கருக்குழாய் கர்ப்பம் - Fallopian tube pregnancy

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]கருக்குழாய் கர்ப்பம்[/h]மாதவிலக்கு தள்ளிப் போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் அந்தக் கர்ப்பம் ஆரோக்கியமானதா, கர்ப்பப் பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத் தாய் அறிய வாய்ப்பில்லை.

‘‘கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக் குழாயில் வளர்ந்தால், அந்தக் கருவைக் காப்பாற்ற முடியாது. கவனிக்காமல் விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா. கருக்குழாய் கர்ப்பம் எனப்படுகிற இதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

‘‘இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து, கருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச் சென்று கர்ப்பப் பையினுள் வைக்கிறது. கர்ப்பப் பையினுள் அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ, சிதைந்து போயிருந்தாலோ, கருவானது கர்ப்பப் பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு, கருக்குழாயிலேயே தங்கி வளரத் தொடங்கும். கர்ப்பப் பை மட்டுமே கருவைத் தாங்கி, அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளர முடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச் செய்துவிடும். கருக்குழாயின் மிகக் குறுகிய பகுதிக்குள் வளரும் போது, இந்த வெடிப்பு இன்னும் சீக்கிரம் நடக்கும். சில நேரங்களில் கருவானது, குழாயிலேயே அழுகிப் போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும், கருவானது கர்ப்பப் பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரியாவிட்டால், கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம்.

ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா எனக் கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்ற முடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து, கருக்குழாயைப் பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால், கருக்குழாயையும் நீக்க வேண்டி வரும்.

இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால், அந்தப் பெண் பயப்படத் தேவையில்லை.

கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள், பிறகு மறுபடி குழந்தை வேண்டி, வெட்டப்பட்ட குழாய்களை இணைக்கிற ரீகேனலைசேஷன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பார்கள். அந்தப் பெண்களுக்கும் இப்படி கருத்தரித்து, குழாயில் கரு தங்கி வளரும் வாய்ப்புகள் அதிகம்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.