ஏன் இந்த மன, மண முறிவுகள்?- Reasons for Divorce

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
'உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்'

- இப்படி கவிதை மொழி பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையும் எதிர்த்து, சவால்களை தூசுகளாய்க் கடந்து... காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திருமண வாழ்க்கையை பூரணமாக வாழாமல், கைப்பிடித்த வேகத்திலேயே அந்த உறவிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதும் அதிகரித்து வருகிறது!

இந்தக் காலத்தில் கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய்விட்டது என்கிற நிதர்சனம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இந்த மன, மண முறிவுகள்?

இதைப் பற்றி அக்கறையுடன் நாம் நடத்திய ஆலோசனைகள் இங்கே...
சென்னை, குடும்பநல நீதிமன்றம். விவாகரத்துக்காகக் காத்திருக்கிறார்கள் பல பெண்கள். ''நானும் அவரும் மூணு வருஷமா லவ் பண்ணி, வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டோம். ஒரு நாலு மாசம் வரைக்கும் வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்தது. என் வேலை சம்பந்தமா அடிக்கடி டூர் போக வேண்டி இருக்கும். இதுதான் என் வொர்க் நேச்சர்னு தெரிஞ்சுதான் கல்யாணம் செய்துகிட்டார். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், 'டூர் போகக்கூடாது'னு தினம் தினம் சண்டை, டார்ச்சர். ஒரு லெவல் வரைக்கும் பொறுத்துப் பார்த்து முடியாமதான் இப்ப கோர்ட்டுக்கு வந்தேன்'' என்று அதிக வலியின்றிப் பேசிய அந்தப் பெண்ணுக்கு வயது 25.

''நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ அவர் என்கூட பஸ்ல வருவார். பார்த்ததும் புடிச்சுப் போச்சு. செகண்ட் இயர் படிக்கும்போது எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவசரமா நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா, பொருளாதாரப் பிரச்னைகளை அவரால சந்திக்க முடியலை, என்னோட சின்ன தேவைகளைக்கூட நிறைவேத்த முடியலைங்கறது அப்புறம்தான் புரிஞ்சுது. இதனால தினம் சண்டை போட்டுக் கஷ்டப்படுறதைவிட, பிரிஞ்சு போயிடறதுனு முடிவு பண்ணிட்டேன். இப்ப டைவர்ஸ் கேஸுக்கு ஆகற செலவைக்கூட என் அம்மா, அப்பாதான் பார்த்துக்குறாங்க'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லும் இந்தப் பெண்ணுக்கு வயது 22!

காதலைக் குலைக்கும் 'ஈகோ'!

''நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறையில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை'' என்று சுடும் உண்மையைச் சொல்லி ஆரம்பித்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்,

''எல்லாவற்றிலும் வேகம், வேகம் என்று ஓடும் இந்தத் தலைமுறையினர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, 'நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண்டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்?' என்கிற ஈகோ தலைக்குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்'' என்று எதார்த்தத்தை எடுத்து வைத்தார்.

அதிகம் படித்தவர்கள்தான் அதிகம்!

நீதிமன்றத்துக்கு இப்படி அவசரப்பட்டு வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை தருவதற்காகவே பிரத்யேகமாக கவுன்சலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது... ''விவாகரத்துக்காக வரும் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை கவுன்சலிங் கொடுக்கிறோம். 21-28 வயதுக்காரர்கள், 'இதுதான் தீர்வு' என்று தீர்மானித்துவிட்டே இங்கே வருகிறார்கள். நாங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும், அவர்கள் பொறுமையுடன் கேட்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

அதிகம் படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க 'நான்' என்கிற ஈகோவுடன்தான் எங்கள் முன் அமர்கிறார்கள். எங்களிடம் வருகிற நூறு கேஸ்களில் ஒரு ஜோடிதான், மீண்டும் தம்பதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற 99 ஜோடிகளும் தனித்தனியாகவே பிரிந்து நடைபோடுவது துயரம்'' என்று கனத்த மனதுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

'அவன் என்னை டாமினேட் பண்றான்!'

