ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை


By
டாக்டர் என். கங்காரோஜாச் செண்டு போல் பொக்கை வாயுடன் பால் வாசனையும் சேர்ந்து கன்னத்தில் குழி விழ சிரித்த குழந்தைக்கு கை கால்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்துவிடும்!

தவழ நடக்க ஆரம்பித்துவிட்டால் அம்மாவுக்குத் தினமும் ஓட்டப் பந்தயம் தான்.

8 மாதங்கள் விரல்களையும் உள்ளங்கையையும் தரையில் பதித்து சிறு பொருள்களைப் பிடிக்கத் தொடங்கும் குழந்தை 9 மாதங்கள் முடியும் போது மிகவும் நேர்த்தியாக கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் பயன்படுத்தி சிறு பொருட்களையும் பொறுக்க ஆரம்பிக்கும். பொறுக்குவதுடன் வாயிலும் போட்டுக் கொண்டு விடுமே!

இதுதான் சீரான உணவுப் பழக்கங்களை ஆரம்பிக்கச் சரியான தருணம். எல்லாவற்றையும் வாயில் போட்டு கடித்து ருசி பார்க்க ஆரம்பிக்கும் இந்த பருவத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1-2 வயதிற்குள் 3 வேளை உணவு, காலை 11 மணி மற்றும் மாலை 4 மணிக்கு சத்தான சிறு உணவுகள் (Mid morning and evening snacks) என்று பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் பிறகு சாப்பாடு நேரம் போர்க்களமாக ஆகாது. சாப்பாட்டைப் பார்த்தாலே வெளியே ஓடிப் போயிடறான், உமட்டுகிறான், வயிற்றை வலிக்கிறது வாந்தி என்றெல்லாம் அம்மாக்கள் புலம்பத் தேவையில்லை.

270 நாட்கள் அதாவது 9 மாதம் முடிந்தவுடன் தட்டம்மை தடுப்பு ஊசி (measles vaccine) போட வேண்டும். மணல் வாரி அம்மை, விளையாட்டு அம்மை என்று பல பெயர்களுடன் அழைக்கப்படும் இந்த அம்மை விளையாட்டு விஷயம் இல்லை. சில சமயம் மூளையைக் கூட பாதிக்கலாம்.

அம்மை கண்டுவிட்டால் 3 மாதங்களுக்கு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகப் போய்விடும். அதனால் பிரச்னை தான். தட்டம்மை தடுப்பு ஊசி அரசு மருத்துவமனைகளில் கூட கிடைக்கிறது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த வகை அம்மையின் தாக்கமும், தீவிரமும் அதிகம்! எனவே கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த பருவத்தில் உங்கள் குறும்புக்காரக் குழந்தைக்கு முட்டை, மீன், ஈரல், சிக்கன் போன்றவற்றை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கலாம். 9 மாதங்களில் தான் அசைவ உணவுகளில் உள்ள கொழுப்புச் சத்தை ஜீரணிக்கின்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கின்றன. வேலை செய்யவும் தொடங்குகின்றன. வேக வைத்த (அவித்த) கோழி முட்டையைத் தர ஆரம்பிக்கலாம்.

மஞ்சள் கருவை முதலில் தர வேண்டும். வெள்ளைக் கருவில் அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய ovoglobulin நிறைய இருக்கிறது. எனவே முதல் 2-3 வாரங்கள் மஞ்சள் கருதான் பாதுகாப்பானது. முட்டையை ஏதாவது ஒரு வகையில் சமைத்துத் தர வேண்டும். பச்சை முட்டையில் நோய்க் கிருமித் தொற்று இருக்கலாம். சமைக்கும் போது இது அழிந்துவிடும்.

பயோடின் (Biotin) என்ற வைட்டமின் சத்தும் அதிகம் கிடைக்கிறது. சமைத்த முட்டையை ஜீரணம் செய்வதும் உங்கள் பிஞ்சுக்கு எளிது. 2-3 வாரங்கள் மஞ்சள் கரு, பிறகு வெள்ளைக் கருவும் சேர்த்து மெதுவாக 1-2 மாதங்களில் முட்டையைப் பழக்கலாம். முதலில் 10 நாட்களுக்கு வயிறு உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்றவை குழந்தைக்கு ஏற்படலாம். அளவைக் குறைத்து 2 நாட்கள் விட்டு பிறகு தரலாம். Go slow. Method தான். கோழி, மீனின் மென்மையான பகுதிகள் என்று ஒவ்வொன்றாக அதிக காரம், மசாலா இல்லாமல் தரலாம். அசைவ சூப்களும் தரலாம்.

