காலா

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,718
Location
Chennai
#1
காலா
இது ரஜினியின் படம் இல்லை, ரஞ்சித்தின் படம்..அதை மனதில் வைத்து கொண்டுதான் படம் பார்க்கணும்.அவரின் எண்ணங்கள் பற்றி நாம் அறிந்ததே..அதை இந்த காலா மூலம் சொல்லியிருக்கிறார்.ரஜினி தன கருத்துக்களை மக்கள் முன் சொல்வதட்கு முன் படம் வந்திருந்தால் வேறு மாதிரி பேசப்பட்டிருப்பார்.இப்போ அவரின் கருத்துக்களை மக்கள் முன் வைத்து, பெரிதும் பேசப்பட்டதால் படம் பார்க்கும்போது, நமக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்!!சொன்னது ஒண்ணு , செஞ்சது ஒண்ணு!! மற்றபடி ரஜினியின் அலட்டல் இல்லாத நடிப்பு, அவரின் பன்ச் டயலாக் இல்லாத அதிரடி அறிமுகம் இல்லாத படம்!வயதுக்கு ஏற்றபடி தாத்தாவாக பேர பிள்ளைகளுடன் ரஜினி!

ஒரு இளமை காதல் ,தூத்துக்குடி மண்ணின் மங்கையுடன் குடும்ப வாழ்க்கை,ஈஸ்வரி அட்டகாசம் பண்ணிட்டார்!இந்த பெண்ணா சன் டிவி யில் சீரியல் வந்ததுன்னு ஆச்சரியமா இருக்கு.இளமை ரஜினியை காட்டாமல் கார்டூனாய் காட்டியதுக்கே கோடானு கோடி நன்றிகள்!படம் முழுக்க குறியீடுகள் ..பத்தி வீட்டுக்கு வந்ததும்தான் புரிந்தது!லெனின் கத பாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது !இன்றைய இளைஞனின் மனநிலை !க்ளீன் இந்தியா, கருப்பு மற்றும் போராட்டங்கள் அம்பேத்கார் புத்தர் எல்லாம் சொல்லிட்டார். சாதாரண ரஜினி ரசிகர்கள் பாவம்!கை தட்டவும் முடியல, கத்தவும் முடியல, சில சீன்களில் கூச்சல் போட்டார்கள்.நிறைய இடங்களில் ரஜினியின் நடிப்பு அபாரம்.இனியாவது அவரை நடிக்க விட்டா நல்லாருக்கும்.அதை விட்டுட்டு வேற வேலை பார்க்காம இருக்கணும்,!போராட்டம் போராட்டம் ன்னு படத்துல சொல்லிட்டு வெளியில் இப்படி வாங்கி கட்டிகிட்டாரேன்னு தான் எனக்கு தோணுச்சு!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,718
Location
Chennai
#7
காலா – தாதாவா? தாத்தாவா?
வளர்மதி



தாராவி தாதா காலா அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வம். ஆனால், அதை நிறுவுவதற்கான ஒரு காட்சிகூட படத்தில் இல்லை. ஆள் பலம் இல்லை,பண பலம் இல்லை. அவர் சொல்வதை செய்து முடிக்கும் ஒரே அம்பு அவருடைய மகன்களில் ஒருவர் மட்டுமே. தமிழில் இப்படி வந்திருக்கும் ஒரே தாதா படம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
தாதா காலா தெருப் பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடுவதுதான் அவருக்கு ஓப்பனிங் சீன். இளவட்டங்கள் எல்லாம் அவரைக் கலாய்ப்பதைப்பார்க்கும்போது இது தாதா படமா தாத்தா படமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. படம் முழுக்க ரஜினி “ஊர் பெரியவர்” என்ற பாத்திரமாகவே நடித்திருப்பது தாத்தா படம்தான் என்பதை உறுதி செய்துவிடுகிறது.