''மறுகல்யாணம் வரை தீர்மானித்துவிட்டே... நீதிமன்றம் ஏறுகிற காதல் தம்பதிகளும் உண்டு. உண்மை, சிலசமயங்களில் கற்பனையைவிட பயங்கரமானதாக இருக்கும் என்பதை இம்மாதிரியான வழக்குகளில் இருந்துதான் தெரிந்து கொள்கிறோம்'' என்று அதிர வைக்கிறார் மற்றொரு வழக்கறிஞரான சுதா.

''சாட்டிங்கில் பேசி, பழகி வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, ஒரு வருடம் முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமலேயே விவாகரத்து வாங்கிப் போன வழக்குகளையும் நீதிமன்றம் பார்த்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஏற்படுகிற 'எதிர்பாலின ஈர்ப்பை' காதல் என்று நம்பி கல்யாணம் செய்துகொண்டு, சில வருடங்கள் போன பின்பு, 'இது காதல் அல்ல... எனக்கு ஏற்ற ஜோடி இது அல்ல' என்று நீதிமன்றம் நாடுகிறவர்கள், 'நானும் அவன் அளவுக்கு சம்பாதிக்கிறேன், அப்புறம் எதுக்கு என்னை டாமினேட் பண்றான்?' என்று கேட்கும் வழக்குகள், மனைவி வேலைக்குப் போவது பிடிக்கவில்லை, அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று வரும் வழக்குகள், 'அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க', 'அவ எப்பவும் கம்ப்யூட்டர்ல சாட் பண்ணிட்டே இருக்கா' என்று வரும் வழக்குகளில் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்தான்'' என்று தான் சந்தித்த வழக்குகளை அடுக்குகிறார் சுதா.

காதல் தம்பதிகளிடம் ஏன் விவாகரத்து பெருகிறது என்ற கேள்விக்கு, மனநல மருத்துவர் ஷாலினியின் பதில்...

''
இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவன் பார்த்து வளர்ந்த அவன் அம்மாவைப் போல்... வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதிர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக்கிறாள், படித்து இருக்கிறாள், உலகம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்... ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்கிறாள். ஆனால், பெண்ணின் மனதில் இருப்பதோ... இந்தத் துணை, நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கைதான். இந்த எதிர்பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவாகரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.

இது தவறு, சரி என்று சுட்டிக் காட்டுவதற்கும், வழி காட்டுவதற்கும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என்று உறவுகள் அவர்கள் அருகில் இல்லை. அல்லது அந்த உறவுகளுக்கு இவர்களின் பிரச்னை போய் சேருவதில்லை. இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தனித் தீவாகத்தான் வாழ்கிறார்கள். தொழில் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் இந்தப் பிரச்னை எழுந்தது. உலகமயமாக்கலால் எழுந்துள்ள தொழிற்புரட்சியால் இன்று நாமும் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறோம்'' என்றவரிடம், இதற்குத் தீர்வுதான் என்ன என்றோம் கவலையுடன்.
''மாறும் குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!''என்றார் ஷாலினி வேண்டுகோளாக!


சமூகவியல் பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ''மேலைநாட்டின் தொழில்நுட்பம், உணவு, உடை நம்மை ஆக்கிரமிக்கும்போது அவர்களது கலாசாரமும் நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. மேலைநாடுகளைப் போல் இங்கும் இனி 'சிங்கிள் மதர்ஸ்' அதிகம் இருப்பார்கள். அதை நோக்கித்தான் நகர்த்துகிறது இந்த வேகமும் தொழில் புரட்சியும். 80-கள் வரை விவசாயம் சார்ந்த நம் வாழ்க்கை முறையில் உறவுகள், வாழ்க்கை மதிப்பீடுகள், திருமணம் எல்லாவற்றுக்கும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் இருந்தது. இன்று நம் நாட்டில், குறிப்பாக... தமிழ்நாட்டில் விவசாயம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதால் அதனுடன் தொடர்புடைய சமூக கலாசாரம், திருமணம் எல்லாமே கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது'' என்று மாறி வரும் சூழ்நிலையைச் சொன்னார்.

விவாகரத்துகள்... சில உண்மைகள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது. இவற்றுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் சிவில் கோர்ட்டுகளிலும் தினசரி விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.
1980-களில் ஓராண்டுக்கே 20 - 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண்கள் 3%, 2011-ல் 6%.

மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெருநகரங்களில் விவாகரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிருக்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலையில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத்துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 85 சதவிகிதத்தினர்.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
பகிர்வுக்கு நன்றி .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.