்புச்சத்து குறைபாடு (அனீமியா) இருப்பதும் அறியப்பட்டது. மருத்துவர், அவள் பெற்றோரிடம், அவர்களின் வாழிடத்தில் உள்ள மண்ணில் ஈயம் (Lead) கலந்திருக்க வாய்ப்புள்ளதா என கேட்டுத் தெரிந்து கொண்டார். ஏனெனில், ஈயம் கலந்த மண்ணைத் தொடர்ந்து சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும். ரேகாவுக்கு அறிவுத்திறன் குறைபாடு எதுவுமில்லை என்பதையும் மருத்துவர் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஆலோசகர் ரேகாவிடம் தனியாக பேசி அவளுக்கு தைரியம் கொடுத்து, பேச ஊக்கமளித்தார். ரேகா தனக்கு மண் சாப்பிட மிகவும் இஷ்டம் எனவும், பெற்றோருக்கு தெரியாமல் வர வர அதிகமாக தின்று வருவதாகவும் கூறினாள். அது நல்லதல்ல எனத் தெரிந்தும், ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தாள்.

அவளுக்கு, ‘பிக்கா’ இருப்பது கண்டறியப்பட்டு நடத்தை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இரும்புச்சத்து மாத்திரையும் பரிந்துரைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தி லிருந்து விடுபட்ட ரேகா, இப்போது ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு, அம்மாவின் அரவணைப்புடன், நல்ல முன்னேற்றத்தை அடைந்துவிட்டாள்!
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.