உயிரைக் குடிக்குமா பன்னாட்டு குளிர்பான&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயிரைக் குடிக்குமா பன்னாட்டு குளிர்பானங்கள்?


ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


கேரளத் திரையுலகம் கடந்த வாரத்தில் இரண்டு பெரிய ஆளுமைகளை இழந்து விட்டிருக்கிறது. நடிகர் கலாபவன் மணி, இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. இருவருமே கல்லீரல் பாதிப்பால்தான் இறந்திருக்கிறார்கள். கலாபவன் மணியைக் குடித்தது மது. ராஜேஷ் பிள்ளையின் உயிரைக் குடித்தது? வேறு எதுவுமில்லை, குளிர்பானம்தான்!

ஆமாம்... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தாகத்துக்கு தண்ணீர் குடிப்பதையே மறந்து, பாட்டில் பாட்டிலாக நம் இளைஞர்கள் வாங்கிக் கவிழ்த்துக் கொள்கிற பன்னாட்டு குளிர்பானங்கள்தான் ராஜேஷ் பிள்ளையின் உயிரைப் பறித்தது என்கிறார்கள் மருத்துவர்களும், ராஜேஷை நன்கறிந்த நண்பர்களும்.

‘ஹ்ருதயத்தில் சூஷிக்கான்’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஜேஷ். ‘டிராபிக்’ படம் அவருக்கு பெரும் வெளிச்சம் தந்தது. அந்தப் படத்தின் ரீமேக்தான், தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘சென்னையில் ஒரு நாள்’. நுரையீரல் சார்ந்த ‘லிவர் சிரோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராஜேஷ், அவ்வப்போது அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

அவர் இயக்கிய ‘வேட்டா’ திரைப்படம் வெளியான அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்து விட்டது. பொதுவாக மது அருந்துபவர்களுக்கே ‘லிவர் சிரோசிஸ்’ பாதிப்பு ஏற்படும். ராஜேஷுக்கு குடிப்பழக்கமோ, புகைப்பழக்கமோ இல்லை. ஆனால் குளிர்பானங்களுக்கு கிட்டத்தட்ட அடிமையாகவே இருந்திருக்கிறார். படப்பிடிப்பு நாட்களில், பிற உணவுகளே எடுத்துக் கொள்ளவே மாட்டாராம். 20 முதல் 30 பாட்டில் வரை குறிப்பிட்ட குளிர்பானத்தை அருந்துவாராம். அதுதான், அவரது கல்லீரலை பாதித்து மரணத்திற்கு இட்டுச்சென்று விட்டது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

பன்னாட்டு குளிர்பானங்களைக் குடிப்பதை கௌரவமாகக் கருதுகிறார்கள் இளைஞர்கள். பிரியாணி தொடங்கி பீட்சா வரை எது வாங்கினாலும் கூடவே குளிர்பானங்களையும் சேர்த்து விற்கிறார்கள். வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளை எல்லாம் இந்த குளிர்பானங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் ‘வாங்கிக் குடியுங்கள்... வாங்கிக் குடியுங்கள்’ என்று நுரை பொங்கப் பொங்க விளம்பரம் செய்கிறார்கள். கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் குழந்தைகளுக்கும் வாங்கி ஊற்றுகிறார்கள்.

கிட்டத்தட்ட நாடே அக்குளிர்பானங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் நிலையில், ராஜேஷ் பிள்ளையின் மரணம் சொல்லும் செய்தி உண்மைதானா? குளிர்பானங்கள் உயிரைப் பறிக்குமா? ‘‘நிச்சயம் மதுவுக்கு இணையான ஆபத்து பன்னாட்டு குளிர்பானங்களில் உள்ளது’’ என்று அதிர்ச்சியூட்டும் மருத்துவர் புகழேந்தி, ‘‘உலகத்தையே ஆட்கொண்டு ஆதிக்கம் செலுத்தக்கூடிய இரண்டு பிராண்டட் குளிர்பானங்களைப் பற்றி உலகம் முழுவதும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லா ஆராய்ச்சி முடிவுகளுமே அபாய சங்கு ஊதுகின்றன. துளியளவும் உடம்புக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களின் கரைசல்தான் அந்த பானங்கள். ராஜேஷ் பிள்ளையின் மரணத்துக்கு அவையே காரணம் என்பதில் என்னளவில் எந்த சந்தேகமும் இல்லை...’’ என்கிறார் உறுதியாக.

