எக்ஸ்ரே,சி.டி.ஸ்கேன்... நோ டென்ஷன் !

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#1
எக்ஸ்ரே,சி.டி.ஸ்கேன்... நோ டென்ஷன் !
எந்த மருத்துவரிடம் சென்றாலும் தவறாமல் கிடைக்கும் அட்வைஸ் ‘‘வருஷத்துக்கு ஒரு தடவை மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிக்குங்க’’ என்பதுதான். மருத்துவக் கண்டுபிடிப்புகள் அதிகமாக ஆக, நம் உடலுக்கான பரிசோதனைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

முன்பெல்லாம் வெறும் எக்ஸ்ரே-யுடன் முடிந்த கதிரியக்கம் இப்போது, ஸ்கேன், மேமோகிராம் எனப் பலவிதங்களில் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றன. எந்த அளவுக்கு அவற்றை நாம் அனுமதிக்கலாம்? அதற்கான வரையறை என்ன? அடிக்கடி இதுபோன்ற பரிசோதனைகளுக்கு உட்படுவது நம்மைப் பாதிக்குமா? விரிவாக விளக்குகிறார், சென்னை மெடால் ஹெல்த்கேர் தலைவர் டாக்டர் பாரதி ஒய். தாலா.

கதிரியக்க சோதனைகள் ஆபத்தானவையா?
பொதுவாகவே நம்முடைய தினசரி வாழ்க்கைமுறையிலும் சுற்றுச்சூழலிலும், நம்மை அறியாமலேயே கதிரியக்கம் நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. சூரியனின் உச்ச நேரக் கதிர்களில் இருந்தும், கம்ப்யூட்டர்கள், டி.வி, செல்போன்கள், செல்போன் கோபுரங்கள் போன்றவை வெளியிடும் மின்காந்த அலைகளில் இருந்தும் வரும் கதிரியக்கங்கள், எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கின்றன.


கதிரியக்கத்தின் அளவை, ‘மில்லி ஸீவர்ட்ஸ்’ (Milli Sieverts - mSv) என்ற அளவீட்டில் குறிப்பிடுவோம். கதிரியக்கத்தை எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், ஒரு மனிதனுக்கு அவனுடைய ஆயுள் முழுவதும் எந்த அளவுக்குக் கதிரியக்கம் இருக்கலாம் என்பதும் கணக்கிடப்பட்டுள்ளது. ‘ஒரு மனிதன், ஒரு வருடத்துக்கு 50 mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம்; ஆபத்து இல்லை’ என்கிறது அந்தக் கொள்கை.

மின்னணு சாதனங்கள், தொழிற்சாலை, சூரியன், நம்முடைய பின்னணியில் இருக்கும் கதிரியக்கமே 3 mSv அளவு வந்து விடுகிறது. மீதி 47 mSv வரை ஆபத்து இல்லை என்று சொல்லலாம். எனவே, தொடர்ந்து இருமல், சளி போன்றவற்றுக்கு நெஞ்சுப் பகுதி எக்ஸ் ரே அல்லது விபத்து சமயங்களில் எலும்பு முறிவு ஏற்படும்போது எடுக்கப்படும் எக்ஸ் ரே போன்றவற்றால் பெரிய அளவு அபாயம் ஏற்படாது.

தன் வாழ்நாளில் ஏழெட்டு முறை பரிசோதனைகள் செய்துகொள்பவர் கூட, அதிகபட்சமாக 30 - 35 mSv அளவுதான் கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு ஆளாகிறார்.

எப்போது கதிரியக்கத்தைத் தவிர்க்கவேண்டும்?
கர்ப்ப காலத்தில் எக்ஸ் ரே எடுப்பதை மருத்துவர்களே தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக, முதல் 7 வாரங்களில் எக்ஸ் ரே எடுக்கவே கூடாது. அந்தச் சமயத்தில் அவசியம் ஏற்பட்டால், வயிற்றின் மேலே, காரீயமும் ரப்பரும் கலந்து செய்யப்பட்ட ஒரு மேலாடையை (Lead Apron) விரித்துவிட்டு, பிறகு எக்ஸ் ரே எடுப்போம். திருமணமான பெண்களுக்கு, ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருந்தால், கர்ப்பம் ஆனது தெரியாமலேயே சில சமயம் எக்ஸ் ரே எடுக்க நேரும்போது, கருவுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

ஆண்டுதோறும் ஹெல்த் செக்கப், மேமோகிராம் செய்துகொள்ளலாமா?

தாராளமாக. மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் ரத்தம், மலம், சிறுநீர் ஆகிய பரிசோதனையுடன், எக்ஸ் ரே, ஈ.சி.ஜி, எக்கோ, பெண்களுக்கு டெக்ஸா, மேமோகிராம் பரிசோதனை செய்யப்படுகின்றன. அவற்றில் ஏதும் அபாயம் இல்லை என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்ளலாம்.

40 வயதுக்குக் கீழிருக்கும் பெண்களுக்கு, நாங்கள் மேமோகிராம் செய்வதே இல்லை. விதிவிலக்காக, குடும்பத்தில் யாருக்கேனும் கேன்சர் அல்லது உடலில் எங்கேனும் சந்தேகப்படும் வகையில் கட்டி என்பன போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, 40 வயதுக்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு மேமோகிராம் செய்யப்படுகிறது. அதுவும் 30 வயதுக்குள் உள்ள பெண்கள் என்றால், முதலில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்தான் செய்யப்படும். கட்டி உறுதியானால்தான், மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும்.

