எள் - Health Benefits sesame Seed

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எள்


சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பிரபலமான பழமொழி.

உடலுக்கு பலம் தருவதாக, நோய்களை நீக்குகிற திறனைப் பெற்றிருப்பதாலேயே இத்தகைய பெருமைமிக்க பழமொழி எள்ளுக்கு அமைந்தது. எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெயும் பல நன்மைகளைதருவதால்தான் ‘நல்ல எண்ணெய்’ என்ற பொருளில் நல்லெண்ணெய் என அழைக்கப்பட்டு வருகிறது.

எள்ளின் தாவரப் பெயர் Sesamum indicum. இதை ஆங்கிலத்தில் Sesame என்று குறிப்பிடுகிறார்கள். வடமொழியில் திலா என்றும் ஸ்னேஹ பலா என்றும் குறிப்பதுண்டு. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நம் தமிழ்நாட்டிலும் எள் பயிராகிறது. எள்ளில் நிறங்களின் அடிப்படையில் வெள்ளை, கருமை, செம்மை என 3 வகைகள் உள்ளன (காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்றெள் என மேலும் பல வகைகள் உள்ளன.)

இவற்றில் கருப்பு எள்ளே உணவு, மருந்து ஆகியவற்றுக்குப் பொருத்தமானது. சிவப்பு எள் தரம் குறைந்த ஒன்றாகும். நீரைப் போக்கும் குணமும், பாலைப் பெருக்கும் தன்மையும், வெப்பமுண்டாக்கி உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியதும், உடலுக்கு பலம் தரக்கூடியதும், மாதவிலக்கைத் தூண்டக்கூடியதும், மலத்தினை இளக்கக்கூடியதும் ஆகும்.

எள் செடியின் இலைகளை அரைத்து நீரிலிட்டுத் தீநீராக்கி தலைமுடிக்குத் தேய்த்துக் குளிக்க தலைமுடி ஆரோக்கியம் பெறும். மேலும் எள் செடியின் இலைகளை அரைத்து வெண்ணெயில் சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க ரத்த மூலம் தணியும்.எள்ளின் இலைகளுக்கு கொழகொழப்புத் தன்மை உடையதால் சதையின் அழற்சியைப் போக்கி மிருதுவாக்கும். எள்ளின் இலை மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. எள்ளோடு வெல்லம் சேர்த்து செய்யும் பலகாரம் சுவையான உணவாகவும் சுகமான மருந்தாகவும் விளங்கும்.

எள்ளின் இலைகளை இரைப்பை கோளாறுகளுக்கும் சீதபேதிக்கும் அரைத்துக் கொடுத்தால் குணமாகிவிடும். எள்ளை பெண்கள் அதிகமாக உட்கொள்வதால் கரு கலையும் அபாயம் உள்ளது என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

நல்லெண்ணெயின் மகிமை

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், புண்களை ஆற்றுவதிலும் உடலுக்கு உரம் தருவதிலும் சிறப்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நல்லெண்ணெய் அத்தனை சீக்கிரத்தில் கெடாது. கபாலச் சூடு, காதுவலி, சொறி சிரங்கு, ஆறாத புண்கள் இவற்றை ஆற்றும் தன்மையுடையது நல்லெண்ணெய். வாசனைப் பூக்களாகிய ரோஜா, மல்லிகை, சம்பங்கி, முல்லை ஆகியவற்றில் இருந்து நறுமணம் எடுக்க நல்லெண்ணெயையே பயன்படுத்துவர். இந்திய மருத்துவத்தில் எல்லாவிதத் தைலங்களிலும், மருந்தெண்ணெயிலும் நல்லெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைக்கு அவசர உலகில், அந்நிய மோகத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் அறவே போய்விட்டது. இதனால் பலவித சரும நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும், மூட்டுவலித் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கெல்லாம் ஒரு சிறப்பான தடுப்பு முறை மருத்துவமாக எண்ணெய் குளியல் இருக்கிறது. அதனால்தான் ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் (எண்ணெய் வியாபாரி) கொடு’ என்று முன்னோர் சொல்லிச் சென்றனர்.

சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது வேறு ஏதேனும் மூலிகைக் கலவையைக் கொண்டு குளித்தால் சரும நோய்கள் அண்டாது.

எள்ளில் காணும் மருந்துப் பொருட்கள்

நன்கு காய்ந்த 100 கிராம் கருப்பு எள்ளில் எரிசக்தி 29%, மாவுப் பொருள் 18%, புரதச்சத்து 32%, கொழுப்பு 166%, நார்ச்சத்து 31% மற்றும் வைட்டமின்களான ஃபோலியேஜ் 25%, நியாசின் 28%, ரிபோஃப்ளோவின் 19%, தயாமின் 66%, பொட்டாசியம் 10%, கால்சியம் 98% அடங்கியுள்ளது. இவற்றோடு செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், தாது, வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவைகளும் வெகுவாக அடங்கியுள்ளன.

எள்ளின் மருத்துவப் பயன்கள்

1. சருமம் மென்மையாகவும் வளையும் தன்மையுடையதாகவும் இருப்பதற்கு Collagen எனும் வேதிப் பொருள் உதவுகிறது. இதை உற்பத்தி
செய்வதற்கு உதவும் தாது உப்பு எள்ளில் மிகுதியாக உள்ளது. சருமத்தின் இறந்து போன செல்களை மீண்டும் புதுப்பிக்கும் பணிக்கும் தாது உப்பு உதவுகிறது.