தாத்தா காலாவிற்கு 60 வயதில் முன்னாள் காதலியுடன் “மெல்லிய ரொமான்ஸ்”. ஒரு தவிப்பு, ஒரு படபடப்பு, ஒரு ஃப்ளாஷ் பேக் (அதுவும்நேர்த்தியே இல்லாத ஒரு ஸ்டோரி போர்ட் சித்தரிப்பு மூலம்). முன்னாள் காதலியின் காதோர லோலாக்கை க்ளோஸ் அப் ஷாட்டில் ரசிக்கும் ஒரு டேட்டிங்க் சந்திப்பும்கூட. இடைவேளைக்கு சற்றுமுன் வரை படத்தை ஆக்கிரமித்திருப்பது இந்தக் காதல் சரசம்தான். அப்படியே கதையைநகர்த்திக்கொண்டு போயிருந்தால், “முதல் மரியாதை” போல ஒரு முதிர் பருவக் காதல் ‘காவியத்தை’ முழுமையாகப் படைத்திருக்கலாம்.


ஆனால், இந்த முதிர் பருவக் காதலுக்குக் குறுக்கே அரசியல் புகுந்து, தாத்தா படம் தாதா படமாக உருமாற முயற்சி செய்கிறது. காலா தாத்தாவாக
இருப்பதால் தாதாவாக உருமாறுவதிலும் தொய்வு ஏற்படுகிறது. முன்னாள் காதலிக்கு அடிபட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு, அவரைப்
பார்த்துவிட்டுத் திரும்பும் தாத்தாவைக் கொல்ல வில்லனின் அடியாள் முயற்சிக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனை வருகிறது.
அப்போது, தனியாக நிற்கும் காலா, வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, “வேங்கையின் மகன் ஒத்தையில நிக்கிறேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே, சண்ட செய்வோம்,” என்று சவால் விடுகிறார். அடிக்கவரும் ஆட்களை அடித்துப் பறக்கவிடுவார் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு நகரும் தருணம் அது. பொசுக்கென்று தாத்தாவின் மகன் குறுக்கே புகுந்து அடியாட்களை அடித்துத் துரத்திவிடுகிறார்.
வெடிக்க வேண்டிய பட்டாசு, தாராவியில் பொழிந்த மழையில் நமத்து புஸ் என்று அணைந்துவிடுகிறது. வடை போச்சே என்ற ஆதங்கத்தில் காலா ஜீப் கதவில் கையால் அடித்து “சே!” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். படத்திற்காக வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் இக்காட்சியைப் பார்த்து, பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த 2,89, 99,376 சொச்ச ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வடை போயிருக்கும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தாதாவாக மாறவேண்டியவர் தாத்தாவாகவே தொடர்கிறார்.
அடுத்த சில காட்சிகளுக்குள்ளாகவே, காலா தாத்தா இல்லை தாதாதான் என்று காட்டுவதற்காக, மேம்பாலத்திற்கு நடுவே வில்லனின் அடியாளை மறித்து மழையில் குடைபிடித்து சண்டையிட்டு கொல்லும் காட்சியைக் காட்டுகிறார்கள்.
தன் அடியாளைக் கொன்ற தாதாவைப் பார்க்க, வில்லன் அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கே போய் பார்த்தால், நாயைத் தடவிக் கொடுத்துக்கொண்டு நாற்காலியில் தனியாக அமர்ந்திருக்கும் தாதா, மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் சகிதமாக தாத்தாவாகவும் காட்சியளிக்கிறார். திரும்பிச் செல்லும் வில்லனை, “என் அனுமதி இல்லாமல் உள்ளே வந்திருக்கிறாய், ஆனால், என் அனுமதியில்லாமல் வெளியே போகமுடியாது,” என்று எச்சரிக்கிறார். அதை பொருட்படுத்தாமல் வில்லன் வெளியே செல்ல முயற்சி செய்து முடியாமல் திரும்ப காலாவிடமே வருகிறார்.
தாத்தா இல்லை தாதாதான் என்பதை வலுவாக நிறுவவேண்டிய காட்சி. போ போ என்று பொசுக்கென்று சொல்லி இடைவேளையிலும் அந்த வாய்ப்பை நழுவவிடுகிறார்.
