கனவுகள்-கனா காணும் காலங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கனா காணும் காலங்கள்


குட்நைட்

எழுந்ததும் மறந்துவிடுவது, பாதி தூக்கத்தில் பதறி எழ வைப்பது, திரும்பத் திரும்ப வருவது என கனவுகள் பலவகை என்பதைப் போலவே அதைப் பற்றிய அபிப்பிராயங்களும் பலவகை. பலிக்கும்... இல்லை... அவை ஆழ்மனதின் ஆசைகள் என்று கனவுகள் குறித்து பல மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... மருத்துவ ரீதியில் கனவுகள் ஏன் வருகின்றன, பயமுறுத்தும் கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என தூக்க நல மருத்துவரான ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

‘‘முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். கனவுகள் வருவதால் உடல்நலத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உடல்நலப் பிரச்னைக்கும் கனவுகளுக்கும் சம்பந்தமே இல்லை. தூக்கத்தில் நான்காவது நிலையான REM sleep எனப்படும் ஆழ்நிலை தூக்கத்தின்போது வரும் கனவுகள்தான் நினைவில் இருக்கும். மற்ற தூக்க நிலைகளில் வரும் கனவுகள் மறந்துவிடும். ஒருவர் 10 மணிக்கு தூங்கச் செல்கிறார் என்றால் ஒன்றரை மணி நேரம் கழித்து 20 நிமிடம் வரை ஆழ்நிலை தூக்கம் இருக்கும்.

அடுத்த ஒன்றரை மணி நேரம் கழித்து 40 நிமிடங்களாக ஆழ்நிலை தூக்கம் அதிகரிக்கும். இந்த நேரங்களில்தான் நினைவில் நிற்கக் கூடிய கனவுகள் வருகின்றன. இதில் முக்கியமான இன்னொரு விஷயம், ஆழ்நிலை தூக்கம் சரியான அளவில் இருந்தால்தான் காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வானத்தில் பறப்பது, மிருகங்கள் துரத்துவது, மாடியில் இருந்து குதிப்பது போன்ற கனவுகளும் பெரும்பாலானவர்களுக்கு வரும். இப்படியான கனவுகள் வருவதற்கு நிறைவேறாத ஆசைகள், பயங்கள்தான் அடிப்படை காரணமாக இருக்கும். சிலர் வீடு, கார் வாங்குவதுபோல கனவுகளை காண்பார்கள். இது அவர்களின் மனதில் உள்ள ஆசையையே குறிக்கிறது. தண்ணீர் மேல் பயம் உள்ளவர்களுக்கு நீச்சல் தெரியாமல் நீர்நிலையில் மாட்டிக் கொள்வது மாதிரியான கனவுகள் வரும்.

சிலர் தொடர்ச்சியாக கனவுகள் வருகிறது என்பார்கள். அதாவது, தூக்கத்தில் வரும் கனவானது இடையில் முழிப்பதால் நின்று மீண்டும் தூங்க ஆரம்பிக்கும் போது தொடரும். மனதை பாதித்த ஏதாவது ஒரு விஷயம்தான் இவ்வாறு வெளிப்படும். பரீட்சைக்கு போய் கேள்வித்தாள் முன் உட்கார்ந்து விடை தெரியாமல் விழிப்பது போல வரும் கனவு பிரபலமானது.

Fear of Failure என்ற வகை மனபயம்தான் இதற்கு காரணம். எங்கே நமது வாழ்வில் நினைத்த லட்சியங்களை அடைய முடியாமல் போய்விடுமோ என்கிற பயத்தின் குறியீடுதான் இந்தக் கனவு. எதிர்கால வாழ்க்கை குறித்த பயம் வருகிறபோதெல்லாம் இவ்வகை கனவுகள் வரும். நாய்கள் மீது பயம் உள்ளவர்களுக்கு நாய் விரட்டும் கனவுகளும், பாம்பின் மீது பயம் உள்ளவர்களுக்கு பாம்பு துரத்துவது போலவும் கனவுகள் வரும்.

