கரும்பலகைக்குக் அப்பால்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1
தலையாட்ட கற்றுத் தருவதா கல்வி?
குணமா வாயில சொல்லணும். திட்டாம, அடிக்காம வாயில சொல்லணும்!’
கண்ணீருடன் திடமாகச் சொல்லும் குழந்தையின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.


பெரியவர்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை எளிமையாக அந்தக் குழந்தை சொல்கிறது. சேட்டை செய்வது தப்பு என்பதையும் குழந்தை உணர்ந்திருக்கிறது. இங்கு சேட்டை என்று நாம் எதைச் சொல்கிறோம்?
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடாக நடப்பது குழந்தைகளா, பெரியவர்களா?
மனத்தில் தோன்றுவதைத் தயங்காமல் வெளிப்படுத்தும் குழந்தைகள் ஏன் வாய்மூடிப் போகிறார்கள்?
எங்கே சிக்கல்?
கடும் சொற்களை அனைவரும் பேசிக்கொண்டு ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்று படிப்பதால் என்ன பயன்? 1,330 குறளையும் மனப்பாடம் செய்துவிட்டால் போதுமா! இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிவந்த நீதிபோதனைகளால் என்ன பயன்?
பெண்குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்கிறோம். நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து எடுத்துச் சொல்கிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான பள்ளிகள் அல்லது தனித்தனியான பாதைகள். சட்டங்களைக் கடுமையாக்குகிறோம். அது மட்டும் போதுமா? பாலினச் சமத்துவத்தை எப்படிச் சொல்லித்தருவது?
வாழ்வியல் திறன்கள், பாகுபாடுகள்
இல்லாத சமூகம், மனிதப் பண்புகள் போன்றவற்றை எவ்வாறு குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது?
எல்லோரும் நீதி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்று கட்டளைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மணிக்கணக்காக அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நீதியை, பண்புகளை வெறும் பேச்சிலிருந்து எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது?
எது கல்வி?
சென்ற மாதம் பத்தாம் வகுப்புக்கு இடைப்பருவத் தேர்வு நடைபெற்றது. தமிழ் இரண்டாம் தாளில் கட்டுரை வினா.
‘சிறுதுளி பெருவெள்ளம் – சிறுசேமிப்பின் அவசியம் - சேமிக்கும் வழி முறைகள் – சிறுசேமிப்பின் பயன்கள் – மாணவர் பங்கு’ என்று குறிப்புகளைக் கொடுத்திருந்தார்கள். கட்டுரை எழுதியிருந்த பலரும் மழை நீர் சேகரிப்பு பற்றியே எழுதியிருந்தனர். எவ்வாறு இது நிகழ்ந்தது? முதல் குறிப்பை வாசித்தபின் அவ்வாறு முடிவு செய்திருக்கின்றனர். கடிதம், கட்டுரை, துணைப்பாடம் என்று அனைத்தையுமே கேள்வி பதிலாகவே மனப்பாடம் செய்கின்றனர். அவர்கள் படித்தது வரவில்லை என்றால் வினாத்தாள் கடினம் என்ற குற்றச்சாட்டு வேறு.
பாடம் நடத்தினோம். அடிக்கடி தேர்வுகள் வைத்தோம். பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்றார்கள். இப்படி அறிவின் பெயரால் செய்திகளைத் திணித்துக்கொண்டே இருப்பதா கல்வி? ‘உடன்படவும் ஒத்துப்போகவும் தலையாட்டவும் கற்றுத் தருவதா கல்வி?
அறம் செய்யப் பழகுதல்!
‘மறுத்தல் ஓர் அடிப்படைத் திறன். பேதங்களை, பிளவுகளை, அதிகாரத்தின் பொய்களை மறுத்து உள்ளம் உரம் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்பதற்கான சிந்தனைகளை விதைக்கும் கல்வியே வேண்டும்’ என்கிறார் பேராசிரியர் ச. மாடசாமி.