இரண்டாம் பாதியில் அறுபதாம் கல்யாணம். மீண்டும் தாத்தாவாகிவிடுகிறார். தாராவியை விட்டு வெளியே செல்ல விருப்பம் தெரிவிக்கும் மகன்கள் மருமகள்களை அதட்டி அடங்கச் செய்து, தன் குடும்பத் தலைவன் ஸ்தானத்தை – தாத்தா தகுதியை நிறுவுகிறார். அடுத்த காட்சியிலேயே போலீசார் அவரை தாதாவாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் தாதா, அங்கு திடீரென்று காமெடியனாக மாறிவிடுகிறார் (அது நல்லதொரு நகைச்சுவை காட்சி). போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது, தாதாவின் மனைவியும் அம்பாக செயல்பட்ட மகனும் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில நொடிகளில் மீண்டும் தாதா தகுதி காலி.
சில காட்சிகளுக்குப் பிறகு, வில்லன் வீட்டிற்குத் தனியாகச் சென்று சவால் விட்டு மீண்டும் தாதாவாகிறார். வீடு திரும்பினால், கரண்ட் கட்டாகி, பேரப் பிள்ளைகளோடு தாத்தாவாகிவிடுகிறார். “இந்தச் சண்டையெல்லாம் என்னோடு முடியட்டும்” என்று கண்கலங்குகிறார்.
அடுத்த சில நொடிகளில், அவரது வீடும் ஊரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாத்தா இப்பொழுதாவது தாதாவாக மாறுவார் என்று பார்த்தால், சற்றும் எதிர்பாராமல் போராட்டத் தலைவராகிறார். ஊரே அவர் பின்னால் திரண்டு போராடுகிறது. தாராவியில் நடக்கும் போராட்டக் காட்சிகள் சடாரென்று, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துபவையாக மாறுகின்றன.
மெரினாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசி, தன் வேலையைத் துறந்த ஒரு போலீஸ்காரரைப் போலவே படத்திலும் ஒரு போலீஸ்காரர் பேசுகிறார். தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிறார். போராட்டத் தலைவராக மாறிவிட்டிருக்கும் காலா, சிவாஜிராவ் கெய்க்வாட்டை உற்றுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார் (ரஜினியின் அரசியலை நுட்பமாக காட்டுகிறார்களாம்). இடையில், ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு நடிகை(?) “போராடுபவர்களில் 60 சதவீதம் பேர் கிரிமினல்களாக இருக்கக்கூடும்,” என்கிறார் (தூத்துக்குடியில் கலவரம் விளைவித்தவர்கள் ‘சமூகவிரோதிகள்’ என்ற ரஜினியின் பஞ்ட் டயலாக் படம் பார்ப்பவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்தால் யார் பொறுப்பு?).
இறுதியாக, போராட்டத்திற்கு அரசு பணிகிறது. வில்லன், தன் தோல்விக்கு காரணமான காலாவைத் தீர்த்துக்கட்ட அடியாள் படையை ஏவி விடுகிறான். அடியாள் படை தாராவிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபடும்போது, போராட்டத் தலைவராக இருந்த காலா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காவலாக – அதாவது மீண்டும் தாத்தாவாக மாறிவிட, இளைஞர் பட்டாளம் அடியாட்களை எதிர்கொள்கிறது. அவர்களை வீழ்த்திவிட்டு அடியாள் கும்பல் காலாவை நெருங்குகிறது.
இப்போது மீண்டும் தாத்தா காலா, தாதா காலாவாக மாறுகிறார். அடியாட்களை அடித்து நொறுக்குகிறார். ஆனால், அடியாட்களில் ஒருவன் காலாவைச் சுட்டுவிடுகிறான். அவர்கள் சண்டையிட்ட கட்டிடமே வெடித்துச் சிதறுகிறது.