‘‘இந்தக் குளிர்பானங்களில் அளவுக்கு மீறி செயற்கை சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. அந்த சர்க்கரையால், குளிர்பானத்தைக் குடித்தவுடன் எனர்ஜி கிடைப்பதைப் போல தெரியும். படிப்படியாக அந்த சர்க்கரை கொழுப்பாக மாறி ஈரல் மற்றும் உள்ளுறுப்புகளில் படியும். ஈரல் வீங்கி Non-alcoholic fatty liver disease எனும் நோய் வரும். இன்னும் குடிக்கக் குடிக்க கொழுப்பின் அளவு அதிகமாகி ‘சிரோசிஸ்’ நிலைக்கு வந்துவிடும்.

இதுமட்டுமல்ல. ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ எனப்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்களும் படிப்படியாக உடம்பைக் கவ்விக்கொள்ளும். இன்று பெரும்பாலானவர்களை பீடித்திருக்கும் உடல்பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம், இதுமாதிரியான குளிர்பானங்கள்தான். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் நாட்டுக்கொரு தர அளவுகோல் வைத்துள்ளன.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ‘என்னென்ன கலக்கப்பட்டுள்ளன, அதனால் என்னென்ன பாதிப்புகள் வரும்’ என்பது வரை நுகர்வோருக்கு விளக்கிச் சொல்லியே விற்பனை செய்யமுடியும். மேலும் உணவு விஷயத்தில் கண்காணிப்புகளும் அதிகம். அதுமாதிரி நிலை இங்கில்லை. யாரும் எந்தக் குப்பை உணவையும் இங்கே விற்கலாம்.

கண்காணிக்க வேண்டிய துறைகளில் ஏகப்பட்ட ஆள் பற்றாக்குறை. ஆய்வு நிறுவனங்களிலும் நேர்மையில்லை. ஒரு நிறுவனம், ‘விஷம்’ என்கிறது. இன்னொரு நிறுவனம், ‘விஷமில்லை... விற்கலாம்’ என்கிறது. யாரேனும் ஒரு சிலரை கவனித்தால் இங்கே எந்த குற்றத்தையும் செய்யலாம். அந்த தைரியத்தில்தான் உயிரைப் பறிக்கும் ரசாயனங்களை தைரியமாக குளிர்பான நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன’’ என்கிறார் டாக்டர் புகழேந்தி.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், ‘‘கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு திரைப்பட நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் விபரீதங்களை மக்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். பன்னாட்டு குளிர்பானங்கள் இளைஞர்களை உளவியல் அடிமைகளாக மாற்றியிருக்கின்றன. தரமற்ற, ஆபத்து நிறைந்த ரசாயனக் கலவையை விற்று பல கோடி டாலரை லாபமாக அள்ளிச்செல்கின்றன அந்நிறுவனங்கள். நம் தட்பவெப்பத்துக்கு ஒத்துக்கொள்ளாத, உடம்பு ஏற்றுக்கொள்ளாத அவற்றைக் குடிப்பது ஸ்டேட்டஸாக மாறியிருக்கிறது.

இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணம் ஒரு எச்சரிக்கை. இதுகுறித்து தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்கிறார்.
இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்கு குளிர்பானங்களே காரணம் என்று நடிகர் கமலஹாசனும் வழிமொழிந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு படைப்பாளியின் உயிர் பறிபோயிருக்கிறது. இனியாகிலும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதுமாதிரி விஷங்களை விளம்பரப்படுத்துவதை நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் தவிர்க்க வேண்டும்.