மனிதப் பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளில் உடனடி விளைவு கிடைக்காமல் போகலாம். ஆனால், செயல்பாடுகள் தொடரும்போது காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும்.
குழந்தைகளின் தேடல் மிகுந்த ஆர்வமான மெல்லிய குரல்களைக் கேட்கும் காதுகளே ஆசிரியருக்குத் தேவை. அந்த மென்மையான குரல்களை வளர்த்தெடுக்க என்ன செய்யலாம்?
கலந்துரையாடல்களை உருவாக்க வேண்டும். தனது மனத்தில் எழும் கேள்விகளை, எண்ணங்களைப் பயமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். நற்பண்புகளைப் பழகும் சூழல் பள்ளிக்குள் உருவாக வேண்டும்.
கலந்துரையாடலின் தொடக்கப் புள்ளியாக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இறுகிக் கிடக்கும் பயத்தின் சுவர்களைத் தகர்க்கச் செய்ய வேண்டியது என்ன?
மனதோடு பேசும் குறும்படங்கள்
காட்சி ஊடகங்களின் காலம் இது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் அனைவரும் மூழ்கிக் கிடக்கிறோம்.
கூடிப் பேசிச் சிரிப்பதிலிருந்து பார்த்துச் சிரிப்பதாக மாறிவிட்டது நகைச்சுவை. பால்புட்டியைப் போலவே பெரும்பாலான குழந்தைகளின் கைகளில் செல்பேசி திணிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் நாம் செய்துவிட்டுக் குழந்தைகளைக் காட்சி ஊடகங்கள் கெடுக்கின்றன என்கிறோம். அத்தனை எளிதாகக் காட்சி ஊடகங்கள் தீமையைப் புகுத்த முடியும் என்றால் எளிதாக நன்மையைக் கொடுக்கவும் முடியும்தானே!
குறைந்த நேரம், சிறந்த கதைக்களம், வலிமையான காட்சியமைப்பு மூலம் கலந்துரையாடலை உருவாக்கும் குறும்படங்கள் ஏராளமாக உள்ளன.
குறும்படங்களைத் திரையிடல், அது குறித்துக் கலந்துரையாடுதல், தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே இயல்பாக மனிதப் பண்புகளை வளர்க்க முயலலாம்.
இவ்வாறு ஒரு வகுப்பறையின் இறுக்கத்தைப் போக்கி, கதவுகளைச் சிறகுகளாக்கிக் கலகல வகுப்பறையாக மாற்றும் முயற்சிகள்தாம் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. தாங்கள் பார்த்த குறும்படம் குறித்து ஆசிரியரும் குழந்தைகளும் மனந்திறந்து கலந்துரையாடுவார்கள்.

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர் தொடர்புக்கு: artsiva13@gmail.com
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#4
- நான், எங்க அப்பா பேசுறேன்!
வகுப்பறை. ஒரு சிறுவன் கரும்பலகையில் ஏதோ எழுதிக்கொண்டிருக் கிறான். திரும்பிப் பார்த்துக் கேட்கிறான்,
“எல்லாரும் காப்பி பண்ணியாச்சா?”


“எஸ்...சார்!”
“ரோஷினி ஸ்டாண்ட் அப்” என்று அவனது குரல் அதிகாரமாக ஒலிக்கிறது.
பயந்தபடியே எழுந்து நின்றவர், பெரிய பெண். சிறுவன் ஆசிரியராக இருக்கிறான். அவனது கேள்விக்குப் பதில் தெரியாது என்று அந்தப் பெண் தயங்கியபடியே சொல்லுகிறார்.
ஆசிரியராக மாணவன்
‘இப்பதானே டீச் பண்னேன். இங்கே வா!’ சிறுவன் கோபமாக அழைக்கிறான். அருகே வந்த பெண்ணிடம் கையைக் காட்டு என்று அதட்டுகிறான். நீட்டிய கையில் பிரம்பால் ஒரு அடி. “ஆ!” என்று அந்தப் பெண் கத்துகிறார்.
அலாரம் ஒலிக்கிறது. கனவிலிருந்து விழிக்கிறான் ஆசிரியராக இருந்த சிறுவன்.
