கர்ப்ப கால பார்வை பிரச்னைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்ப கால பார்வை பிரச்னைகள்


கர்ப்ப காலத்தில் பெண்களைத் தாக்கக்கூடிய பார்வைப் பிரச்னைகளும் உண்டு. அவற்றை எப்படி அடையாளம் காண்பது, தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம்...கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வரலாம். நீரிழிவினால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருந்தாலும் கர்ப்பத்தின் போது திடீரென விழித்திரை பாதிப்பு வரும். எனவே, நீரிழிவு உள்ள ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் உடனடியாக விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.


தவிர, விழித்திரை மருத்துவர் சொல்கிற போதெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை முன்பு நீரிழிவு இல்லை... கர்ப்பம் தரித்த பிறகு நீரிழிவு வந்துவிட்டது என்றால் அப்போதும் விழித்திரை மருத்துவரை சந்தித்து தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு நீரிழிவினால் ஏற்படக்கூடிய விழித்திரை பாதிப்பு (டயாபட்டிக் ரெட்டினோபதி) இருக்கும். அப்படி இருந்தால் கர்ப்பத்தின் போது அந்த பாதிப்பு அதிகமாகும்.

அது அதிகமாவதற்கு முன்பே சிலருக்கு லேசர் சிகிச்சை செய்து விடுவோம். விழித்திரை பாதிப்பு அதிகமானால் பிரசவத்தின் போது அவர்கள் சிரமப்படுவதன் விளைவால் ரத்தக்கசிவு கூட ஆகும். அதைத் தடுக்க Prophylactic laser செய்து விடுவோம். இது குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காது. ஒரு பிரச்னை வந்த பிறகு செய்கிற லேசர் வேறு. இது வராமல் தடுப்பதற்கானது. லேசர் என்பது ஆபரேஷன் கிடையாது. அதில் மயக்க மருந்து தேவையில்லை. புறநோயாளியாக வந்து செய்து கொண்டு போகக்கூடியது.

வழக்கமாக இது போன்ற பிரச்னைகளைக் கண்டறிய கை நரம்பில் Fundus fluorescein angiography என்கிற ஊசியைப் போட்டு சோதனை செய்வோம். அதை கர்ப்பிணிகளுக்கு செய்ய மாட்டோம். இதைச் செய்துதான் எந்த நரம்பில் பிரச்னை எனக் கண்டறிய வேண்டும். இந்த மருந்து நஞ்சுக் கொடியைத் தாண்டி, சிசுவை தாக்கும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு செய்வதில்லை.

சில கர்ப்பிணிகளுக்கு ஆட்டோ இம்யூன் ரெட்டினோபதி என்கிற பிரச்னை இருக்கும். அவர்களுக்கு இயல்பிலேயே ஆட்டோ இம்யூன் டிசீஸ் பிரச்னைகள் இருந்தால் அதன் விளைவால் விழித்திரை பாதிப்பும் வரக்கூடும். ஆட்டோ இம்யூன் பிரச்னைகள் இருப்பவர்கள் முன்கூட்டியே கண் சோதனையை மேற்கொள்வது நல்லது.

அடுத்தது கர்ப்ப கால ரத்த அழுத்தம் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி விடும். கண்களின் பின் பக்கத்தில் கோராய்டு (Choroid) என ஒரு பகுதி உள்ளது. அதில் பல இடங்களும் மொத்தமாக அடைபட்டுப் போகும். அதனால் பார்வையே பறிபோகலாம் அல்லது மையப்பகுதியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக நரம்பு பிரியலாம். அதற்கு Exudative retinal detachment என்று பெயர். இது வந்தால் திடீரென இரண்டு கண்களிலும் பார்வை போய்விடும். ஆனால், ரத்த அழுத்தத்தைக் குறைத்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் அது தானாக சரியாகி விடும்.

Central Serous Chorio Retinopathy (CSCR) என்கிற பிரச்னையில் மனதில் கவலையோ, டென்ஷனோ இருந்தால் விழித்திரையின் மையப்பகுதியில் தண்ணீர் சேரும். இது வழக்கமாக ஆண்களையே அதிகம் பாதிக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கும் இப்பிரச்னை வரலாம். கர்ப்பிணிகள் அல்லாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும்.