காலா கொல்லப்பட்டுவிட்டதாக வில்லன் நம்புகிறான். ஆனால், காலா உயிருடன் இருக்கிறார் என்று மக்கள் நம்புவதாக ஊடகம்தெரிவிக்கிறது. அதாவது, படம் பார்ப்பவர்களுக்கு சொல்லப்படுகிறது – கவனிக்க காட்டப்படவில்லை, சொல்லப்படுகிறது. ஆகையால், படம் பார்ப்பவர்களும் அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது.
காலா இறந்துவிட்டான் என்ற நம்பிக்கையில், வில்லன் மீண்டும் தாராவியில் தன் திட்டத்தை நிறைவேற்ற வருகிறான். மக்கள்
கூடியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே காலா தோன்றுகிறான். மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடுகிறார்கள். முதலில் கறுப்பு வண்ணப் பொடியையும் அடுத்து சிகப்பு வண்ணப் பொடியையும் தூவி, அதற்கடுத்து நீல வண்ணப் பொடியையும் வில்லன் மீது தூவி பிறகு பல வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள், ஆடுகிறார்கள். காமிரா மேலெழுந்து ஜூம் ஆகி திரை கறுப்பாகிக் கரைகிறது.
என்ன நடந்தது என்று படம் பார்ப்பவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்ற சந்தேகத்தில், தாராவியில் சுற்றிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், சடாரென்று தாவி சென்னை செண்ட்ரல் இரயில் நிலையித்திற்கு எதிராக இருக்கும் பாலத்தின் மேல் நடந்து கொண்டு செய்தி வாசிக்க ஆரம்பித்துவிடுகிறார். தாராவியில் நடந்த மக்கள் கிளர்ச்சியில் வில்லன் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கிறார்.
அவருக்கு இடப்பக்கம் பாலத்திற்கு கீழே அமைந்திருக்கும் இந்திரா நகர் மக்கள் போராட்டத்தோடு படம் முடிகிறது.
திரையரங்கத்திற்கு வெளியே வந்தும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையை அசைபோட முடிந்தது. திரைப்படத்தில் அளவுக்கதிகமாக கையாளப்பட்டிருக்கும் “ஸ்லோ மோஷன்” உத்தியால், உலகமே “ஸ்லோ மோஷனில்"தான் இயங்குகிறதோ என்று பிரம்மை ஏற்படுகிறது. ஆற்றலைக் காட்டப் பயன்படுத்தப்படும் “ஸ்லோமோஷன்” உத்தியை, காலத்தைக் கடத்த (இல்லாத கதையை ஜவ்வ்வ்வாக இழுக்க) தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பயன்படுத்துவதைப் போல காலாவிலும் கையாண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே மிஞ்சுகிறது.
படம் முடிந்து வெளியே வந்ததும் நண்பர் ஒருவர், க்ளைமாக்ஸில் வண்ணப் பொடி தூவி நடனமாடுகிறார்களே அதற்கு குறியீட்டு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.
படம் முழுக்க ரஜினி தாதாவாக நடித்திருக்கிறாரா அல்லது தாத்தாவாக நடித்திருக்கிறாரா என்று ஏற்கனவே குழம்பிப் போயிருந்தஎனக்கு இந்தக் கேள்வி மேலும் குழப்பத்தை விளைவித்தது. என்றாலும் சுதாரித்துக்கொண்டு நண்பருக்கு சொன்னேன், “படத்தின் க்ளாமாக்ஸில் தூவப்பட்ட வண்ணப் பொடிகளுக்கு சில குறியீட்டு விமர்சன விற்பன்னர்கள், கறுப்பு – திராவிடம், சிகப்பு – கம்யூனிசம், நீலம் – அம்பேத்கரிசம் என்று குறியீட்டு விளக்கங்கள் அளிக்கக்கூடும்.
ஆனால், விஷயம் அது இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமான தாதா படங்களைப் போல, வில்லனை ஹீரோ கொல்வதாக காட்டாமல், புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக அப்படி காட்டியிருக்கிறார்கள். மக்கள் வண்ணப் பொடிகளை வீச வீச வில்லன் திணறித் திணறி அங்கும் இங்கும் அலைகிறான். மக்கள் எழுச்சியின் முன் அவனைப் போன்ற மக்கள் எதிரிகள் பொசுங்கிப் போவார்கள் என்பதை காட்டுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக நிற்கும் ரஜினி மாபெரும் தலைவர் என்றும் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.”
