கிறிஸ்துமஸ் குடிலின் சிறப்பம்சம்

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,908
Likes
816
Location
chennai
பனிமய மாதா ஆலய சப்பர பவனி - பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

1533564802767.png

ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பனிமயமாதா ஆலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.

இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

பனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.

விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

1533878651577.png

நாகர்கோவில் வடக்கு கோணத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து அருட்பணியாளர் ஷாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

11-ந் தேதி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

12-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆக்னஸ் மறையுரையாற்றுகி றார். அதன் பிறகு நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.

13-ந் தேதி அமராவதிவிளை பங்குத்தந்தை அந்தோணியப்பன் திருப்பலியும், அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் மரியதாஸ் நிறைவேற்றுகிறார். தாமஸ் அருளானந்தம் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி காலையில் தார்சியுஸ்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதனையடுத்து சேவியர் மறையுரையாற்றுகிறார். இதே போல் மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு ஆன்டனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். சேவியர் சுந்தர் மறையுரையாற்றுகிறார்.

16-ந் தேதி அருட்பணியாளர் அந்தோணிபிச்சை தலைமையில் திருப்பலியும், சேவியர் சுந்தர் தலைமையில் மறையுரையும் நடக்கிறது. 17-ந் தேதி திருப்பலிக்கு ஐசக்ராஜ் தலைமை தாங்குகிறார். மரியசூசை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி காலையில் பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையிலும், மாலையில் சேவியர் பெனடிக்ட் தலைமையிலும் திருப்பலி நடக்க இருக்கிறது. இதே போல் அமலதாஸ் டென்சிங் மற்றும் ஜெகத் கஸ்பார் ஆகியோர் மறையுரையாற்றுகிறார்கள்.

விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு ஜோக்கின் தலைமை தாங்குகிறார். திருவிழா திருப்பலியையும், மறையுரையையும் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரிஸ் நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியன நடக்க உள்ளன.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரவிகாட்சன் கென்னடி, பங்கு பேரவையினர், பங்கு மக்கள், அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
பாவ இயல்பும், தூய வாழ்வும்

உலகில் எந்த ஒரு உயிரும் இன்னொரு உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் காணப்படுகிறது. பூச்சிகள் பறவைகளைப் பார்த்து பயப்படும், பறவைகள் பூனைகளைக் கண்டு பயப்படும், மனிதர்கள் நோய் கிருமிகளைக் கண்டு பயப்படுவார்கள்.

இப்படித் தான் மெய்யான வாழ்வுக்கும் ஒரு பகைவன் உண்டு. அவன் தான் சாத்தான்.

யோவான் நற்செய்தியாளர் அதை மிக அழகாக முரண்களின் மூலம் விளக்குவார். ‘கடவுள் ஒளியாக இருக்கிறார், பாவம் இருளாக இருக்கிறது’ என்பது அதில் ஒரு சின்ன உதாரணம்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பேச்சுடன் முடிந்து போவதல்ல. நாம் விசுவாசிப்பதன் படி வாழ்ந்து காட்டுவதில் தான் அது நிறைவடைகிறது. வாயின் வார்த்தைகளை வாழ்க்கை நிரூபிக்க வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்க்கை ‘நடை’ என்று விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசுவை மீட்பராகக் கண்டுணரும் போது இந்த வாழ்க்கை ஆரம்பமாகிறது.

‘நடை என்பது நிற்பதற்கான குறியீடு அல்ல, முன்னேறுவதற்கான அழைப்பு. இறைவனின் சித்தம், நோக்கம், விருப்பம் எல்லாம் அவரது வார்த்தையின் வழியாக நாம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வது தான். அவர் தூயவராய் இருப்பதும், அவரது வார்த்தை தூயதாய் இருப்பதும் தான் அதன் காரணம்.

தூய்மையற்றதை விவிலியம் மறைப்பதில்லை. ‘ஆபிரகாம், விசுவாசிகளின் தந்தை’ என குறிப்பிடும் விவிலியம் தான் ‘ஆபிரகாம் பொய்யன்’ என்றும் குறிப்பிடுகிறது. விடுதலை நாயகன் மோசே, ‘முரட்டாட்டமான மனிதன்’ என்கிறது. யோனா எனும் தீர்க்கதரிசியை, ‘கீழ்ப்படியாதவன்’ என்கிறது. சிம்சோனை, ‘பாவம் செய்தவன்’ என்றும், தாவீதை, ‘கொலையாளி’ என்றும் விவிலியம் மறைக்காமல் பேசுகிறது. மோட்சத்துக்குச் செல்லும் பாதை குறுகியது, அது விரிவான பாதை என விவிலியம் பொய் சொல்வதில்லை.