‘‘உலகெங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடிப்பதால் ஆண்டுதோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை 1.80 லட்சம். குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களில் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும், 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும், 6 ஆயிரம் பேர் புற்றுநோயாலும் இறப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் இருக்கும் ரசாயனங்கள் மரபணுவை பாதிக்கக்கூடியவை என உலகளாவிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மதுவாவது, ‘வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்ற விளம்பரத்தோடு குறிப்பிட்ட இடங்களில்தான் விற்கப்படுகிறது.

ஆனால் குளிர்பானங்கள் நம் தெருவுக்குள் கடைக்குக் கடை தாராளமாகக் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்தியிருக்கிறோம். இளநீர், பழரசங்கள், கூழ், பானகம், மோர் என உடம்புக்கு நன்மை தரும் பல குளிர்பானங்கள் நம்மிடமே இருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு மெல்லக் கொல்லும் விஷங்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது நம் தலைமுறை... சுய விழிப்புணர்வு ஒன்றே இந்நிலையை மாற்றும்’’ என்கிறார் இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன்.

மதுவாவது, ‘வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்ற விளம்பரத்தோடு குறிப்பிட்ட இடங்களில்தான் விற்கப்படுகிறது. ஆனால் குளிர்பானங்கள் நம் தெருவுக்குள் கடைக்குக் கடை தாராளமாகக் கிடைக்கிறது.

என்ன வரும்?

* குளிர்பானங்களில் இருக்கும் அளவுக்கு அதிகமான சர்க்கரை, உள்ளுறுப்புகளில் கொழுப்பாகப் படிகிறது. நுரையீரலில் படியும் கொழுப்பால் லிவர் சிரோசிஸ் (liver cirrhosis) எனப்படும் ஈரல் செல் பாதிப்பு நோய் வரலாம்.

* கொழுப்பு காரணமாக, உடல்பருமன் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு.

* பாஸ்பாரிக் அமிலம் புற்றுநோயை உருவாக்குவதற்கான ஊக்கியாக செயல்படும். குறிப்பாக ‘புராஸ்டேட் கேன்சர்’ வரக்கூடும்.

* இதில் உள்ள அமிலத்தன்மை உடலில் உள்ள கால்சியத்தைக் கரைத்து ரத்தத்தில் சேர்க்கும். அதனால் எலும்புகள் பாதிக்கப்படும். ரத்தத்தில் கால்சியம் சேர்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் மூளையும் பாதிக்கலாம்.

* Caffeine அதிகம் இருப்பதால், தூக்கமின்மை, தலைசுற்றல், பசியின்மை, ஜீரணக் கோளாறுகள், உடல் சோர்வு ஏற்படலாம்.

* எலெக்ட்ரோலைட்ஸ் அளவு கூடுதலாக இருப்பதால் நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம். தசை தொடர்பான நோய்களும் வரலாம்.

* பற்களில் கறை உருவாகும். தாம்பத்யக் குறைபாடும் ஏற்படக்கூடும்.

* குளிர்பானம் கெட்டுப்போகாமல் தடுப்பதற்காக சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், குழந்தைகளை நேரடியாக பாதிக்கும். இது மரபணுக் கோளாறை ஏற்படுத்தி, நரம்பு தொடர்பான கடுமையான நோய்களை சிலருக்கு வரவழைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: உயிரைக் குடிக்குமா பன்னாட்டு குளிர்பா&

உயிரையுமா பறிக்கும் குளிர்பானம்?


யாரேனும் இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தால் ‘தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு இப்படி ஒரு முடிவா?’ என்று பலரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள். மது மற்றும் புகைப் பழக்கம் மட்டுமல்ல... நமது தவறான உணவுப் பழக்கமும் உயிர்கொல்லியாக மாறிவிடும். இதற்கு மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணமே எடுத்துக்காட்டு.

மூளைச்சாவில் உயிரிழந்த ஹிதேந்திரனின் இதயத்தை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் தேனாம்பேட்டையிலிருந்து முகப்பேருக்கு எடுத்துச் சென்று வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படம் ‘ட்ராஃபிக்’.

