கவனம் கலப்படம்! - Beware of adulterated food products

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கவனம் கலப்படம்!
ண்ணீர் கலந்த பால், செங்கல்தூள் கலந்த மிளகாய்த் தூள், வாசனையற்ற மல்லித்தூள் போன்றவை மட்டுமே மக்களுக்கு அதிகம் தெரிந்த கலப்படங்கள். இதனால், சுவை குறையுமே தவிர, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

ஆனால், வணிகப் போட்டி காரணமாகவும் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கிலும் பாலில் யூரியா, அமோனியம் சல்ஃபேட், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவை கலக்கப்பட்டு, அடர்த்தியாக மாற்றப்படுகிறது. சூடான் டை கலக்கப்பட்ட மிளகாய்தூள், உணவை அழகாக்கி, குடலைப் புண்ணாக்குகிறது. புற்றுநோய் வருவதற்குகூட ‘உணவுக் கலப்படம்’ காரணமாகிறது என்பதே நம்மை அச்சறுத்தும் செய்தி. உணவுப் பொருட்களில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் நிகழ்கின்றன என்பதை, இங்கே விரிவாகச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

காய், கனிகள்
உணவுப் பாதுகாப்புத் துறை, பழங்களைப் பழுக்கவைக்க, ‘எத்திலின்’ பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தினாலும், பெரும்பாலான வணிகர்கள் அதைப் பயன்படுத்தாமல் கார்பைடு கல்லைப் பயன்படுத்துகின்றனர். தர்பூசணிப் பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, பீட்டா எரித்ரோசின் (Beta erythrocin) என்ற ரசாயனம் ஊசி மூலமாகச் சேர்க்கப்படுகிறது. மாம்பழம், தக்காளி, பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற பழுங்களைப் பழுக்கவைக்க, கார்பைட் (Carbide) பயன் படுத்துகின்றனர்.

விளைவுகள்: எலிகளை வைத்து எரித்ரோசின் பரிசோதிக்கப்பட்டதில், தைராய்டு கட்டி உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரித்ரோசின் கலக்கப்பட்ட பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வரும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும். கார்பைட்டினால் மறதி, மூளையில் ரத்த ஒட்டம் குறைதல், தலைவலி, மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: ஒரே மாதிரி பழுத்துள்ள, பளபளப்பான பழங்களில், இயற்கையான வாசம் இருக்காது. சீசன் பழங்களை, சீசன் இல்லாதபோது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை உப்பு நீரில் ஊறவைத்து நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

அசைவம், தந்தூரி உணவுகள்
பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் நிறமும் வாசமும் தந்தூரியின் தந்திரம். முதல் சுவையிலே நாவை அடிமைப்படுத்த, சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. சிவப்பு நிறத்தில் தெரிய ‘ரெட் டை’ பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. மேலும், உணவகங்களில் மீதமாகிப்போன இறைச்சியை, வினிகரில் கழுவி, புதிது போல விற்கின்றனர்.

விளைவுகள்: சீக்கிரத்திலேயே பூப்பெய்துதல், நெஞ்சு எரிச்சல், அல்சர், தைராய்டு கட்டிகள், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தீயால் சுடப்படும் உணவுகளால், புற்றுநோய் வரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. ஸ்மோக்கி உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே இதற்கு வழி.

கவனிக்க: சாப்பிட்ட தந்தூரியின் சிவப்பு நிறம் கையில் ஒட்டியிருக்கும், சோப் போட்டால் மட்டுமே போகும். கடையில் விற்கப்படும் இறைச்சி, சிவப்பாகவோ வெளுத்துப்போயோ இருக்கக்கூடாது. இறைச்சி, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்
பால் அடர்த்திக்கு அமோனியம் சல்பேட், பால் நுரைத்து வருவதற்கு சோப், நீண்ட நாள் கெடாமல் இருக்க பார்மலின், யூரியா போன்றவை சேர்க்கப்படுகின்றன என, சமீபத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் ‘சின்தட்டிக்’ மில்க்கில் வழவழப்பு, பளபளப்புக்கு வெள்ளை நிற வாட்டர் பெயின்ட், எண்ணெய், அல்கலி (Alkali) மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்படுகின்றன.

செம்மறி ஆடு மற்றும் பன்றியிடமிருந்து பெறப்படும் ரென்னட் (Rennet) என்ற பொருளிலிருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. வனஸ்பதி மற்றும் நெய்யில் விலங்குக் கொழுப்பு, வெண்ணெயில், மாட்டுக் கொழுப்பு, மைதாவில் மணிலா (வேர்க்கடலை) மாவு போன்றவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, கெட்ட கொழுப்பு சேருதல், முக வீக்கம், இதயப் பிரச்னை, வயிற்றுக் கோளாறு, சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவை வரலாம்.

கவனிக்க: வீட்டிலே தேங்காய், சோயா, பாதாம், எள்ளு, வேர்க்கடலை போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் பாலை அருந்தலாம். இந்த பாலிலும் தயிர், மோர் தயாரிக்கலாம். பசும்பாலைவிட எள்ளுப் பாலில் 10 மடங்கு அதிக கால்சியம் கிடைக்கும். சீஸுக்கு பதிலாக, சோயா டோஃபு, பாதாம், முந்திரியிலிருந்து தயாரிக்கப்படும் சீஸைச் சாப்பிடலாம்.

