கல்லீரல் பரிசோதனை -(Fatty liver)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கல்லீரல் பரிசோதனை -(Fatty liver)

‘‘நாம் உண்ணும் உணவினை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என்று பகுத்து ஆராய்ந்து பிரித்து, அதன் மூலம் சத்துகளையும் சக்தியையும் தருவது கல்லீரல்தான். உணவின் செரிமானத்துடன், நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலும் கல்லீரலின் பங்கு மகத்தானது’’ - கல்லீரலின் முக்கியத்துவத்திலிருந்து தொடங்குகிறார் கல்லீரல் மாற்று சிறப்பு மருத்துவரான தினேஷ் ஜோதிமணி.

கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டால் என்னென்ன நோய்கள் ஏற்படும்?
‘‘க்ரானிக் ஹெபடைட்டிஸ், சிரோசிஸ், End stage liver disease என்கிற கல்லீரல் செயல் இழப்பு என 3 முக்கியமான நோய்கள் இருக்கின்றன. கல்லீரல் கொழுப்பு, மதுப்பழக்கம், ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி போன்ற பொதுவான காரணங்களால் இந்த நோய்கள் ஏற்படலாம். துத்தநாகம், இரும்பு போன்ற சத்துகள் கல்லீரலில் அதிகமானாலும் பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு பிறவியிலேயே கல்லீரல் நோய் இருக்கும். கல்லீரலை அந்நியப் பொருளாக நினைத்துக்கொண்டு தாக்கும் ஆட்டோ இம்யூன் ஹெபடைட்டிஸ் பிரச்னையாலும் கல்லீரல் பாதிக்கப்படும்...’’

அறிகுறிகள் என்னென்ன?

‘‘மற்ற உடல் உறுப்புகளைப் போல கல்லீரலின் ஆரோக்கியக் குறைவை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியாது. மஞ்சள் காமாலை, உடல் அசதி, எடை குறைவு, கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது, ரத்த வாந்தி, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அடையாளமாக இருக்கலாம்...’’

கல்லீரல் கொழுப்பு எதனால் ஏற்படுகிறது?

‘‘தேவைக்கும் அதிகமாக நம் உடலுக் குக் கிடைக்கிற கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற உணவுகள் கொழுப்பாக மாறி கல்லீரலில் தங்குவதையே கல்லீரல் கொழுப்பு(Fatty liver) என்கிறோம். கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தே வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இப்போது கல்லீரல் கொழுப்பு பிரச்னை அதிகமாகி வருகிறது.

சாதாரண தொப்பை போலத்தான் ஆரம்பத்தில் தெரியும். 10 - 15 வருடங்களுக்குப் பிறகே சிரோசிஸ்(Cirrhosis) நிலைக்கு மாறும். இதை கவனிக்காவிட்டால் கல்லீரல் செயலிழப்பு உண்டாகும். வாழ்க்கைமுறையை ஒழுங்குக்குள் கொண்டுவருவது மட்டுமே இதற்கு நல்ல தீர்வு.

’’கல்லீரல் செயல் இழப்பு வேறு யாருக்கு ஏற்படும்?

‘‘விஷம் அருந்தித் தற்கொலை முயற்சி செய்கிறவர்களுக்கும் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கல்லீரல் செயல் இழப்பு ஏற்படும். இவர்களுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும். தலைவலி மாத்திரைகள் உள்ளிட்ட சில வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், காசநோய் மாத்திரைகள் கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குபவை.

அதனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.’’மதுப்பழக்கத்துக்கு இதில் பங்குண்டா?‘‘மதுப்பழக்கம் கல்லீரலை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தியதும் கல்லீரல் முன்னேற்றம் அடையும். இதனால்தான் மதுப்பழக்கத்தை நிறுத்திய சிலர் முன்பைவிட உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல வைரஸ் பிரச்னை உள்ளவர்களும் சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமாக இருப்பதை உணர்வார்கள்...’’