இப்படம்தான் ‘சென்னையில் ஒரு நாள்’ என தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ப்ரீ ஸ்கூல் தொடங்க நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கலை அடிப்படையாக வைத்து இன்றைய கல்வி முறை குறித்தான பார்வையையும் முன் வைத்து ‘மிலி’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படி தொடர்ச்சியாக தனது படங்களில் சமூக அக்கறையை முன் வைக்கும் ராஜேஷ் பிள்ளைக்கு மது மற்றும் புகைப்பழக்கம் கிடையாது. ஆனால், படப்பிடிப்பின் போது உணவு எடுத்துக் கொள்ளாமல் குளிர்பானங்களையும் ஜங்க் உணவுகளையுமே உட்கொண்டு வந்திருக்கிறார். இதன் விளைவு அவரது கல்லீரலை பாதித்து இறுதியாக உயிரையே எடுத்துக் கொண்டது.

ஷாப்பிங், சினிமா, மால்கள் என எங்கு போனாலும் குளிர்பானங்களை வாங்கிப் பருகுவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மதுவகை அல்லாத பானம் என்பதாலேயே Soft drinks என்று குளிர்பானங்களைச் சொல்கிறார்கள். ஆனால், மதுபானங்களைவிட அதிக ஆபத்து கொண்டவை இந்த குளிர்பானங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவரான ஜோதிபாசு சொல்வதைக் கேட்போம்...

‘‘நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் இயக்கத்துக்கும் தேவையில்லாத ஓர் உணவுப்பொருள் இந்த குளிர்பானங்கள். Nutritive value என்று எந்த சத்துப்பொருட்களும் இதில் இல்லை. தேவையற்ற கலப்படங்கள்தான் நிறைய இருக்கின்றன. ஒரு நாளில் 3 டீஸ்பூனுக்கு மேல் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஒரு குளிர்பான பாட்டிலில் மட்டுமே 7 டீஸ்பூன் வரை சர்க்கரை இருக்கிறது. கார்பனேட்டட் டிரிங்ஸ், ஏரியேட்டட் டிரிங்ஸ் என்று சொல்லும் அளவுக்கு குளிர்பானங்களில் அடங்கியிருக்கும் ரசாயன வாயுவின் அளவும் அதிகம்.

இந்த கார்பனேட்டட் வாயுதான் செரிமானம் ஆனது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகிறது. குடலின் ஒரு பகுதியில் நகர்ந்து வேறு பகுதிக்கு உணவு சென்றுவிடுவதால் ரிலாக்ஸான உணர்வு வயிறுக்குக் கிடைக்கிறது. Peristaltic movement in oesophagus என்று இதைச் சொல்வோம். முறையாக செரிமானம் ஆகாததால் இன்சுலின் தேவை அதிகரிப்பதுதான்
கடைசியில் நடக்கும்.

வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு தண்ணீர்தான் முதலில் தேவை. அதற்குப் பதிலாக குளிர்பானத்தைக் குடித்து தாகம் தணிப்பது தவறான விஷயம். வெயிலில் அலைந்து வந்தவுடன் உடனடியாக சக்தி தேவை என்பதாலும் குளிர்பானங்களை விரும்புகிறார்கள். உண்மையில் எந்த சத்துகளும் இல்லாத Empty calories இவை என்பதை நாம் கவனிப்பதில்லை.

இந்த கலர் பானங்களில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை உடனடி சக்தியைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலின் தேவைக்கு அதிகமான சர்க்கரையின் அளவை செரிமானமாக்க இன்சுலினும் அதற்கேற்ற அளவு தேவைப்படுமே.

இந்த தலைகீழ் முரண்பாட்டால்தான் நீரிழிவு நோய்க்கான பெரிய சாத்தியமாக குளிர்பானங்கள் மாறிவிடுகின்றன. உடல் உழைப்பு குறைந்த இன்றைய தலைமுறை அதிக பருமனோடு இருப்பதற்கான முக்கிய காரணங்களில் குளிர்பானங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு’’ என்றவரிடம், குளிர்பானத்தில் இருக்கும் வேதிப் பொருட்களின் கலவை பற்றிக் கேட்டோம்.