ஐயோ...வீட்டுப்பாடம் எழுத மறந்துட்டேனே!
தொலைபேசியில் தன் ஆசிரியையிடம் பேசுகிறான். “ஹலோ, இன்னைக்கு அஜய் ஸ்கூலுக்கு வர மாட்டான் அவனுக்கு ஒடம்பு சரியில்லை” என்று குரலை மாற்றிப் பேசுகிறான்.
“நீங்க யார் பேசுறீங்க?” என்ற ஆசிரியையின் கேள்விக்கு “நான், எங்க அப்பா பேசுறேன்!” என்று பதிலை அவசரத்தில் சொல்லிவிடுகிறான். ஐயோ, மாட்டிக்கிட்டேனே! என்று விழிக்கிறான். படம் இன்னும் வேகமெடுக்கிறது.
வீட்டுப்பாடம் குறித்த பயம், ஆசிரியர் தரும் தண்டனைகள், பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன் எத்தனை விதமான ஏமாற்று வேலைகளைக் குழந்தைகள் செய்கிறார்கள் போன்றவற்றை நகைச்சுவையாகச் சொல்லும் குறும்படம், ‘ஆசான்’.
உயர்ந்த கரங்கள்
இந்தப் படத்தைத் திரையிட்டபோது, ஆறாம் வகுப்பு மாணவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். படம் முடிந்ததும் உரையாடத் தொடங்கினேன்.
“இதே மாதிரி நானும் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் இருக்க வயித்துவலின்னு நடிச்சிருக்கேன். ஆமா! நீங்க இது மாதிரி என்னவெல்லாம் பண்ணிருக்கீங்க?”
கரங்கள் உயர்ந்தன.
“அப்பா வேலைக்குப் போனதும் அம்மாவிடம் தலை வலிக்குதுன்னு சொல்லிடுவேன்!”
“நான் வீட்டுப்பாடம் எழுதல. மிஸ் கேட்டப்போ என்ன சொல்றதுன்னு தெரியல. நேத்து சித்தி இறந்துட்டாங்கனு சொன்னேன். சரி உட்காருன்னு சொல்லிட்டாங்க. சாயங்காலம் எங்க அண்ணங்கிட்டே மிஸ் வருத்தமா கேட்டாங்க. ‘உங்க சித்தி இறந்துட்டாங்கலாமே! என்னாச்சு?’
அவன் பதறிப்போயிட்டான். ‘இல்லீங்க மிஸ். எங்க சித்தியும் சித்தப்பாவும் நேத்துதான் ஊரில் இருந்து வந்திருக்காங்க’னு உண்மையை உடைச்சுட்டான். எங்க அப்பா கிட்டேயும் மிஸ் சொல்லிட்டாங்க. வீட்டுல அப்பா செமையா காய்ச்சினாரு.”
எல்லோரும் சிரித்தனர். உரையாடல் தொடர்ந்தது. நிறைய செய்திகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
எத்தனை விதமாகக் குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பது ஆச்சரியம். அவற்றின் சிறப்பே அது பொய் என்று எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிற எளிமைதான்.
இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று உயர் நீதி மன்றம் எச்சரித்திருக்கிறது. பள்ளியும் வீடும் வீட்டுப்பாடம் வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கின்றன.
அவன் அப்படித்தான்!
ஏன் வீட்டுப்பாடம் வேண்டும்?
ஒரு பத்தியை 10 தடவை எழுதுவதால் என்ன பயன்?
வகுப்பறையில் இருக்கும் எல்லா மாணவர்களும் திருவள்ளுவர் படத்தை ஒட்டி வருவதால் என்ன பயன்?
பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பவர் எத்தனை அழகாக அதை வெட்டிவைத்திருக்கிறார். வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப உப்பும் மிளகாய்த்தூளும் தூவித்தருகிறார். அப்படிப் படைப்பாற்றலோடு கல்வி பரிமாறப்படுகிறதா? எல்லாவற்றையும் நாம் சடங்குகளாக அல்லவா மாற்றி வைத்திருக்கிறோம்.
