ஓவர் படபடப்பு... உடம்புக்கு ஆகாது

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஓவர் படபடப்பு... உடம்புக்கு ஆகாது!

டாக்டர் அபிலாஷா

'காலையில எட்டு மணிக்குள்ள பையனையும் அவரையும் ஆபீஸ் அனுப்பணுமே’, 'நாளைக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றாங்க... என்ன செய்யப் போறேனோ..?’, 'ஆபீஸ்ல இன்னிக்கு மீட்டிங்னு சொல்லியிருக்காங்க... என்ன நடக்குமோ..?’இப்படி எதற்கெடுத்தாலும் பதற்றப்படுபவரா நீங்கள்? இதனாலேயே, 'அவ அப்படித்தான். ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் ஓவரா பதற்றப்படுவா?’ என்று சுற்றத்தால் கேலி செய்யப்படுபவரா?

எனக்கு தன் பிரச்னையை மெயில் செய்திருந்த அந்த வாசகி.

''எங்க வீட்டுல என்னை ரொம்ப சாஃப்ட் நேச்சர்டா வளர்த்துட்டாங்க. அதனாலயோ என்னவோ தெரியல, சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ரொம்பப் பதற்றமாயிடுறேன். எந்த விஷயத்தையும் பதற்றமில்லாம என்னால முடிக்க முடியல. இதோ... இப்பக்கூட 'பொங்கலுக்கு எல்லோருக்கும் புது டிரெஸ் வாங்கணும்!’கிறதை சந்தோஷமா எதிர்கொள்ளாம, 'ஐயோ, பொங்கலுக்கு எல்லோருக்கும் புது டிரெஸ் வாங்க ஷாப்பிங் போகணுமே, டிரெஸ் எல்லாம் சீக்கிரம் தைக்கக் கொடுத்து வாங்கணுமே, பொங்கல் அன்னிக்கு அவரோட ஃப்ரெண்டை வீட்டுக்கு இன்வைட் பண்றதா சொன்னாரே’னு ஒவ்வொரு விஷயமும் பதற்றத்தைதான் தருது. இதனாலேயே கணவரும் பிள்ளைங்களும் 'பதற்ற கேஸ்’னு கேலி பண்றாங்க!'' என்று சென்றது வாசகியின் மெயில்.'அதீத பதற்றம் ஒரு நோயா?’ என்றால், ஆம்’ என்பதுதான் பதில்! இது அதிகமான பயத்தின் வெளிப்பாடு. ஆங்கிலத்தில் இந்நோயை ‘Anxiety’ என்பார்கள். மனநலன் சார்ந்த இன்னும் பல பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது. சின்னச் சின்னப் பிரச்னைகள் தொடங்கி, உயிரிழப்பு வரை பதற்றம் காரணமாக அமையலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் அநாவசிய, அதீத பதற்றத்தால் கவனச் சிதறல், அதிக வியர்வை, நாக்கு வறண்டு போவது, தூக்கமின்மை, தன்னம்பிக்கை இழப்பது, சோர்வு, கோபம் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.

அவர்களால் ஒருபோதும் இயல்பாக இருக்க முடியாது. சின்னச் சின்ன வேலைகளைக்கூட பதற்றத்துக்கு உரியதாக கற்பனை செய்துகொண்டு, பிரச்னைகளைப் பெருக்குவார்கள். இது, பத்தில் இருவருக்கு இருக்க வாய்ப்புள்ள நோய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களைக் காட்டிலும் பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்றாலும், குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாரும் இந்நோயின் பிடியில் சிக்கலாம்.

சமீபத்தில் அதீத பதற்ற நோயால் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் என்னிடம் வந்திருந்தார். ''வீட்டுல காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டாலே படபடப்பு வந்துடுது. வீட்டுல சொன்னா எல்லாரும் கேலி செய்றாங்க. ஒருநாள், கணவர் வெளியூருக்குப் போயிருந்தாரு. வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு அசதியா வந்து உட்கார்ந்தேன். திடீர்னு யாரோ காலிங் பெல் அடிக்க, ரொம்பப் பதற்றமாயிட்டேன். 'வெளியூர் போனவருக்கு ஏதாவது ஆபத்தா... யாரு வந்திருக்காங்களோ, என்ன சொல்லப் போறாங்களோ?’னு என் கையெல்லாம் நடுங்கி, வேர்த்துக் கொட்டிருச்சு.

நெஞ்சு படபடக்க கதவைத் திறந்தா, என் தோழி நிக்கிறா. நான் நின்ன கோலத்தைப் பார்த்து, 'என்னாச்சு?’னு கேட்க, விஷயத்தைச் சொன்னதும் கேலி பண்ணினதோட, மத்தவங்ககிட்டயும் என் பதற்றத்தைப் பத்தி சொல்லி கேலிப்பொருளா மாத்திட்டா. இப்போ, 'அவ அப்படித்தான்’னு முத்திரை குத்திட்டாங்க. என் உணர்வைப் புரிஞ்சுக்க யாருமே இல்லை!'' என்றார் கண்ணீருடன்.

