கடித்துச் சாப்பிடலாமா? ஜுஸ் குடிக்கலாமா

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கடித்துச் சாப்பிடலாமா? ஜுஸ் குடிக்கலாமா?
ருத்துவமனைகளில் உடல்நிலை சரியில்லாதவர்களைப் பார்க்கப் போனால், அவர் அருகில் ஒருவர் அமர்ந்து சாத்துக்குடியை ஜூஸாக்கித் தருவார். நோயாளியோடு சேர்த்து நமக்கும் ஒரு டம்ளர் ஜூஸ் கிடைக்கும். இப்படி எப்போதாவதுதான் ஜூஸ் குடித்துவந்தோம். மிக்ஸியின் வருகை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கியது. இன்று மூலை முடுக்கெல்லாம் ஜூஸ் கடைகள். ஆனால், கடித்துச் சாப்பிட வேண்டிய பழத்தை ஜூஸாகக் குடிப்பது சரியா?
ஒரு பழம்! நிறைய சத்துக்கள்!
ஒவ்வொரு தாவரத்துக்கும் அதன் பழங்களுக்கும் எனப் பிரத்யேக நிறங்கள், ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் கனிந்து, சூரிய ஒளியைக் கிரகிக்கும்போது, அதில் ‘உயிரியல் செயல்முறை’ (Biological activity) நிகழ்கிறது. இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீரியம் பெறுகின்றன. பழங்களின் தோல்பகுதியில்தான் இந்தச் சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. குறிப்பாக, கார்டினாய்டு, ஃப்ளேவனாய்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பழங்களில் நிறைவாக உள்ளன. இவை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை எதிர்க்கக்கூடியவை. அதனால்தான், பழங்களைக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்கிறோம். பழச்சாறு தயாரிக்கும்போது, முதலில் தூக்கி எறியப்படும் பகுதி, தோல். இதனுடன் ஊட்டச்சத்துக்களும் தூக்கி எறியப்படுகின்றன.

சத்துக்களைச் சிதைக்கிறோம்
100 கிராம் பழத்தில், ஐந்து கிராம் நார்ச்சத்து உள்ளது என்றால், அதை சாறாக்கும்போது, முற்றிலும் அழித்துவிடுகிறோம். பழத்தின் தோல், உள்ளிருக்கும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சிதைக்கும்போது, அதில் உள்ள வைட்டமின்கள் (நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்), தாதுஉப்புக்கள் உடைக்கப்படுகின்றன. இதனுடன் தண்ணீர் சேர்கையில் உடைந்த சத்துக்கள் நீர்த்துப்போகிறது. தவிர, ஒரு நிமிடத்துக்கு மிக்ஸியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பிளேடு சுழற்றப்படுகிறது. இதனால், வெளிப்படும் சிறிய வெப்பம் சில வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அழித்துவிடுகின்றன.

சர்க்கரையை அதிகரிக்கும் பழச்சாறு
ஒரு கிளாஸ் பழச்சாறுக்கு இரண்டு மூன்று பழங்களாவது தேவைப்படும். எங்கும் நிறையப் பழங்களைக்கொண்டு பழச்சாறு தயாரிப்பது இல்லை. பழத்துடன் தண்ணீர் அல்லது பால், ஐஸ்கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால், இருக்கும் சத்துக்களும் நீர்த்துப்போய்விடுகின்றன. கடைசியில், பழத்தில் இருக்கும் சர்க்கரையான ஃப்ரக்டோஸ் (Fructose) மட்டுமே மிஞ்சியிருக்கும். இதனுடன், சுவைக்காக மேலும் சர்க்கரை சேர்க்கப்படும். இவை அனைத்தும், பழச்சாறு அருந்தியதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க நாமே வழிவகுக்கிறோம்.

சர்க்கரை என்ன செய்யும்?
அதிக அளவிலான சர்க்கரையை, கல்லீரல் நேரடியாகக் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கத் தொடங்கும். பழச்சாறோடு, சர்க்கரை சேர்கையில், ஃப்ரக்டோஸ் கல்லீரலில் சேர்ந்து, கொழுப்பாக மாறிவிடும். இன்சுலின் செயல்திறன் குறைவு, கல்லீரல் தொடர்பான நோய்கள்கூட ஏற்படலாம்.

செரிமானம் சமநிலையை இழத்தல்
சத்துக்கள் நீக்கப்பட்ட இனிப்பு நீர்தான் பழச்சாறு. பெரிய பலன்கள் எதுவும் இல்லை. பழச்சாறு அருந்தும்போது, திடீரென்று உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். பழச்சாறு குடித்தால், செரிமானம் உடனடியாகவும் வேகமாகவும் நடைபெறும். செரிமானம் என்பது மெதுவாக நடைபெற வேண்டிய செயல். சமநிலை அல்லாத திடீர் மாற்றங்களோடு நடைபெறும் செரிமானம், நம் உடலுக்கு ஏற்றது அல்ல. தினமும் சர்க்கரை சேர்த்த பழச்சாறு குடிப்போருக்கு, சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை மெதுவாக அதிகரிக்கலாம்.

தீர்வு என்ன?
சில குழந்தைகள் பழங்களைச் சாப்பிட மறுப்பார்கள், சில நோயாளிகளால் பழங்களைக் கடித்துச் சாப்பிட முடியாது. அதுபோன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பழச்சாறு அருந்தலாம்.

முடிந்த அளவுக்குச் சர்க்கரை, பால், நீர் சேர்க்காத, அடர்த்தியான பழச்சாறாக அருந்தலாம்.

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பழச்சாறுதான் உள்ளன. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றால், பழச்சாறைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே, பழச்சாறு அல்லது சாலட் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், உங்கள் தேர்வு சாலடாக இருக்கட்டும்.

மயக்கமடைந்தவர், உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர், பற்கள் இல்லாதவர், விரதத்தை முடித்தவர் பழச்சாறைப் பருகலாம்.

எலுமிச்சைப் பழத்தைக் கடித்துச் சாப்பிட முடியாது. ஆகவே, எலுமிச்சையைச் சாறாக அருந்தலாம்.

கடையில் விற்கும் ரெடிமேடான பழச்சாறுகளைத் தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளி, உடல் எடை அதிகரித்தவர், கல்லீரல் பாதிக்கப்பட்டவர், சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் பழச்சாறு அருந்துவதைத் தவிர்க்கலாம்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,734
Likes
2,587
Location
Bangalore
#2
Re: கடித்துச் சாப்பிடலாமா? ஜுஸ் குடிக்கலாம&#30

மிகவும் உபயோகமாக உள்ளது
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.