உயிர் காக்கும் ரேபீஸ் தடுப்பூசி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயிர் காக்கும் ரேபீஸ் தடுப்பூசி


ரேபீஸ். இந்த நோயை நினைத்தாலே மனசுக்குள் ஒரு பயமூட்டம் படர்வதைத் தடுக்க முடியாது. காரணம், இது வந்துவிட்டால் சிகிச்சை கிடையாது; மரணம் நிச்சயம்.

ரேபீஸ் (Rabies) எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற நோய் இது. நாய் கடித்தால் மட்டுமே இது ஏற்படும் என நினைக்க வேண்டாம்.

இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் பலவற்றின் உடலில் வசிக்கும். ரேபீஸ் கிருமி உள்ள எந்த ஒரு பாலூட்டி கடித்தாலும் மனிதர்களுக்கு ரேபீஸ் வரும்.

வெறிநாயின் உமிழ்நீரில் ரேபீஸ் கிருமிகள் வாழும். இந்த நாய் மனிதரைக் கடிக்கும்போது, அந்தக் காயத்தின் வழியாக உடலுக்குள் புகுந்து, நரம்புகள்/முதுகுத் தண்டுவடத்தின் வழியாக மூளையை அடைந்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும். வெறிநாய் பிறாண்டினாலும், திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் வரலாம்.

இந்த நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள்.

இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்துவதும், கடிக்க வருவதுமாக இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.

நாய் கடித்த காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்புத் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும். வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. காயத்தின்மீது ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் என ஏதாவது ஒரு ‘ஆன்ட்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். காயத்துக்குத் தையல் போடவோ, கட்டுப் போடவோ கூடாது.

இன்றுவரை ரேபீஸ் நோய்க்கு சிகிச்சை இல்லை. நோயை வரவிடாமல் தடுக்க தடுப்பூசி மட்டுமே உள்ளது. நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்குத் தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது அந்தக் காலம். இப்போது நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன.

ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவீதம் வர விடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை. புஜத்திலேயே போட்டுக்கொள்ளலாம். நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக்கொள்ளலாம்.

உயிர் காக்கும் இந்தத் தடுப்பூசியை பாரிஸ் நகரைச் சேர்ந்த மருத்துவர் லூயி பாஸ்டர் (Louis Pasteur) கண்டுபிடித்தார். இவர் முதலில் முயல்களுக்கு ரேபீஸ் கிருமிகளைச் செலுத்தி நோயை ஏற்படுத்தினார். இவற்றின் தண்டுவட திரவத்தைப் பரிசோதித்தார். அதில் ரேபீஸ் கிருமிகள் இருந்தன. இவற்றை அப்படியே மற்ற விலங்குகளுக்குச் செலுத்தினால் அவற்றுக்கும் நோய் வந்துவிடும் எனக் கருதி, அந்தக் கிருமிகளின் வீரியத்தைக் குறைக்க வழி தேடினார்.

அந்த திரவத்தை ஒரு பிளாஸ்க் கில் ஊற்றிக் காய வைத்தார். காற்றின் வெப்பத்தில் ரேபீஸ் கிருமிகளின் வீரியம் குறையத் தொடங்கியது. இதைக் குரங்குகளுக்குச் செலுத்தி, அவற்றின் தண்டுவட திரவத்தைச் சேகரித்தார்.

இப்போது அந்தக் கிருமிகளின் வீரியம் இன்னும் நன்றாகவே குறைந்திருந்தது. இப்போது இதை வெறிநாய் கடித்த நாய்களுக்குச் செலுத்தினார். அந்த நாய்களுக்கு ரேபீஸ் வரவில்லை. மொத்தம் 50 நாய்களுக்கு இவ்வாறு தடுப்பு மருந்துகொடுத்து அவற்றுக்கும் நோய் வரவில்லை என்று உறுதி செய்த பிறகு, நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி கண்டுபிடித்துள்ள விவரத்தை வெளியிட்டார்.

இந்த மகத்தான கண்டுபிடிப்பின் அடுத்த முன்னேற்றம் 1885ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் நடந்தது. ஜோசப் மெய்ஸ்டர் (Joseph Meister) எனும் 9 வயது சிறுவனை பாஸ்டரிடம் அழைத்து வந்தார் அவனது அம்மா. அவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெறிநாய் கடித்திருந்தது. தன் பையனுக்குத் தடுப்பூசி போடும்படி வற்புறுத்தினாள் அந்த அம்மா. தான் கண்டுபிடித்த ரேபீஸ் தடுப்பூசியை இதுவரை மனிதர்களுக்குப் போடவில்லை என்பதால் தயங்கினார்.

என்றாலும், தடுப்பூசியைப் போடாவிட்டால் அவனுக்கு மரணம் உறுதி என்பதால், பரீட்சார்த்தமாக போட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, தினமும் ஒரு ஊசி வீதம் 13 நாட்களுக்கு தடுப்பூசி போட்டார்; அடுத்த மூன்று மாதங்கள் வரை காத்திருந்தார். சிறுவனுக்கு ரேபீஸ் நோய் வரவில்லை. இதைத் தொடர்ந்து 350 பேருக்கு இந்தத் தடுப்பூசியைப் போட்டு, அவர்கள் எல்லோருக்கும் ரேபீஸ் வரவில்லை என்று உறுதியானதும் தன் கண்டுபிடிப்பை உலகத்துக்கு அறிவித்தார். இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிலிருந்து நாய் கடித்தவர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர்.

பாஸ்டர் கண்டுபிடித்த ரேபீஸ் தடுப்பூசி விலங்குகளின் தண்டுவட நரம்புத் திசுவிலிருந்து தயாரிக்கப்பட்ட காரணத்தால், அதைப் போட்டுக்கொண்ட பலருக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுவதை அவருக்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, அதற்குத் தீர்வு தரும் வகையில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புது வகைத் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கினர்.

இப்போது நாம் பயன்படுத்தும் ரேபீஸ் தடுப்பூசிகள் கோழிக் கரு செல்களிலிருந்தும், மனித இரட்டைக் கரு செல்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை; தொப்புளைச் சுற்றிப் போடவேண்டியதும் இல்லை; 14 ஊசிகளுக்குப் பதிலாக 5 ஊசிகள் புஜத்தில் போட்டுக்கொண்டால் போதும். இவை இந்த புது வகைத் தடுப்பூசிகளால் கிடைக்கிற கூடுதல் நன்மைகள்.
டாக்டர் கு.கணேசன்

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.