காதல் கண்கட்டுதே!

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
‘காதல் என்பது ஒரு பூ மாதிரி’ என்ற எமோஷனல் டயலாக்குகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, காதல் என்ற மனித உணர்வினை உளவியல் அடிப்படையில் உடைத்துப் பேசுகிறார், மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.
கண்டதும் காதல்

கண்டதும் காதல் என்பது, சாத்தியம்தான். பார்த்த நொடியிலேயே ஒருவருக்கு ஒருவர் மேல் ஈர்ப்பு உள்ளதை உணரவைக்கும் இந்தக் காதல், சொல்லப்போனால் ஆழமானது. ஒருவரின் குரல், வாசம், தோற்றம் என ஏதேனும் ஒன்றின் தூண்டுதல் மூலமாக வரும் ஈர்ப்பு... Oxytocin (பெண்களுக்கு), vasopressin (ஆண்களுக்கு), Dopamine, adrenalin, endorphins (இரு பாலருக்கும் பொதுவானது) ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியால் நிகழ்கிறது.

தன்னிடம் இல்லாத ஒரு சுபாவத்தைப் பெற ஏங்கும் நோக்கத்தில், கண்டதும் காதல் மலரலாம். மனிதமூளையில், தகவல்கள் லேயர்களாகப் பதிவாகும். பார்த்தவுடன் காதல்கொள்பவர்கள், தன் துணையை எங்கு, எப்போது கண்டோம், அப்போது அவர் அணிந்திருந்த ஆடை, சூடியிருந்த மலரில் இருந்து,
அந்த முதல் சந்திப்பின் அறிமுக நிமிடங்கள்வரை நினைவுகூர இயலும். இந்த உணர்வால் காதல்வயப்படுபவர்கள் இணைவது குறைவு. ஆனால், நீடித்து நிலைக்கும் பந்தம் இது.

காதல் அறிகுறிகள்

பிடித்த ஒருவரைப் பற்றிப் பேசும்போது வரும் லேசான அசட்டுச் சிரிப்பு, குறிப்பிட்ட ஒருவருக்காக மட்டும் அசௌகரியங்களை சகிப்பதில் இருந்து வலிகளைப் பொறுத்துக்கொள்வதை வரை பல தியாகங்கள் செய்வது... இவையெல்லாம் காதலின் அறிகுறிகள். ‘இதை எல்லாம் நான் என் அண்ணன், நண்பன், தம்பி, தோழிக்காககூட செய்வேனே’ எனலாம். ஆனால், இந்தச் செயல்களோடு குறிப்பிட்ட நபரிடம் பாலின ஈர்ப்பும் இருக்கும்.

இன்ஃபேக்சுவேஷன்

நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து அவரை அடைய நினைப்பதை இன்ஃபேக்சுவேஷன் என்று சொல்லலாம். ஒரு நபரின் மீது வரும் பிரியம், காதல். ஆனால், காதல் என்ற உணர்வின்மீது வரும் ஈர்ப்புதான் `இன்ஃபேக்சுவேஷன்' என்று சொல்லலாம்.

பழகிய பின் வரும் காதல்

நெடுநாள் பழகிய பின் வரும் காதல், நட்புரீதியான புரிதலில் இருந்து உருவாகும் உறவு. நமது குடும்பத்தினரிடம் இருக்கும்போது எப்படி அந்நியத்தன்மை இல்லாமல் உணர்வோமோ, அப்படி ஒரு கம்ஃபர்ட்னஸ் நன்கு பழகிய பின் துணையிடமும் ஏற்படும். நண்பர்கள் காதலர்கள் ஆகும் கதை, பழகிய அத்தை மகன், மாமன் மகள் காதலர் ஆகும் கதை எல்லாம் இந்த ரகம்.

மோதலில் வரும் காதல்

ஒருவரைப் பிடித்திருக்கும். அதை அவரிடம் சொல்ல ஈகோ தடுக்கும். எனவே, அவருடன் மோதல்போக்கைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரிடம் பேசிடும் சந்தர்ப்பை உருவாக்கிக்கொள்வார்கள், மோதலில் ஆரம்பித்து காதலில் முடிப்பவர்கள். மேலும், ஒருவருடன் அடிக்கடி சண்டையிடும்போது, அவரின் பலம், பலவீனம், சகிப்புத்தன்மையை அறிந்துகொள்ள இது வழிவகுக்கும். சிறு சிறு உரசல்கள் மூலம் உறவு தெளிவுற்று மன்னிக்கும் பக்குவமும் அடைய வழிவகுக்கும். மொத்தத்தில், மோதல் என்பதைவிட இதை ஒருவித சாமர்த்தியமான ஊடல் எனலாம்.

காதல் முறிவு

எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாகவோ, அல்லது பரஸ்பரம் பொருந்தாமலோ இருந்தால் அந்தக் காதல் முறியலாம். ஆனால், அதோடு வாழ்க்கை முடிவதில்லை. காதலித்தவரை ‘இனி இவன்/இவள் வேண்டாம்’ என்று முடிவெடுக்கும் முன், அந்தப் பொழுதின் சண்டைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசாமல், அவருடனான அழகான காதல் பொழுதுகளையும் அசைபோட்டு, பின்னர் முடிவெடுங்கள்.

வாசனை திரவியங்கள் காதலைத் தூண்டுமா?

ஒருவர் அருகில் வந்து நிற்கும்போது, அவர் பயன்படுத்திய நறுமணம் பிடிக்கலாமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப்போல அந்த நபரைப் பிடிக்கும் என்பதில்லை. ஒரு வாசனை திரவியத்தை 100 பேர் பயன்படுத்தும்பட்சத்தில், ஒரு பெண்/ஆணுக்கு அந்த 100 பேரின் மீதும் காதல் வந்துவிடுமா என்ன? ஒருவரை விரும்பத் தூண்டுவது, அவருடைய இயல்பான உடம்பு வாசமான ஃபெரோமோன் (Pheromone). சொல்லப்போனால், டியோடரன்ட்ஸ் அதை மழுங்கடித்து, செயற்கை வாசனையைப் பிரதானமாக்கும்.

காதல் மனம் சார்ந்ததா... பொருள் சார்ந்ததா?

காதல் மனம் சார்ந்ததுதான். ஆனால், அந்த உறவை தினசரி வாழ்வில் தொடர பணம் தேவைப்படுகிறது. இந்தத் தேவை காதலுக்கு மட்டுமல்ல... அப்பா, அம்மா, அண்ணன், மகன், மகள் என்று எல்லா உறவுக்கும் பொருந்தும்.

ஒருவருக்கு ஒரு காதல்தானா?

கண்டதும் வரும் காதல் ஒருவரின் ஆயுளில் 6 முதல் 10 முறைவரை வரும் வாய்ப்பு உள்ளது.

எது எப்படியோ, லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.