2. அதிகமான புரதச்சத்து தரும் சைவ உணவாக எள் திகழ்கிறது.

3. நல்லெண்ணெயை வாயிலிட்டு நன்றாக கொப்புளிப்பதன் மூலம் எண்ணெய் பற்களின் ஊடே சுழன்று, பற்களின் அழுக்குகளை நீக்குவதோடு தாடைக்கும் பலம் தருகிறது, முகமும் பொலிவு பெறுகிறது.

4. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உயர் ரத்த அழுத்தமுடைய சர்க்கரை நோயாளிகளின் பிளாஸ்மா குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

5. நல்லெண்ணெயில் கலந்திருக்கும் Sesamol எனும் வேதிப்பொருள் புத்துணர்வு தருவதும் வீக்கத்தைக் கரைக்கக் கூடியதுமான மருத்துவப் பொருள். இது ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தவிர்க்கக்கூடியது.

6. நல்லெண்ணெயில் பரவி இருக்கும் மெக்னீசியம் சத்தோடு phytate எனும் வேதிப்பொருளும் போதிய அளவில் கிடைக்கிறது. இவை இரண்டும் ஒருசேர நமக்குக் கிடைக்கும் போது ஆசனவாய்ப் புற்று தவிர்க்கப்படுகிறது. இதை அமெரிக்க மருத்துவ ஊட்டச்சத்து வெளியீடு உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு 100 மி.கி. மெக்னீசியம் உபயோகத்தால் 12% ஆசனப்புற்று தவிர்க்கப்படுவதாக அதன் ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

7. நல்லெண்ணெயில் இருக்கும் தாது உப்பு எலும்புகளை உறுதிப்படுத்தவும் எலும்பு பலவீனம் என்கிற ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வராத வண்ணம் இடுப்பு மற்றும் முதுகுத் தண்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அமைகிறது.

‘புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகைஞ்
சத்துவங் கந்தித் தனியிளமை - மெத்தஉண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய் போமெண்ணெய்யாற் போற்று’
- இது நல்லெண்ணெய் பற்றிய அகத்தியர் பாடல்.

நல்லெண்ணெயால் புத்திக்கூர்மை பெறும், கண்கள் குளிர்ச்சி பெறும், உடல் பூரிப்பும் வளமையும் பெறும். இளமையும் அழகும் உண்டாகும். கண் நோய்கள், காது தொடர்பான நோய்கள், மண்டைக் கொதிப்பு, காசநோய், படை, சொறி, சிரங்கு ஆகியனவும் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.

எள் மருந்தாகும் விதம்

1. நல்லெண்ணெயை தினமும் 10 மி.லி. வீதம் காலையில் உள்ளுக்கு சாப்பிட்டு வர இளைத்த தேகம் பூரிப்பு அடையும்.

2. நல்லெண்ணெயை தலைக்கும் உடல் முழுமைக்கும் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருப்பதோடு கண்களிலும் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு மென்மையாக மசாஜ் செய்து விடுவதாலும் கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மண்டைக் குத்தல் ஆகியன மறைந்து போகும். நல்லெண்ணெய் தேய்த்து இம்முறையில் அடுத்தடுத்து 3 நாட்கள் தலை முழுகி வர மேற்கண்ட பலன்கள் உண்டாகும்.

3. எள்ளுப் புண்ணாக்கை மோர் சேர்த்துக் கறி சமைத்து சாப்பிட உடலிலுள்ள சீதளத்தைக் கண்டிக்கும்.

4. அன்றாடம் கருப்பு எள்ளை 20 கிராம் அளவு எடுத்து நன்றாக மென்று தின்றுவிட்டு, குளிர்ந்த நீரைப் பருகிவர உடல் வலிமை பெறுவதோடு பற்களும் பலம் பெறும்.

5. எள் செடியை எரித்து வந்த சாம்பலைத் தயிரின் மேல் தேங்கிய தெளிவோடு சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்த் தடை விலகும், சிறுநீர் தாரை, எரிச்சல், புண்கள் ஆகியன குணமாகும். சிறுநீரகக் கற்களும் நீங்கும்.

6. நெருஞ்சில் முள், எள் மலர், தேன், நெய் இவற்றை சம அளவு சேர்த்து மைய அரைத்துத் தலைக்குத் தேய்ப்பதால் வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.

‘உணவே மருந்து… மருந்தே உணவு’ என ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத வகையில், நம் முன்னோர்கள் நம் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் வகுத்துச் சென்றுள்ளனர். அவ்வகையில் உணவும் மருந்துமாக நாம் எள்ளைக் கிடைக்கப் பெற்றிருக்கிறோம்!

நல்லெண்ணெயால் புத்திக்கூர்மை பெறும், கண்கள் குளிர்ச்சி பெறும், உடல் பூரிப்பும் வளமையும் பெறும். இளமையும் அழகும் உண்டாகும். மேலும் கண் நோய்கள், காது தொடர்பான நோய்கள், மண்டைக் கொதிப்பு, காசநோய், சரும நோய்களான படை, சொறி, சிரங்கு ஆகியனவும்
குணமாகும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.