குழந்தைகளுக்கு ஸ்கேன் செய்யலாமா?
குழந்தைகளின் உடலமைப்பு மாறுபாடுகளை (Anatomical changes) கண்டுபிடிக்க, சி.டி ஸ்கேனிங்கும், உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை (Functional changes) கண்டறிய, எம்.ஆர்.ஐ ஸ்கேனிங்கும் உதவுகின்றன. ஆனால், முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர, எம்.ஆர்.ஐ உட்பட எந்த விதமான ஸ்கேனிங்கும் செய்வது கிடையாது.

[HR][/HR]
லேபுக்கு லேப் வேறுபடும் ரிசல்ட்ஸ் - ஏன்?

மருத்துவப் பரிசோதனை மையங்களில் இப்போது தானியங்கி (Automated) உபகரணங்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு மையத்திலும், அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்களைப் பொறுத்து, குறிப்பிட்ட அளவீட்டுக்குத் தினமும் காலையில் செம்மைப்படுத்துவார்கள் (Calibration). இது, எல்லோருக்கும் பொதுவான நார்மல் அளவில் இருக்கவேண்டும். பரிசோதனை முடிவுகள், இந்த அளவீட்டையும் உபகரணத்தையும் பொறுத்தே அமையும். இந்த அளவு வேறுபடும்போது, பரிசோதனை முடிவுகள் வேறுபட வாய்ப்புள்ளது.
சில சமயம், பரிசோதனைகளை முறையாகச் செய்யாமல் போனாலும் பரிசோதனைகளில் காலதாமதம் ஏற்பட்டாலும், முடிவுகள் வித்தியாசப்படும். உதாரணத்துக்கு, ரத்தப் பரிசோதனையின்போது, ரத்த மாதிரியைச் சேகரித்து வெகு நேரம் ஆகிவிட்டால், ரத்தம் இறுகி, பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்காது.

மருத்துவப் பரிசோதனைகளின் போது, வெளிவரும் கதிரியக்கத்தின் அளவு
நெஞ்சுப் பகுதி எக்ஸ் ரே - 0.1 mSv
நெஞ்சுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 7 mSv
வயிற்றுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 10 mSv
தலை சி.டி. ஸ்கேன் - 2 mSv
மூளை சி.டி. ஸ்கேன் - 2 mSv
இதயத்துக்கான சி.டி. ஸ்கேன் (கொரனரி ஆஞ்சியோகிராம்) - 12 mSv
(இது பெரியவர்களுக்கான அளவு. குழந்தைகளுக்கு இதில் ஐந்தில் ஒரு பங்கு அளவுதான் பயன்படுத்துவார்கள்).

மேமோகிராம் - 0.4 mSv
டெக்ஸா ஸ்கேன் - 0.001 mSv
அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங்னில் கதிரியக்கம் இல்லை. இது மிகப் பாதுகாப்பானது. எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேனிங்கிலும் கதிரியக்கம் இல்லை. இது காந்த அலைகளைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனை.

[HR][/HR]
``மருத்துவரிடம் ஆலோசித்த பின், எக்ஸ் ரே எடுங்கள்!’’

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்.


“மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு பரிசோதனையையும் செய்யக் கூடாது. ஓர் ஆண்டுக்கு 50mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம் என்றாலும்கூட, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன், மேமோகிராம் போன்றவற்றைச் செய்துகொள்ளவே கூடாது.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில், தப்பிப் பிழைத்த பெண்களையும் அடிக்கடி நெஞ்சு மற்றும் உடலின் மேல்பகுதியில் கதிரியக்க சிகிச்சைக்கு உட்பட்ட பெண்களையும், ஆய்வு செய்ததில், அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கதிரியக்கத்தின் விளைவுதான் இது. மேமோகிராம் என்பது, மார்பகத்தின் எக்ஸ் ரே படம்தான். மேமோகிராம் பரிசோதனைக்குத் தேவைப்படுவது, மிக மிகக் குறைந்த அளவிலான கதிரியக்கம்தான்.

இருந்தாலுமே கூட, 20 வயது முதல், ஒவ்வொரு பெண்ணும், நிபுணரிடம் கேட்டறிந்து, மார்பகங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது, இன்னும் பாதுகாப்பானது. மார்பகங்களுக்கான மருத்துவப் பரிசோதனையை 20 - 30 வயதுள்ளவர்கள், 3 வருடங்களுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது.

மார்பகப் புற்றுநோய்களில், 5 முதல் 10 சதவிகிதம் வரை மரபியல்ரீதியாக வருவதாகவே எண்ணப்படுகின்றன. மரபு வழியில் வரும், BRCA1 (BReast CAncer gene one) மற்றும் BRCA2 (BReast CAncer gene two) என்ற சில அசாதாரணமான ஜீன்கள்தான் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணம்.

எனவே, தலைமுறையில் யாருக்கேனும் மார்பகம் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தால், கண்டிப்பாக மேமோகிராம் செய்துகொள்ளவேண்டும். இப்போது, மார்பகத்துக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையும் செய்யப்படுகிறது. பொதுவான உடல்நலப் பரிசோதனை எனில், மேமோகிராமைத் தவிர்த்து, மார்பக எம்.ஆர்.ஐ கூட செய்துகொள்ளலாம்.’’
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.