கண் இமை நோய்களில் இருந்து விடுதலை!

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
உடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு கண். அதிகம் வெயிலில் அலைவது, சரியான உணவு முறையைப் பின்பற்றாமல் இருப்பது, கண்பாதுகாப்பில் கவனக்குறைவு, இடைவிடாமல் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது, கிருமித் தொற்று ஆகிய காரணங்களால் பல கண் நோய்கள் ஏற்படுகிறது. கண்களைப் பாதுகாப்பதில் இமைகளுக்கு பெரும் பங்கு உண்டு. கண் இமைகளைத் தாக்கும் நோய்கள் வராமல் பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் செல்வரங்கம்.

கண் இமைகளில் அடிக்கடி தோன்றுவது கட்டிகள். இவை இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது. திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் கிளேண்ட் எனும் சுரப்பியில் ஏற்படுவது வெளிக்கட்டி ஆகும். இதுவே கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் கிளாண்ட்ஸில் ஏற்பட்டால் அது உள்கட்டி எனப்படுகிறது. வெளிக்கட்டியில் அதிக வலி ஏற்படும்.

உள் கட்டியோ நாள்பட்ட கட்டியாக இருப்பதால் வலி குறைவாக இருக்கும். இதற்கு சிலர் சுயமாக வைத்தியம் செய்ய முயற்சிப்பது வழக்கம். கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்களில் கட்டி ஏற்பட்டால் களிம்பு, சொட்டு மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் கட்டிக்கு தீர்வு காணலாம். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். சுடு தண்ணீரில் கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம். இது போல் கண்கட்டி அடிக்கடி ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டியது அவசியம். கண்ணின் உள்புறத்தில் நாள்பட்ட கட்டி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி கட்டி வருதல் போன்ற பிரச்னைகள் இருப்பின் கட்டியை பயாப்சி சோதனை செய்து காரணத்தை கண்டறிய வேண்டும். சில சமயங்களில் அது புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக சர்க்கரை வியாதி அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு கண் கட்டியாக துவங்கி முகத்திலும் பரவ வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்டமாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். கண் இமையில் தோன்றும் இன்னொரு பிரச்னை கண் இமை துடிப்பது ஆகும். வலது, இடது கண்ணில் ஏற்படும் துடிப்புக்கு ஏற்ப பலன் சொல்லும் ஆட்கள் இன்னும் உள்ளனர். எப்போதாவது இமை துடித்தால் பயப்படத் தேவையில்லை. சிலருக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும் போது கண்ணில் துடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு காரணம் இன்றி எப்போது பார்த்தாலும் இமை துடித்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களைப் பார்த்து பேசவே சிரமப்படுவார்கள். இது போல் கண் இமை தொடர்ந்து துடிக்கும்போது மருத்துவ சிகிச்சை அவசியம்.

வயதான பின்னர் கீழ் இமைகளில் உள்ள கொழுப்பு சத்து குறைந்து இமை உள்புறமாகவோ, வெளிப்புறமாகவோ திரும்பிவிட வாய்ப்புள்ளது. இதனால் கண் உறுத்துதல் மற்றும் பூளை கட்டுதல் பிரச்னை இருக்கும். வெளிப்புறமாகத் திரும்பினால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கண் இமைகளில் வீக்கம் ஏற்படும் போது பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.

கண்களை மூடுவதில் சிரமம் ஏற்படும். கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள், சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும். கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல், இமை முடிகள் கொட்டிப் போதல், தூங்கும்போது பூளை கட்டுதல், இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும்.

இமை முடிகளில் தலையில் உள்ள பொடுகு போல் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி களிம்பு பயன்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். .

டயட்

கண் இமை நோய்களைத் தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறை குறித்து டயட்டீசியன் சங்கீதா கூறியதாவது: கண் மிக மெல்லிய தோலால் ஆனது. கண் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்படியான அமைப்பில் உள்ளது. கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல், கண் இமைகளில் கட்டி, கண்கள் வீங்குதல் மற்றும் கண்நோய் போன்ற பிரச்னைகள் வரும். இமை வீக்கத்துக்கு கிருமித் தொற்று முக்கிய காரணம். இதனால் கண்களில் அரிப்பு ஏற்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் இது போன்ற பிரச்னைகள் வரலாம்.

கண்ணில் பயன்படுத்தப்படும் மேக்கப் சாதன அலர்ஜியால் பிரச்னை வரலாம். இதற்கு கண்களை மூடிக் கொண்டு லேசாக வெப்ப ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்தால் போதும். வெளியில் சென்று வந்த பின்னர் சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவ வேண்டியதும் அவசியம். பொதுவாக குழந்தைகள், கம்ப்யூட்டர் திரை பார்த்தபடி வேலை பார்ப்பவர்கள், அதிக வெளிச்சம் மற்றும் அழகுக்கலைஞராக இருப்பவர்களுக்கும் இமை வீக்கம் உள்ளிட்ட நோய்கள் வரும்வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சரிவிகித சத்துணவை பின்பற்ற வேண்டும். அதிகளவில் பழங்கள் சாப்பிட வேண்டும். இதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் கிடைக்கும். தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர், தயிர் தினமும் சேர்க்கவும். அதிக புரதம் உள்ள உணவுகளும் தினமும் அவசியம். சமையலில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். என்கிறார் சங்கீதா.

ரெசிபி

குடைமிளகாய் சாதம்: குடை மிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் வேகவைத்த சாதம் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சைமிளகாய் 1, பூண்டு 10 பல், இஞ்சி சிறு துண்டு, தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சாதத்தையும் சேர்த்து வதக்கவும். இதில் போதுமான அளவு வைட்டமின் சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும்.

சப்பாத்தி பிரை: சுட்ட சப்பாத்தி 4ஐ எடுத்து பொடித்துக் கொள்ளவும். வெங்காயம் 1, தக்காளி 1, இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கரம்மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பொடி வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். கடைசியில் பொடித்த சப்பாத்தி சேர்த்து வதக்கவும். கடைசியில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

பாட்டி வைத்தியம்

புளிய மரத்தின் பூவை அரைத்து கண்கள் மீது வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டிக் கொண்டால் கண் வலி உடனே குறையும்.

புளியாரைக் கீரையுடன் வேப்பந்துளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

புளியாரைக் கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து அவித்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும். இதனால் கண் பொங்குதல் உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன், மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் சேர்த்து சூப் வைத்து 48 நாட்களுக்கு குடித்தால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையில் இருந்து சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து தைலம் தயாரிக்கவும். இதனை தலைக்கு தடவி குளித்து வருவதன் மூலம் கண் புகைச்சல், கருவிழிநோய், கண் அழுத்தம் குணமாகும்.

மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் வெள்ளைத் துணியை நனைத்து பிழிந்து கண்ணில் ஒற்றி வந்தால், சிவந்த கண்கள், கண் காந்தல், கண்களில் உண்டாகும் கட்டி, பார்வைக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் தீரும்.

மஞ்சள் தூள், விளக்கெண்ணெய், உப்பு மூன்றையும் ஒன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் கண்ணுக்குக் கீழ் இருக்கும் கருவளையம் மறையும்.

மஞ்சள் தூளை வாணலியில் போட்டு லேசாக வறுத்து, துணியில் கட்டி, கண்ணில் ஒத்தடம் கொடுத்தால் கண்ணில் நீர் வடிதல் பிரச்னை குறையும்.

மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் கண்களில் நீர் வடிவது நிற்கும்.
-Tamil murasu
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
nice information
Thanks 4 sharing Ganga sis....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.