கல்லீரல் மாற்று சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

‘‘உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும் கல்லீரல் அரிதாகத்தான் தானமாக கிடைக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து கல்லீரலை பெற்றாலும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குள் மாற்றியாக வேண்டும். இதனால் உயிருடன் இருப்பவர்களிடமிருந்தே (Live donor) பெரும்பாலும் கல்லீரல் தானமாகப் பெறப்படுகிறது. சிறுநீரகங்கள் இரண்டு இருப்பதால், ஒன்றை மற்றவருக்கு தானமாக வழங்குகிறோம். கல்லீரல் நமக்கு ஒன்றுதான் இருக்கிறது. ஆனால், கல்லீரலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. வெட்டப்பட்டாலும் கல்லீரல் வளரும் தன்மையுடையது.

இதனால், ஒரு கல்லீரலின் பாதியை இன்னொருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்க முடியும். வெட்டப்பட்ட கல்லீரல் 4 வாரத்தில் வளர்ந்து செயல்பட ஆரம்பித்துவிடும். தானம் கொடுப்பவர், பெற்றவர் இரண்டு பேரும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும்...’’

கல்லீரல் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?‘‘ரத்தப் பரிசோதனை, ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி என்கிற வைரஸ் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் என 3 பரிசோதனைகள் இருக்கின்றன. பரிசோதனைகளுக்கான முடிவுகளைப் பெற ஒருநாளாகும். மொத்தப் பரிசோதனைக்கும் சராசரியாக 1,500 ரூபாய் செலவாகும்.’’ ஹெபடைட்டிஸ் பிரச்னை பற்றி...

‘‘ஹெபடைட்டிஸ் பி மற்றும் ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. 40 வயதுக்கு மேல் சிரோசிஸ் வந்து நுரையீரல் சுருங்க ஆரம்பித்தால்தான் தெரியும். இதுதான் கடைசியில் கல்லீரல் புற்றுநோயில் கொண்டுபோய்விடுகிறது. வைரஸ் பரிசோதனை செய்துகொண்ட பிறகு, முறையான சிகிச்சையைத் தொடராததாலும் புற்றுநோய் உண்டாகும். மரபு ரீதியான காரணங்களாலும், பாலியல் தொடர்புகளாலும் ஹெபடைட்டிஸ் பி வரலாம். சுகாதாரமற்ற ஊசி, சுகாதாரமற்ற ரத்ததானம் போன்ற காரணங்களால் ஹெபடைட்டிஸ் சி ஏற்படும்.

ஹெபடைட்டிஸ் உள்ளவர்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்டுவிட்டால் அதைத் தொடர்ந்து பல உறுப்புகள் செயலிழக்கும் (Multi organ failure) அபாயம் உண்டு. தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் சிறுநீரகத்திலோ, நுரையீரலிலோ நோய்த்தொற்று ஏற்பட்டாலும், இதுபோல பல உறுப்புகள் செயல் இழக்கும்.

Multi organ failure நடந்தால் நோயாளியைக் காப்பாற்றுவதற்கு 10 சதவிகிதம் மட்டுமே சாத்தியம் உண்டு. கல்லீரல் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்களையும் காப்பாற்றுவது சிரமம். இதனுடன் உடலின் நச்சுத்தன்மையும் அதிகமாகி சிரமமாகிவிடும்...’’

இந்த அபாயத்தைத் தவிர்க்க முடியுமா?

‘‘ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி உள்ளவர்கள் தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு ஹெபடைட்டிஸை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பது, தவறான வழிகாட்டுதலில் தவறான சிகிச்சைகளை முயற்சி செய்து பார்ப்பது என்று பணமும் ஆரோக்கியமும் கெட்டபிறகுதான் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால்தான் சில நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது...

’’கல்லீரல் பரிசோதனையை யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

‘‘ ஹெபடைட்டிஸ் பாதிப்பு 20 வயதுகளிலேயே வருகிறது. கல்லீரல் கொழுப்பு பிரச்னை 35 வயதுகளிலேயே பலரிடமும் பார்க்க முடிகிறது. அதனால் எத்தனை சீக்கிரம் பரிசோதனை செய்துகொள்கிறோமோ அந்த அளவு கல்லீரலுக்கு நல்லது.

குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், பருமன் கொண்டவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியாவில் எல்லோருமே ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. அறிகுறிகளே இல்லாமல் கல்லீரல் நோய்கள் தோன்றுவதால் கவனம் தேவை.

’’கல்லீரல் நோய்களைத் தடுக்க முடியுமா?