அதிகக் கட்டணமும் அதிக வீட்டுப்பாடமும் தரும் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம்.
குழந்தைகள் விழித்திருக்கும் நேரத்தையெல்லாம் கல்வி விழுங்கிவிட்டால் விளையாடுவது எப்போது? கூடி விளையாடாதே பாப்பா! என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறோம். நமது பேராசை விளையாட்டின் பொம்மைகளாகக் குழந்தைகளை ஆக்கிவிட்டோம். கூடி விளையாடும் போதுதானே சமூகத்தோடு இணைந்து வாழும் பழக்கம் ஏற்படும்.
ஒரு வகையில் பள்ளியும் வீடும் சிறைச்சாலைகள். அங்கே குழந்தையைத் தனியாக, சுயநலமாக வளர்ப்பதே நமது முக்கியப் பணி என்ற தீர்மானத்தோடும் இருக்கிறோம்.
பேருந்து நிறுத்தம் வரை பெற்றோர். பள்ளிவரை பேருந்து. பள்ளிக்குள் அமைதி. பல்வேறு சட்டங்கள் என்று குழந்தைகளை இயந்திரமாக ஆக்கிவைக்கிறோம். அதன்பின், சமூகம் கெட்டுவிட்டது, முதியோர் இல்லங்கள் அதிகரித்துவிட்டன என்று புலம்புவதால் என்ன பயன்?
“இதைக்கூடவா செய்ய முடியவில்லை?” என்ற கேள்வி, “இதை ஏன் செய்ய முடியவில்லை!” என்று எப்போது மாறும்?
குழந்தைகள் வெள்ளந்தியானவர்கள். அவர்கள் திட்டமிட்டுத் தவறுகளைச் செய்வதில்லை. நமது தண்டனைகள், வசவுகள் மீதான பயமே அவர்களைத் தவறுகள் செய்ய வைக்கிறது. அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டுகிறோம். ‘அவன் அப்படித்தான்!’ என்று முத்திரையிடுகிறோம். அவர்களின் தவறுகள் தொடரவும் பெரியதாக ஆகவும் நாமே காரணமாகிறோம்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#6
கற்பதிலா அல்லது கற்பித்தலிலா குறைபாடு?
இப்போ இருக்குற காம்படிஷன் வேர்ல்ட்ல மார்க் ரொம்ப முக்கியமா இருக்கு சார்’ என்று தொடங்கி இப்போதே தனது பையனை ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்வதாக ஒரு குரல். தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல், எண்பது மதிப்பெண்களுக்கு மேல், படிப்பு தவிர விளையாட்டு, நடனம் என்று எல்லாவற்றிலும் தனது மகன் சிறந்தவன் என ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் பெருமைகளைக் கூறிக்கொள்கின்றனர்.
‘என்ன, மூர்த்தி சார் உங்க பையன் எப்படி?’ என்ற கேள்விக்கு மெதுவாய்த் தலை தூக்கி, ‘என் பையன் எப்போதுமே ஸ்பெஷல்தான் சார், எல்லாப் பாடத்திலேயும் தொண்ணூற்றி ஒன்பது மார்க்தான் எடுப்பான்’ என்று சொல்லும்போது தலை குனிந்து நின்று திட்டு வாங்கும் சிறுவனும் 1 மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாளும் காட்சியாக விரிகின்றன.


ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சராசரி மாணவன் கார்த்திக். பாசமான அம்மா, கண்டிப்பான அப்பா. நடுத்தரக் குடும்பம்.
படிக்காத பையனால் பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, பையனின் எதிர்காலம் குறித்து வருந்தும் பெற்றோர், கோபித்துக்கொண்ட அம்மாவிடம் பேச வேண்டும் என்பதற்காகப் படிக்கும் சிறுவன் என்று இயல்பான குறும்படம் ‘1 மார்க்’.