மட்டனில் கரையாத நார்ச்சத்து (insoluble fibre) அதிகம். அதனால் 2 வயது முடிந்த பின் உங்கள் வாண்டுக்கு கடைவாய்ப் பற்கள் முளைத்த பிறகு கொடுக்கலாமே! அசைவப் பொருட்களில் ஒருவித அங்கக அமிலம் (organic acid) உள்ளது. அதுதான் இந்த வாசனையை 1 – 1 1/2 வயதிற்குள் பழக்கிவிட வேண்டும். இல்லாவிடில் குழந்தை 5-6 வயது வரை சைவம் தான் விரும்பிச் சாப்பிடும். அதன் பின்னர் ருசி புரிந்து அசைவம் சாப்பிட்டால்தான் உண்டு.

தாய்ப்பால் தொடர்ந்து தர வேண்டும்.

தேவையானால் வீட்டுக்கு வாங்கும் மாட்டுப் பால், டம்பளரால் தரலாம். காபி, டீ, போன்றவையும் மற்ற போஷாக்குப் பானங்கள் உயரமாவதற்கு ஒன்று, எடை கூட ஒன்று, அறிவாளியாக இருக்க ஒன்று, விளையாட்டில் ஜொலிக்க ஒன்று – இதெல்லாம் எங்கள் MBBS புத்தகங்களில் இல்லையே!? இவையெல்லாம் எப்படி நமது நாட்டில், வீட்டில் விஷச் செடிகளாக முளைத்தன. இவை ஏதும் தேவையில்லை.

குழந்தைக்கு 5 வேளை திட உணவுத் தர வேண்டும். காலை, முற்பகலில் ஒரு முறை, மதியம், மாலை, இரவு என்று இவற்றை பிரித்துக் கொள்ள வேண்டும்.காலையில் இட்லி, இடியாப்பாம், தோசை, ஊத்தப்பம், உப்புமா, பொங்கல் போன்றவை! சர்க்கரை தொட்டுத் தரக் கூடாது. சட்னி, சாம்பார், குருமா எல்லாம் பழக்குங்கள்.

முற்பகலில் வாழைப்பழம், ஆப்பிள், வேக வைத்த முட்டை, காய்கறிகள் போன்றவற்றைத் தரலாம். மதியம் லன்ச். சாமார் / ரசம் அல்லது பருப்பு சாதம் பிறகு தயிர் சாதம் என்று பழக்க வேண்டும். மாலை நேரம் தானியக் கலவை. கஞ்சி, கூழ், களி, புட்டு, இட்லி, தோசை போன்றவையும், இரவில் சாதம் அல்லது இட்லி தோசை கொடுக்கலாம்.

இதைத் தவிர பழ ஜூஸ், இளநீர், லஸ்ஸி, சூப் என்று இடை இடையே தரலாம். தூங்கிய பிறகு பால் தர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அழுதால் மட்டும் பால் தரலாம். பாட்டிலில் பால் / ஜூஸ் தரக் கூடாது.
கன்னம் குழியச் சிரிக்கும் குட்டிப் பயலுக்கு விரல்களை உபயோகிக்கத் தெரிந்துவிட்டது. சாப்பாட்டில் கை வைக்க விடுங்கள். எடுத்துச் சாப்பிட பழகட்டும். இடது கை, வலது கை என்று மாற்றி மாற்றி தட்டில் கை வைப்பார். பரவாயில்லை! தடுக்காதீர்கள். கைகளை, நகங்களை சுத்தமாக பராமரியுங்கள்.

குழந்தை உங்களை நன்கு கவனிக்கும். விடாமல் தொடர்ந்து கவனிக்கும். நீங்கள் உங்கள் கைகளைக் கழுவி, குழந்தையின் கைகளையும் கழுவி, தட்டு, கப் போன்றவற்றையும் சுத்தம் செய்து சாப்பாடு தர ஆரம்பித்தால் அதே போல் குழந்தையும் செய்யும். நல்ல பழக்கங்கள் தானாக மனத்தில் படியும்.
புதிய தட்டு, கலர் கலரான டம்ளர், கப், ஸ்பூன் என்று பயன்படுத்தினால் குழந்தையை அது குஷிப்படுத்தும். சாப்பாடு நேரத்தை மகிழ்ச்சியாக்க முயற்சிக்க வேண்டும். டிவிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சாப்பாடு தர வேண்டாம். கார்டூன் படம் காட்டி சாப்பிட வைப்பது வேண்டவே வேண்டாம்.

