எது 'குட்டித் தூக்கம்? - Nap

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எது 'குட்டித் தூக்கம்?'

வயது அதிகமாகும்போது தூக்கத்தின் தேவை குறையுமா?

தூக்க நிலைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுமா?
- வயதானவர்கள் மத்தியில் தூக்கம்குறித்து இதுபோன்ற கவலை நிறைந்த கேள்விகள் நிறைய உண்டு.

பொதுவாக ஒருவரது பகல் நேர உழைப்பே அவரது இரவு நேரத் தூக்கத்தையும் நிர்ணயிக்கிறது. பணி ஓய்வு பெற்று பணிச் சுமைகள் ஏதும் இன்றி வீட்டில் ஹாயாக அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு இரவுத் தூக்கம் குறைந்துபோக அதிக வாய்ப்பு உண்டு.

இரவில் குறித்த நேரத்துக்குள் தூங்கச் செல்ல வேண்டும்; காலையிலும் குறித்த நேரத்துக்குள் எழுந்து பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் அவர்களுக்குக் கிடையாது. எனவே வயதானவர்களுக்கு இயல்பாகவே தூக்க நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இதில் தவறேதும் இல்லை.

'நாள் முழுக்கப் பதற்றத்துடனும் மன அழுத்தத்துடனும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சராசரி வாழ்க்கை இனி இல்லை’ என்பது உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை ஓய்வுக் காலமே ஒரு மனிதனிடம் கொண்டுவருகிறது... அவற்றில் இதுவும் ஒன்று!

எந்த வேலையும் இல்லை என்ற காரணத்தினாலேயே வயதானவர்கள் சிலர் பகல் வேளையிலும் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். மதிய வேளையில், சாப்பாட்டு நேரத்துக்குப் பிறகு குட்டித் தூக்கம் தூங்கி எழுவது பலரிடமும் இருக்கின்ற பழக்கம்தான். 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே இந்தத் தூக்கம் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கால அளவையும் தாண்டினால் அதனைக் குட்டித் தூக்கம் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் வயதானவர்கள் மதிய வேளையில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரையிலும்கூடத் தூங்கி எழுகிறார்கள். இதனால், அவர்களுடைய சராசரி இரவு நேரத் தூக்கத்தில் இரண்டு மணி நேரம் குறைந்துவிடக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த இயல்பைப் புரிந்துகொள்ளாத சிலர், 'எனக்கு இரவு நேரத் தூக்கம் குறைந்துகொண்டே வருகிறது’ என்று குறைபட்டுக்கொள்வார்கள்.
வயதானவர்களுக்கு இரவில் சீக்கிரமே தூக்கம் வந்துவிடுகிறதே என்ற கேள்வியை கேட்டிருந்தோம். பொழுதுபோகவில்லையே என்ற அலுப்பு மனநிலைதான் இந்தத் தூக்கத்துக்கான அடிப்படைக் காரணம்.

இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கே தூக்கம் வந்து இவர்கள் தூங்கிவிட்டாலும்கூட நடு இரவு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு விழிப்பு வந்து எழுந்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்குத் தூக்கமும் வராது. வளர் இளம் பருவத்தில் சிலருக்குத் 'தாமதத் தூக்கக் குறைபாடு’ இருப்பதுபோல், வயதானவர்களுக்கு சீக்கிரமே தூங்கிவிடும் பிரச்னையும் (Advanced sleep phase syndrome) இருக்கிறது. இதற்கும் மெலட்டோனின் சுரப்பு மற்றும் ஒளி சிகிச்சை குணம் அளிக்கும். கொடுக்கப்படும் சிகிச்சையின் நேர அளவு மட்டும் வித்தியாசப்படும்.

பெரும்பாலும் வயதானவர்களுக்கு மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற உடல் நலக் குறைபாடுகள் வருவது இயல்பு. இப்படிப்பட்ட நோய்களின் பிடியில் இருந்து மீள்வதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் சகஜமான ஒன்றுதான். ஆனால், இந்த மருந்து மாத்திரைகளேகூட சில சமயங்களில், அவர்களது தூக்கத்தைப் பாதித்துவிடும். எனவே, இது வயதாவதால் ஏற்படக் கூடிய பிரச்னை அல்ல;

வயதோடு கூடிய வேறு பல பிரச்னைகளால் ஏற்படும் சிக்கல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில், பெரும்பாலான ஆண்களுக்கு 'பிராஸ்டேட் என்லார்ஜ்மென்ட்’(Prostate enlargement) பிரச்னை வருகிறது. இவர்கள் இரவுத் தூக்கத்தின்போதே இரண்டு அல்லது மூன்று முறை சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதனாலும் தொடர்ச்சியான தூக்கம் தடைபடும் வாய்ப்பு உள்ளது.

இது தவிர சில பெரியவர்கள் தூக்கத்தின்போதே திடீரென்று அலறியடித்து எழுந்துவிடுவார்கள். குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படும் 'இரவு பயங்கரம்’ பிரச்னை போலவே இதன் அறிகுறிகளும் இருக்கும். தூக்கத்தைப் பொருத்தவரை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இதுபோன்ற சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த அலறல் சத்தம் என்பது நல்ல ஆழ்ந்த தூக்கத்தின்போது ஏற்படும். இந்தப் பிரச்னையை 'ரெம் பிஹேவியர் டிஸ்ஆர்டர்’ (Rem Behaviour Disorder - RBD) என்கிறார்கள். சில சமயங்களில், இவை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, தெளிவான பரிசோதனைக்குப் பிறகே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆராரோ ஆரிராரோ
வலி நீக்கும் வழி!
பொதுவாக வலி இருந்தால் தூக்கம் வராது. ஆனால், வலியைப் போக்குவதற்காக அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் தூக்கம் பாதிக்கப்படலாம். எனவே, இரவில் தூங்குவதற்கு முன்பு தைலம் மற்றும் களிம்பு வகை மருந்துகள் மூலம் நீவி விடும் பழக்கத்தை வலி நிவாரணியாக்கிக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

சிலர் மொத்தமாக பத்து, பதினைந்து மாத்திரைகளை தினந்தோறும் சாப்பிட்டுவருவார்கள். தாங்கள் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை மருத்துவரிடம் காண்பித்து, 'இந்த மாத்திரை மருந்துகளால் ஏதேனும் தூக்கப் பாதிப்பு வருமா’ என்று ஆலோசனை பெற்றுக்கொண்டு சாப்பிடுவது நல்லது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.