ஆர்வத்தோடும் கவலையோடும்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படத்தை ரசித்துப் பார்த்தார்கள். அரசுப் பொதுத்தேர்வு என்ற வார்த்தையைப் பலரும் சொல்லிப் பயங்காட்டும் வகுப்பல்லவா அது. கலந்துரையாடல் தொடங்கியது.
‘முதல் தடவையா எல்லாப் பாடத்திலேயும் பாஸாயிருக்கான் கைதட்டுங்கன்னு டீச்சர்’ சொல்ற வசனம் ரொம்பப் பிடிச்சிருந்தது.
‘கார்த்திக்கோட அப்பா ரேங்க் கார்டில் கையெழுத்துப் போடும்போது முகத்தை எப்போதும்போல இறுக்கமா வச்சிருக்காரு. வீட்டை விட்டு வெளியே வரும்போது சிரிக்கிறாரு. மகனைப் பார்த்துச் சிரிச்சு, கைகொடுத்துப் பாராடியிருந்தா நல்லா இருந்திருக்கும்.’ என்பது போன்ற படம் பற்றிய விமர்சனங்கள் எதிரொலித்தன.
படி, படி என்று எல்லோரும் சொல்றாங்க. கூடுதல் வகுப்புகள், மாலைநேரப் பயிற்சிகள், அதிகாலைப் படிப்பு, தியானம், நேர்த்திக்கடன், தொலைக்காட்சிக்குத் தடை, தேர்வு நேரத்தில் உணவுக் கட்டுப்பாடு, என்பன போன்ற அனைவரும் அறிந்த செய்திகளை ஆர்வத்தோடும் கவலையோடும் பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொருவரின் பேச்சும் மனதுக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தன. ஒரு மதிப்பெண்ணில் தோல்வி என்பது எவ்வளவு கொடுமை? ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ என்ற நூலின் செய்திகள் நினைவுக்கு வந்தன. தேர்வு முறையில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
பெருமிதங்களுக்காகவா குழந்தைகள்?
மருத்துவப் பரிசோதனை முடிவைப் போலத்தானே தேர்வு விடைத்தாள். என்ன எழுதியிருக்கிறார்கள்? எப்படி எழுதியிருக்கிறார்கள்? என்றல்லவா பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்திருந்தால் அவர்கள் எங்கு திணறுகிறார்கள் என்பதை அறிந்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்ற தெளிவு கிடைத்திருக்கும். முந்தைய தேர்வு விடைத்தாளுடன் அடுத்த தேர்வு விடைத்தாளை ஒப்பிட்டால் இன்னும் நிறையத் தெளிவு கிடைக்கும்.
கற்றலில் என்ன குறைபாடுகள் இருக்கின்றன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன என்று ஆசிரியர்தானே கண்டறிய வேண்டும். கற்றல் குறைபாடு என்று சொல்வது உண்மையில் கற்பித்தல் குறைபாடுதானே.
உடன் வேலை செய்பவர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்கள்தான் நம் குழந்தைகள் மீது தீர்ப்பு எழுதுபவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களின் பெருமிதங்களுக்காகவே பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகளின் குறைகளை எல்லாம் கண்டறிந்து பட்டியலிடுவதில் தேர்ந்தவர்களாக இருக்கிறோம். ஒரு குழந்தையின் தனித்தன்மையை, ஆர்வத்தை எப்போது கண்டறியப் போகிறோம்?
நாளை என்ன செய்யலாம்?
போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லுகிறோம். ஒரு சில படிப்புகளை நோக்கிய மந்தைத்தனமான ஓட்டத்தை எத்தனை காலம் போட்டி என்று சொல்லப் போகிறோம்? வாய்ப்புகள் நிறைந்த உலகம் என்று குழந்தைகளின் கைபிடித்து எப்போது அழைத்துச் செல்லப்போகிறோம்?
காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்போகின்றன. மதிப்பெண் குறித்த எதிர்பார்ப்போடும் பயத்தோடும் குழந்தைகள் வகுப்பறைக்குள் காத்திருப்பார்கள்.
