கருப்பை நோய்களுக்கு சித்தா டிப்ஸ்!

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
கருப்பை நோய்களுக்கு சித்தா டிப்ஸ்!உணவு முறை, வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண்களின் கருப்பையை தாக்கும் நோய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கருப்பையில் தோன்றும் கட்டிகளின் விளைவாக குழந்தையின்மை, மாதவிலக்கு கோளாறு மற்றும் பல்வேறு தொல்லைகளை பெண்கள் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வுகள் குறித்து சித்த மருத்துவர் சர்மிளா ஆலோசனை சொல்கிறார். மகப்பேறு என்பது பெண்களுக்கு மிக முக்கிய மானது. கருப்பையில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால், தாய்மை பல பெண்களுக்கு ஏக்கமாக மாறிவிட்டது.

இது குறித்த தெளிவின்மையால் சிறு பிரச்னை பெரிதாக உருவெடுத்து வாழ்க்கையை புரட்டி போடுகிறது. இனிமேல் நமக்கு குழந்தையே பிறக்காதோ என்ற எண்ணம் மேலோங்குவதால் மகிழ்ச்சி தொலைவில் போய்விடுகிறது. பெண்கள் கருப்பையில் ஏற்படும் சிறிய கோளாறுகளை அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகி சரி செய்து கொள்வதன் மூலம் குழந்தைப்பேறு அடைய முடியும்.

10 வயதுக்குள் பெண் குழந்தைகள் பூப்பெய்தும் பிரச்னையும் தற்பொழுது அதிகம் காணப்படுகிறது. மற்றொருபுறம் 13 வயதுக்கு மேலும் பூப்படைவதில் தாமதம் ஆகும் பிரச்னையும் கூடியிருக்கிறது. உடல் வளர்ச்சிக் கோளாறு, சிறு வயதில் இருந்தே பீடித்திருக்கும் நாள் பட்ட வியாதிகள் அதாவது டிபி, சத்து பற்றாக்குறை போன்றவையும் பூப்படைவதில் தாமதம் ஏற்படக் காரணமாகின்றன. இதே போல் மூளையில் கட்டிகள், பிறவிக் கோளாறுகளும் பூப்படைதலில் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணமாக உள்ளன. 13 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் பூப்படையாமல் இருந்தால் மகளிர் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதே போல் மாதவிலக்கு நேரத்திலும் பெண்களுக்கு பல தொல்லைகள் உண்டாகின்றன. மாதவிலக்கு தள்ளிப் போதல், ரத்தப்போக்கு குறைவாக இருத்தல், கட்டுப்பாடு இல்லாமல் அதிகளவில் ஏற்படுதல், வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகின்றன. ஹார்மோன் குறைபாடுகள், ரத்தம் உறையும் தன்மை குறைதல், பைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதவிலக்கு பிரச்னை உண்டாகலாம். கருப்பை 3 அடுக்குகளாக உள்ளது. இதில் கருப்பையில் திசுக்கள் உருவாகாமல் பிற அடுக்குகளில் சென்று உட்பக்கத்தில் கட்டிகளாக உருவாகிறது.

இதுவே மாதவிலக்கு காலத்தில் வலி போன்ற பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. வெள்ளைப் போக்கு, உறுப்புகளில் சுத்தம் பேணாமல் இருப்பது மற்றும் கிருமித் தொற்று போன்ற காரணங்களாலும் கருத்தரிக்க முடியாமல் போகலாம்.பெண்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் குழந்தைப் பேறு இல்லாதபட்சத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். ஆண், பெண் இருவரிடமும் பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. பெண்ணின் முட் டைப் பையில் ஏற்படும் பிரச்னைகளாலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகலாம்.