கடவுள் எப்படித் தூயவரோ, விவிலியம் எப்படி தூயதோ, அதுபோல கடவுளுக்குள் வருபவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பிறக்கும் போது நம்முடன் தோன்றி வருகின்ற பாவம், பாவ இயல்பு என்கிறோம்.

ஆவியினால் மறுபடியும் பிறக்கும் போது பெற்றுக்கொள்வது புதிய இயல்பு. இந்த இரண்டு இயல்புகளுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் உண்டு. நான் ஆவியினால் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அதைத் தக்க வைத்துக்கொள்ள பாவ இயல்போடு போராட வேண்டியிருக்கிறது.

பாவ இயல்பு நம்மை தோற்கடிக்க முயல்கிறது, அதை தோல்வியடைய வைக்க நமக்கு தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது. சுய ஒழுக்கமோ, சட்ட திட்டமோ இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த பழைய இயல்பை மறைக்க விரும்பும் விசுவாசிகள் பொய் சொல்பவர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் பிறரிடம் பொய் சொல்கின்றனர். பிறர் தன்னை ஆன்மிகவாதி என நம்பவேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள். தன்னை ஒரு ஆன்மிகவாதியாய்க் காட்டிக்கொள்ள ஆசைப்படும் மனம் பொய் சொல்கிறது. தான் இருளிலே நடந்தாலும், தான் ஒளியிலே நடப்பவனாக பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த பொய் பேசுதல் நடக்கிறது.

பின்னர் தன்னோடு தன்னைப்பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் மனிதன். இது பிறரை ஏமாற்றும் நிலையல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலை. பாவத்தில் வாழ்ந்து கொண்டே, கடவுளுக்கும் தனக்கும் இடையே உறவு சீராக இருப்பதாக சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

இந்த நிலையிலிருந்து தூய நிலைக்கு மனிதன் மாறவேண்டும். ‘கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை’ என்கிறது விவிலியம். இருளில் இருந்து நம்மை அவரது ஒளிக்கு இறைவன் அழைக்கிறார். அது தான் மீட்பின் முதல் நிலை. இப்போது நாம் ஒளியின் பிள்ளைகள் ஆகிறோம்.

தீமை செய்பவர்கள் ஒளியைப் பகைக்கிறார்கள். ஆனால் ஒளி பிரகாசிக்கும் போது நமது உண்மையான சுபாவம் வெளிப்படுகிறது. நம்மிடம் பாவம் இல்லை என சொன்னால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் மாறிவிடுகிறோம். இறைவனுக்கு நமது பாவங்களைப் பற்றி தெரியும். ஆனாலும் இறைவனிடம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிட வேண்டும்.

நீ எங்கேயிருக்கிறாய்? என ஆதாமிடம் கேட்டார் இறைவன். உன் பெயர் என்ன? என யாக்கோபிடம் கேட்டார். உன் கணவரை அழைத்து வா, என சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

எல்லாமே இறைவனுக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனாலும் நாம் அதை சொல்லவேண்டும் என இறைவன் விரும்புகிறார். உண்மையை மறைக்காமல் பேசவேண்டும் என ஆசைப்படுகிறார்.

பாவத்தை அறிக்கையிடுவது கடவுளுக்கு நம் பாவத்தைத் தெரியப்படுத்த அல்ல. நமது பாவத்தையும், பாவ இயல்பையும் நாம் உணர, வெளிப்படையாய் இருக்கிறோம் என்பதை இறைவனிடம் நிரூபிக்க.

இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
உறவின்றி அமையாது உலகு

1534482609145.png


விவிலியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.

ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.

உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர் இறைவன். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். ‘இறைவனை நேசி, சக மனிதனை நேசி’ என்பதே அவரது கட்டளைகளின் மையம்.

இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரை களுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. ரெயில் சிநேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்சுகளும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலு விழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.

இயேசு நம்மை அழைக்கிறார், உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

1. தன்னோடான உறவு

தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல. “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும்.

2. உறவினரோடான உறவு

நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.

விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

3. கணவன் மனைவி உறவு

ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது, பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்” (எபேசியர் 5:24) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

4. பிறரோடான உறவு

சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ‘ஸ்டேட்டஸ்’ போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது.

இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் அதைப் புரிந்து கொள்ள

5. திருச்சபையோடான உறவு

திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந் திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.

தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
அன்பு தாகம்

1534572688006.png


பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்து இருங்கள்... (யோவான் 15:9)

பொதுவாக மனிதர்கள் பணம், பொருள், நல்ல வாய்ப்பு வசதி, சுகபோகங்கள் இவைகளைத்தான் விரும்பி தேடுவதைப்போல காணப்படுகிறார்கள். ஆனால், எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பைத் தேடுகின்ற ஒரு உணர்வு தான் அதிகமாகப் புதைந்து கிடக்கிறது. அன்பை குறித்த ஒரு ஏக்கம் மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கின்றது. தான் உண்மையாகவும், போதுமான அளவிலும் நேசிக்கப்படவில்லை என்ற உணர்வு அநேகரை மிகுதியாகப் பாதிக்கின்றது.

சிலர் தங்கள் கணவர்மார்களாளோ, மனைவி மார்களாளோ, பெற்றோர்களாளோ, நண்பர்களாளோ மிகுதியாக நேசிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதாக உணர்வதில்லை. இது மற்றவர்களின் அன்பைக் குறித்து அறியாத நிலை என்று கூற முடியாது. இது ஒருவர் அன்பு விஷயத்தில் எளிதாக திருப்தியடையாத நிலையின் பிரதிபலிப்பாகும். ஏனென்றால், அன்பைக் குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளத்தில் காணப்படுவதால், மற்றவர்களின் மிகுதியான அன்பாலும் அங்கு திருப்தி ஏற்பட முடியவில்லை.

தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் பாயும் வரை, எவ்வளவு பெரிய மனிததன்மையுள்ள அன்பினாலும் இருதயம் நிறைவடைய முடியாது. தேவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய இருதயங்களை திருப்தி செய்கின்ற அளவிற்கு வலிமையுடையதாகவும், உண்மை நிறைந்ததாகவும், நிறைவுடையதாகவும், இருக்கிறது. ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.

தேவன் அன்பாகவே இருக்கிறார். இந்த தேவ அன்புதான் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கின்றவர்களின் இருதயத்தில் ஊற்றப்படுகின்றது. நம்முடைய ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தேவ அன்பு மட்டுமே ஈடுகொடுக்க முடியும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு அன்பைத்தேட வேண்டிய இடம் தேவ சமூகம்தானேயன்றி, மனிதர்களிடமிருந்து அல்ல. ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை தன்னுடைய வாழ்நாள் முடிவு வரையில் நேசித்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம் (யோவா - 13:1) ஏனென்றால் அவருடைய கவனம் அவர்களுடைய அன்பைப்பெறுவதில் இல்லாமல், அவர்களை உண்மையாக நேசிப்பதிலேயே இருந்தது.

அவர் பிதாவாகிய தேவனுடைய அன்பை எப்போதும் இருதயத்தில் ருசித்துகொண்டிருந்தபடியால், அவர் அன்பை தேடுகிறவராக இல்லாமல், அன்பை தேடுகிறவர்களுக்கு அதனை வழங்குகிறவராக இருந்தார். தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தனிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தனிக்கவும் முடியும்.

“ இறைவனை நோக்கிய உன் அன்பில் முழுமையில்லையேல்
மனிதனை நோக்கிய உன் அன்பு அறைகுறையாகவே இருக்கும்“
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
கடவுளுக்கு ஏற்ற வாழ்வு

1534745654379.png

கடவுளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். தன்னலத்தை துறந்து, பிறர் நலனுக்காக வாழ்பவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.

இறைமகன் ஏசு தனது சீடர்களிடம்.., '' என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (லூக்.9:23) என்று கூறினார். அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக, தன்னலமற்று அர்ப்பணிப்பை முன்னெடுக்கும் எவருக்கும் அவமானமும், வேதனையும் கூடிய சிலுவை காத்திருக்கிறது. இந்த சிலுவையை நாள்தோறும் தூக்கிச் சுமந்து, அவருக்காகவே வாழுகிற மனிதன் தான் கிறிஸ்தவன்.

கிறிஸ்தவத்தின் வெளி அடையாளங்கள், கடவுளையும், மனிதனையும் இணைக்க உதவாது. கடவுளின் வார்த்தைகளை அல்லது கட்டளைகளை வாழ்வாக மாற்றிக் கொள்ளும் போது தான், கடவுளால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.' நான் என் தந்தையின் கட்டளைகளை கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவான்.15:10) என்கிறார் ஏசு.