நாய் பூனையைத் துரத்த, பூனை எலியைத் துரத்த, வலுவற்ற எலியை பூனை அடிக்க, பூனையை நாய் அடிக்க ஒன்றை ஒன்று ஏமாற்றித் தப்பிக்க – ஏன் இந்த வன்முறை? ஏமாற்றும் வேலை ஆகிய நஞ்சு விதைகளை பிஞ்சு மனத்தை ஏன் தூவ வேண்டும்? உணவு ஊட்டுங்கள். உங்கள் விரல்களால் அல்லது ஸ்பூனால் ஊட்டுங்கள்.

ஒரு வயது முடியும் போது வீட்டில் தயாரிக்கும் எல்லா வகையான உணவு வகைகளையும் குழந்தைக்கு பழக்கியிருக்க வேண்டும். இதைத்தான் உலக சுகாதார நிறுவனம் Feeding from family pot என்கிறது. Feeding from மாவு டின் என்று சொல்லவில்லை. கவனித்தீர்களா?

ஒரு ஆச்சரியமான உண்மையைச் சொல்லவா? ஒரு வயதுக் குழந்தை தன் அம்மா சாப்பிடுவதில் பாதி சாப்பிட வேண்டும். சரியான உணவுப் பழக்கங்களைக் கையாண்டால் இது நிச்சயம் நடக்கும். ஒரு வயதில் குழந்தைக்கு 1000 கலோரியும் 25 கிராக் புரோட்டீனும் தினமும் தேவை. 2000 கலோரியும், 50 கிராம் புரோட்டீனும் தேவை. அம்மா நான்கு இட்லி சாப்பிட்டால் குழந்தை 2 இட்லி சாப்பிட வேண்டும்.

என்ன பெரிய ஆராய்ச்சி மாதிரி எழுதுகிறீர்கள் என்றாள் சுட்டிப் பாப்பா அனன்யாவின் அம்மா பூமா.

ஆமாம்! குட்டிச் செல்லத்திற்கு சாப்பாடு ஊட்டுவது, பழக்குவது என்பதெல்லாம் பெரிய கலை. Training, workshop, course எதிலும் கலந்து கொள்ளாமலேயே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிக்கலான ஒரு நுண் கலை.

அதற்கு குழந்தையே உங்களுக்கு பல அனுபவப் பாடங்களைச் சொல்லித் தரும். அக்கா, அண்ணி, நாத்தனார், மாமியார், அம்மா, குடும்ப டாக்டர் எல்லோரும் சக மாணவர்கள் போல தங்களுடைய அனுபவங்களை, அதாவது தன் குழந்தையின் பழக்கங்களை செயல்பாட்டை வைத்து தாங்கள் என்ன புரிந்து கொண்டார்களோ அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

குழந்தைகள் பலவிதம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதத்தில் தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணமாக ஒரு குழந்தைக்கு இட்லி பிடிக்கும். இன்னொரு பூவிற்கு பூரி பிடிக்கும். ருசி என்பது குழந்தையின் தனி உலகம். நாம் உள்ளே நுழைய முடியாது.

வீட்டில் உள்ள ஒவ்வொருவர் சாப்பிடும் போதும் நம் வீட்டு வி ஐ பிக்கு ஒரு தனி சீட். தனித்தட்டு. அதில் சிறு சிறு துண்டுகளாக இட்லி அல்லது தோசை, சாதம், சமைத்த காய்கறிகள் இவற்றைப்போட்டு வையுங்கள். உங்கள் பாப்பா இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றி எடுத்து வாயில் போட்டு, கடித்து விழுங்கி, துப்பி, ஜொள்ளு வடிய சிரிக்கும் பாருங்களேன்! இதைக் கண்டு ரசிக்காத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

அவன் முகம்,நெஞ்சு, வயிறு எங்கும் உணவு அபிஷேகமாக, சில சமயம் பக்கத்தில் இருப்பவருக்கும், தட்டைத் தூக்கி விசிறி அன்ன அபிஷேகம் செய்வானே அந்த அழகின் விலை என்ன?

திருவள்ளுவரின் குறள் ஞாபகம் வருகிறதா?

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.