மதிப்பெண்ணை உரக்கச் சொல்லாமல் எல்லோருக்கும் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு, தனியே அழைத்து, எங்கு திணறியிருக்கிறார்கள் என்று சொல்லி, “நானிருக்கிறேன். உனக்குப் புரியும்படிச் சொல்லித் தருகிறேன். கவலை வேண்டாம்” என்று சொல்லும் ஆசிரியரைக் குழந்தைகள் சந்தித்தால் எவ்வளவு மகிழ்வார்கள்?
மாற்றங்கள் மலரும் வகுப்பறை கனவல்ல. நனவு ஆசிரியர்களின் செயல்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#8
கேள்விகளைத் தேடுவோமா?


ஒன்பதாம் வகுப்பு மாணவர் களிடம் கூறினேன், முதல் பாடத்தின் முதல் பத்தியை வாசிங்க. அதிலிருந்து கேள்விகளை உருவாக்குங்க. எத்தனை கேள்விகள் வேண்டு மானாலும் எழுதலாம்.
வகுப்பில் சலசலப்பு.


தம்பிகளா, கேள்வி பதில் என்று மனப்பாடம் பண்ணவா மொழிப்பாடம் இருக்கு? கேள்வி பதில் குறிச்சுப் படிக்குறது, உரைநூலை வாங்கி அப்படியே மனப்பாடம் செய்றது இதெல்லாம் பயன் தராது. சொந்தமா யோசிச்சு எழுதவும் தெரியணும். முயற்சி பண்ணுங்க. எத்தனை நாட்கள்தான் பதிலைத் தேடுவீங்க? இன்று கேள்விகளைத் தேடுங்க! என்றேன்.
எல்லோருக்கும் அது சிரமமான காரியமாக இருந்தது. ஒரு சிலர் முயன்றனர். அந்தப் பாடவேளை முடியும்வரை யாருமே கேள்விகளை உருவாக்கியிருக்க வில்லை.
மதியப் பாடவேளையில் காணொளிக் காட்சி அரங்குக்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன். இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘கதைநேரம்’ தொடரில் வெளிவந்த ‘தப்புக்கணக்கு’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன்.
‘சொல்வதை மட்டும் கேள்!’
சக்தி என்ற பெண்குழந்தையின் கதை. எல்லாக் குழந்தைகளையும் போலவே சக்திக்கும் ஏராளமான கேள்விகள் எழுகின்றன. அவளது கேள்விகளுக்கு அக்கறையோடு பதில் சொல்ல முயல்கிறார் அவளுடைய தாத்தா.
“ரோஸ் கலர்ல இருக்குறதுனால ரோஸ்ன்னு பெயர் வச்சாங்களா?”
“ஆரஞ்சு கலர்ல இருக்குற ரோஸையும் ரோஸ்னுதானே சொல்றோம்?”
“ரோஸ்க்குத் தமிழ்ப் பெயர் ரோஜான்னு சொல்றே. உன் பெயர் மட்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே மாதிரி வைத்தியலிங்கம்னு சொல்றியே?”
என்ற சக்தியின் கேள்விகளில் குழந்தைத்தனத்தின் புதியதை அறியும் தன்மை மிளிர்கிறது.
ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள். இரண்டு வாரங்களுக்கு எத்தனை நாட்கள்? என்ற கணக்கை 7 x 2 = 14 என்று சக்தி எழுதியதால் ஆசிரியை மதிப்பெண் தரவில்லை. தாத்தா பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் விசாரிக்கிறார். அது இரண்டாம் வாய்ப்பாட்டுக்கான கணக்கு. 2 x 7 = 14 என்றுதான் எழுத வேண்டும் என்று ஆசிரியை கூறுகிறார். தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் அனை வருமே ஒரே பதிலையே கூறுகின்றனர்.
பள்ளியிலிருந்து சக்தியின் பெற்றோருக்குத் தகவல் சொல்லப்படுகிறது. சக்தியின் அப்பா விசாரிக்கிறார். சக்தி தனது பதிலுக்கான நியாயத்தைச் சொல்லுகிறாள். பெண் குழந்தை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பது தவறு. இனிமேல் ஆசிரியை சொல்வதை மட்டுமே கேள் என்று அப்பா கண்டிக்கிறார்.