குணமாக்க உத்தரவாதமுள்ள நோய் இந்தப் பதற்றம் என்பது, ஆறுதலான செய்தி. இந்த நோயால் பாதிக்கப் பட்டவரின் முதல் தேவை... சக உறவுகளின் புரிதலும், அரவணைப்பும்தான்.

அடுத்தது, தாமதிக்காத, முறையான சிகிச்சை. இதில் முதல் தேவை பூர்த்தியாகிவிட்டாலே, 50 சதவிகித பிரச்னை சரியாகிவிட்டது போலத்தான். ஆம்... நெருங்கிய உறவின் புரிதலும், அரவணைப்புமே அதிலிருந்து அவர்களை மீட்கவல்லது. ஆனால், அது கிடைக்காதபட்சத்தில் எழும் மனஅழுத்தம் தற்கொலை வரை இழுத்துச் சென்றுவிடும். எனவே, நோயில் இருந்து குணம் பெற, பாதிக்கப்பட்டவரின் உறவினர், நண்பர்கள், சுற்றத்தின் ஆதரவு எப்படி இருக்க வேண்டும் என்றால்...

1 முதல் படியாக, அவர்களின் அதீத பதற்றம் குறித்து கேலி, கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான பெண்கள், கணவனால்தான் கேலிக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 பதற்ற நோய் உள்ளவர்களுக்கு ஒருபோதும் இன்ப அதிர்ச்சி கொடுக்காதீர்கள்.


3 மனம் கோணாத வகையில் அவர்களின் பிரச்னையைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.


4 'என்னால் குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர முடியும்’ என்று பாதிக்கப்பட்டவர்களை உங்கள் ஆதரவுடன் சபதம் மேற்கொள்ளச் செய்யுங்கள்.


5 பதற்றத்தை தூர வைத்துவிட்டு, அவர்களிடம் உள்ள பிற பாஸிட்டிவ் விஷயங்களைச் சொல்லி பாராட்டுங்கள்.


6 அவர்கள் முன்னிலையில் எந்த விஷயத்துக்கும் எமோஷனல் ஆகாதீர்கள். பின் அவர்கள் ஓவர் எமோஷனல் ஆவார்கள்.


7 அவர்களின் இந்த நோய்க்காக நீங்கள் பல தியாகங்களைச் செய்கிறீர்கள் என்ற குற்ற உணர்ச்சியை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள்.


8 பிரச்னையை சரிசெய்யும் மருத்துவ சிகிச்சைக்கு அவரை உட்படுத்துவதிலும், குணமாக்குவதிலும் அக்கறை கொள்ளுங்கள்.

சரி, இனி சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பிரச்னையில் இருந்து மீள எடுக்க வேண்டிய சுயநடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்.

சிலர்தான் தங்களுக்கு அதீத பதற்ற நோய் இருக்கிறது என்பதை உணர்ந்து, மருத்துவரை அணுக முடிவெடுப்பர்கள். சிலரோ, தங்களின் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே மாட் டார்கள். அப்படியே பிரச்னையை வீட்டில் சொன்னாலும், தாங்கள் வேண்டும் புரிதலும் அரவணைப்பும் கிடைக்காமல் ஒரு கட்டத்தில் விரக்தியடைவார்கள்.

எனவே, இந்நோய் உள்ளவர்கள் தங்களின் பிரச்னையைத் தன்னைப் புரிந்துகொண்ட ஒருவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். பின் அவரின் உதவியுடன் மருத்துவரை அணுகுங்கள். ஒருவேளை புரிந்துகொள்ள யாரும் இல்லை என்றால், நீங்களாகவே மருத்துவரை அணுகுங்கள்.

அப்படி எங்களிடம் வரும் அதீத பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நாங்கள் இந்த நோய் குறித்த புரிதலையும், அதிலிருந்து மீள வேண்டிய ஆலோசனைகளையும் வழங்குவோம். பின், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னச் சின்ன பயிற்சிகள் மூலமாக அதிலிருந்து மீண்டு வர வழிகாட்டுவோம்.

அதை தொடர்ந்து பின்பற்றச் சொல்லுவோம். நோயின் கட்டத்தைப் பொறுத்து, மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்கள் பதற்றத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுவதுமாக மீள்வார்கள்!

உள்ளங்கை வியர்க்க, உள்நெஞ்சு படபடப்பவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் புரிந்ததா?!
- ரிலாக்ஸ்...
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.