நண்பர் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து, “இதுக்கு நான் கேள்விய கேட்காமலே இருந்திருக்கலாம் போ,” என்றார். மேலும் ஒரு கேள்வி கேட்டால் என் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் என்ற பயத்தில் நானும் ஒதுங்கி வந்துவிட்டேன்.
இளம் தலைமுறை இயக்குனர்களுள் ஒருவராகப் பரிணமித்திருக்கும் பா. இரஞ்சித் முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்தவர்.
தமிழ் திரையில், தலித் மக்களின் வாழ்க்கை, தலித் பண்பாடு – அரசியல் சார்ந்த குறியீடுகள், அரசியல் முழக்கங்களை (காலாவில்தான்முதன்முதலாக தமிழ் திரையில் ஜெய் பீம் என்ற முழக்கம் ஒலிக்கிறது) பரவ விட்டிருக்கிறார். இரண்டாம் படத்திலும் சில சமரசங்களுடன்
தனது முத்திரையைத் தொடர்ந்தார். மூன்றாவது, வழமையான ஒரு ரஜினி படமாக இருந்தது. ஆனால், காலாவில், ரஜினியின் படமாகவும் இல்லாமல், தனது வழமையான முத்திரை பதிக்கும் படமாகவும் இல்லாமல், ரஜினிக்கு ஒவ்வாத தலித் அரசியலை, ரஜினிக்கு சாதகமாகத் திணிக்கும் பொருட்டு தானும் குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பி, அதிருப்தியையும் கொடுத்திருக்கிறார். விளைவு “வாதாபி ஜீரணோபவ”வாகவே இருக்கும்.
ரஜினிக்கு என்று ஒரு பாணி உருவாக்கப்பட்டு நிலையாக நின்றுவிட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும், ரஜினி அரசியல் பேசும் பாணியே தனி. “நெருப்புடா”, “சிங்கம் சிங்கிளா வரும்” போன்ற வீர வசனங்கள், “நான் ஒருமுறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி”, “ஆண்டவன்
சொல்றான், அருணாசலம் முடிக்குறான்”, “பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல” போன்ற பஞ்ச் டயலாக்குகள் (இதை நான் சொன்னா சிரிச்சிடுவாங்கப்பா என்று சூரி சொல்வார்) மூலம்தான் ரஜினி அரசியல் பேசுவார். அப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் மூலமாகத்தான் ரஜினி ரசிகர்கள் தமக்கு வேண்டிய அரசியல் “மெசேஜுகளை” பெற்றிருக்கிறார்கள், பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” போன்ற அதிரடி வசனங்களால் “வரும், ஆனா வராது” என்று நீண்டகாலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசியல் பிரவேசத்திற்கு, “கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போகிறேன்” என்ற அறிவிப்பை வெளியிட்டு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவருடைய அரசியல் பிரவேசம் உறுதியான பிறகு வெளியாகப்போகும் படம் என்பதால் காலா மிகுந்த
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. “தலைவரின்” அரசியல் “மெசேஜை” அவரது தீவிர ரசிகர்கள் தவமிருந்து எதிர்பார்த்திருந்தார்கள்.சாதாரண ரசிகர்களும் பொதுமக்களும்கூட காலாவில் ரஜினியின் அரசியல் “மெசேஜ்” என்னவாக இருக்கும் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.