“உங்களுக்கு என்ன தோணுது?” என்று மாணவர்களிடம் கேட்டேன்.
தேடலின் திறவுகோல்
அந்தப் பாப்பா சொன்னது சரிதானே! எல்லாரும் தப்புன்னே சொல்றாங்களே!
ஆமாம். விடை சரி என்றாலும் அவங்க சொல்லித் தந்த மாதிரி எழுதாததால் தப்பென்று சொல்றாங்க.
“அது எப்படிங்கய்யா. அவங்க சொல்றதுதான் புரியல.”
“உங்களைப் போலவே எனக்கும் பாப்பா சொல்றதுதான் சரி. அந்தப் பாப்பாவுக்கு எவ்வளவு கேள்விகள் தோணுது. அது மாதிரி உங்களுக்கு என்ன தோணுது?”
அமைதியும் முணுமுணுப்பும் ஆங்காங்கே சிரிப்பும்.
பாடவேளை முடியப் போகுது. உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோணும். எத்தனை கேள்விகள் என்றாலும் சரி. நாளை வரும்போது நாட்குறிப்பு ஏட்டில் எழுதிட்டு வாங்க. என்றேன்.
அடுத்த நாள் வகுப்புக்குள் நுழைந்ததும் ஆரவார வரவேற்பு. “ஐயா, கேள்விகள்!” “ஒவ்வொருத்தராக வந்து வாசிங்க” என்றேன். பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்தது யார்? கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போன்றவற்றைத் தவிர்த்துச் சில கேள்விகள் அற்புதமானவை.
நாம் எதற்காக உயிர் வாழ்கிறோம்?
எப்படி மனத்தில் ஆசைகள் தோன்றுகின்றன?
ஏன் படிக்க வேண்டும்?
பள்ளியில் ஏன் 12-ம் வகுப்புவரை மட்டுமே இருக்கிறது?
ஏன் எங்களுக்குப் புத்தகங்களை மாற்றினார்கள்?
தமிழ்தான் முதலில் தோன்றியது என்றால் ஏன் உலகம் பூராவும் அதைப் பேசவில்லை?
முடி, நகம் மட்டும் வளர்ந்து கொண்டே இருப்பது எப்படி?
ஏன் ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்கிறோம்?
ஏன் காதலிக்கிறோம்?
இவை தவிரக் கடவுள், பேய் குறித்த கேள்விகள் அதிகம்.
“அனைவருக்கும் வாழ்த்துகள். கேள்விகளை எழுப்பினாலே பதிலைத் தேடத் தொடங்கிவிடுவோம். வகுப்பிலும் அவ்வப்போது இந்தக் கேள்விகள் குறித்துக் கலந்துரையாடலாம். பல்வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டால் நிறையப் பதில்களும் புதிய கேள்விகளும் கிடைக்கும். இது சுவாரசியமான விளையாட்டு” என்றேன்.
நமது மொழியில் குழந்தைகளுடன் பேசுகிறோம். அதைப் புரிந்துகொள்ளாதவர்களை ‘மெல்லக் கற்போர்’ என்கிறோம். கற்றுத் தரும் முறையில், மொழியில்தான் குறைபாடுகள் இருக்கின்றன. மெல்ல மலரும் குழந்தைகளைவிட மெல்ல மலரும் ஆசிரியர்களே அதிகம்.
வகுப்பறை தேடலின் தொடக்கப் புள்ளியாக மாறாமல் பலரின் கல்விக்கு முற்றுப்புள்ளியாக அமைவதே வேதனை. கேள்விகள்தாமே தேடலின் திறவுகோல்கள். கேள்விகளால் வகுப்பறையில் புதிய கதவுகள் திறக்கின்றன. அதுதானே கல்வி.
தப்புக்கணக்கு (24 நிமிடங்கள்)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.