காதல் மொழி!! - Love languages

#1


காதலிக்கும் போது அல்லது திருமணம் நடந்த புதிதில், தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடுவதாய் பலரும் கூறுகிறார்கள். இயந்திரமயமான வாழ்க்கையில், காதலை வெளிப்படுத்த போதுமான நேரமும், ஆற்றலும் இல்லாமல் போய்விடுவதுதான் இவ்வாறு பலர் சொல்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் . குறைவான நேரத்தில், மிகக் குறைந்த ஆற்றலை பயன்படுத்தி வேலை செய்யும் இயந்திரங்கள் பலவற்றை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திவருகிறோம். அதே போல் காதலை வெளிப்படுத்துவதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா என்ன?


ஆம். ஒரு வழி இருக்கிறது. அந்த வழிக்கு தன் துணையைப் பற்றிய ஒரு சிறு புரிதல் இருந்தால் போதும். அந்த வழியின் பெயர் தான் “காதல் மொழிகள்”.


முனைவர். கேரி சாப்மேன் என்ற உளவியல் ஆலோசகர், பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, காதலர்கள்/தம்பதியினர் 5 வகைகளில் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்.

1. பாராட்டு வார்த்தைகள்: தன் தோற்றத்தை, செயல்களை பாராட்ட வேண்டுமென எதிர்பார்ப்பது. அப்படிப்பட்ட பாராட்டுகளின் மூலம் தனது தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள விழைவது.


தன் துணை செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் செயற்கையாக இல்லாமல் உண்மையாகவே மனம் உவந்து பாரட்ட வேண்டும். பாராட்டும் போது உங்கள் குரலில் காதல் வெளிப்பட வேண்டும். உங்கள் துணை கூறும் விஷயங்களை கவனமாக, பொறுமையாக கேட்டலும் இந்த காதல் மொழியில் அடங்கும். கடந்தகாலத்தில் நடந்த தவறுகளை மன்னித்து, அவற்றைப்பற்றி பேசாமல் நிகழ்காலத்தில் வாழ்வதும் உங்கள் காதலை வெளிப்படுத்தும் கருவியாகும்.

2. தனக்கெனவே நேரம் செலவழித்தல்: தன் துணைக்காகவே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி, எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சேர்ந்து இருப்பது, ஒன்றாக வேலைபார்ப்பது போன்றவற்றின் மூலம் அன்பை வெளிப்படுத்துவது.


வீட்டில் இருக்கும் நேரத்தையோ அல்லது வெளியில் கூட்டிச்செல்லும் நேரத்தையோ துணைக்கென நேரம் செலவழிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. பலர் வீட்டில் இருக்கும் போது, வேறு ஏதோ வேலை பார்த்துக்கொண்டோ, துணையுடன் வெளியில் செல்லும் போது செல்ஃபோனில் பேசிய படியோ இருப்பார்கள். அப்படி இருப்பது இந்த காதல் மொழிக்கு எதிரானது. துணையுடன், அதிகமான நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்ச நேரமாய் இருந்தாலும், அதனை முழுமையாக தன் துணையுடன், தன் துணைக்காகவே செலவழிப்பதே இந்த காதல் மொழியின் தத்துவமாகும்.

3. பரிசுகள்: பரிசு தருவதன் மூலமும் அன்பை வெளிப்படுத்துவது. இதனை ‘ஆச்சரியம் தருவது’ என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.


பரிசு என்பது அதிக விலை மதிப்புள்ளதாய் இருக்க வேண்டுமென இல்லை. நீங்களே உங்கள் கைகளால் எழுதித்தரும் ஒரு வாழ்த்து அட்டையாகவோ அல்லது 5 ரூபாய் ரோஜா பூவாக கூட இருக்கலாம். ஒரு வேளை உங்கள் துணை இந்த காதல் மொழியை முதன்மை காதல் மொழியாக கொண்டிருந்தால், திருமண நாள், பிறந்த நாள் போன்ற முக்கிய தருணங்களை மறந்து விடுவது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தரும்.