பன்னாட்டு உணவுகள்
விளம்பரம், ஆட்கள் சேர்க்கை மூலம், இந்தியாவில் பரவலாக விற்கப்படுகின்றன பன்னாட்டு உணவுகள். இந்தியாவில், 100 பொருட்களை மார்கெட்டிலிருந்து திரும்பப் பெறச் சொல்லி, உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாத்திரை, கிரீம், ஹெல்த் டிரிங்ஸ், புரோட்டீன் பவுடர் போன்ற சில பன்னாட்டு உணவுகளில், நம் சூழல் சார்ந்த உடல் நலனுக்குப் பொருத்தம் இல்லாததால் அரசு தடை விதித்துள்ளது. மேலும், உலோகங்கள், தாவர நச்சுகள் இதில் கலந்திருக்கலாம்.

விளைவுகள்: சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கும். வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

கவனிக்க: பன்னாட்டு உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே மாற்று வழி.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
ரெடிமேட் தோசை மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட், மிளகாய் தூளில் செங்கல்தூள், சூடான் டை, சிட்ரஸ் ரெட், கான்கோரைட். மல்லி தூளில் மரத்தூள், குதிரை சாணம், மாலசைட் பச்சை (Malachite green - வீட்டு வாசல் பச்சை நிறமாக மாற, சாணத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தும் நிறமி), மஞ்சள் தூளில் காரிய க்ரோமல், அக்ரிடைன் மஞ்சள் (Acridine yellow), கடுகில் ஆர்ஜிமோன் விதை, தூள் உப்பு கட்டியாகாமல் இருக்க ஆன்டிகேக்கிங் ஏஜென்ட், டீ தூளில் முந்திரி தோல் மற்றும் செயற்கை வண்ணங்கள், தேனில் வெல்லப் பாகு, சர்க்கரை, சமையல் எண்ணெய்களில் காட்டு ஆமணக்கு எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: தொடர் தலைவலி, ஒற்றைத் தலைவலி, உடல்பருமன், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகக் கற்கள், கருச்சிதைவு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, நெஞ்சுவலி, நுரையீரல் பாதிப்புகள், குறைபாடுடன் குழந்தை பிறப்பது, அல்சர், கல்லீரல் வீக்கம், கணைய பாதிப்புகள், குழந்தையின்மை, ரத்தக் குழாய் மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: லேபிளில், மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற உப்பு, பதப்படுத்தும் ரசாயனங்கள் மாற்று பெயரில் மறைந்திருக்கும். ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளே பாதுகாப்பானது.

சைவ உணவுகளில் அசைவ உணவுகள்
சிப்ஸ், பாக்கெட் மற்றும் டின் உணவுகளில் விலங்குக் கொழுப்பு, வெள்ளை சர்க்கரையில் கால்நடைகளின் எலும்புத் தூள், ரெடிமேட் ஆரஞ்ச் ஜூஸ், சில வகை பானங்களில் மீன் எண்ணெய், கம்பளியிருந்து எடுக்கப்படும் லனோலின், பூச்சியிலிருந்து எடுக்கப்படும் கார்மைன் (E 120) என்ற நிறமூட்டி ஆகியவை மறைமுகமாகச் சேர்க்கப்படுகின்றன.

பேக்கரி உணவுகள், சூயிங் கம், ஜெல்லி மிட்டாய், ஜாம், காப்ஸ்யூல் மாத்திரைகளில், விலங்குகளின் முடியிலிருந்து, தயாரிக்கப்படும் எல்-சிஸ்டீன் (L-Cysteine), விலங்குத் தோல், கேப்ரிக் அமிலம் (Capric acid) ஆகியவை உள்ளன. இனிப்புகளின் மேல் முடப்படும் வெள்ளித்தாள், மாட்டுக் கொழுப்பால் தயாராகிறது. கால்நடைகளின் எலும்புத் தூளான ‘போன் பாஸ்பேட்’, செயற்கை பான பொடிகளில் சேர்க்கப்படுகிறது.

விளைவுகள்: அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் தும்மல், சரும பிரச்னை, உடல் பருமன், வயிறுத் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கலப்படம் இல்லாத சைவ உணவுகளைச் சாப்பிட விரும்புவோர், ‘வீகன் குறியீடு’ இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

கவனிக்க
இ என்ற எழுத்துகளில் வரும் E120, E542, E441, E469, E631, E635,E901, E913,E920 ,E966, E1105 கோடு எண்கள், லேபிளில் பார்த்தால் அதில் விலங்குப் பொருட்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

யாரிடம் புகார் செய்வது?
வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அவர்கள் எந்த பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளை பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் என்று தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் கேஸ் போடப்படும். பாதிக்கப்பட்டோர் நிவாரணமும் கேட்கலாம்.

தடை செய்யப்பட்ட வண்ணங்கள்!
உணவுத் தயாரிப்பில் அரசால் சில வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்படலாம் எனச் சட்டங்கள் உள்ளன. ஆனால், இங்கு சின்தட்டிக் வண்ணங்கள், தடைவிதிக்கப்பட்ட நிறங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதைக் கண்டுபிடிக்க, அந்தந்த ஊர்களில் பரிசோதனை கூடங்கள் இல்லை. தமிழ்நாட்டிலும் ஆறே பரிசோதனை கூடங்கள்தான் உள்ளன.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.