எலும்பு தேய்மானம் தடுக்க எளிய டிப்ஸ்!

Ganga

Registered User
Blogger
#1
எலும்பு தேய்மானம் தடுக்க எளிய டிப்ஸ்!

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும் போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால் போதும்.

வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம்.

பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

வயது 30ஐத் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின்&டி அதிகம் உள்ளது. வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.

எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து விட்டு, விடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் செந்தில் குமார்.

ரெசிபி

ஓட்ஸ் புட்டு: ஓட்ஸ் ஒரு கப், பச்சரிசி மாவு கால் கப் ஆகியவற்றை தனியாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி வைக்கவும். இந்த கலவையை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சை சாறு, தாளித்த பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். ஓட்ஸ் புட்டு உடலுக்கு ஆரோக்கிய மானது.

ஆப்பிள் சிப்ஸ்: கடலைமாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வெண்ணெய் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் மற்றும் மிளகாய்த்தூள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். 6 துண்டு ஆப்பிளை தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். மாவைக் கொட்டி அதில் வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இத்துடன் அரைத்த ஆப்பிள் விழுதையும் சேர்த்து பிசையவும். பக்கோடா பதத்தில் உதிரியாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதில் வைட்டமின்&சி, இரும்பு சத்து உள்ளது.

குடைமிளகாய் பனீர் பிரை: 2 கப் பனீரை தனியாக வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குடை மிளகாய் மற்றும் 2 வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் வதக்கவும். இத்துடன் உப்பு, அரை டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கி கடைசியாக வறுத்து வைத்த பனீரை சேர்க்கவும். குடை மிளகாய் பனீர் பிரை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

டயட்

எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க உணவில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘‘உடல் உழைப்பை விட அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல், எந்த வித உடற்பயிற்சியும் இன்றி இருத்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
மேலும் கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு சிறு வயதிலேயே எலும்பு வலுவிழக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட் செய்யப்பட்ட துரித உணவுகள், குளிர்பானங்கள் குடிப்பதும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாகிறது.

எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.

ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும். பெண்களின் மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளா கின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும். மெனோபாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.

பாட்டி வைத்தியம்

வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வெந்தயக் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்.

ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, இத்துடன் குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

ஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.

எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.

அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.

அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.


Tamil Murasu
 

Important Announcements!