சிலநேரம் உள்மனதில் இருக்கும் விஷயங்களும் கனவாக வரும். குழந்தைகளுக்கு வண்ணமயமான கனவுகள் வரும். காமிக்ஸ் புத்தகம் போல சின்ட்ரெல்லா, மிக்கி மவுஸ், பனிமலை, டிஸ்னிலேண்ட் போன்றவை வரும். அவர்களுக்கு சரியாக சொல்லத் தெரியாது. பெற்றோர்களால் அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு யாரோ அடிப்பது போல கனவுகள் வரும். எதிர்காலத்தை எல்லாம் கனவுகளில் கணித்துச் சொல்ல முடியாது.

கனவுகள் பலிக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல்ரீதியான ஆதாரங்களும் இல்லை. போதை மருந்துகள், மாத்திரைகள் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்களுக்கு பயங்கரமான கனவுகள் வரும். போதை மருந்துகள் மூளையில் உள்ள சுரப்பிகளை தேவைக்கு அதிகமாகத் தூண்டிவிடுவதும் முக்கிய காரணம்.

மது அதிகமாக அருந்துபவர்களுக்கும் மோசமான கனவுகள் வரும். இவர்கள் தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுவார்கள். இவர்களின் ஆழ்நிலை தூக்கமான REM sleep நேரமானது வெகுவாக குறையும். இதனால் புத்துணர்ச்சியான உறக்கம் இருக்காது. எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள். வேலைகளை சரிவர செய்ய இயலாமல் போகும். இப்படியுள்ளவர்கள் சரியான தூக்க நல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து உறங்கும் முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கனவுகளால் பாதிப்புகள் உண்டா என்று பலர் கேட்பார்கள். சிலருக்கு பயங்கரமான கனவுகள் வந்து வியர்த்துக் கொட்டி எழுவார்கள். கனவுகளால் தூக்கம் கெடுகிறது, அடுத்த நாள் வேலைகள் பாதிக்கிறது என்பார்கள். இவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளையோ, தேவைப்பட்டால் சிகிச்சைகளையோ எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி சாதாரண கனவுகளால் பாதிப்புகள் எதுவும் இல்லை.

சிலர் மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களில் மாட்டி தப்பி இருப்பார்கள். இதனால் அவர்களது மனமானது பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும். ஏதாவது பேரிடர்களில் மாட்டிக் கொண்டிருப்பதுபோல அவர்களுக்கு அடிக்கடி கனவுகள் வந்து அச்சுறுத்தும். இதுபோன்ற மனரீதியான பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு வரும் கனவுகளை மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து குறைக்க முடியும்’’ என்கிறார்.

கனவுகளுக்கு உளவியல் ரீதியான காரணங்களை விளக்குகிறார் உளவியல் நிபுணர் லட்சுமி பாய்.‘‘உளவியலின் தந்தையான சிக்மண்ட் பிராய்ட் கனவுகள் பற்றி நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறார். அவரது கூற்றின் படி, நமது ஆழ்மன எண்ணங்களும் நிறைவேறாத ஆசைகளுமே கனவுகளாக மாறுகின்றன. நிறைவேறாத ஆசைகள் Conscious mindல் இருந்து Subconscious mindக்கு சென்றுவிடும். அவை கனவுகளாக வெளிவரும்.

கனவுகள் பலவிதமாக வெளிப்படும். குறியீடுகளாக வரும், சில கனவுகள் படங்களாகவும் வரும். முழுக்காட்சி வடிவமாகவே சில கனவுகள் வரும். சினிமா பார்ப்பதுபோல காட்சிகள் துல்லியமாகத் தெரியும். சிலருக்கு பயங்கரமான கனவுகள் வந்து அலறியடித்து படுக்கையிலிருந்து எழுவார்கள். இதை நைட்மேர் (Nightmare) என அழைப்பார்கள். ஒருவருக்கு சுனாமியில் மாட்டிவிடுவோமோ என்ற பயம் இருந்தால் அது சார்ந்த கனவுகள் வந்து பயமுறுத்தும். எண்ணங்கள்தான் கனவுகளுக்கு அடிப்படை.

