ஓட்டலில் சாப்பிடாதீர்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஓட்டலில் சாப்பிடாதீர்கள்


வீட்டில் அம்மாவோ, மனைவியோ செய்கிற இட்லியை ரப்பர் பந்துக்கும், தோசையை வரட்டிக்கும் ஒப்பிட்டுக் கிண்டலடித்துக் கலாய்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். ‘இட்லி, தோசையை விட்டா வேற ஒண்ணுமே கிடையாதா?’ என அலுத்துக் கொள்கிறவர்கள், வெளியே ஓட்டலுக்கு சென் றால் முதலில் ஆர்டர் செய்வதும் அதே இட்லி,தோசையாகத்தான் இருக்கும்.

‘வீட்ல இப்படி பஞ்சு மாதிரி வெள்ளை வெளேர்னு இட்லி வருதா?

முறுகலா,பொன்னிறமா தோசை செய்யத் தெரியுதா’ என அங்கேயும் வீட்டுச் சாப்பாட்டை கேலிப் பொருளாக்கத் தவறுவதில்லை நாம். பஞ்சு போன்ற வெள்ளை வெளேர் இட்லிக்கும், முறுகலான, பொன்னிற தோசைக்கும், இன்னும் சுளை சுளையான பரோட்டாவுக்கும், மிருதுவான சப்பாத்திக்கும் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் தெரிந்தால் ஓட்டல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டீர்கள்!


இட்லிக்கு மாவரைக்கும்போது பழைய சாதத்தைக் கலந்து அரைக்கிறார்கள். பழைய சாதம் ஆரோக்கியமானதுதானே என்று நினைக்கலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களுக்கு இந்த இட்லி நல்லதில்லை. கோதுமையின் கழிவுப்பொருள்தான் மைதா. மைதா உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றே பலரும் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்த மைதாவில்தான் விதவிதமான பரோட்டா செய்கிறார்கள். குறிப்பாக, நாம் விரும்பி சாப்பிடும் தோசை முறுகலாக வர கடலை மாவும் சர்க்கரையும் சேர்க்கிறார்கள். நீளமாக, மெலிதாக வரக் காரணம் தோசை மாவில் பாதிக்குப் பாதி சேர்க்கப்படுகிற மைதா. சப்பாத்தியிலும் இதே கதைதான்!

‘‘ஓட்டல் உணவுகளில் முக்கியமாக நான்கு ஆபத்துகள் இருக்கின்றன’’ என்ற சஸ்பென்ஸோடு ஆரம்பிக்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை நிபுணரான பாசுமணி. ‘‘இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுகள் அதீத வண்ணங்களோடோ, கவர்ச்சிகரமாகவோ இருப்பதில்லை. இதனால் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ஓட்டல்களில் செயற்கையானநிறமிகளை (Colouring agents) சேர்க்கிறார்கள். இந்த நிறமிகள் தோல் அழற்சி, குடல் அழற்சி, ஆஸ்துமா, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது, எலும்புக் குறைபாடுகள் என பல பிரச்னைகளை ஏற்படுத்துபவை.

இரண்டாவது, வீட்டில் பயன்படுத்துவதைவிட உப்பு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தேவைக்கதிகமாக உப்பு பயன்படுத்துவதாலேயே ஏற்படுகிறது. மூன்றாவது அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய். நல்ல கொழுப்பை (Polyunsaturated fat) தரும் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில் சமைத்த உணவில் பிரச்னையில்லை. ஆனால், கெட்ட கொழுப்பை உண்டாக்கும் (Saturated fat) டால்டா, நெய், திருப்பித் திருப்பி சூடாக்கப் பட்ட எண்ணெய், மிருகக் கொழுப்பில் இருந்து கிடைக்கும் வெண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் ஆபத்தானவை.

உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று பல நோய்களை ஏற்படுத்துபவை. இயல்பாகவே, கார்போஹைட்ரேட் என்கிற மாவு உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கிறோம். இதனால், கொழுப்போடு அதிகம் சேர்க்கிற மாவு உணவுகளும் சேர்ந்து இரண்டு பக்கமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தம் அதிகமான, உடல் உழைப்பு குறைவான வேலை செய்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். இந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டும் ஏற்படுத்தும் நோய்கள் அதிகம்.

நான்காவதாக ஓட்டல் உணவுகளில் அதிகம் இருக்கும் இனிப்பு. ஸ்வீட் வகைகளில் மட்டும்தான் அதிக இனிப்பைச் சேர்க்கிறார்கள் என்று இல்லை. சாதாரணமாக ஜூஸ்வகைகளில் கூட அதிக சர்க்கரை சேர்த்துத்தான் கொடுக்கிறார்கள். ஓட்டல் காபியில் டம்ளரின் அடியில் சர்க்கரை நிறைய இருப்பதைப் பார்க்க முடியும். இந்த அதிகப்படியான சர்க்கரையும் கெட்ட கொழுப்பாகவே மாறுகிறது. இந்த காரணங்களோடு முக்கியமான இன்னொரு காரணம் சுகாதாரம்... ஓட்டலில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பலவியாதிகள் சுத்தமில்லாமல் உணவைக் கையாள்வதாலேயே வருகிறது.