ஓவரியில் ஏற்படும் பிரச்னைகளான பாலிசிஸ்டிக் கட்டிகள், உடல் எடைக் குறைபாடு, மன அழுத்தம், பெலோபியன் குழாயில் அடைப்பு இப்படி ஏதாவது ஒரு காரணத் தால் கருத்தரிப்பதில் பிரச்னை உண்டாகலாம். சர்க்கரை நோய், ஹைப்போ தைராய்டு, சுற்றுப்புற சூழல், புகையிலை பழக்கம் போன்றவற்றாலும் குழந்தையின்மை ஏற்படலாம். எனவே கருப்பையில் ஏற்படும் அடிப்படை பிரச்னைகளை தொடக்கத்திலேயே கண்டு பிடித்து சரி செய்வது அவசியம்.
பாதுகாப்பு முறை: பெண்கள் சிறு வயது முதல் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு காலத்தில் உடலுக்கு போதுமான ஓய்வு அவசியம். மாதவிலக்கின் போது காரம், புளி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தயிர், மோர் மற்றும் இளநீர் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். மாதவிலக்கின் போது வயிற்று வலி ஏற்பட்டால் டாக்டர் ஆலோசனை இன்றி கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி கூடாது. கூடுதல் உடல் எடை, சுத்தமின்மை மற்றும் தவறான உணவு முறை காரணமாக ரத்தக் கட்டிகள், சினைப்பையில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாதவிலக்கு காலத்தில் சுத்தமாக இருப்பதுடன் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும்.

சிறு பிரச்னை உடலில் தோன்றும் போதே மருத்துவம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடலில் நாள்பட்ட வியாதிகள் இருந்தால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் 40 வயதுக்கு மேல் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது தவறு. கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக் கொள்ள வேண்டியதும் அவசியம். கருத்தடை சாதனங்களை முறையாக பராமரிக்காமல் விடுவதால் ஏற்படும் புண்களால் கருப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரெசிபி

அவல் அடை: ஒரு கப் அவலை தண்ணீரில் கழுவி விட்டு புளித்த தயிர் ஒரு கப் சேர்த்து ஊற வைக்கவும். அத்துடன் துருவிய இஞ்சி, நறுக்கிய 2 பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து ஊற வைக்கவும். இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து அடை பதத்துக்கு பிசைந்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கலாம். இதில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கும்.

பட்டர் பீன்ஸ் புலவு: அரிசி 3 கப் ஊற வைக்கவும். பட்டர் பீன்ஸ் விதைகள் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் 2, தக்காளி 1, பச்சை மிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் தேவையான அளவு. புதினா இலை 1/2 கப், கொத்தமல்லித் தழை சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு தேவையான அளவு.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக் காய் போட்டு வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிள காய், பட்டர் பீன்ஸ் பருப்பு சேர்த்து வதக் கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். கடைசியாக தேவையான அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். மூன்று விசில் விட்டு இறக்கி பரிமாறலாம்.

டயட்

பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் வராமல் தடுக்க உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் வரும் மாதவிடாய் பிரச்னைகளை சிறிய மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சரி செய்து விட முடியும். 45 வயதுக்கு மேல் தான் கருப்பையில் கட்டி பிரச்னை வருகிறது. அதிகமான உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிவயிற்றில் வீக்கம் ஆகிய பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கட்டி ஏற்படுகிறது.

பரம்பரைக் காரணம் மற்றும் 10 வயதுக்குள்ளாகவே பூப்படையும் பெண்களையும் இது போன்ற பிரச்னைகள் தாக்க வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம், நோய்த் தொற்று அடிக்கடி ஏற்படுபவர்களுக்கும் கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடலில் அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால் கருப்பையில் கட்டி உருவாகலாம். கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கவும். இறைச்சி வகைகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள், காபியை தவிர்க்கவும்.

தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். பழங்கள், காய்கறிகள் உணவில் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பழங்களில் ஆப்பிள், கருப்பு திராட்சை, சாத்துக்குடி சேர்த்துக் கொள்ளவும். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், முளை கட்டிய முழு தானியங்கள், கிட்னி பீன்ஸ் பருப்பு, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்கவும். இவை ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக சுரப்பதை கட்டுப்படுத்தும்.

பாட்டி வைத்தியம்

மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.

ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

ஆற்றுத் தும்பட்டியை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகைக் கடைகளில் வாங்கிப் பட்டாணி அளவு சாப்பிட்டால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.

இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

இத்திப் பிஞ்சை, சீரகம் சேர்த்து அவித்து சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கு குறையும்.

இம்பூறல் வேர்ப்பட்டை 10 கிராமுடன் பெருங்காயம் ஒரு கிராம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

_TamilMurasu
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.