கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.


முதலில் ஸ்கேன் என்பது என்ன?ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன். இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.


ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.


ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.

முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன் அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
இல்லையென்றால், முதல் கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது இரத்தபோக்கு ஏற்பட்டால்
உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
பரவாயில்லை.


முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.


மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.

சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.

சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.


11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்.


DOWN’S SYNDROME என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.

இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.

கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
வாரங்களில்) செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.

இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?


பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?

ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.

ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன் என்பது நிச்சயமாக ஒரு உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.


Thanks: S.E.A. Mohamed AliRegards,
Sumathi Srini
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.