4. உதவி செயல்கள்: தனது துணைக்கு எந்த வகைகளிலெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டுபிடித்து, அந்த வகைகளில் உதவி செய்ய தன்னை தயார்படுத்திக்கொள்வது, உதவி செய்வது போன்றவை.


வீட்டு வேலைகளிலும், அலுவலக வேலைகளிலும் உதவியாய் இருப்பது, அவசியமான நேரங்களில், முழுமையாக தன் துணை செய்ய வேண்டிய வேலையை தானே செய்து முடித்துவிடுவது போன்றவை இந்த குறிப்பிட்ட காதல் மொழியில் அடங்கும்.

5. ஸ்பரிசம்: அன்பை முத்தங்களாய், கட்டி பிடிப்பது, தட்டிக்கொடுப்பது, உடலுறவு கொள்வது போன்றவற்றின் மூலம் தெரியப்படுத்துவது.


பலர் திருமணமான புதிதில் கைகோர்த்து நடப்பது, தோளில் கைபோட்டுக்கொள்வது, அன்பாய் தோளில் சாய்ந்து கொள்வது போன்றவற்றை செய்திருப்பார்கள். இவை ஸ்பரிசம் என்னும் காதல் மொழிகளே. அவற்றை திருமணமாகி எவ்வளவு வருடங்களானாலும் செய்யலாமே!

எப்படி தன் துணையின் காதல் மொழியை கண்டுபிடிப்பது?

உங்கள் துணையை மனதில் வைத்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் உங்கள் துணையின் காதல் மொழிகள் எவை என்பதனை கண்டுபிடித்துவிடலாம்.

எப்படி காதலை என் துணை என்னிடம் வெளிப்படுத்துகிறார்?

என்ன மாதிரியான விஷயங்களை நான் செய்வதில்லை என என் துணை என்னிடம் அவ்வபோது புகார் கூறுகிறார்?


என் துணை என்னிடம் எந்த விஷயங்களை அடிக்கடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்?

இதன் மூலம் உங்கள் துணையின் முதன்மை காதல் மொழியையும், இரண்டாம், மூன்றாம் காதல் மொழிகளையும் கண்டுபிடித்து, அந்த மொழிகளில் உங்கள் காதலை வெளிப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். பலரும் தன் காதலை தன்னுடைய காதல் மொழியில் மட்டுமே தன் துணைக்கு வெளிப்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்வது, தமிழே தெரியாத ஒருவரிடம் சென்று தமிழில் பேசிவிட்டு, எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார் என்று சொல்லும் முட்டாள்தனத்திற்கு சமம்.


வேறு சிலர் எக்கச்சக்கமான காதலை மனதுக்குள் வைத்துக்கொண்டு அதனை வெளிப்படுத்தவே மாட்டேன் என்கிறார்கள். இது நேர்காணலுக்கு சென்று விட்டு, தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை அவர்களே தெரிந்துகொள்ளட்டும், நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று சொல்வதற்கு சமம்.


ஆகவே தன் துணைக்கு எந்த காதல் மொழியில் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அவ்வபோது அந்தந்த காதல் மொழிகளில் வெளிப்படுத்துவதே காதல் உறவின் இரகசியம்.


ஒரே மாதிரியான காதல் மொழிகளை கொண்ட இருவர் தம்பதிகளாக பெரும்பாலும் அமைவதில்லை. வேண்டுமானால், இருவரும் ஒரே மாதிரியான காதல் மொழிகளை கொள்ள தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளலாம், அதன் முதல் படி, தனது துணையின் காதல் மொழிகளை அறிந்து, அந்த வகையில் காதலை வெளிப்படுத்துவது ஆகும்.


இந்த காதல் மொழிகள் என்னும் உளவியல் கோட்பாட்டினை திருமணத்திற்கு தயார்படுத்திக்கொள்வதற்காக அளிக்கப்படும் ஆலோசனையின் போதும், பிரச்சனை ஏற்பட்டு, உளவியல் ஆலோசனைக்காக அணுகும் போதும், உளவியலாளர்களால் தம்பதியினருக்கு சொல்லித்தரப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
 

Attachments