ஆனால், அது ரொம்பவே அபூர்வம். கர்ப்பிணிகளிடம் அதிகமாகப் பார்க்கிற பிரச்னையும்கூட. அதற்கும் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இந்தப் பிரச்னை கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்தான் வரும். திடீரென கண் தெரியாமல் கண்களுக்கு முன்னால் கருப்பாகி தண்ணீர் வழியே பார்க்கிற மாதிரி இருக்கும். சிலருக்கு பிரச்னை தீவிரமாகி நரம்பும் பிரிந்துவிடும்.

பதற்றப் படாமல் விழித்திரை மருத்துவரைப் பார்க்க வேண்டும்.கர்ப்பிணிகளுக்கும் சில நேரங்களில் பூனைகளின் மூலம் வருவதாக நாம் முன்னரே பார்த்த டாக்ஸோபிளாஸ்மாசிஸ் வரும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அவரது அம்மாவின் மூலம் வந்த அந்தப் பிரச்னை, இப்போது அவரது கர்ப்பத்தின் போது அதிகமாகும்.

ஏ, பி என 2 நபர்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏ அம்மா. பி அவரது குழந்தை. ஏ கர்ப்பமாக இருந்தபோது பூனைகளின் அருகாமையில் இருந்ததால் பி குழந்தையாகப் பிறக்கும் போது டாக்ஸோபிளாஸ்மாசிஸ் வந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு சரியாகி விட்டது. ஆனால், அதன் தடயங்கள் பியிடம் இருக்கும்.

அது ஒருமுறை வந்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் மறுபடி தலைதூக்கலாம். இப்போது பி கர்ப்பமாக இருக்கிறார். பியும் பூனைகளின் அருகாமையில் இருக்கும் பட்சத்தில் அந்தப் பிரச்னை மறுபடி கிளம்புகிறது.

பிக்கும் டாக்ஸோபிளாஸ்மாசிஸ் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு வாய்வழிதான் மருந்து கொடுத்தாக வேண்டும். அது சிசுவை பாதிக்கும் என்பதால் கொடுக்க முடியாது. கொடுக்காமல் விட்டால் அம்மாவுக்கு பார்வை போய் விடும். ஏனென்றால் டாக்ஸோபிளாஸ்மாசிஸ் பிரச்னை அவசர நிலை சிகிச்சையாகக் கருதப்பட வேண்டியது. இதற்குத் தீர்வாக கண்ணுக்குள் விழித்திரைக்கு அருகில் செலுத்தக்கூடிய ஊசி வந்திருக்கிறது. அது கண்ணுக்குள் இருந்தால் உடம்புக்குள் பரவாது.

அதற்கு Retinal barrier என்று பெயர். இந்த மருந்து கண்ணில் இருந்து உடலுக்குப் போக தாமதமாகும். உடனடியாக உடலுக்குள் போனால்தான் நஞ்சுக் கொடி வழியே குழந்தையைப் பாதிக்கும். எனவே, கர்ப்பிணிகள் தங்களது பிரச்னை CSCR ஆ அல்லது டாக்ஸோபிளாஸ்மாசிஸா என்பதை சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

சிஎஸ்சிஆர் பிரச்னை குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியதும் 3 மாதங்களுக்குள் சரியாகிவிடும். அப்படிப் போகாவிட்டால் அதற்கு லேசர் சிகிச்சை இருக்கிறது. கவலை வேண்டாம்!லேசர் என்பது ஆபரேஷன் கிடையாது. அதில் மயக்க மருந்து தேவையில்லை. புறநோயாளியாக வந்து செய்து கொண்டு போகக்கூடியது.

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். குழந்தையின் உறுப்புகள் பாதிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அது போல சூரிய கிரகணத்தை கர்ப்பிணிகள் நேராகப் பார்த்தால் அவர்களுக்கு பார்வை பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ஃபோலிக் அமிலம் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நியூரல் டியூப் வளர்ச்சியடையும். விழித்திரை என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதால் அதன் வளர்ச்சிக்கும் ஃபோலிக் அமிலம் மிக அவசியம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.