ஆனால், ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பழக்கப்பட்டிருந்த ரஜினியின் பாணிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத முறையில் அரசியலை பேசியதால் காலா படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ரஜினியின் கதாபாத்திரத்தை தாதாவாக தெளிவாகச் சித்தரித்து, நாலு பஞ்ச் டயலாக்குகளை வீசியிருந்தால், படம் அமோகமாக வெற்றி பெற்றிருக்கும். அதற்கான வாய்ப்புகள், காட்சிகள் பல இருந்தபோதும் படத்தில் அது கோட்டை விடப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சினிமாவில் மட்டுமில்லை, நேரடி அரசியலில் ஈடுபட்டாலும் தனக்கு பஞ்ச் டயலாக் அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதையும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தவுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிவிட்டார் ரஜினி.
அப்படிப்பட்டவரை வைத்து, மக்களைத் திரட்டி போராட்டம் செய்பவராகச் சித்தரித்து படம் எடுத்தால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்? பாஜக-வின் அரசியலை பேசுபவரை வைத்து பாஜக-விற்கு எதிரான அரசியலை பேசினால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்?
ஆன்மீக அரசியல் பேசுபவரை வைத்து, நாத்திகக் குறியீடாக கறுப்பைக் காட்டினால், சபரி மலைக்கு மாலை போட்டிருக்கிறார் (படம் முழுக்க ரஜினி கறுப்பு சட்டைக்குள் ருத்திராட்ச மாலை போட்டிருக்கிறார்) “தலைவர்” என்றுதானே அவரது ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்?
இது கணவன் உடலில் அண்ணனின் தலையையும், அண்ணன் உடலில் கணவனின் தலையையும் ஒட்ட வைத்த மதனசுந்தரியின்கதையாகத்தானே முடியும்.அப்படித்தான் முடிந்திருக்கிறது.
சென்னை மாநகரின் வற்றா ஜீவநதியாம் கூவத்தின் ஓரத்தில் அமைந்திருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில் ஏழு கல்பகாலம் ஜீவனோபாயம் செய்வதே இதற்கு சாபவிமோசனமாம்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,718
Location
Chennai
#8
காலாவும் மதனசுந்தரியின் கதையும்
வளர்மதி



மதுரை திரையரங்கம் ஒன்றில் காலா ரசிகர்கள். | ஜி.மூர்த்தி.
'காலா' திரைப்படம் வெளியான அன்று இரவு செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் 'காலா' பற்றிய விவாதம் ஒளிபரப்பானது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஒருவர் பஞ்ச் டயலாக் ஒன்றை கூறினார். அது பின்வருமாறு:
“நேற்று வரைக்கும் 'காலா' படத்தைப் பற்றி பேசாதவனெல்லாம் ஒரு ஆளா என்ற நிலைமை இருந்தது. நாளை முதல், 'காலா' பார்க்காதவனெல்லாம் ஒரு ஆளா என்று பேசப்படும்.”


'காலா' படத்தைப் பற்றி பேசக்கூடாது என்று தவமாய் தவமிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது என்று ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், நல்ல காலமாக, அதற்கு முந்தைய நாள் இரவே 'காலா' குறித்த ஒரு சிறிய விவாதத்தில் தலையை நுழைத்துவிட்டிருந்தேன்.
ஆனால், இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. நானெல்லாம் ஒரு ஆளா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. என்ன செய்வது? நாட்டு நிலைமை இப்படியாக இருக்கிறது.
'காலா' திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, இது இயக்குனர் ரஞ்சித்தின் முத்திரை பதிக்கும் படமாக இருக்குமா அல்லது ரஜினியின் பேர் சொல்லும் படமாக இருக்குமா என்ற விவாதம் பல இடங்களிலும் களை கட்டிவிட்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. படம் ரஞ்சித்தின் தனித்துவமான அரசியலை வெளிப்படுத்தும் படமாகத்தான் இருக்கும் என்று அவரது ஆதரவாளர்களும், 'தலைவர்' பாணி படமாகத்தான் இருக்கும் என்று அவரது ரசிகர்களும்
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கருத்துகளைப் பதிவிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த எனக்கோ வேறு விதமான ஒரு புதிர்க் கதைதான் நினைவிற்கு வந்தது. விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் சொன்ன புதிர்க் கதை.