பிறர் வாழ்வு பெற தன் உயிரை விதையாக்கி கொள்கிறவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். வாழ்வு என்பது இறைவனின் மாபெரும் கொடை. ஏசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த வாழ்வும், அவரது மரணமும், நமக்கு உணர்ந்தும் தெளிவான பாடங்கள் இவை. '' தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.'' (பிலிப்.2:7-9) எனவே நாமும் நம்மை தாழ்த்தி, தன்னலத்தை துறந்து, ஏசுவைப்போல வாழ்வோம். நம் வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கும். அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வார். நமக்குள் இறைவனின் அமைதி என்றும் இருக்கட்டும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
மனம் வருந்துதலும், திரும்புதலும்

1535338076942.png

தவக்காலம் என்பது வசந்தகாலம் போன்றது. பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய வாழ்வின் துளிர்கள் வரவேண்டும் என்பதற்காகவே தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் உருவாகவேண்டும் எனும் சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த மாற்றத்தை நமக்குப் பெற்றுத் தருவது இறைமகன் இயேசுவின் சிலுவை. மீட்பு என்பது நிலைவாழ்வு. இறைவன் தரும் நிறைவாழ்வு. அந்த நிலைவாழ்வை அடையவேண்டு மெனில் நாம் கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும். மனம் வருந்துதல், மனம் திரும்புதல், பாவ மன்னிப்பு பெறுதல், மீட்பைப் பெற்றுக் கொள்தல்.

மனம் வருந்துதல் அதாவது மனஸ்தாபம் முதலில் வரவேண்டும். அது தான் நம்மை மனம் திரும்புதலை நோக்கி வழிநடத்தும். மனம் திரும்புதல் பாவ மன்னிப்பை நோக்கி நம்மை வழி நடத்தும். பாவ மன்னிப்பு நம்மை மீட்பை நோக்கி வழிநடத்தும்.

மனஸ்தாபமே அடிப்படை. மனஸ்தாபம் படும்போது தான் தந்தையின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணிக்க முடியும். ஆனால் வெறும் மனஸ்தாபம் மட்டுமே நம்மை மீட்புக்குள் கொண்டு செல்லாது.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபின் மனம் வருந்தினான். மனம் வருந்திய அவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான். அவனுடைய மனஸ்தாபம் அவனை மனம் திரும்புதலுக்கு கொண்டு செல்லவில்லை. வெறுமனே மனஸ்தாபம் கொள்வது மீட்புக்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதன் உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

மனம் திரும்புதல் என்பது, மனதிலிருக்கும் பாவங்களை ஒத்துக் கொள்வதும், மனதிலும் செயலிலும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்' (லூக்கா 13:3) என்கிறார் இறைமகன் இயேசு.

நினிவே நகர மக்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களை அழிக்க இறைவன் முடிவெடுத்தார். அதை அறிந்த மக்கள் மனஸ்தாபப்பட்டு, மனம் திரும்பினார்கள். அவர்கள் மனம் திரும்பியதைப் பார்த்த இறைவன் மனஸ்தாபப்பட்டார். அது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது.

கெட்ட குமாரன் உவமையில் இளைய மகன் தந்தையிடமிருந்து சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு வெளியூர் போய் அனைத்தையும் அழிக்கிறான். கடைசியில் வாழ வழியின்றி தவிக்கிறான். தனது தவறை உணர்ந்து மனம் வருந்துகிறான். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிடு கிறான். உடனே மீட்பைப் பெற்றுக்கொள்கிறான்.

இளைய மகன் பாவியாய் வரும்போது தந்தை மனதுருகுகிறார். தனது ஸ்தானத்தை விட்டு இறங்கி ஓடோடிச் சென்று அவனை அரவணைக்கிறார். மனம் வருந்தி, மனம் திரும்பி, பாவமன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு நாம் வரும்போது இறைவன் மனம் இரங்கி வருகிறார், தனது நிலையை விட்டும் இறங்கி வருகிறார்.

1. மனம் திரும்புதலின் அழைப்பு இறையரசுக்கானது!

மனம் திரும்புதலுக்கான அழைப்பு பரலோக ராஜ்ஜியத்தை முன்வைத்து அழைக்கப்படுகிற அழைப்பாக இருக்கிறது. 'மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது' என இயேசு தனது போதனைகளில் அடிக்கடி குறிப்பிட்டார்.