தவிர்க்க முடியாமல் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால், தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்துக்காக கொஞ்சம் மெனக்கெடு வதோ, செலவு செய்வதிலோ தவறு இல்லை. சூடான உணவுகளை சாப்பிடுவது ஓரளவு பாதுகாப்பானது. சாலட், ஜூஸ் மற்றும் ஆறிப்போன உணவுகளில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு அதிகம். பொரித்த உணவுகள், உப்பு அதிகமாக இருக்கிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. முடிந்த வரை அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள்தான் நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சாதாரணமாகவே,லாப நோக்கத்தோடு கலப்படப் பொருட்களையும் தரமற்ற பொருட்களையும் பயன்படுத்துகிறவர்கள், அசைவ உணவில் என்னென்னவெல்லாம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பது பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

தரமான இறைச்சியாக இருந்தால் கூட மாதக்கணக்கில் இறைச்சிகளைப் பத்தி ரப்படுத்தி வைக்கும் வசதி வந்துவிட்டது. இறைச்சி மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்பிரின், நோவால்ஜின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகளைச் சேர்த்து சமைக்கிற கொடுமையெல்லாம் நடக்கிறது. அதனால், வெளியிடங்களில் அசைவத்தை தவிர்ப்பதே சிறந்தது’’ என்று எச்சரிக்கிறார் பாசுமணி.

ஓட்டல்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் என விளக்குகிறார் திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பாளர்சங்கரலிங்கம்...

‘‘உணவகங்கள் முற்றிலும் வணிகமயமானவை. பணமே அங்கு பிரதானம் என்பதால் உணவுப் பொருட்கள் மற்றும் உணவின் மூலப்பொருட்கள் என அனைத்திலும் கலப்படம் செய்கிறார்கள். முழு சாப்பாடு வழங்கும் உணவகங்களை பலரும் விரும்பிச் செல்வதற்கான காரணம் வயிறார சாப்பிட முடியும் என்கிற எதிர்பார்ப்புதான். ஆனால், குறைவான அளவு சாப் பிட்டதுமே வயிறு நிறைந்துவிடுகிறது. காரணம், சாப்பாடு தயார் செய்யும்போது
அதனுள் சுண்ணாம்புக்கட்டி, களிப்பாக்கு, சோடா உப்பு ஆகியவற்றை கலந்து விடுவதுதான்.

இனிப்பு பண்டங்களில் சேர்க்கப்படும் கேசரி பவுடர் 100 பி.பி.எம். (Parts Per Million) அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், 200 முதல் 400 பி.பி.எம். அளவு வரை நிறத்துக்காக சேர்க்கின்றனர். கார உணவுப்பொருட்களில் நிறத்துக்காக ஸிலீஷீபீணீனீவீஸீமீ ஙி என்னும் ரசாயன பவுடரை சேர்க்கின்றனர். இன்று துரித உணவகங்கள் என்ற பெயரில் வேற்று நாட்டு உணவுகள் நிறைய கிடைக்கின்றன. இந்த உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கென மோனோ சோடியம் க்ளூட்டமைட் (விஷிநி) பயன்படுத்துகிறார்கள். இந்த விஷிநி உணவுப் பொருட்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எவ்விதத் தடையுமின்றி விற்கப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் தேநீரின் மூலப்பொருளான டீத்தூளிலும் கலப்படம் இருக்கிறது.

பயன்படுத்தித் தூக்கிப் போடுகிற டீத்தூளை காய வைத்து, துணிக்குப் போடும் சாயத்தைக் கொண்டு நிறமேற்றி, புதிய டீத் தூள் போல் மீண்டும் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். உயர்தர உணவகங்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய், தயாரிப்பு முடிந்த பின்னர் மலிவான விலைக்கு மற்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது’’ என்று வரிசையாகப் பட்டியலிடுகிறார்.இது போன்ற கலப்பட உணவுகளை உண்ணும்போது என்னென்ன ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்? என்று உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘‘இட்லி மென்மையாக இருக்கக் கலக்கிற சோடா உப்பு உடலுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் பி ஊட்டச்சத்தை கிடைக்கவிடாமல் தடை செய்யும். அது மட்டுமில்லாமல், அசிடிட்டி, அல்ஸர் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். சுவைக்காகச் சேர்க்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோ சோடியம் க்ளுட்டமைட் பசியின்மை, நரம்புத்தளர்ச்சி, அஜீரணம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இனிப்பு பண்டங்களில் கேசரிப் பவுடர் கலப்பது வயிற்று வலியையும், புண்களையும் ஏற்படுத்தும். இந்தக் கலப்படம் புற்று நோயை உண்டாக்கவும் காரணியாக இருக்கிறது.

மொத்தத்தில் நாம் குடிக்கிற தண்ணீரில் இருந்து கடைசியாக மெல்லும் சோம்பு வரையில் ஓட்டல் உணவுகளில் இருக்கும் ஆரோக்கியக் கேடுகள் நிறைய. முடிந்தவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்று அதிர்ச்சி கிளப்பினார். எப்போதாவது ஓட்டலில் சாப்பிடுவதே ஆரோக்கியக் கேடு என்றால், ஓட்டலில் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால்... கடவுளே!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.