கதையின் பெயர் மதனசுந்தரி. அதைச் சற்றுச் சுருக்கமாகச் சொல்கிறேன். துர்க்காபுரி என்று ஒரு நாடு. துர்க்காபுரியில் துர்க்கை அம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்த அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இவ்வாறு இருக்கையில், துர்க்கை அம்மனுக்கு நடக்கும் திருவிழாவில், சுந்தரத்தேவன் என்ற ஒரு இளைஞன் மதனசுந்தரி என்ற பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மயங்கிவிடுகிறான். அவளை மணந்தே ஆகவேண்டும் என்ற ஆசைப்படுகிறான். அவளைத் திருமணம் செய்யத் தனக்கு அருள் புரிந்தால், திருமணமான சில காலம் கழித்து, தன் தலையை காணிக்கையாகத் தருவதாக துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொள்கிறான்.


பிறகு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, அவள் தகப்பனாரிடம் சென்று அவளைத் தனக்கு மணம் செய்துகொடுக்குமாறு கேட்கிறான். சுந்தரத்தேவனைப் பற்றி விசாரித்து, அவன் தன் மகளுக்குத் தகுதியானவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் மதனசுந்தரியின் தகப்பனும் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார்.
மதனசுந்தரியைத் திருமணம் செய்துகொண்ட சுந்தரத்தேவன் சில காலம் மாமனார் வீட்டிலேயே மகிழ்ச்சியாக காலத்தைக் கழிக்கிறான். பிறகு, அம்மனிடம் தான் வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்துவிடவே, மாமனாரின் அனுமதி பெற்று மதனசுந்தரியோடு தன் ஊருக்குத் திரும்புகிறான். அவர்களுக்குத் துணையாக மதனசுந்தரியின் அண்ணன் தாருகனும் உடன் வருகிறான்.
ஊருக்குத் திரும்பியவுடன், சுந்தரத்தேவன், நேராக கோயிலுக்குச் சென்று, மதனசுந்தரியையும் தாருகனையும் வெளியே நிற்கவைத்து விட்டு, கோயிலுக்குள் சென்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டபடி, தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுவிடுகிறான்.
சுந்தரத்தேவன் கோயிலுக்குள் சென்று வெகுநேரமாகியும் திரும்பாததால், தாருகன் கோயிலுக்குள் செல்கிறான். அங்கே, தலை அறுந்துகிடக்கும் சுந்தரத்தேவனைக் கண்டு, தன் தங்கையின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று பெரும் துக்கம் கொண்டு, அவனும் தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுபோகிறான்.
இருவருமே திரும்பிவராமல் போகவே மதனசுந்தரியும் கோயிலுக்கும் செல்கிறாள். இருவரும் இறந்துகிடப்பதைக் காண்கிறாள். இனி தான் உயிர்வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணி அவளும் தன் தலையை அறுத்துக்கொள்ளத் துணிகிறாள்.
அப்போது, அவள் மீது இரக்கப்பட்டு, துர்க்கை அம்மன் தோன்றி, அவளை ஆசீர்வதித்து, ஒரு தீர்த்தத்தைக் கொடுத்து, இதை இறந்துகிடப்பவரின் உடலிலும் கழுத்திலும் தடவி பொருத்தினால் உயிர்பெற்று எழுவார்கள் என்று அருளி மறைகிறாள்.
மதனசுந்தரியும் இரண்டு உடல்களின் கழுத்திலும் உடலிலும் அம்மன் கொடுத்த தீர்த்தத்தைத் தடவி ஒட்டவைக்கிறாள். ஆனால் பாருங்கள், மகிழ்ச்சிப் பரவசத்தில் தலைகால் புரியாமல், சுந்தரத்தேவனின் உடலில் தன் அண்ணன் தாருகன் தலையையும், தாருகன் உடலில் கணவன் சுந்தரத்தேவனின் தலையையும் பொருத்தி விடுகிறாள்.
சுந்தரத்தேவன் உடலில் தாருகன் தலையும், தாருகன் உடலில் சுந்தரத்தேவன் தலையுமாக இருவரும் உயிர்பெற்று எழுகிறார்கள்.