நமது வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயங்கள், வேலையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், மனதில் உள்ள வெளியே சொல்ல முடியாத போராட்டங்களும் கனவுகளாக வரும். பிறந்த குழந்தைக்கும் கனவு வருகிறது. அதனால்தான் சில குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்கிறார்கள். கனவுகள் பலிக்கும் என்பதற்கு மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால், மனதில் திரும்பத் திரும்ப நினைக்கும் விஷயங்கள், அடிக்கடி காண்கிற கனவுகள் செயல்வடிவம் பெற்று வாழ்க்கையையே மாற்றும். இதனால்தான், முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், எதிர்காலம் குறித்த கற்பனைகளை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தில் இளைஞர்களை நோக்கி ‘கனவு காணுங்கள்’ என்று கூறினார்.

ஒருவர் ஐ.ஏ.எஸ். ஆகிற லட்சியத்தில் இருப்பார். அந்த எண்ணமானது அவரது கனவில் வெளிப்படும். அதை முறையாக அணுகினார் என்றால் முயற்சி செய்து உண்மையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வாய்ப்பும் இருக்கிறது. நல்ல கனவுகள் செயல்களாக மாறி வழிநடத்த ஆரம்பிக்கும். சிலருக்கு கனவுகள் ஆன்மிக அனுபவமாகக் கூட இருக்கும். கனவில் கடவுள் வந்து கோயில் கட்ட சொன்னார் என சொல்வார்கள். சொன்னபடி கோயில், அறக்கட்டளை என ஆரம்பித்து மக்களுக்கு தொண்டு புரிவார்கள். இவை எல்லாம் நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு.

இதற்கும் கனவுகள் பெரும் துணை புரிகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இறப்பைப் பற்றியே ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறப்பு சார்ந்த பயம் தான் சதா சர்வகாலமும் அவரை அப்படி நினைக்க வைக்கிறது.

அவரது கனவுகளும் இறப்பு பற்றியதாக அமையும். அவர்களின் தூக்கத்தை கெடுக்கும். எனவே எதிர்மறை எண்ணங்களை உங்களின் வாழ்க்கையில் குறைத்துக் கொண்டால் மோசமான கனவுகள் வராது. திருமணம் நிற்பதுபோல கனவு வருதல், நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காதது போன்ற கனவுகள் வருவது எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடேயாகும். நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு உற்சாகமான கனவுகள் வரும்.

கனவுகளை சரியான முறையில் கையாண்டால் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை உணர அவர்களுக்கு கனவுகள் உதவி செய்யும். இதனால் தங்களுக்கு வரும் தடைக்கற்களை கூட தகர்த்து தொடர்ச்சியான வெற்றிகளை பெறுவார்கள்.

கனவுகளைப் பொறுத்தவரை உணர்வு ரீதியாக அணுகாமல் உளவியல் ரீதியாக அணுகினால் எவ்வித மனப்பிரச்னைகளும் வராது. கனவுகள் பலிக்கும் என்ற பயத்தை விடுங்கள். கனவுகள் உண்மை வாழ்க்கையில் நடக்கும் என்பதற்கு மருத்துவ ரீதியாக நிரூபணம் எதுவுமில்லை. கனவின் மூலம் ஏற்படும் பய உணர்வை விடுத்து இயற்கையாக வாழ்க்கையை எதிர்கொண்டாலே பிரச்னைகள் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

கனவுகளால் அடிக்கடி தூக்கம் கெடுகிறது. பய உணர்வு அதிகமாகிறது என்பவர்கள் மட்டும் மனரீதியான ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு பிரச்னையை சரி செய்ய முயலவேண்டும்.’’

பரீட்சைக்கு போய் கேள்வித்தாள் முன் உட்கார்ந்து விடை தெரியாமல் விழிப்பது போல வரும் கனவு பிரபலமானது. Fear of Failure என்ற வகை மனபயம்தான் இதற்கு காரணம். எங்கே நமது வாழ்வில் நினைத்த லட்சியங்களை அடைய முடியாமல் போய்விடுமோ என்கிற பயத்தின் குறியீடுதான் இந்த கனவு. எதிர்கால வாழ்க்கை குறித்த பயம் வருகிறபோதெல்லாம் இவ்வகை கனவுகள் வரும்.


 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.