‘‘கல்லீரல் தொடர்பான எல்லா நோய்களும் தடுக்கக் கூடியவையே. கல்லீரல் நோய்களுக்கு முன்பு போதுமான மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லாத நிலை இருந்தது. இன்று நிறைய மருந்துகளும், நவீன சிகிச்சைகளும் இருப்பதால், கல்லீரல் நோயை குணப்படுத்துவதும் எளிதாகியிருக்கிறது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது.

இப்போது நாமே அந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்துவிட்டோம்...’’நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், பருமன் ஆனவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் கல்லீரல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
கல்லீரல் கொழுப்பை (Fatty liver) தடுக்க வழிமுறைகள்
கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை.

இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக அளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது.

ஈரலில் மிக அதிக அளவுக்கு கொழுப்பு சேர்வதால், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகி விட்ட இந்தக் காலக் கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லீரல் கொழுப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படு கின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப் பிடுவது குழந்தைகள் தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.

நொறுக்குத் தீனிகளால் 10 வகையான கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பாடிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடிட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலிதிசிஸ் 8. கலேசிஸ்டிடிஸ் 9. கார்சினோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.

நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். நொறுக்குத்தீனியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமாகாமல் குடலில் தேங்குகிறது. இவை தான் விஷமாக மாறுகிறது. கல்லீரல் பாதிக்கப் பட்டால்அஜீரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

ஜீரண மண்டல பாதிப்பு.........

கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் முதலில் பாதிப்படைவது ஜீரணம் தான். வயிற்றில் ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது. பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக்கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதர உடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை லிவர் `கிளைக்கோஜென்' ஆக மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது.

உடலிலிருந்து நச்சுப்பொருட்களை நீக்குவதையும் கல்லீரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரும்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது.கார்போ ஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மாற்றி கல்லீரல், பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கிறது.கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் கல்லீரல் வீங்கி விடும். நீரிழிவு மற்றும் அதீத பருமன் உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.

80 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு.......

குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில் உள்ள கொழுப்பு குழந்தைகளின் கல்லீரலின் மேல் பகுதியில் படிந்து பருமனாக மாறி விடுகிறது. தற்போது நம் நாட்டில் உள்ள 80 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோளாறுகள் வெறும் 20 சதவீதம் மட்டும்தான் இருந்தது.

இதற்கு காரணம் ரசாயணம் கலக்காத உணவுகள்தான். ஆனால் தற்போது ரசாயணம் கலக்காத உணவைப்பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளில் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.

தடுக்க வழிகள்.......

உடல் பருமனைக் குறைக்கும் போது, கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்துவிடும்.கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும்.எனவே உடல் பருமனைத் தவிர்ப்போம். கொழுப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம். பாக் கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.

மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது.சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும்.பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும்.

கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய்யை 20 லிருந்து 30 கிராம் வரை தினசரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்துஎன்கிறார்

சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேசன்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்:

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

வாய் துர்நாற்றம்
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.


வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!

வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாராமில்லாத உணவுகள் ஆகியவற்றால் இதுவரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. இவற்றில் சில பிரச்சனைகள் இப்போதைக்கு மிகவும் சிறியதாகவே இருந்தாலும், முறையான சிகிச்சைகள் செய்யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனைகளுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப்பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன.

கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது. நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில நிவாரணங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். உங்களுடைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் - விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

பாகாற்காயின் பாதுகாப்பு
பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும் குடிக்க முடியும்.

பால் நெருஞ்சில்
பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில்சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.முழு தானியங்கள்
முழு தானியங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை வெளியேற்றும் குணங்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்படுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள்.

தக்காளி
தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளுக்கு தீர்;வு காணுங்கள்.

இதர வழிகள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை சமாளிக்க எண்ணற்ற இயற்கையான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விட வேண்டாம்.

கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும். பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச் செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்!
ஆல்கஹால் மற்றும் சிகரெட் போன்றவற்றை குறைப்பதால் மட்டும், நாம் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே எந்த அளவுக்கு நமது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை, நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான அறிகுறிகள் எதாவது தெரிவதற்கு முன்பிருந்தே நாம் ஜாக்கிரதையாக இருந்தால் தான், நமது ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கல்லீரல் ஆரோக்கியம் பற்றிய நிஜமான கவலை இருந்தால், முதலில் வயிற்றில் சதை விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முதல் அறிகுறியே உப்பிய வயிறு தான். உணவு முறை சரியாக இருந்து, உடற்பயிற்சியும் இருந்து அடிவயிற்றில் சதை விழுந்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம். கல்லீரல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான சில அத்தியாவசிய குறிப்புகளை இங்கே உங்களுக்காக தருகிறோம். ‘வந்த பின் வருந்தாமல், வருமுன் காப்பதே சிறந்தது' என்பதே இவற்றின் அடிப்படை.

கொழுப்பு உணவுகள்
கொழுப்பு உணவுகள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். ஏனெனில் கல்லீரலின் முதல் எதிரி இவை தான். கொழுப்பு உணவுகள் மூலமாக உடலில் சேரும் அதிக பட்ச கொலஸ்ட்ரால், கல்லீரலின் இயக்கத்தை பலவிதங்களில் பாதித்து சேதப்படுத்திவிடும்.

மிதமிஞ்சிய மதுப்பழக்கம்
மது எந்த அளவுக்கு கல்லீரலை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மதுபானம் அதை அருந்துபவருக்கு எந்த பலனையாவது அளிக்கிறதோ இல்லையோ, முதலில் கல்லீரலுக்கு கெடுதலை மட்டும் அளித்துவிடுகிறது. மது விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 பெக்குகளுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதிகபட்சம் 4 பெக்குகள் என்று கொண்டாலும், அதற்கு மேல் குடிப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து, அந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பது நல்லது.

புகைப்பழக்கம்
சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று தெரிந்திருந்தாலும், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது சிலருக்கு சிரமமாகத் தான் இருக்கிறது. இந்த போதை கடைசியில் நமது கல்லீரல் மற்றும் நுரையீரல்களை முற்றிலும் அழித்துவிட்டுத் தான் ஓயும். அப்படி ஒரு போதைச் சாத்தானுக்கு நாம் ஏன் அடிமையாக வேண்டும் என்ற கேள்வியுடன் புகைப்பழக்கத்திற்கே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிலும் உடலை சீரழித்து, ஆயுளைக் குறைக்கும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?

உடற்பயிற்சியின்மை
உடலுக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாமல், மந்தமான, சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றினால், வியாதிகள் நம்மை தேடி வந்து சேரும் என்பது தான் உண்மை. கொஞ்சமாவது நடக்க வேண்டும், கை மற்றும் கால்களை அசைத்து வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தான் உடலில் உயிர்ப்பு இருக்கும். ஏ.சி சொகுசு மற்றும் யாவற்றுக்கும் மற்றவர் உதவி என்று சோம்பலான வாழ்க்கையை வாழ்ந்தால், வியாதிகள் தான் உருவாகும். பின்னர், எல்லாம் இருந்தும் ‘ஆரோக்கியம் இல்லை - ஆயுளும் இல்லை' எனும் துரதிர்ஷ்டத்திற்குத் தான் உட்பட வேண்டியிருக்கும்.

தவறான டயட்
உடலை சிக்கென்று வைக்கிறேன் பேர்வழி என்று ஏதாவது ஒரு ‘ஃபேன்சி டயட்டிங்' முறையை பின்பற்றினால், முதலில் பாதிப்படைவது கல்லீரல் தான். நல்லதை செய்கிறோம் எனும் போலி மனமயக்கத்தில், உடலில் நிஜமாக நடப்பது என்ன என்பதை நம்மால் உணர முடியாமல் போய்விடும். எனவே கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய ‘கடுமையான டயட்' முறைகளை தவிர்த்து, ஒரே சீரான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது

குறிப்பு

கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மாத்திரம் இல்லை. வேறு சில விசேஷ மருத்துவ வசதிகளையும் பின்பற்ற கொள்ள வேண்டும். ஏனெனில் இதனாலும் கல்லீரல் சிக்கல்களை குணப்படுத்தி விட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கல்லீரல் அழற்சி தடுப்பூசி, அவ்வப்போது இரத்த பரிசோதனைகள், காட் லிவர் ஆயில் மாத்திரைகள் மற்றும் பாதுகாப்பான உடலுறவு போன்ற எல்லா ஏனைய அம்சங்களும் கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.