இயேசுவின் காலத்தில் மக்கள் ஒரு பூலோக அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் இறைமகன் இயேசுவோ, இறை அரசுக்கான வாழ்க்கைக்கு மக்களை தயாரிக்க வந்தார். எனவே தான் இயேசு தனது போதனைகளின் முதல் அறை கூவலாக, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்றார்.

இயேசு மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் மனம் திரும்புங்கள் எனும் செய்தியையே பறை சாற்றுகின்றனர். பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதத்தோடு நமது கிறிஸ்தவ வாழ்க்கை நின்று விடக்கூடாது. நம் மூலமாக இறையரசின் செய்தியை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.

2. மனம் திரும்புதலின் அழைப்பு மகிழ்ச்சிக்கானது

யார் ஒருவர் இந்த மனம் திரும்புதலின் அழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகிழ்ச்சியை பெற்றுக் கொள் கிறார்கள். கூடவே அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கெட்ட குமாரனின் கதையிலும் அந்த மனம் திரும்பிய மகனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தது. அத்துடன் தந்தையையும், கூட இருந்தவர்களையும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

'கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங் களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்' என்கிறது (ஏசாயா 55:7) விவிலியம்.
3. மனம் திரும்புதலின் அழைப்பு தேசத்தின் நன்மைக்கானது.

'நீங்கள் மனம் திரும்பினால் தேசத்தின் நன்மையைக் காண்பீர்கள்' என்கிறது ஏசாயா நூல். எங்கெல்லாம் மனமாற்றம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தேசம் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுக் கொள்கிறது.

மோசே தனியே வாழ்ந்து கொண்டிருந்தபோது கடவுள் அவரை அழைத்தார். எரியும் முட்செடியில் அவரிடம் பேசு கிறார். எரியும் முட்செடி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பானது. அவர்கள் கண்ணீர் கவலை துக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் மடிந்து போகவில்லை. அந்த மரண வேதனையில் இருக்கும் மக்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என இறைவன் விரும்பினார்.

மோசே எனும் மனிதனுடைய மனமாற்றம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு காரணமாயிற்று. யோனா எனும் ஒரு இறைவாக்கினரின் மனமாற்றத்தால் நினிவே தேசம் நன்மையைப் பெற்றுக் கொண்டது.

தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா தொடங்கியது

1535602230884.png
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஆன்மிக சுற்றுலா தலமாகும். கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உண்டு. இந்தியாவில் பிரம்மாண்டமான கட்டிட அமைப்புடன் கூடிய 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயமும் ஒன்றாகும். புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றி கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங் கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கியமாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.கொடி ஊர்வலம் தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.40 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்தார்.

கொடியேற்றத்தின்போது பேராலயத்தின் அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒளிர விடப்பட்டன. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “மரியே வாழ்க” என சரண கோஷம் எழுப்பினர். கொடியேற்றத்தையொட்டி வாணவேடிக்கையும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். இதனால் பேராலய வளாகம், கடற்கரை என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அலை கடலென திரண்டிருந்தனர். கொடியேற்று விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா இன்று தொடங்குகிறது

1535602326318.png
தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயம் பிரசித்திப்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, பேராலய புதுமை மாதாவின் பிறப்பு திருவிழாவை தொடங்கி வைப்பார்.

இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் சுற்றுவட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நவ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலையில் சிறிய சப்பரத்தில் மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ நாட்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற உள்ளன. கன்னி மரியாள் பிறந்த நாளான அடுத்த மாதம் 8-ந் தேதி அன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை தொடங்குகிறது

1535602421857.png

கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்லம் அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருளானந்தம் அருளுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி மற்றும் பங்கு மக்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

4-ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, 8-ம் திருவிழாவன்று மாலையில் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு தாழையான்கோணம் பங்கு தந்தை சூசை தலைமை தாங்குகிறார். மார்த்தால் பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி நடக்கிறது.

9-ம் திருவிழாவன்று காலை 6.30 மணி முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். புனித ஜெரோம் கல்லூரி ஆக்னஸ் அமலன் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஜெபமாலைக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். புனித ஞானப்பிரகாசியார் இளம் குருமடம் ஜெரி வின்சென்ட் அருளுரையாற்றுகிறார். இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

10-ம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதற்கு சின்னவிளை பங்குதந்தை ஆன்றனி கிளாரட் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்லம் அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட் சகோதரிகள், பங்குதந்தை அந்தோணி பிச்சை செய்து வருகின்றனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.