எலும்பைக் காக்கும் வைட்டமின் மருந்து....

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எலும்பைக் காக்கும் வைட்டமின் மருந்து


டாக்டர் கு.கணேசன்

நமக்குத் தேவைப்படும் வைட்டமின்களில் இலவசமாகவும் ஒன்று கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். சூரிய ஒளியிலிருந்து இலவசமாக ஒரு வைட்டமின் கிடைக்கிறது. அதன் பெயர், ‘கொலிகால்சிஃபெரால்’ (Colicalciferal). அதாவது, வைட்டமின் D3.

சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) உள்ளன. நம் தோலுக்கு அடியில் கொழுப்பு செல்கள் உள்ளன. அவற்றில் ‘எர்கோஸ்டீரால்’ (Ergosterol) கொழுப்பு உள்ளது. அதனுடன் புற ஊதாக்கதிர்கள் வினைபுரிகிறபோது, ‘கொலிகால்சிஃபெரால்’ உற்பத்தியாகிறது. இப்படித்தான் வைட்டமின் D3 நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

சூரிய ஒளி தவிர, மீன், மீன் எண்ணெய், முட்டை, ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் இது அதிகமாக உள்ளது. சைவ உணவுகளில் காளான் இந்த வைட்டமினை அதிகம் பெற்றுள்ளது. பால், வெண்ணெய், நெய் போன்றவற்றில் இது ஓரளவு உள்ளது. மற்ற சைவ உணவுகளில் இது இல்லவே இல்லை என்பதால், சைவம் சாப்பிடுபவர்கள் தங்களுக்குத் தேவையான வைட்டமின் Dயைப் பெறுவதற்கு, வெயிலைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினமும் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் இந்த வைட்டமின் நம் தேவைக்குக் கிடைத்துவிடும். எனவே, வெயிலில் வேலை செய்கிறவர்களுக்குப் பிரச்னை இல்லை. மற்றவர்களுக்குத்தான் பிரச்னை. இந்தியா ஒரு வெப்பநாடு; விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட நாடு; இதனால் இந்தியர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படாது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

நம் மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. தனித்தனி வீடுகளில் வசிப்பதைத் தவிர்த்து, பெரும்பாலோர் மிக நெருங்கிய பல அடுக்குமாடிக் கட்டிடங்களில்தான் வசிக்கின்றனர். விடுமுறை நாட்களில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் வெயிலில் விளையாடுவது குறைந்துவிட்டது. தொலைக்காட்சி, கணினி, செல்பேசி போன்ற ஊடகங்களுடன்தான் பொழுதைக் கழிக்கின்றனர். விவசாயம் மற்றும் வெளி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அலுவலக நிழலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்கள் உடலில் வெயில்படுவது குறைந்துவிட்டது. எனவே, இவர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்துவிட்டது.

‘இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 75 சதவீதம் பேருக்கு வைட்டமின் D பற்றாக்குறை உள்ளது; 70 சதவீத குழந்தைகளுக்கும் 60 சதவீத கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பிரச்னை உள்ளது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.. இவர்களுக்கெல்லாம் வைட்டமின் Dயை ஊசி, மாத்திரை அல்லது மருந்து மூலம்தான் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மருத்துவத்துறை.

என்ன காரணம்? குழந்தைகளுக்கு இது பற்றாக்குறை ஏற்பட்டால் ‘ரிக்கெட்ஸ்’ (Rickets) எனும் எலும்பு வளைவு நோய் வருகிறது. பெரியவர்களுக்கு ‘ஆஸ்டியோமலேசியா’ எனும் எலும்பு வலுவிழப்பு நோய் வருகிறது. முதுமையில் மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். கர்ப்பிணிகளுக்கு இந்தப் பற்றாக்குறை ஏற்படும்போது அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கும் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் வைட்டமின் D மருந்து தான்.

இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

குழந்தைகளிடம் ரிக்கெட்ஸ் நோய் இருப்பதை முதன்முதலில் 1600ல் கிரேக்கர்கள்தான் கண்டுபிடித்தனர். என்றாலும் அவர்களுக்கு அந்த நோய்க்கான காரணம் தெரியவில்லை. 1800ல் போலந்து மருத்துவர் சியாடெக்கி என்பவர் அவரது வசிப்பிடமான வார்சா நகரில் மாசு நிறைந்த தொழிற்சாலைப் பகுதிகளிலும் நெருக்கடி மிகுந்த சந்துகளிலும் வசிக்கின்ற குழந்தைகளிடம் ரிக்கெட்ஸ் நோய் அதிகம் காணப்படுவதாகவும், அதேவேளையில் வார்சா நகருக்கு வெளியில் வசிப்போரிடம் இது காணப்படவில்லை என்றும் ஒரு புள்ளிவிவரம் சொன்னார். ஆனால் தொழிற்சாலைகள் கக்குகின்ற புகைதான் இதற்குக் காரணம் என்று அவர் தவறாகக் கணித்துவிட்டார்.

1918ல் எட்வர்ட் மெலன்பை எனும் இங்கிலாந்து மருத்துவர், ரிக்கெட்ஸ் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியிருந்தார். வீட்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சில வேட்டை நாய்களுக்குத் தொடர்ந்து ஓட்ஸை மட்டும் உணவாகக் கொடுத்து வந்தார். அந்த நாய்களுக்கு ரிக்கெட்ஸ் நோய் வந்தது. உடனே அவற்றுக்கு ‘காட் லிவர் ஆயில்’ எனும் மீன் எண்ணெயை ஓர் ஆய்வு நோக்கில் கொடுத்தார். சில வாரங்களில் நோய் குணமானது. இதன் மூலம் ‘ரிக்கெட்ஸ் நோய்க்கு சத்துப் பற்றாக்குறைதான் காரணம்’ என்று நிரூபித்தார். அந்தச் சத்து ஒரு வைட்டமினாக இருக்கலாம் என்று ஊகித்தார்.

இவரைத் தொடர்ந்து 1920ல் ஹெஸ், ஸ்டீன் பாக், பிளாக் எனும் மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் எலிகளின் உணவில் புற ஊதாக்கதிர்களைச் செலுத்தி, அந்த உணவை ரிக்கெட்ஸ் வந்த எலிகளுக்குக் கொடுத்துவந்தனர். அவற்றுக்கு நோய் குணமானது. இதன் மூலம் ரிக்கெட்ஸை குணப்படுத்தும் பெயர் தெரியாத ஒரு பொருள் புற ஊதாக்கதிர்களில் உள்ளதை உறுதி செய்தனர்.

அதே ஆண்டில் ஜெர்மனி விஞ்ஞானி விண்டாஸ் என்பவர் கொலஸ்ட்ரால் குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, ‘மனித சருமத்தில் உள்ள கொலஸ்டிராலின் மீது சூரிய ஒளி படும்போது, சருமத்தில் வைட்டமின் D தயாரிக்கப்படுகிறது’ என்று கண்டுபிடித்தார். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் இதற்கு உதவுகின்றன என்றார். இவரே இந்த வைட்டமினின் வேதி அமைப்பையும் கண்டறிந்து சொன்னார். இதற்காக இவருக்கு 1928ல் நோபல் பரிசு கிடைத்தது.

வைட்டமின் டியை மருந்தாக தயாரிக்க மெர்க் நிறுவனத்துக்கு விண்டாஸ் உரிமம் கொடுக்க, அது ஊசி, மாத்திரை, மருந்து எனப் பல விதங்களில் 1927ல் சந்தைக்கு வந்தது. என்னதான் சூரிய ஒளியில் இந்த வைட்டமின் இலவசமாகக் கிடைக்கிறது என்றாலும், இன்றைக்கு உலக அளவில் முக்கால்வாசிப் பேரை அவதிப்படுத்தும் வைட்டமின் டி பற்றாக்குறையைப் போக்க இந்த மருந்துதான் பெரிதும் கைகொடுக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.