இந்தக் கதையைச் சொல்லிவிட்டு வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது, “கல்வி கேள்விகளிலும், ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும், வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவனாகிய மன்னா, இவர்கள் இருவரில் மதனசுந்தரிக்கு கணவன் யார்? தமையன் யார்?”
வழக்கம்போல, விக்கிரமாதித்தன் பதிலைச் சொல்லிவிட வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது.
கதையை வாசிக்கும் நமக்குத்தான் கொஞ்சநேரத்திற்கு தலை சுற்றிக்கொண்டிருக்கும். (சுற்றாதவர்கள் பாக்கியவான்கள்).
'காலா' படத்திற்கு வருவோம். திரைப்படம் வெளியான அன்று திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்து ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடியதை பல தொலைக்காட்சிகளிலும் காண முடிந்தது.
இயக்குனர் ரஞ்சித்தின் அரசியல் சாய்வுகளை அறிந்தவர்கள், கறுப்பு ஆடையை எதிர்ப்பின் அல்லது திராவிட இயக்கத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடியும். ஆனால், ரஜினி ரசிகர்கள் அவ்வாறுதான் புரிந்து கொண்டாடியிருப்பார்களா? ரஜினியின் ஆன்மிகம் தெரிந்த அவரது ரசிகர்கள், அதை ஏற்றுக்கொள்ளும் அவரது ரசிகர்கள், திரைப்படத்தில் அவர் கறுப்பு ஆடை உடுத்தி வருவதை சபரிமலைக்கு விரதமிருக்க அணிந்ததாக நினைத்து உருகியிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஒரு திரைப்படம் அல்லது எந்த ஒரு காட்சி ஊடகம் வழியாகவும் காட்டப்படும் குறியீடுகளை அனுப்புனர் சொல்லும் பொருளில் பெறுனர்கள் புரிந்துகொள்வதில்லை, புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது தொடர்பியல் ஆய்வுகளில் (Communication Studies) பல தசாப்தங்களுக்கு முன்பாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.
புகழ்பெற்ற எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்வார்கள். அமெரிக்காவில் 1980களில் மிகப் பெரிய வெற்றி கண்ட திரைப்படம் சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த ஃபர்ஸ்ட் ப்ளட். செவ்விந்தியர்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையை செலுத்தும் படம் என்று பரவலான விமர்சனத்திற்கு ஆளான திரைப்படம்.
இப்படத்தை செவ்வியந்தர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முற்பட்ட தொடர்பியல் ஆய்வுத்துறை அறிஞர்கள், செவ்விந்தியர்களிடையே அப்படத்தை திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் மீது வன்முறை செலுத்தப்படுவதைக் காட்டும் படத்தை செவ்விந்தியர்கள் வெறுப்புடன் பார்ப்பார்கள் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால், படத்தைப் பார்த்த செவ்விந்தியர்களோ, மிகவும் ஆரவாரமாக ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். படம் முடிந்து விளக்கம் கேட்டதற்கு செவ்விந்தியனைப் போல தோற்றமளிக்கும் சில்வஸ்டர் ஸ்டோலன், வெள்ளையர்களை வேட்டையாடும் படத்தை ரசிக்காமலா இருக்கமுடியும் என்று விடையளித்திருக்கிறார்கள்.
அதாவது, ரஜினி ரசிகர்கள் காலாவை ரஞ்சித் கொடுக்க விரும்பிய அர்த்தங்களை ஏற்றுத்தான் ரசிக்கிறார்களா என்பதே கேள்வி.
வேதாளம் போட்ட புதிருக்குத் திரும்பினால், விக்கிரமாதித்தன் சொன்ன பதில் விசித்திரமானது.
விக்கிரமாதித்தன் சொன்ன பதிலாவது: “அந்த இரண்டு உருவங்களில் எவன் அவளைத் தன் மனைவி என்ற நினைப்பில் பார்க்கிறானோ அவன்தான் அவளுடைய கணவன்!”
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.