‘‘நிறத்துக்காக கலரிங் ஏஜென்டுகள் சேர்க்கப்படுவது பலருக்கும் தெரிந்திருக்கும். சமீபகாலமாக கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களின் சுவை கொண்ட குளிர்பானங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அந்தப் பழங்களுக்கும் இந்த குளிர்பானங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. It contains no fruit pulp என்று அவர்களே குறிப்பிட்டிருந்தாலும், நாம் அதை கண்டுகொள்வதில்லை.

மாம்பழத்தின் சுவையைப் போலவே ஒரு குளிர்பானம் இருக்க வேண்டுமென்றால் Esters என்கிற செயற்கையான வேதிப்பொருட்களின் மூலமே அந்த மாம்பழச் சுவையை உண்டாக்க முடியும். இதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பிரசர்வேட்டிவ்களாகவும் நிறைய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை எதுவும் நல்லது கிடையாது. இவற்றை உடல் ஏற்றுக் கொள்வதும் இல்லை.

இந்த குளிர்பானங்கள் எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றன, பேக் செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறிதான். அதன் எதிரொலிதான் குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருக்கிறது, பல்லி கிடக்கிறது என்று அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

முறையாக குடிநீரை சுத்திகரிக்காததால்தான் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிக் கலப்பும் வருகிறது. குளிர்பானமாக பிராசஸ் செய்யும்போது தண்ணீரில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் அடர்த்தி இன்னும் அதிகமாகிவிடுகிறது’’ என்கிறார் டாக்டர் ஜோதிபாசு.

இதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

‘‘குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்றுவலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து, இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி கூட ஏற்படலாம். இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது.

உலகமயமாக்கலின் விளைவாக பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவுக்குள் வந்திருக்கின்றன. வெளிநாட்டு உணவுப்பொருட்களை அரசு தவிர்க்க வேண்டும் என்று சொல்வதைவிட, அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது என்ற காரணத்துக்காகவே நாம் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லையே?’’ என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதிபாசு.இந்த குளிர்பானங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க சில வழிமுறைகளைச் சொல்கிறார் பொது மருத்துவரான செல்வி.

‘‘ஒரு உணவு நம் உடல்நலனுக்கு சரிவராது என்றால் முன்பு அதை நம்மால் நிறுத்திவிட முடிந்தது. இப்போதோ எந்த உணவையும் நம்மால் உடனடியாக நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு போதைப் பொருள் போல தன் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கின்றன நவீன உணவுகள்.

குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் கார்பன் வடிவமும், நம்முடைய டி.என்.ஏ. கார்பன் வடிவமும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறது என்பதையும், இதனால் குழப்பம் ஏற்படுகிறது என்பதையும் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் என்ன பிரச்னைகள் வரும் என்பது இனிமேல்தான் தெரியும்.

இதுபோல யாரவது குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனங்களே ஆய்வுகள் நடத்தி இது நல்ல குளிர்பானம்தான் என்று சொல்வதும் உண்டு. இவற்றிடம் இருந்து நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு விஷயத்தைக் கவனித்து பாருங்கள்... ஆரோக்கியமான, நம் நாட்டு உணவுகளை சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று பெரும்பாலும் தோன்றாது. பீட்சா, பர்கர், பப்ஸ், பாப்கார்ன் என்று பேக்கரி உணவுகளையோ, துரித உணவுகளையோ சாப்பிடும்போதுதான் குளிர்பானங்கள் வேண்டும் என தோன்றும்.

அதனால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது இதிலிருந்து தப்பிக்க ஒரு நல்ல வழி. ஃபேஷன், ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டு பணத்தையும், உடல்நலத்தையும் கெடுப்பதற்குப் பதிலாக ஃப்ரூட் ஜூஸோ, இளநீரோ, மோரோ குடிக்கலாமே...’’ என்கிறார்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்று வலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி ஏற்படும். இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.